கீழைக்கரையின் தனித்துவம்: தேசத்துக்கோவிலும் திருப்படைக்கோவிலும்


இந்தக் கட்டுரை கொஞ்சம் நீளமான கட்டுரை. கிழக்கின் சாதியம்,  பிரதேசவாதம், கோவில் வழிபாட்டு முறைகள், தனித்துவமான மரபுகள் என்று  ஓரளவு அலுப்படிக்கலாம் என்பதால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகிறேன். ஆனால் கிழக்கிலங்கை, வரலாறு, சமூகவியல், மானுடவியல், ஓரளவு சர்ச்சை என்பவற்றில் ஆர்வம் கொண்டவர்களை நிச்சயமாக ஏமாற்றாது. 😀 நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். 



மானுடவியல் பேராசிரியர் மார்க். பி.விட்டாகரின் "Amiable Incoherence"  என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அந்தத் தலைப்பே கவித்துவமானது.  நமக்கு சில நண்பர்கள் இருப்பார்கள் அல்லவா? நேரில் கண்டால் காது வரை சிரிப்பார்கள், தோளில் கை போடுவார்கள், அத்தனை அன்பாகப் பேசுவார்கள். ஆனால் அடியாழத்தில் எங்கோ நம் மீது கசப்பு இருக்கும்.   நாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உணர்த்திக்கொண்டே இருப்பார்கள்.  அது தான் Amiable Incoherence. நெருக்கமில்லாத நட்பு என்று மேம்போக்காக மொழிபெயர்க்கலாம். ஓரளவு உள்ளூர் மொழியில் சொல்வதென்றால் "பளக்கம் போல படம் காட்றதுகள்" 😄

இலங்கைத்தமிழரின் குறிப்பாக கிழக்கிலங்கைத் தமிழரின் மானுடவியலை ஆராய விரும்புவோருக்கு உண்மையிலேயே பெரிய பொக்கிஷம் இந்த நூல். பல நாட்களாகத் தேடி, இரண்டாண்டுகளுக்கு முன்பு தான் பெற்றுக்கொண்டேன். ஆனால் வாசிக்கக் கையில் எடுத்தது நேற்றுத் தான்.  (அந்நூல் என் கையில் கிடைக்கக் காரணமான நண்பர் அருளம்பலம் பூஷிதன் மற்றும் நண்பி லக்‌ஷி குணரட்ணம் ஆகியோரை இங்கு அன்புடனும் நன்றியுடனும் நினைவுகூர்கிறேன்).  

விட்டாகரின் இந்த நூல், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டூர் கந்தசுவாமி கோவிலின் சமூகவியல் மற்றும் மானுடவியல் அம்சங்களை விரிவாக ஆராய்கின்றது. மண்டூர்க் கோவிலுக்கும் அந்தத் தலைப்புக்கும் என்ன தொடர்பு என்பதை இங்கு சொல்லப்போவதில்லை.  ஆனால் விட்டாகர் சில இடங்களில் விட்டிருக்கும் தகவல் பிழைகளை  தவிர்த்துப் பார்த்தால், மிக அருமையான நூல் இது. அதிலும், இந்நூலில் மிகப்பிடித்த விடயம், ‘தேசத்துக்கோவில்’ என்ற சொல்லாடலை அவர் அணுகும் விதம். 

கோவில்களை திருப்படைக்கோவில்கள், தேசத்துக்கோவில்கள் என்ற பெயர்களில் வகைப்படுத்தி பட்டியலிடுவது, கிழக்கிலங்கைக்கு மட்டும் தனித்துவமான வழக்கம். புவியியல் ரீதியில் இப்பகுதிக்கு மாத்திரமே இச்சொற்கள் சிறப்பானவை. ஆனால் அந்தச் சொற்களையோ அவற்றின் சரியான பின்னணியையோ இன்றுவரை யாரும் விரிவாக ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. 

இன்று சாதாரண மக்கள் வழக்கில் திருப்படைக்கோவில்கள் என்று சில கோவில்களும்,  தேசத்துக்கோவில்கள் என்று சில கோவில்களும் அழைக்கப்படுகின்றன. திருக்கோவில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் முதலான ஓரிரு கோவில்கள் அந்த இரு பட்டியல்களிலுமே இடம்பெறுகின்றன. இன்னும் சிலர் இரண்டு பட்டியல்களுமே ஒரே கோவில்களைத் தான் குறிக்கின்றன என்றும் சொல்கிறார்கள். 

உள்நாட்டு யுத்தம், கோவில்களில் நிகழ்ந்த அதிகாரப்போட்டிகள், மரபு மாற்றங்கள், ஆவணங்கள் மறைக்கப்பட்டமை, பாரம்பரியத்தில் போதிய அறிமுகம் பெற்றிருந்த தலைமுறையினர் முற்றாக மறைந்துவிட்டமை  முதலிய பல காரணங்களால் இன்று உரிய கோவில்களுக்குச் சென்று விசாரித்தால் கூட இதில் நாம் தெளிவைப் பெறமுடியாது.  இந்தக் குழப்பங்களையெல்லாம் தீர்த்து வைப்பதற்கு, வெளிநாட்டிலிருந்து ஒருவர் வந்திறங்கவேண்டி இருக்கிறது.  அப்படி வந்தவர்களில் முக்கியமான ஒருவர் விட்டாகர். (கீழைக்கரையைப் பொறுத்தவரை இன்னொருவர் மிக முக்கியமானவர். டெனிஸ் மக்கில்வ்ரே. அவரைப் பற்றி பிறகு விரிவாகப் பார்ப்போம்.)

கிழக்கிலங்கையில் நூறாண்டுகளுக்கு முன்வரை, கோவில் என்பது ஒரு சமூகத்தின் சகல தரப்பினரும் ஒன்றிணைகின்ற மையமாக கட்டமைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சாதிகளும் ஏதோவொரு விதத்தில் கோவிலொன்றில் கடமை செய்யப் பணிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களது குலத்தொழில் ஏதோவொரு விதத்தில் கோவிலோடும், கோவிலைச் சூழ இருந்த சமூகத்தோடும், இணைக்கப்பட்டிருந்தது. கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இதை ஊன்றி அவதானித்த விட்டாகர், “கொட்டியாரக் குடாவுக்கும் அறுகங்குடாவுக்கும் இடையேயான தமிழ் கீழைக்கரை என்பது, கோவில்மைய நுண்பிராந்தியங்களைக் கொண்ட கொத்தணிகளாலான ஒரு சமூகம் தான்” என்று பதிவு செய்திருக்கிறார்.

விட்டாகரின் இந்த அவதானம் மிக முக்கியமானது. கோவில்களை மையமாகக் கொண்ட நுண்பிராந்தியங்களை (Micro Regions) அவர் இனங்காண்கிறார். பின் அந்தப் பிராந்தியங்களை இணைத்து கொத்தணிகளை (Clusters) அடையாளப்படுத்துகிறார். இவை இணைந்து ஒட்டுமொத்தமாக அவருக்கு தமிழ்க் கீழைக்கரை ஆகிவிடுகின்றன.

இந்த அவதானிப்புக்கு அவரைக் கொணர்ந்து விட்டது, அவரது இன்னொரு முக்கியமான வகைப்படுத்தல். கிழக்கிலங்கையிலுள்ள சைவ வழிபாட்டுத் தலங்களை அவர் மூன்று விதமாகப் பிரிக்கிறார். வழிக்கோவில், ஊர்க்கோவில், தேசத்துக்கோவில். 

வழிக்கோவில் என்பவை வீதியோரங்கள், வயல்வெளிகள், சந்தைகள், காட்டுப்பாதைகள், மரத்தடிகள் என்பவற்றிலுள்ள சிறுகோவில்கள். இவை பெரும்பாலும் பிள்ளையார் அல்லது நாகதம்பிரானுக்காக உருவானவை. தனிக்குடும்பங்கள், விவசாயிகள், இடையர்கள், வழிப்போக்கர்கள், வியாபாரிகள் முதலிய குழுவினரால் வழிக்கோவில்கள் உருவாக்கப்படுவதுண்டு. பாதுகாப்பு உணர்வு, நேர்த்தி, தனிப்பயன்பாடு என்பனவே வழிக்கோவில்கள் தோன்றுவதற்கான காரணங்களாகின்றன. சில குடும்பக்கோவில்கள் தவிர ஏனைய வழிக்கோவில்கள் எல்லோருக்கும் உரியவை.

பெரும்பாலான வழிக்கோவில்களில் வழிப்போக்கர்கள், அல்லது நேர்த்தி வைத்தவர்கள் எப்போதாவது தனியாகவோ குழுவாகவோ வந்து பூசை பண்ணி வழிபடக்கூடிய வழிபாட்டுச் சுதந்திரம் இருக்கும்.. இவற்றுக்கு விதிப்படி பூசைகளோ, நிர்வாகமோ, நியமிக்கப்பட்ட பூசகர்களோ இல்லை.  வழிக்கோவில்கள் திறந்தவெளி மேடைகளாகவோ, சிறுகுடிசையாகவோ, சிறுகட்டிடமாகவே இருக்க, மூலவரும் முக்கோணக் கல்லாக அல்லது சாதாரண சுதைச்சிலையாக எளிமையாகக் காணப்படும். இங்கு நாட்டார் முறையிலேயே பூசனைகள் இடம்பெறும். இன்று கிழக்கின் எல்லாத் தமிழ்க் கிராமங்களிலும் வழிக்கோவில்களைக் காணலாம். மட்டக்களப்பு பிள்ளையாரடிப் பிள்ளையார் கோவில், களுதாவளை தெருப்பிள்ளையார் கோவில்,  சங்கமன்கண்டி பெருந்தெருப் பிள்ளையார் கோவில், முதலிய பிரசித்தமான ஆலயங்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வழிக்கோவில்களாக இருந்தவை.

கைவிடப்பட்ட வழிக்கோவில் ஒன்று,
வெல்லாவெளி
ஊர்க்கோவில்கள் என்பவை சற்று அளவில் பெரியவை. இவை ஒரு குறித்த ஊருக்கு அல்லது ஊரின் குறித்த சமூகத்துக்குச் சொந்தமானவை. பொதுவாக வழிக்கோவில்கள் காலகதியில் ஊர்க்கோவில்களாக மாறுவது வழக்கம். இவற்றுக்கென நிர்வாகங்கள், பூசகர்கள், பூசை செய்ய உரிமை பெற்றவர்கள் என்றெல்லாம் மரபுகள் உருவாகியிருக்கும். இங்கு நாட்டார் மற்றும் ஆகம கலப்பிலான பூசனை முறையில் வழிபாடு நிகழலாம். ஊரிலுள்ள அல்லது சாதியிலுள்ள சகல பிரிவினராலும் இக்கோவில் கொண்டாப்படும். பல ஊர்க்கோவில்கள் தனது தெய்வத்தின் பேசும் சக்தியால் ஊர் தாண்டியும் / சமூகம் தாண்டியும் புகழ்பெறுவதுண்டு. களுதாவளைப் பிள்ளையார் கோவில், பெரியபோரதீவு காளியம்மன் கோவில், கல்லடிப் பேச்சியம்மன் கோவில், புன்னைச்சோலை காளியம்மன் கோவில் என்பன இப்படிப் புகழ்பெற்ற ஊர்க்கோவில்கள். 

இந்த அடுக்கில் அதியுயர்வான மூன்றாம் நிலையிலுள்ளவை தேசத்துக்கோவில்கள். தேசத்துக்கோவில்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட சமூகங்களும் பங்குபெறும். தேசத்துக்கோவிலில் நிர்வாகம், கோவில் தொண்டுகள், பூசனை இதெல்லாம் நீண்ட பாரம்பரியத்தின் வழியே எந்தெந்த சமூகத்தவருக்கு, எந்தெந்த ஊரவருக்கு என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும். இக்கோவில்கள் பொதுவாகப் பழைமைவாய்ந்தவை. அல்லது வழிக்கோவிலாகவோ ஊர்க்கோவிலாகவோ இருந்து, தெய்வத்தின் பேசும் சக்தியால் பிற்காலத்தில் தேசத்துக்கோவிலாக வளர்ந்தவை. கிழக்கில் பிரசித்தமான தேசத்துக்கோவில்கள் திருக்கோவில், தான்தோன்றீச்சரம், கோவிற்போரதீவு, வெருகல், மண்டூர், சித்தாண்டி என்பவை. கீழைக்கரையில் பெண்தெய்வத்துக்கான தேசத்துக்கோவில்கள் என்று பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோவிலையும் (?) செட்டிபாளையம் கண்ணகியம்மன் கோவிலையும் கூறலாம். சமகாலத்தில் மாமாங்கம்,  உகந்தை, தாந்தாமலை, சங்கமன்கண்டி, அம்பாறைப்பிள்ளையார் என்று தேசத்துக்கோவில்களின் பட்டியல் வளர்ந்துகொண்டே செல்கிறது. 

கிழக்கின் கோவில்களை மடாலயங்கள், ஆகமவிதிப்படி அமைந்த ஆலயங்கள் என்று மேம்போக்காக வகைப்பிரிப்பதை விட, இப்படிப் பிரிப்பது வசதியானது, பொருத்தமானது. கிழக்கின் ஏதாவதொரு ஊருக்கு நீங்கள் போய் இறங்கினீர்களென்றால், அங்கு கட்டாயம் ஒரு வழிக்கோவிலையும் ஊர்க்கோவிலையும் காண்பீர்கள். அதே ஊரிலோ அல்லது பக்கத்து ஊரிலோ உள்ள தேசத்துக்கோவிலொன்றிலும் அவ்வூர் மக்களின் பங்களிப்பு இருக்கும். விட்டாகரின் இந்த வகைப்பாடு மிகத்திருத்தமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.  எனினும், அவர் அவ்வளவாகக் கவனம் செலுத்தாத சில கேள்விகளை எழுப்பவேண்டிய கட்டாயம் இருக்கிறது. முதலில், தேசத்துக்கோவில் என்ற வரையறை எவ்வாறு உருவாகின்றது? 

தேசம் என்பது நாடு என்பதன் ஒத்தகருத்துச் சொல். இன்று நாடு என்பது, உலகில் தனக்கென தனி அரசையும் எல்லைகளையும் கொண்ட பெரிய நிலப்பரப்பையே குறிக்கும். ஆனால் பழங்காலத்தில் நாடு என்பது குறிப்பிட்ட சிற்றரசொன்றின் ஆளுகைக்குட்பட்ட  சிறு நிலப்பரப்பைக் குறிப்பிடவும் பயன்பட்டிருக்கிறது. சோழர் காலத்து நிர்வாக அலகுகளாக இருந்த நாடு, வளநாடு போன்றவற்றை இன்றைய மாகாணம் அல்லது மாவட்டம் முதலிய நிர்வாக அலகுகளோடு ஒப்பிடலாம். சோழரின் நாடு என்ற சொல்லே பிற்காலத்தில் இலங்கையில் "தேசம்" என்று ஆனது என்று கொண்டாலும் தவறில்லை. யாழ்ப்பாணம், வன்னி, திருக்கோணமலை போன்ற பகுதிகளிலும், "தேசம்" என்ற சொல் வழக்கில் இருந்திருப்பது தெரிகிறது. பழைய மட்டக்களப்புச் சிற்றரசின் எல்லைகளை உள்ளடக்கிய இன்றைய மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களை "மட்டக்களப்புத் தேசம்" என்று குறிப்பிடும் வழக்கம், இன்றும் உள்ளது. தேசத்து வன்னிமை, தேசத்துக் குருக்கள், தேசத்துப்பக்கம் போதல் (தொழில் தேடி வெளியூர் போதல்) போன்ற வட்டாரச் சொற்களை இன்றும் மட்டக்களப்பு  முழுவதும் கேட்கலாம்.

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்.
இப்படி குறிப்பிட்ட எல்லைப் பரப்புக்குள் அமைந்த சகல கிராமங்களையும் அங்கிருந்த சகல சமூகங்களையும் ஒன்றிணைத்த கோவிலே தேசத்துக்கோவில். ஒவ்வொரு தேசத்துக்கோவிலுக்கும் அதற்கான "தேசம்" வேறுபடும். கிடைக்கின்ற ஆதாரங்களின் படி, மட்டக்களப்பின் மிகப்பழைய -  மிகப்பெரிய தேசத்துக்கோவில், திருக்கோவில். இன்று அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு வடக்கே அம்பிளாந்துறை முதல் தெற்கே அறுகம் பூமுனை வரையும் மேற்கே கழிகாம மலையும் (சியம்பலாண்டுவைக்கு அண்மையிலுள்ள கோவிந்தஹெல) உள்ளடங்கிய பகுதி தேசமாக இருந்தது என்பது பதிவுகளிலிருந்து தெரிகிறது.   மட்டக்களப்பின் எட்டு "பற்று" பிரிவுகள் இந்த நிலப்பகுதியில் அடங்குவதால், திருக்கோவில் "மட்டக்களப்பு எட்டுப்பகுதியின் தேசத்துக்கோவில்" என்று அழைக்கப்பட்டிருக்கிறது. "எட்டுப்பகுதி" என்பது தான் இதற்கான தேசம். 

ஏனைய ஒவ்வொரு தேசத்துக்கோவில்களும் எத்தனை கிராமங்களைக் கொண்ட நிலப்பரப்பை தமது தேசமாகக் கொண்டிருந்தன என்று ஆராய்வது சுவையான தேடலாக இருக்கும். "தேசம்" என்பது ஊர்கள் என்று நாம் கொண்டாலும், அவை உண்மையில் "மனிதர்கள்" என்பதை நாம் நினைவுகூரவேண்டும். "இடவாகு பெயர்" இல்லையா? இன்னும் தெளிவாக சாதிகள். எந்தெந்த சாதிகள் எந்தெந்த தேசத்துக்கோவிலை உருவாக்கின. எந்தெந்த சாதிகள் அங்கு தவிர்க்கப்பட்டன, அந்த தவிர்த்தலுக்கு முக்கிய காரணம் ஏதும் இருந்தனவா என்பதற்கெல்லாம் பதில் தேடுவது சுவாரசியத்தை இன்னும் அதிகரிக்கக்கூடும்.

சரி, தேசத்துக்கோவில்களில் கூடி அந்தக்கால மக்கள் என்ன தான் செய்தார்கள்? தேசத்துக்கோவில்கள் ஒரு தேசத்துக்குச் சொந்தமானவை என்கின்ற போது அங்கு இரண்டு அம்சங்கள் முக்கியம் பெறுகின்றன.  ஊரும் குலமும். அதாவது தேசத்திலுள்ள  குறித்த சில ஊர்கள். குறிப்பிட்ட சில சாதிகள். கோவிலின் நிர்வாகம் சார்ந்த கோவில்வன்னியன், நிலைமைப்போடி, வண்ணக்கர், கணக்குப்பிள்ளை, பொக்கிஷநிலைமை முதலிய பதவிகள் இன்ன இன்ன ஊரைச் சேர்ந்த இன்ன இன்ன சமூகங்களுக்கு என்பது ஒரு நியமப்படுத்தப்பட்ட வழமையாக இருந்தது.

கோவில் திருவிழாவின் இத்தனையாம் நாள் திருவிழா இந்த ஊரவருக்கு அல்லது இந்த சாதியருக்கு என்பதும், திருவிழாவில் சாமியின் வாகனம் காவுவது யார், கொடி பிடிப்பது யார், குடை பிடிப்பது யார், ஆலவட்டம் காவுவது யார், பறையடிப்பது யார், நடனமாடுவது யார்,  தேருக்கு வடம் போடுவது யார், சுவாமிக்கு முன்னே போவது யார், பின்னே போவது யார், இதெல்லாம்  சாதி வாரியாக, அல்லது குடி (சாதியின் உட்பிரிவு) வாரியாக முறைப்படுத்தப்பட்ட வழக்கமாக நிலவி வந்தன. 

இப்படி எல்லாச் சமூக மக்களையும் ஒன்றிணைப்பதனூடாக, கோவிலொன்றின் திருவிழாவை மிகச்சிறப்பாகச் செய்யமுடிந்தது. பலர் பார்க்க ஒவ்வொரு குலத்தவரை முன்னே அழைத்து, அவரது குலப்பெருமையைப் பாடச்சொல்லி, அவரைக் கௌரவித்து ஒரு "குடுக்கை" கொடுக்கும் "பங்கு கூறுதல்" எனும் சடங்கு தான்தோன்றீச்சரத்திலும் திருக்கோவிலிலும் நாடகீயத்தனமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. முழுத்தேசமுமே கூடியிருக்கும் சபையில் தமது ஊருக்கு அல்லது சாதிக்கு விதிக்கப்பட்ட கடமையை தாம் முன்னின்று செய்வதையும் குடுக்கை கூறும் போது அதற்கான கௌரவத்தைப் பெறுவதையும், அக்கால மக்கள் பெருமையாகக் கருதியிருக்கிறார்கள். எனவே குடும்பம் குட்டிகளாகத் திரண்டு வந்தார்கள். திருவிழாவில் அங்காடிகளும் சந்தைகளும் அவர்களுக்கென அமைக்கப்பட்டு திருவிழா ஒரு முழுமையான பண்டிகையாகவே மாறியது.

இன்றைக்கும் "தீர்த்தக்கரை போலிருந்தது" என்பது கிழக்கில் பெருங்கூட்டத்தை, மகிழ்ச்சி ஆரவாரத்தைச் சொல்கின்ற சொலவடை. அது  திருக்கோவில் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் இடம்பெறும் போது, கடற்கரையில் நிரையிட்டிருக்கும் தற்காலிக சந்தைக் கடைத்தொகுதிகளைக் குறிப்பிட உருவான உவமை. 1603இல் மட்டக்களப்பு மக்கள் எல்லோரும் திருக்கோவிலில் கூடியிருப்பதால்,  சம்மாந்துறையில் தமது வியாபார நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லை என்ற இடச்சுக் குறிப்பு சொல்வது, இந்த தேசத்துக்கோவில் கட்டமைப்பின் வெற்றியையும் தான்.

தேசத்துச் சனங்கள் இப்படி திருவிழாவைச் சிறப்பித்ததற்கு பிரதியுபகாரமாக, குடுக்கை கூறல் மட்டுமன்றி, இன்னொரு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. குறித்த தேசத்துக்கோவிலுக்குச் சொந்தமான பல காணிகள், எவ்வித கொடுப்பனவுமின்றி அல்லது கூடிய இலாபத்துடன்,  கோவிலில் ஊழியம் செய்யும் குறிப்பிட்ட ஊரவருக்கும், குறிப்பிட்ட சாதியினருக்கும் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. அந்தக் காணியின் விளைச்சலில் பெறப்படும் இலாபம், குறிப்பிட்ட தரப்பாரின் பல தலைமுறைகளை வாழவைத்துக் கொண்டிருந்தது. இப்படி, கோவிலை மையமாக வைத்து உருவான ஒரு பொருளாதார அமைப்பும், தேசத்துக்கோவில்களின் நிலைபேற்றுக்குக் காரணமாக இருந்திருக்கிறது எனலாம்.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம்

ஆனால் 21ஆம் நூற்றாண்டில் தேசத்துக்கோவில்கள் சாதிய அடையாளங்களை விடுத்து இயல்பாகவே நகர்ந்து, ஊர் அடையாளத்தை முன்னிலைப்படுத்துகின்ற ஒரு போக்கைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அல்லது சாதிய அடையாளங்கள் உறங்குநிலைக்குச் செல்ல, ஊர் அடையாளங்களே மோதலுக்கான காரணங்கங்களாக மாறுகின்றன.  உதாரணமாக தான்தோன்றீச்சரம், திருக்கோவில் ஆகிய இரு தேசத்துக்கோவில்களிலும் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இடம்பெற்ற உரிமைப்போராட்டங்களைச் சொல்லலாம். இரு போராட்டங்களிலும் முடிவுகள் வெவ்வேறாக இருந்தாலும், கோவிலில் குறித்த சாதிகளுக்கு வழிவழியாகச் பாத்தியதைப்பட்டு வந்த பாரம்பரியங்களைக் கேள்விக்குள்ளாக்கிய இந்த இரு போராட்டங்களும் இன்று ஊர் முரண்பாடுகளாகவே இனம்காணப்படுகின்றன.

இன்னொரு விடயம், கடந்த நூற்றாண்டில் வழிக்கோவில் அல்லது ஊர்க்கோவில் என்ற நிலையிலிருந்து திடுதிப்பென்று தேசத்துக்கோவிலாக உயர்ந்த உகந்தை, தாந்தாமலை, அம்பாறைப் பிள்ளையார் கோவில் என்பன முற்றாக சாதிய அடையாளங்களைத் துறந்து ஊர் அடையாளங்களையே இன்று  முதன்மைப்படுத்துவதைச் சொல்லலாம். திருவிழா உபயங்களோ, நிர்வாகத்துக்கான வண்ணக்கர் முதலிய ஆட்தெரிவோ இன்று பெரும்பாலும் அங்கெல்லாம் ஊர் சார்ந்ததாகவே  இடம்பெறுகின்றன. இந்திய உபகண்டத்தின் சமூக அமைப்பில் தவிர்க்கமுடியாத அம்சமாக விளங்கும் சாதியம், காலத்துக்குக் காலம் எப்படி உருமாறுகிறது அல்லது எப்படி வலுவிழந்து போகிறது என்று கற்பதற்கான சிறந்த களமாக இப்படி கிழக்கிலங்கை மாறிவிடுகிறது.

இப்போது இன்னொரு முக்கியமான கேள்விக்குப் போகவேண்டும். தலைப்பில் திருப்படைக் கோவில் என்று ஏதோ சொன்னாயே? அதற்கும் தேசத்துக்கோவிலுக்கும் என்ன சம்பந்தம்? திருப்படைக்கோவில்கள் என்ற வகைப்பாடு  குறிப்பாக கீழைக்கரையில் மட்டும் தனித்துவமாக உருவாகக் காரணம் என்ன? 

திருப்படைக்கோவில்களே மட்டக்களப்பின் மிகப்பழைமையான கோவில்கள். ஒரு கோவிலைத் 'திருப்படைக்கோவில்' என்று சொல்வதற்கான முதன்மையான வரையறை, அது "கலிங்க மாகோன் அரனூழியம் வகுத்த கல்வெட்டின்" படியான நடைமுறைகளைக் கொண்டிருக்கவேண்டும். அந்தக் கல்வெட்டு, மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு பாடல். அதில் குறிப்பிடப்பட்ட ஏழு 'கோவசியர்' குலங்களில் ஒன்றோ சிலவோ அரனூழியம் செய்யும் கோவில்களே திருப்படைக் கோவில்கள்.

அந்தக் கல்வெட்டு இப்படி ஆரம்பிக்கிறது. “சிவாலய ஊழியர்களாக நியமிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு கலிங்க மன்னர் வகுத்த கடமைகளை மறந்து நாகபந்தத்தில் மீன்பிடித்து உண்கிறார்கள். காலை மாலை நாமம் தரித்து சிவனை இகழ்ந்து இராமனைப் புகழ்கிறார்கள்” என்று அந்தணர்கள் மாகோனைச் சந்தித்து முறையிடுகிறார்கள். கடும் கோபம் கொள்ளும் மாகோன், மீன் பிடித்தவர்களது கண்ணைப்பிடுங்கியும் அரிநாமம் சொன்னவர்களைக் கழுவிலேற்றியும் தண்டனை கொடுக்கிறான். மேலும் அந்தணர் சொற்படி, சைவம் தழைப்பதற்காக கோவசியர்களை புதிதாக ஏழு சிறைக்குடிகளாகப் பிரித்து, பழைய மரபுகள் தவறாமல் பெயர் சூட்டுகின்றான்.

அரனகங்களில் (சிவாலயங்களில்) விளக்கேற்றுவது, பூ கொடுப்பது, தூசு அகற்றுவது, சாணியால் மெழுகல், பாத்திரம் விளக்கல், மாலை கட்டுதல், மேளம் மீட்டல், சந்தனமரைத்தல், நெல்லுக்குற்றல், வாகனம் காவுதல், ஊஞ்சல் கட்டுதல், பிரசாதம் தயாரித்தல், அந்தணர் கால்களில் நீர்வார்த்தல் என்பவற்றைச் செய்வது மேற்படி கோவசியர் ஏழு குடிகளின் பணி. இதன் பின்னர் “பிற்கால மன்னர்கள் இதை மாற்றினாலும், அல்லது வன்முறையால் மாற்றச் சொல்லி உங்களைத் துன்புறுத்தினாலும், நீங்கள் இந்தப்பணிகளில் இருந்து தவறக்கூடாது. தவறினால் ஏழு குடிகளும் நரகத்தில் விழுவீர்கள். உங்கள் சந்ததிகள் உலகம் அழியும் வரை வறுமையில் வாடுவார்கள். இது சிவபெருமான் திருப்பாதங்கள் மீது ஆணை” என்கிறான் மாகோன்.

இங்கு சொல்லப்படும் மாகோன், பாளி இலக்கியங்களில் கொடுங்கோலனாக வர்ணிக்கப்படும், சிங்களவரால் இன்றும் வெறுக்கப்படும், பொலனறுவை மன்னன் கலிங்க மாகன் (1215 - 1236). என்றால், சிங்கள வரலாற்றுவாதத்துக்கு எதிராக இராவணனும், எல்லாளனும் இன்று  தமிழ்த்தரப்பால் கட்டமைக்கப்படுவது போல், மாகோனும் தமிழ்த்தரப்பின் பிரதிநிதியாக கிழக்கில் முன்னிலைப்படுத்தப்பட்டானா?

இல்லை. அப்படிக் கூறமுடியாது. சமகால அரசியல் சரிநிலைகளுக்கும் இந்தத் தொன்மங்களுக்கும் நேரடித் தொடர்பில்லை. மாகோன் தொடர்பான நம்பிக்கைகள் கிழக்கில் நீண்டநாட்களாக வாய்மொழியில் நிலவுகின்றன.  கிழக்கில் கோவில் சார்ந்த சமூகக் கட்டமைப்புகளை பலப்படுத்துவதில், வீரசைவனாக விளங்கிய மாகனின் பங்களிப்பு நிறையவே இருந்திருக்கும் என்பதை பேராசிரியர் சி.பத்மநாதன் உள்ளிட்ட அறிஞர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

எவ்விதமான மாயமந்திரங்களோ, அற்புதங்களோ குறிப்பிடப்படாமல், சாதாரண சம்பவத்தொகுப்பாகச் சொல்லப்படும் இந்தக் கல்வெட்டுப் பாடல் இயல்பான வரலாற்றறு அம்சத்தையே கொண்டிருக்கிறது.  இதில் வருகின்ற அந்தணர்கள் என்ற பதம், மாகோனின் வைணவ வெறுப்பு, வீரசைவச் சார்பு என்பன பற்றி விரிவாக வேறோரிடத்தில் பேசவேண்டும். ஆனால் கல்வெட்டில் வருகின்ற ஏழு குடிகளில் ஆறு குடியினர் இன்று மட்டக்களப்பில் வேளாள உட்பிரிவுகளாக இனங்காணப்படுகிறார்கள். இவர்கள் பூபாலகோத்திரம், கோவசியர் குலம் என்று இன்றும் தம்மை பெருமையாக அழைத்துக்கொள்வதுண்டு. ஏழாவது குடியினர் இன்று “கோவிலார்” என்ற பெயரில் தனி சமூகப்பிரிவாக இனங்காணப்படுகின்றனர்.

இன்றைக்கு, மாகோன் அரனூழியம் வகுத்த கல்வெட்டின் படி, மேற்படி ஏழு குடிகள் ஊழியம் செய்கின்ற திருப்படைக்கோவில்கள் திருக்கோவில், தான்தோன்றீச்சரம்,  கோவிற்போரதீவு ஆகிய மூன்றும் தான். திருப்படைப்பத்ததி, திருப்படைக் களஞ்சியம், திருப்படைப் பங்கு கூறல் முதலிய சொல்லாடல்களும், அவை இடம்பெறும் பல ஏட்டுச்சுவடிகளும், வேறு கல்வெட்டுகளும்  தான்தோன்றீச்சரத்தையும் திருக்கோவிலையும் மையமாக வைத்தே அதிகளவில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் இங்கு மேலதிக தகவலாக குறித்துக்கொள்ளலாம்.


தேசத்துக்கோவில்கள் ஊதா வண்ணத்திலும் திருப்படைக்கோவில்கள் செவ்வண்ணத்திலும் அமைவிடம் காட்டப்பட்டிருக்கின்றன. 'சமகால தேசத்துக்கோவில்' என்பவை கடந்த நூற்றாண்டில் தேசத்துக்கோவிலாக வளர்ச்சி கண்டவை.

திருப்படைக்கோவில்களின் நிர்வாகம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருந்தது? அதற்கு தெளிவான ஆவணங்களெதுவும் நம் கைகளில் கிடைக்கவில்லை. ஆனால் வாய்மொழியாகச் சொல்லப்படும் செய்திகளிலிருந்தும் கிடைக்கும் அரிதான ஆதாரங்களிலிருந்தும் சிலவற்றைத் தொகுத்துக்கொண்டு ஒரு சித்திரத்தை உருவாக்கலாம். 

திருப்படைக்கோவிலின் நிர்வாகத்தில் முக்குவரும் வேளாளரும் முக்கிய பங்கு வகித்தனர். இதில் முக்குவரின் பங்கு என்பது பிரதானமாக மேற்பார்வையாகத் தான் இருந்தது.  நிர்வாகக் கடமையும், மேலதிகமாக, மாகோன் அரனூழியக் கல்வெட்டில் சொல்லப்பட்ட கடமைகளை தாமும் தனது சிறைக்குடிகளுமாக சேர்ந்து செய்வதும் வேளாளருக்கு  பொறுப்பாக இருந்தது. இக்கோவில்களில் நிர்வாக ரீதியாகப் பலம் வாய்ந்திருந்த பதவி வண்ணக்கர் தான். வண்ணக்கர் முக்குவரா வேளாளரா என்பதை தற்போது திருப்படைக்கோவிலின் அமைவிடச் சூழலும் தீர்மானிக்கிறது. கோவிலின் நடைமுறைகளைத் தீர்மானிப்பதில்,  வண்ணக்கருக்கு முழுமையான சுதந்திரம் இருந்தது. கோவிலின் சொத்துக்களை கையாளும் பொறுப்பையும் அவரே வைத்திருந்தார்.

மட்டக்களப்பு "முக்குவ தேசம்" என்று புகழப்பட்ட முக்குவப் பெரும்பான்மை நாடு. அங்கு இன்னொரு ஆதிக்கசாதியாக  விளங்கிய வேளாளரை இணைத்து, திருப்படைக்கோவில்கள், கோவில் மைய சமூக - பொருளாதார அதிகார அமைப்புகளாக உருவாகி வளர்ந்திருக்கின்றன. இப்படி திருப்படைக்கோவில்கள் உருவாவதற்கு அரசியல் பங்களிப்பும் இருந்தது என்று ஊகிப்பதற்கான தரவுகள் வரலாற்றில் கிடைக்கத்தான் செய்கின்றன.

மட்டக்களப்புத் தேசத்தில் கண்டி அரசோடு ஒட்டுறவாடிய மட்டுக்களப்பு, பழுகாமம், போரதீவு எனும் பலம் வாய்ந்த மூன்று சிற்றரசுகள் விளங்கியிருக்கின்றன. போர்த்துக்கேயர் - ஒல்லாந்தர் காலக்குறிப்புகள் இந்த மூன்று சிற்றரசுகளினதும் அரசியல் வலிமையைச் சொல்வதற்குப் போதுமானவை. ஊன்றி நோக்கினால், நாம் மேலே பார்த்த மூன்று திருப்படைக்கோவில்களுமே இந்த மூன்று சிற்றரசுகளிலும் தலைக்கு ஒன்றாக உருவானவை என்பது புரியவரும்.  திருக்கோவில் மட்டுக்களப்பு (சம்மாந்துறை) அரசுக்கும், தான்தோன்றீச்சரம் பழுகாம அரசுக்கும், கோவிற்போரதீவு போரதீவு அரசுக்கும் உரித்துடைய திருப்படைக்கோவில்கள். 

இந்த ஊகம் சரி என்பதற்கு மூன்று கோவில்களிலுமே நமக்கு சான்றுகள் கிடைக்கின்றன. 1603ஆமாண்டு ஒல்லாந்துக்குறிப்பில், சம்மாந்துறை மன்னன் ஆடித்திருவிழாவுக்குப் புறப்பட்டு திருக்கோவிலுக்குச் சென்ற  சம்பவம் பதிவாகி இருக்கிறது. அதேபோல தான்தோன்றீச்சரத்தின் நிர்வாகத்தில் முன்பு முக்கிய இடம் வகித்த பூபாலகோத்திர வன்னிமைகள் பழுகாமத்தைச் சேர்ந்தவர்கள் தான். கோவிற்போரதீவின் நிர்வாகத்தில் இன்றும் போரதீவுப்பற்று முக்குவரின் பங்களிப்பு இருக்கிறது.

கோவிற்போரதீவு சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்
திருப்படைக்கோவிலில் வரும் “திருப்படை” என்பதன் சரியான பொருள் என்னவென்று தெரியவில்லை. பிற்காலத்தில் சொல்லப்பட்ட "படை, முருகனின் வேலைக் குறிக்கும்" என்ற ஊகமும் அவ்வளவு பொருத்தமானதாக இல்லை. படை என்பதற்கு சேனை, திரள், போர் என்ற அர்த்தங்களும் உண்டு. இந்த மூன்று கோவில்களுக்கும் மூன்று சிற்றரசுகளுக்கும் தொடர்பு இருந்தது உண்மை என்றால், இந்தப் படை என்ற சொல்லுக்கு மூன்று அரசினதும் அரசியல் அதிகாரம்  சார்ந்தது என்று பொருள்கொள்ளலாம். மன்னன் தெய்வத்தின் பிரதிநிதியாக இருந்து தன் நாட்டை ஆளும் வழக்கம் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் நிலவியதைக் கொண்டு, மட்டக்களப்பு அரசனும் திருப்படைக் கோவில் இறைவனின் பிரதிநிதியாகவே தன் தேசத்தை ஆண்டான் என்றும் ஊகிக்கலாம். 

இப்படி குறிப்பிட்ட புவியியல் பிரதேசங்களுக்கென உருவாக்கப்பட்ட மூன்று திருப்படைக்கோவில்களையும் மாதிரியாக வைத்து பிற்காலத்தில் உருவான கோவில்களே தேசத்துக்கோவில்களாகப் பரிணமித்திருக்கின்றன என்று கொள்ளமுடிகின்றது.   அல்லது திருப்படைக்கோவில்களுக்கே ஆரம்பத்தில் தேசத்துக்கோவில்கள் என்ற மறுபெயர் இருந்திருக்கலாம். இந்த மூன்றையும் இன்று ஒரேநேரத்தில் திருப்படைக்கோவில் என்றும் தேசத்துக்கோவில் என்றும் பொதுமக்கள் அழைக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஆனால் மூன்று திருப்படைக்கோவில்களிலும் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் அதிகாரப்போட்டிகள் இடம்பெற்றன. முக்கியமாக நிர்வாக அமைப்பில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றன. பழைய மரபுகள் மாற்றப்பட்டன. சில தரப்பினர் கோவிலிலிருந்து முற்றாக விலகியதும், நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றப் படியேறியதும் கூட நடந்தது.   இன்று சொல்லப்போனால், மூன்றிலுமே மாகோனின் அரனூழிய நடைமுறைப்படி வழமைகள் நிகழ்வதில்லை என்றே சொல்லவேண்டும்.

இன்றைய நிலவரத்தின் படி நாம் இப்படி தொகுத்துக்கொள்ளலாம். கிழக்கில் திருப்படைக் கோவில்கள் மூன்றே மூன்று தான். அந்த மூன்றும் உட்பட கிழக்கில் தேசத்துக்கோவில்கள் பல. இப்போது குறைந்தது பத்து இருக்கின்றன. தேசத்துக்கோவில்கள் எதிர்காலத்திலும் தோன்றலாம். எளிமையாகச் சொன்னால், கிழக்கின் திருப்படைக்கோவில்கள் எல்லாம் தேசத்துக்கோவில்கள். ஆனால் தேசத்துக்கோவில்கள் எல்லாமே திருப்படைக்கோவில்கள் அல்ல. 

மண்டூர், வெருகல், சித்தாண்டி, உகந்தை உள்ளிட்ட சற்றுப் பழைமையான தேசத்துக்கோவில்களையும் இடைக்காலத்தில் திருப்படைக்கோவிலாகவே இனங்கண்டிருக்கிறார்கள். அவ்வாறு இனங்கண்டு பட்டியலிட்ட 'மட்டக்களப்பு சைவக்கோவில்கள்' நூலும் இந்தக் குழப்பத்துக்கு ஒரு காரணம் எனலாம். ஆனால், அங்கெல்லாம் மாகோன் அரனூழியம் வகுத்தபடி தான் வழிபாடுகள் இடம்பெற்றன என்று கொள்வதற்கு முகாந்திரங்கள் எதுவும் இல்லை. இந்தக் கோவில்கள், முதல் மூன்று திருப்படைக்கோவில்களுக்கு காலத்தால் பிற்பட்டவையும் கூட.

பிற்கால தேசத்துக்கோவில்களுக்கு முன்னோடியாக, தமது 'தேச' வரையறைக்குட்பட்ட எல்லாச் சாதியினரையும்  ஒன்றிணைக்கும் வழக்கம், முதலில் திருப்படைக்கோவில்களில் தான் தோன்றியிருக்கவேண்டும். மட்டக்களப்பின் மற்றைய இரு ஆதிக்கசாதிகளான  கரையாருக்கும் சீர்பாதருக்கும் திருப்படைக்கோவில்களில் உரிய கடமைகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்று ஊகிப்பதற்கு இடம் இருக்கிறது. முக்கியமாக தனக்குக் கீழான முழுச்சமூகத்தையும் திருப்படைக்கோவில்கள் ஒன்றிணைத்தபோது, "பட்டாணி" என்று அழைக்கப்பட்ட சோனகரும் கோவில் வழமைகளில் பங்கெடுத்துக்கொண்டதை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. 

சரி. கட்டுரையின் முடிவுக்கு வந்திருக்கிறோம். திருப்படைக்கோவிலின் தேசத்துக்கோவிலின் இன்றைய பயன் என்ன? அவை எதிர்காலத்திலும் தொடரத்தான் வேண்டுமா? சாதியம், பிரதேசவாதம் முதலிய பொருந்தாக் கற்பிதங்களை நீறுபூத்த நெருப்பாக எரியவைத்தபடி இருக்கும் இந்தக் கட்டமைப்புகளை எதிர்காலத்தில் கைவிட்டால் தான் என்ன?

சாதியமும் பிரதேசவாதமும் இன்றைய தமிழரின் மிக முக்கியமான சவால்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை தான். முன்பே சொன்னது போல், இக்கோவில்களின் இரு அடித்தளங்கள் ஊரும் குலமும். அந்த இரண்டின் மீதான பற்றுத் தான் இந்தக் கோவில்களின் நிலைபேற்றுக்கே அத்திவாரங்களாக விளங்குகின்றன. அந்தப் பற்றுகள் வெறியாகலாம்.  சாதிவாதமும்  - பிரதேசவாதமுமாக மாறி கொழுந்துவிட்டு எரியலாம். அது இயற்கை.

ஆனால் திருப்படைக்கோவில்கள் - தேசத்துக்கோவில்களின் வெற்றியே, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற சொலவடைக்கு இன்றுவரை உதாரணமாக நீடிப்பது தான். வெவ்வேறு ஊரவர்கள், வெவ்வேறு குலத்தவர்கள் அங்கு ஒற்றுமையாக நிற்கிறார்கள். எத்தனையோ நீதிமன்ற வழக்குகள், வன்முறைகள், கசப்பான அனுபவங்கள் இடம்பெற்றுள்ள போதும், இன்றும் அக்கோவில்கள் பல ஊர்களின், பல சமூகங்களின் பங்களிப்புடன் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. இக்கோவில்களுக்குச் செல்லும் ஒவ்வொருவருமே, சாதியத்திலும் பிரதேசவாதத்திலும் ஊறிய சாதாரண மானுடர்கள் என்றபோதும்,  இந்த யுகத்தின் மகத்தான மகுடவாசகமான "வேற்றுமையில் ஒற்றுமை"க்கு (Unity in Diversity)  நிகழ்கால ஆதாரத்தை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அது அவற்றின் உறுதித்தன்மைக்கும் நிலைபேற்றுக்கும் முக்கியமான சான்று. 

இந்தக் கட்டுரையாளன் அறிந்த வரலாற்றின் படி, இந்தியாவிலும் வட இலங்கையிலும் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் பரபரப்பாக இடம்பெற்ற கோவில்நுழைவுப் போராட்டங்கல் எதுவும் இந்த தேசத்துக்கோவில்களிலோ திருப்படைக்கோவில்களிலோ இடம்பெறவேயில்லை. அர்ச்சகராகக் கடமை புரிந்த வீரசைவ சங்கமக் குருக்கள் தவிர, வழிபாட்டுத்தளத்தில் எல்லாச் சாதியினரும் சமமான  இடத்தையே இக்கோவில்களில் பெற்றுக்கொண்டார்கள்.  பிற்படுத்தப்பட்ட சாதியினர் உட்பட சகல சாதிகளுக்கும் இந்தக் கோவில்களில் செய்வதற்கு அவரவருக்கென விதிக்கப்பட்ட ஊழியங்கள் இருந்தன என்பது இதற்கு ஒரு காரணம் ஆகலாம். (கிடைத்த சான்றுகளை வைத்துச் சொல்கிறேன். யாரும் வேறு ஆதாரங்கள் கொடுத்தால் இக்கருத்தை திருத்திக்கொள்ளத் தயார்.) 

அதேபோல் இக்கோவில்கள் காலத்துக்கேற்ப தம்மை தகவமைத்துக்கொள்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.   ஊரும் குலமும் என்றிருந்த இருமுனை வாளில், தற்போது குலம் எனும் முனை மழுங்கி வருகிறது. சாதிகளுக்கான திருவிழாக்கள், இன்று ஊர்த்திருவிழாக்களாக பிரதியிடப்பட்டு வருகின்றன.  திருக்கோவில் போன்ற கோவில்கள் இன்னும் இறங்கி, ஊர்த்திருவிழாக்களும் குடும்பத்திருவிழாக்களாக மாற்றமடைய அனுமதித்திருக்கின்றன. உகந்தை முதலிய நவீன தேசத்துக்கோவில்கள் சாதியத்தை முற்றாக நிராகரித்து ஊர் அடையாளத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றன. இது இந்நாட்களில் உருவாகி வளரும் ஆரோக்கியமான போக்கு எனலாம்.

சரி. தேசத்து - திருப்படைக் கோவில்களின் இருண்ட பக்கத்துக்குப் பதில் என்ன? குலமும் ஊரும் வெறியாக மாறி அந்தக் கட்டமைப்புகள் முற்றாக உடைந்தால்?

தான் - குடும்பம் - சாதி - ஊர் -  பிரதேசம் - தேசம் என்று விரிவது தான் மானுடப்பேரறம். மறுதலையாக, தேசம் - பிரதேசம் - ஊர் - சாதி - குடும்பம் - தான் என்று சுருங்குவது அடிப்படைவாதம். விட்டாகரின் கோட்பாட்டையே பார்த்தோமென்றால் இங்கு வழிக்கோவில் ஊர்க்கோவிலாகி, ஊர்க்கோவில் தேசத்துக்கோவிலாவதே இயற்கையின் நியதி. மாறாக, தேசத்துக்கோவில் ஊர்க்கோவிலாகட்டும்; ஊர்க்கோவில் வழிக்கோவிலாகட்டும் என்று ஆசைப்படுவது இயற்கைக்கு மாறானது. அது அடிப்படையையே அசைத்துவிடும். சாதியம் இறுகுகிறது என்றாலோ, பிரதேசவாதம் கட்டவிழ்கிறது என்றாலோ அது தான் நடக்கும். அப்படி நிகழ்வதே காலத்தின் கட்டாயமென்றால், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி பெருமூச்சுடன் விலகுவதைத் தவிர வேறுவழியில்லை. 

இந்தக் கட்டுரையாளன் 20ஆம் நூற்றாண்டின் இறுதித்தலைமுறை. சமூக வலைத்தளங்களில் '90ஸ் கிட்' என்று சுயநகையாடல் செய்யப்படும் இரண்டுங்கெட்டான் தலைமுறையைச் சேர்ந்தவன். கோவில்கள் ஆன்மிக மையங்கள் என்ற நிலையிலிருந்து, பண்பாட்டு நிலையங்கள் என்ற ஸ்தானத்திலிருந்து எத்தனை வேகமாக விலகிவருகின்றன என்பதை அவன் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே வருகிறான். பல தேசத்து - திருப்படைக்கோவில்களின் திருவிழாக்கள் முந்திய ஆண்டை விட அடுத்த ஆண்டு சோபையிழந்து செல்வது போன்ற தோற்றம் அவனுக்கு உண்டாகிறது.  ஏனென்றால், அவனை விட வயது குறைந்த ஒரு சராசரி உள்ளூர் இளைஞனுக்கு பக்தி என்பதும் வழிபாடு என்பதும் என்ன பொருள்படுகிறது என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிகின்றது. அந்தத் 'தலைமுறை இடைவெளியை' கோவில்கள் நிரப்பாத பட்சத்தில், அவை வெறிச்சோட ஆரம்பிப்பது இயற்கை என்பதையும் கண்டுகொள்ள முடிகின்றது. ஆனால் இதை முந்தைய தலைமுறையினருக்குப் புரிய வைப்பது கடினமாக இருக்கிறது.

குலமாறுபாடும் ஊர் வேறுபாடும் கடந்து, இந்த இலட்சியக் கட்டமைப்புகளைக் கட்டிக்காத்தது மிக மென்மையான ஒரு சரடு. அதற்குப் பெயர் இறைநம்பிக்கை. இறைவன்  இருக்கிறான் என்ற நம்பிக்கை. இந்த மரபிலிருந்து வழுவினால் அவன் வெகுண்டு தண்டிப்பான் என்ற நம்பிக்கை. அந்தச் சரடு என்றோ ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. சாதிப்பெருமையும் ஊர்ப்பெருமையும் பேசியபடி அந்தக் கட்டமைப்புகளை உடைக்கும் ஆணவத்தைத் தந்தது பயபக்தி இல்லாமை தான். சரடு அறுந்தபின்னர் அதில் தொங்கிய கட்டமைப்பு - அது எத்தனை பலமானது என்றாலும் - சிதைந்தொழிய வேண்டியது தானே நியாயம்?

கோவில்கள் சமூகங்களின் மையப்புள்ளியாக இயங்கும் ஒரு மகத்தான பண்பாட்டு மாதிரி. இந்திய உபகண்டத்தின் ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரியாகக் காட்டக்கூடிய ஒரு தனித்துவமான சமூக - பொருளாதாரக் கட்டமைப்பு. ஆனால் அதன் பலவீனமான அடித்தளம் எதிர்காலத்துக்கு ஒத்துப்போகாது என்ற ஒரே காரணத்துக்காக, அந்த மொத்தக் கட்டமைப்பையுமே சிதைந்து போக அனுமதித்து வாளாவிருப்போம் என்று முடிவெடுப்பது அத்தனை எளிய காரியமா, என்ன? அந்த முடிவு ஒரு மரபார்வலனை நெஞ்சு வெடித்து அழச்செய்யப் போதுமானது.  அந்த எல்லைக்குப் போகத் தைரியமில்லாவிட்டால், இன்னொரு வழி இருக்கிறது. காலத்தின் கையில் ஒப்படைத்துவிட்டு, நடப்பது நடக்கட்டும் என்று விலகிக்கொள்வது!

கட்டுரைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்ற போது, மாகோனின் அரனூழியக் கல்வெட்டு நினைவுக்கு வந்தது. திருப்படைக்கோவில்கள் எனும் கட்டமைப்பை, திருப்படைக்கோவிலை மாதிரியாகக் கொண்டு பின்னாளில் உருவான தேசத்துக்கோவில்கள் எனும் கட்டமைப்பை, நிலைநாட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்த சகல ஊரவர்க்கும் சகல குலத்தவர்க்கும் சொல்லப்பட்ட ஆணையாக அதைப் புரிந்துகொள்வதில் தவறில்லை.

எளிய மானுடர்கள் நாம். எதற்கும் அஞ்சாமல் இருக்கலாம். ஆனால் சாபத்துக்கு? அதுவும் முன்னோரின் தீச்சொல்லுக்கு? அவர்களின் இரத்தத்தில் விளைந்த நிலமல்லவா நாம் வசிப்பது? அவர்களின் வியர்வையில் பூத்த வாழ்க்கை அல்லவா நாம் வாழ்வது?  மாகோன் சதாசிவனார் பாதத்தாணையாகச் சொன்ன அந்தச் சொற்கள் தான் குலைநடுங்கச் செய்கின்றன. எத்தனை தலைமுறைகள் கடந்து இந்தப் பாவத்தைக் கழுவப் போகிறோம் நாம்?

"பின்னாக வரும் அரசர் இதனை மாற்ற 
பிடித்து அடித்து விலங்கில் இட்டு வருத்தினாலும் 
உன் ஆணை உங்கள் எழு வகுப்போர்க்கு இட்ட
உத்தரவு மாற்றில் ஏழு நரகில் வீழ்ந்து
என் ஆணை உங்கள் பிற சந்ததிகள்
எண்ணூழி காலம் மட்டும் வறுமை உற்று
தன் ஆணை சதாசிவனார் பாதத்து ஆணை
சங்கரனார் ஊழியராய் தரிப்பீர் என்றார்"

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner