கூத்து என்னும் மக்கள் கலை

விநாயகபுரம் சிவன் கோவில் முன்றல்
கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் திகதி. ஒரு தொலைபேசி அழைப்பு. "அண்ணா, வாற சனிக்கிழமை வினாயகபுரம் சிவன் கோவிலடில கூத்து வச்சிருக்கம். உங்கள அதிதியா போட்டிருக்கிறன். வருவிங்க தானே" என்று தொலைபேசியில் சொன்னவர் தங்கை விலோஜினி. கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை இறுதியாண்டு மாணவி. சில மாதங்களுக்கு முன்பு தான் சந்தித்து தனது ஆய்வுத்தலைப்பு திருக்கோவில் பிரதேச கூத்துக்கலையை மையமாகக் கொண்டது என்பதைக் கூறி, அது தொடர்பான ஓரிரு வாய்மொழி வரலாறுகளை சேகரித்துச் சென்றிருந்தார்.

திருக்கோவில் பிரதேசம் பழைய மட்டக்களப்புத் தேசத்தின் பண்பாட்டுக்கு அடிப்படையாக அமைந்த தொட்டில். அங்கு நீடிக்கின்ற கலைக்கும் நீண்ட வரலாறு உண்டு. திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில், காலனித்துவ காலம் வரை ஆடல் பெண்கள் பணியாற்றிய தகவல் கிடைக்கிறது. அக்கோவிலின் நிர்வாகத்தில் முதன்மை இடம்பிடிக்கும் சமூகப்பிரிவொன்று தனது பட்டமாக "நட்டுமுட்டு நாடகசாலை கொண்ட கோத்திரம்" என்பதைச் சொல்லி வந்திருக்கிறது. நட்டுமுட்டு என்றால் மேளதாளம். திருக்கோவிலின் வரலாற்று பூர்வமான தோற்றத்திலிருந்து இங்கு மேளதாளத்திற்கும் நாடகசாலைக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதாக அப்பெயரைப் புரிந்துகொள்ளலாம்.

வசந்தன் ஆட்டத்துக்கு (சிறுவர் கோலாட்டக்கலை) ஒருகாலத்தில் புகழ்பெற்ற இரு ஊர்களில் ஒன்று இப்பிரதேசத்தைச் சேர்ந்த தம்பிலுவில் (மற்றைய ஊர்  காரைதீவு).  மட்டக்களப்புக் கூத்தின் இரு வகைகளில் ஒன்றான தென்மோடிக்கூத்தைப் பழக்குவிப்பதில் பெயர் போன பழைய அண்ணாவிமார் கோளாவில் மற்றும் தம்பிலுவில் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தான். ஆண்கள் கைகொட்டி ஆடும் "பள்ளுக்கு வளைதல்" எனும் கலையாடல் இங்குள்ள தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோவிலை மையமாக வைத்து உருவாகி, இங்கு மட்டும் நீடிக்கின்ற தனித்துவமான கலை. இவை எல்லாம் இப்பிரதேசம்  முற்காலத்தில் கலைவளர்ச்சியில் ஆற்றிய தவிர்க்கமுடியாத பங்கைச் சொல்வன.

சிவகாமி தமிழ் அருங்கலைக்கூடத்து
திரு.மு.பராந்தகன், திருமதி.சிவகாமிதேவி முருகமூர்த்தி, திரு.மு.விஜயாலயன்

இன்று இங்கு ஆடப்பட இருப்பது வெடியரசன் கூத்து. கண்ணகியின் காற்சிலம்பில் நாகமணிகளை இடுவதற்காக மீகாமன் இலங்கை வருவதும், அவனை வெடியரசனும் தம்பியரும் எதிர்ப்பதும், அவர்களை வென்று மீகாமன் நாகமணி பெற்றுச் செல்வதும் கதை. கூத்தைப் பழக்கிய விநாயகபுரம் சிவகாமி தமிழ் அருங்கலைக்கூடத்தினர் எனக்கு ஏற்கனவே நெருக்கமானவர்கள். இந்தக் கூத்தின் அண்ணாவியார் திரு.முருகமூர்த்தி விஜயாலயன் அண்ணாவின் வழிகாட்டலிலேயே  நான் நான்கைந்து தடவை கூத்தாடியிருக்கிறேன். அவரது தமையன் திரு.மு.பராந்தகனே பன்னிரண்டு வயதில் எனக்குக் கூத்தைப் பழக்குவித்த அண்ணாவியார்.  பல அண்ணாவிமார் இன்றும் கூத்து முயற்சிகளில் ஈடுபட்டாலும், தம்பிலுவில் கிராமத்தின் மரபுவழிக் கூத்து இவர்கள் பழக்குவிக்கும் கூத்தில் இன்றும் பொலிவுடன் பிரகாசிக்கக் காரணம், அவர்களது மறைந்த தந்தையார் அமரர் திரு.முருகமூர்த்தி அண்ணாவியாரும், அவர் மறைவுக்குப் பின்னும் கூத்தின் வளர்ச்சிக்குத் தன்னை அர்ப்பணித்த அவர்களது தாயார் திருமதி. சிவகாமிதேவி அம்மையாரும் தான் என்பேன்.

            
கொழும்புப் பல்கலைக்கழக விண்ணகர் விழாவில் விஜயாலயன் அண்ணாவியாரின் வழிகாட்டலில் கட்டுரையாசிரியனும் பல்கலை நண்பர்களும் டிய "பாசுபதாஸ்திரம்" வடமோடிக்கூத்து


பதினேழாம் திகதி மாலை, விநாயகபுரம் சிவன் கோவில் முன்றலுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கே சென்று விட்டேன். வட்டக்களரியை அழகாக சோடனை செய்திருந்தார்கள். கோவிலின் தலைவர் திரு.வி.ஜெயச்சந்திரன் அவர்கள், ஆசிரியை மற்றும் எழுத்தாளரான திருமதி. ஜெகதீஸ்வரி நாதன் அம்மையார், திருக்கோவில் பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நிரோஜினி தவநீதன் அவர்கள், கிராம சேவையாளர் திரு.அ.அனீர்த்தன் முதலிய விருந்தினர்கள் வந்திருந்தார்கள்.  கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி.சி.ஜெயசங்கர் ஐயா மற்றும் விரிவுரையாளர் திரு.கௌரீஸ்வரன் ஐயா, ஆய்வுமேற்பார்வையாளரான திரு.ச.சந்திரகுமார் ஐயா ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.  சந்திரகுமார் சேரை பாடசாலைக் காலத்திலேயே அறிவேன். ஜெயசங்கர் சேரும் கௌரீஸ்வரன் சேரும் கூத்து பற்றிய அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள்.

தமிழ்த் திரைப்படங்களில் இரசிகர்களுக்கு, தாங்கள் ஏற்கும் பாத்திரங்களை விட நடிகர்களே முனைப்பாகத் தெரிவார்கள்.  கூத்திலும் பாத்திரத்தை விட தங்களில் ஒருவரான நடிகரையே மக்கள் அதிகம் இரசிப்பார்கள். அவர் உறவினர் என்றால் மாலை அணிவிப்பது, அன்பளிப்புக் கொடுப்பது, சால்வை அணிவிப்பது இதெல்லாம் கூத்து இடம்பெறும் போதே நடக்கும். அதை யாரும் இடையூறாகவோ, கூத்தின் தொடர்ச்சித்தன்மை தடைப்படுவதாகவோ கருதுவதில்லை. மாறாக பார்வையாளர், நடிகர்கள் இருதரப்பினரையும் குதூகலமூட்டும் நிகழ்வாகவே அது கருதப்படும்.

வட்டக்களரி

வட்டமாகக் களரி கட்டி அதில் ஆடப்படுவது தான் கூத்து. இதனால் எல்லாப் பக்கங்களில் இருந்தும் பார்வையாளர்களால் கூத்தைக் கவனிக்க முடியும்.  இப்போது வசதி கருதி ஒருபக்க மேடையில் கூத்து ஆடப்படுவதால், அதன் மரபார்ந்த மக்கள் ஊடாட்டத் தன்மை குறைந்து விடுகிறது.  வட்டக்களரிக்குள் தைரியமாக நுழையும் ஒரு உறவினனுக்கு மேடை சற்று உயரமான - அசௌகரியமான நுழைவிடமாகத் தோன்றுகிறது. இன்றைய சமூகக் கலை மாற்றங்களிலுள்ள இந்த  இடைவெளியைப் பற்றி விரிவாகப் பேசிக்கொண்டோம்.

மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், தலைமை உரை, விருந்தினர் உரை, ஆய்வுமாணவி உரை முதலிய அம்சங்கள் முதலில் இடம்பெற்றன. மாணவர்களை மக்கள் கலைஞர்களிடம் அனுப்பி, மக்கள் கலையை முறைப்படி கற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கும் தமது, "அடிப்புறத்திலிருந்து அடிப்புறத்திற்கு" எனும் கற்கை முறைமை பற்றி தலைமையுரையாற்றிய சந்திரகுமார் சேர் விளக்கமளித்தார். 
சந்திரகுமார் சேர் உரையாற்றுகிறார்

சிற்றுரை ஆற்றும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. கூத்துக்கலையை இலங்கைத் தமிழரின் தேசியக்கலையாக வளர்த்தெடுப்பது பற்றியும் கலைகளைப் பொதுமைப்படுத்தலிலுள்ள அபத்தம் பற்றியும் பேசினேன்.  இவை முன்பொருமுறை பேராசிரியர் மௌனகுரு ஐயாவுடனும் உரையாடிய விடயங்கள் தான். தேசியக்கலையாக கூத்து வளர்க்கப்படவேண்டும் என்றால், அது பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு வடிவை எடுக்க வேண்டும். ஆனால் கூத்தில் இங்கு ஒவ்வொரு ஊருக்கும் தனித்துவமான ஆட்டமுறைகள் இருக்கின்றன. உதாரணமாக "தாளம் தீர்தலை" சொல்லலாம்.

ஆட்டம் முடிந்துவிட்டதை, அல்லது பாத்திரம் பேசுகின்ற வசனம் முடிந்துவிட்டதைச் சொல்கின்ற ஆட்டமும் அதற்கேயான மத்தள அடியும்  தாளம் தீர்தல் எனப்படும். நான் அவதானித்த கொக்கட்டிச்சோலை மரபில் அல்லது வடமட்டக்களப்பு மரபில் "தாம்தாம் தரிகிட தெய்" என்ற தாளக்கட்டுடன் தாளம் தீர்க்கப்படுகிறது.   ஆனால் தம்பிலுவில் மரபில் அல்லது திருக்கோவில் பிரதேச மரபில் "தாம்தாம் தரிகிட தெய் ததிங்கிண" என்று 'ஒரு தாளம்' கூட்டப்பட்டே தாளம் தீர்க்கப்படுகிறது. கூத்துக்கான ஒரு பொதுவடிவம் உருவாக்கப்படும் என்றால் இதில் எதை ஏற்பது, எதை விடுவது, இந்த ஏற்பையும் விடுகையையும் தீர்மானிப்பது எது - எப்படி? போன்ற கேள்விகள் இலகுவில் விடைகூற முடியாதவை.  ஈழத்தமிழர் தேசியக்கலையாக கூத்தை வளர்க்கும் போது, அந்தந்த ஊர் மரபை தனி ஆட்டமுறையாக (style)  உள்வாங்கி பொதுமைப்படுத்தலைச் செய்து முடிப்பதே சாத்தியமானது என்பதைச் சொன்னேன்.

உரை முடிந்து வந்தமர்ந்ததும், கௌரீஸ்வரன் சேர் உரையில் நான் பயன்படுத்திய 'நாட்டுக்கூத்து' என்ற சொல்லாடல் தொடர்பில் தன் கருத்தைச் சொன்னார். அது மக்கள் கலையான கூத்தை இழிவுபடுத்துவதற்காக குறிப்பிட்ட தரப்பினர் வலிந்து உருவாக்கிய சொல்லாடல் என்றும், அதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நலம் என்றும் குறிப்பிட்டார். 

இதில் என் கருத்து வேறாக இருந்தது. முன்பொருமுறை கூத்தாடிய ஒரு பெரியவர் சொன்ன விடயம் அது. சாஸ்திரிய பரதநாட்டியத்தில் தட்டடவு, நாட்டடவு எனும் ஆட்டவகைகள் உண்டு. கூத்தில் பெரும்பாலும் கால்களைத் தட்டி ஆடுவதே வழமை. ஆனால் விறுவிறுப்பான மற்றும் இரசிக்கத்தக்க இடங்களில் எல்லாம் கால்கள் வேகமாக நாட்டப்பட்டே ஆடுகின்றன. எனவே நாட்டுக்கூத்து என்பது ஆட்டங்களில் கால்களின் அமைவை அடிப்படையாகக் கொண்டு உருவான சொல்லாடல் என்பதே என் கோணம் என்பதைத் தெரிவித்தேன். அவர் உள்ளூர் வழக்கை விசாரித்தார். அப்போது தான் பழையவர்கள் சாதாரணமாக 'கூத்து' என்றே பயன்படுத்துவதையும், இளந்தலைமுறையினரும் கூத்து அருகிய காலத்தைச் சேர்ந்த மூத்தவர்களுமே 'நாட்டுக்கூத்து' என்ற சொல்லை அதிகம் பயன்படுத்துவதையும் உணர்ந்தேன். இன்றைய பயன்பாட்டில் அதை இயல்பாக கூத்து என்றே சொல்லலாம். வலிந்து நாட்டுக்கூத்து என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. தேவையான இடங்களில் மட்டும் வடமோடி -  தென்மோடி என்றோ, வடபாங்கு - தென்பாங்கு என்றோ,  அதன் வகை சார்ந்து குறிப்பிட்டுக்கொள்ளமுடியும் என்றார் கௌரீஸ்வரன் சேர். அவர் கருத்து சரியானதே என்பதை ஏற்றுக்கொண்டேன்.  

கூத்து 9 மணியளவில் துவங்கியது. வட்டக்களரி பொலியத் தொடங்கியது. வேட்டி மறைப்பில் பாத்திரங்கள் உள்நுழைந்தார்கள். நண்பர்களும் உறவினர்களும் மலர்மாலைகள், சால்வைகள் அணிவித்து  நடிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். ஆடிய எல்லோருமே பதின்பருவத்தினர் என்பதாலும், அது அவர்களுக்கு புதிய அனுபவம் என்பதாலும், இரசிக்கத்தக்க வகையில் அவற்றை ஏற்றுக்கொண்டு ஆடினார்கள்.

குழந்தைகள், சிறுவர்கள் வட்டக்களரியை நெருங்கி அமர்ந்து நாடிகளை கைகளால் தாங்கியபடி ஆட்டத்தை உன்னித்துக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். ஏனைய பார்வையாளர்களின் ஈடுபாடு மகிழ்ச்சிப்படும்படி இருந்தது. ஜெயசங்கர் சேரும் கௌரீஸ்வரன் சேரும் அவர்களையே சுட்டிக்காட்டி பூரித்துக்கொண்டிருந்தார்கள். "மக்கள் கலைகள் மக்கள் மத்தியிலேயே ஆடப்படவேண்டும் என்று நாங்கள் விரும்புவது இதற்காகத்தான்" என்றார்கள்.  

கூத்து நடிகர்களை தனிப்பட்ட ரீதியிலும் அறிவேன். அவர்களுடன் இரண்டு தடவை கூத்தாடிய அனுபவம் எனக்குண்டு. ஒருபுற மேடைக்கு பயின்றுவிட்டிருந்ததால், ஓரிருவர் வட்டக்களரி ஆட்டத்தில் கொஞ்சம் தடுமாறினார்கள். ஆனால் பயின்ற விழிகளும் இலகுவில் அடையாளம் காணமுடியாதபடி இலாவகமாக அந்தத் தடுமாற்றத்திலிருந்து மீண்டு ஆடினார்கள்.  வழக்கத்தை விடச் சிறப்பாக விஜயாலயன் அண்ணாவியாரின் மத்தளம் 'பேசியது'. கோலாகலமாக கூத்து இடம்பெற்று முடிந்ததும் தங்கை விலோஜினியின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

கூத்துக்கலைஞர்கள் மற்றும்  விருந்தினர்கள்
இறுதியாக அன்றைய நிகழ்வு பற்றிய சில கண்ணோட்டங்களை கலாநிதி.ஜெயசங்கர் ஐயா அவர்கள் பகிர்ந்துகொண்டார். மக்கள் கலையான கூத்து இன்று இருப்பதை விட சீரிய நிலையை சீக்கிரமே அடையவேண்டும். சிறுவர்களுக்கான கதைகளை வைத்து சிறுவர் கூத்துக்கள், சமூகக் கூத்துக்கள் அதிகம் எழுதப்பட்டு ஆடப்படுகின்றன, இனியும் ஆடப்படவேண்டும் என்பதைத் தெரிவித்த அவர், மண் சார்ந்த கதைகளும் கூத்து வடிவம் பெறவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார். இதே திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலின் தோற்றம் பற்றிய மனுராசா - தம்பதிநல்லாள் தொன்மங்களைக் கூத்தாக்கலாம், தம்பிலுவில் கண்ணகி அம்மனோடு தொடர்புடைய செண்பகநாச்சியார் - நாகமங்கலை - பொற்புறா முதலிய தொன்மங்களை கூத்து வடிவமாக்கலாம் என்பது அவரது கருத்தாக இருந்தது. அவை செயலுருவாக்கம் அடைந்தால் நன்றாக இருக்கும்.    

நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றதற்காக சகோதரி விலோஜினிக்கும், விஜயாலயன் அண்ணா மற்றும் சிவகாமி அம்மாவுக்கும் நன்றி கூறி, அனைவரிடமும் விடைபெற்று வீடு திரும்பினேன். விடைபெறும் போதும், விருந்தினர்கள் பார்வையாளர்கள் காட்டிய ஈடுபாட்டைச் சொல்லி வியந்து கொண்டார்கள். உண்மையில் கலைகளை இரசிப்பதற்கு ஒரு மனநிலை வேண்டும். திரைப்படம் பார்ப்பதில் ஆர்வமில்லாத நண்பனோடு நீங்கள் திரையரங்கு போக முடியாது. சங்கீத ஞானம் இல்லாத துணையோடு நீங்கள் கர்நாடக இசைக்கச்சேரியில் அமர்ந்து தலையாட்ட முடியாது. கூத்தும் அப்படித்தான். அதற்கும் ஒரு ஆர்வம், ஒரு தயார் மனநிலை வேண்டும். ஆனால் சுமார் நூறு அளவில் கூடியிருந்த இந்தக் கூட்டம் சொல்லி வைத்தால் போல் வயது வித்தியாசமின்றி கூத்தோடு ஒன்றித்து நின்றது ஆச்சரியம் தான். இந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே இந்தக்கலை அத்தனை நெருக்கமானதா?  அல்லது இந்தக்கதையை  விரும்பி இரசிக்கும் பழந்தமிழ் ஆழ்மனம் இவர்களில் விழித்துக்கொண்டதா? விழித்துக்கொண்டால் நல்லது தான். முழுத்தமிழ்ச்சமூகமும். 

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner