கண்டறியாதன கண்டேன்


சீனாவின் எல்லைக்குட்பட்ட திபெத் பகுதியில் அமைந்திருக்கும் 'திசே' எனும் ஒரு மலை தான் நமது புராணங்களில் 'கயிலை' என்று போற்றப்பட்ட மலை. சைவம், பௌத்தம், சமணம், திபெத்திய பொன் சமயம் நான்கிலும் முக்கியமானது இம்மலை. பொன் சமயத்தவருக்கு உலகத்தின் அச்சு. சைவத்தில் சிவனது உறைவிடம். பௌத்தநூல்கள் சொல்லும் மகாமேரு. சமணரின் தீர்த்தங்கரர் இடபதேவர் முக்தியடைந்த அஷ்டபத கிரி, எல்லாம் இதுதான். சிந்து நதியும் பிரம்மபுத்திரா முதலிய ஆறுகளும் இம்மலையடிவாரத்தில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியில் தான் ஊற்றெடுக்கின்றன.




இந்தியாவிலிருந்து பயணிப்பது என்றாலே, விசேட அனுமதி பெற்று விமானத்தில் நேபாளம் போய், அங்கிருந்து இப்பகுதிக்குச் செல்லவேண்டும். இந்தியாவிலிருந்து செல்ல சாதாரணமாக 2000 அமெரிக்க டொலர் செலவு செய்யவேண்டுமாம். மிகக்கடுமையான பயணம் அது. எந்தவித வசதிகளுமற்ற பனிப்பிரதேசம். உயரம் அதிகம் என்பதால் மூச்சுத்திணறல், சுவாசப்பிரச்சினைகள் ஏற்படும். யாத்திரை செல்லும் முதிர்ந்த பலர் அங்கேயே மரிப்பதுண்டு.

இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலேயே இப்படி இருக்கும் இந்த மலைக்கு, அந்தக்காலத்தில் பயணப்பட்டார் ஒரு மனிதர். வயது எழுபதைத் தாண்டிவிட்டது. தமிழகத்திலிருந்தே கால்நடையாகச் சென்றார். கேட்கவும் வேண்டுமா? கல்லும் மண்ணும் அடர்ந்த வரண்ட காட்டுப்பாதை. கால் தேய்ந்தால் என்ன, கையால் நடப்பேன், கை தேய்ந்தால் நெஞ்சால் நடப்பேன், நெஞ்சும் தேய்ந்தால் ஊர்ந்தாவது போவேன், என்னும் வைராக்கியம். உடல் கேட்கவில்லை. பல இடங்களில் தடுமாறி விழுந்தார். சாப்பாடில்லை. தண்ணீரில்லை. உடம்பில் சிராய்ப்புக்காயங்கள். தோலெல்லாம் உரிந்துவிட்டது. கண்ணெல்லாம் இருட்டி வந்தது. முடியவில்லை. அறிவுமயங்கி கீழே விழுந்துவிட்டார்.

கண் விழித்தபோது இன்னொரு வயோதிபர் தனக்கு பணிவிடை செய்துகொண்டிருப்பதைக் கண்டார். அவர் கொடுத்த தண்ணீரை திணறியபடி அருந்தி மீண்டார். விடாய் அடங்கியிருந்தது. உடம்பில் ஓரளவு தெம்பு திரும்பியது போலிருந்தது. இவருக்கு நன்றி கூறிவிட்டு புறப்பட முயன்றார்.
"எங்கு செல்கிறீர்?"
"கயிலைக்கு."
"இந்த வயதிலா?"
"ஏன் போகக்கூடாதா?"
"இல்லை மோசமான பாதை"
"அது தெரியும்"
"ஏற்கனவே களைத்து விழுந்து விட்டீர்"
"இதோ, எழுந்து விட்டேன் தானே?"
"ஐயா, சொன்னால் கேளும். உம்மால் கயிலைக்குப் போகமுடியாது"
"போக முடியாவிட்டால் போகும் வழியிலேயே செத்து விழுகிறேன்"
"உம் மீது அக்கறையில் தான் சொல்கிறேன்"
"உம் அக்கறைக்கு நன்றி"
வயோதிபர் புன்னகைத்தார். "சரி. சொல்லும், ஏன் கயிலைக்குப் போகிறீர்?"

"இதென்ன கேள்வி. அங்கே என்னப்பனும் அம்மையும் அழகுற அமர்ந்திருக்கும் காட்சியைத் தரிசிக்கத்தான்" அவர் கண்கள் கசிந்தன.
"சரி. நம்புகிறேன். நீர் கட்டாயம் கயிலையைக் காண்பீர். அதற்கு முதல் களைப்புத் தீர கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டுச் செல்லும். நான் உமக்கு ஏதாவது உண்பதற்கு தயார் செய்கிறேன்."
"உமக்கு கடன்பட்டிருக்கிறேன். ஆனால் நேரத்தை வீணாக்க நான் தயாரில்லை. புறப்படுகிறேன்"
"சரியான பிடிவாதக்காரர் நீர், ஓய். ஓய்வெடுக்கவேண்டாம். அருகில் ஒரு தடாகம் இருக்கிறது. குளித்துவிட்டாவது புறப்படுகிறீரா? உடல் களைப்பாவது தீரும்."
இவர் யோசித்தார். குளித்தால் கொஞ்சம் நன்றாகத் தான் இருக்கும். அப்படியே நடந்து குளத்தில் இறங்கினார். குளிர்ந்த நீர் முதிர்ந்த உடலை மெல்ல நடுங்கச்செய்தது. உடலிலிருந்த காயங்கள் எல்லாம் தீப்பட்டது போல் எரிந்தன. சிவசிவ என்றபடியே நீரில் மூழ்கினார். உடல் குளிரத்தொடங்கியது. கண்கள் சொக்கிக்கொண்டு வந்தன.

மூச்சுத்திணறுவதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்து மேலே வந்தவர் திகைத்துப்போனார். "இது எந்த இடம், எங்கு நிற்கிறேன் நான்? என்னை குளிக்கச்சொன்ன முதியவரைக் காணவில்லையே? ஆ! இது ஐயாறு, திருவையாறு சிவன் கோவில். இங்கெப்படி நான் வந்தேன்?"

இப்படி அதிர்ந்தவர் தன்னை மேலும் கீழும் பார்த்தார். உடல் மீண்டிருந்தது. காயங்களின் தடத்தைக் கூடக் காணவில்லை. அதிசயமாக இருக்கிறது. ஒருவேளை கனவேதும் கண்டபடி இந்தக் குளத்தில் விழுந்துவிட்டேனோ!

வியப்புடன் சுற்றுமுற்றும் பார்வையை செலுத்தினார். இனிமையான அதிகாலை. இப்போது தான் விடிய ஆரம்பித்திருக்கிறது. கோவில் இளவெயிலில் மெல்ல தெளிந்துவந்தது. பறவைகளின் ஓசை. விடிவதை அறியாத சுவர்க்கோழியின் சத்தம்.

சில அடியவர்கள் வந்து குளத்தில் இறங்கி தாமரைமொட்டுக்களைப் பறித்து குடத்தில் நீரள்ளி கோவில் நோக்கி நடந்துசென்றார்கள். ஏதோ முடிவுக்கு வந்தது போல் குளத்திலிருந்து வெளியேறி அவர்களுக்குப் பின்னால் நடக்கத் தொடங்கினார். இவர்

தூரத்தே ஒரு பிளிறல், திரும்பிப் பார்த்தால் கோவில்யானைகள் இரண்டு மெல்ல அசைந்தாடி வந்துகொண்டிருந்தன. ஆண் யானை, பிடியானை மீது மெல்ல முட்டியது. பிடி விலகி கோபத்துடன் உறுமியது. களிறு மீண்டும் செல்லமாக முட்டியது. பின் அதன் மீது அன்போடு தும்பிக்கையைப் போட்டது. பிடி செவிச்சுளகுகளை வீசி மெல்ல முனகியது.

யானைகளின் குறுக்கே ஓடியது ஒரு பெட்டைக்கோழி. அதைத் துரத்திக்கொண்டு வந்தது ஒரு சேவல். கொக்கரக்கோ என்று அது கூவ, கோழி கொக்கொக் என்று மறுத்தபடி வேகமாக நடந்தது. விர்ரென்று கிறீச்சிட்டபடி இரு பறவைகள் வானில் தோன்றின. அண்ணாந்து பார்த்தால் குயில்கள். குளத்தின் கரையிலிருந்த வில்வ மரத்தின் ஒரு கிளையில் ஊடலுடன் ஒரு குயில் அமர, மற்றையது அடுத்த கிளையில் அமர்ந்து கூவியது. "கூ...!" வசந்தத்தின் கீதம்.

மரத்தின் கீழே கொடியில் காயப்போட்ட வெண்ணிறத்துணிகள் இரண்டு பறந்தன. என்ன அது? ஓ, அன்னங்கள். இரு அன்னங்கள் "அழகாக நடக்கிறோம், இல்லையா?" என்று இடையை அசைத்து கேட்டபடி நடந்து மெல்ல குளத்தில் இறங்கின. குளத்தின் அக்கரையில் "மாயோன்" என்று அகவியது ஆண்மயிலொன்று. அருகே அவன் தோழி மண்ணைத் தோண்டி எதையோ கொத்தி உண்டுகொண்டிருந்தாள். "நான் அருகில் இருக்க என்ன தீனி வேண்டிக் கிடக்கிறது உனக்கு" என்று தோகைவிரித்து சிலிர்த்தாடினான் அவன். அவள் அவனைக் கவனிக்கவேயில்லை. நிலத்தைக் கிளறுவதில் மும்முரமாக இருந்தாள்.

அவர்களின் தலைக்கு மேலால் பறந்த இரு அன்றில் பறவைகள் கீச் என்றபடி வேகமாக வந்து கரையிலிருந்த கோரைப்புதரில் புகுந்து மறைந்தன. உறுமியபடி அந்தப்பக்கம் குளத்தில் நீர்குடிக்க வந்தன காட்டுப்பன்றியும் அதன் துணையும். அதனருகே கலைமானும் அதன் பிணையும் "ம்?" என்றன. எங்கிருந்தோ வந்து குளத்தில் இறங்கிய ஒரு நாரைச்சோடி "பேக்!" என்றபடி நீரில் பாய்ந்தது. "கீக்கீ!" என்று அவற்றுக்குப் பதிலளித்தபடி அடுத்த மரத்தில் சிரித்தன இரு கிளிகள்.

மிக அருகே "ம்பா" என்று கேட்ட சத்ததைக் கேட்டு அவர் பதறி விலகினார். அது ஒரு மாடும் பசுவும். கனிந்த கண்களால் அவரைப் பார்த்து நாக்கைச் சுழற்றி மூக்கைத் துடைத்தது எருது. பசு அதனருகே குனிந்து "ஹ்ரூம்" என்றது. இரண்டும் அவரை விலகி நடந்து குளக்கரையை நெருங்கின.

ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தவருக்கு உள்ளே எதுவோ அதிர்ந்தது. மயங்கிக்கிடந்த தன்னை மீட்டு தண்ணீர் தந்த வயோதிபரின் கள்ளமற்ற விழிகள் நினைவில் எழுந்தன. "இதென்ன கேள்வி. அங்கே என்னப்பனும் அம்மையும் அழகுற அமர்ந்திருக்கும் காட்சியைத் தரிசிக்கத்தான்" என்று தான் சொன்னதும், அவர் சிரித்து "சரி. நம்புகிறேன். நீர் கட்டாயம் கயிலையைக் காண்பீர்." என்று சொன்னதும் இவர் மூளையில் பளிச்சிட்டன. உடல் முழுதும் மெல்லிய பரவசம் பரவியது. ஆ! இதுதான் கயிலை! இதுதான் கயிலை! நான் எதற்கு அவ்வளவு தூரம் செல்லமுயன்றேன்? கண்டுகொண்டேன்! இதுவரை கண்டறியாததைக் கண்டுகொண்டேன்! என் அப்பனே, என் அம்மையே, இத்தனை அருகிலா இருந்தீர்கள் நீங்கள், தெரியாமல் போய் விட்டதே எனக்கு!

பெரியவர் உருகினார். அவர் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வடிந்தது. அதற்குள் வந்திருப்பது யாரென்று அந்தப்பகுதியில் உலவியவர்களுக்குத் தெரிந்துவிட்டது. எல்லோரும் கைகூப்பியபடி ஓடிவந்தார்கள். அவர் கண்களை மூடி குரலை சுருதிகூட்டினார். கிழக்கே எழுந்த சூரியனின் முதற் கிரணம் அவர் மீது விழுந்ததில் முதிய குரல்வளை ஏறி இறங்குவது தெரிந்தது. உதடுகள் மெல்ல அசைந்தன. வந்துவிழுந்தன சொற்கள் "மாதர் பிறைக்கண்ணியானை மலையான் மகளோடும் பாடி" பாடிமுடித்ததும் கூடியிருந்தவர்கள் நெகிழ்வுடன் கைகூப்பினார்கள் " நமோ பார்வதீபதயே! அரகர மகாதேவா! அப்பரே போற்றி! தம்பிரான் அடிகளே போற்றி!"
*********

இப்படியாக, சைவத்தின் சமய நாற்குரவர் நால்வரில் ஒருவரான அப்பரடிகள், கயிலைக்குச் செல்ல திட்டமிட்ட பயணம், திருவையாறு நோக்கித் திருப்பப்பட்டு அவர் அங்கு “மாதர்பிறைக்கண்ணி யானை” என்று தொடங்கிப் பாடிய பதினொரு பாட்டுகளுக்கும் “கயிலைப்பதிகம்” என்று பெயர். இந்தப் பாடல்கள் எல்லாவற்றிலுமே ஒரு கவித்துவ அழகு உண்டு.

இந்த எல்லாப் பாடல்களுமே சந்திரனைக் கண்ணியாகக் கொண்டவன் என்று தொடங்குகின்றன. மாதர்ப்பிறை (அழகான பிறை), போழிளம் (இளம்பிறை), எரிப்பிறை (ஒளிரும் பிறை), ஏடுமதி (இளம்பிறை) என்றெல்லாம் அவை சந்திரனை வர்ணிக்கின்றன. கண்ணி என்றால் ஆண்கள் தலையில் அணியும் பூமாலை. சிவன் தலையில் இளம்பிறையே கண்ணியாக விளங்குகிறது என்று பாடுகிறார் அப்பர்.

இரண்டாம் வரிகள் எல்லாம் சிவன் உமையோடு இருப்பதைப் பாடுகின்றன. மலையான்மகளொடும் பாடி, பூந்துகிலாளொடும் பாடி, ஏந்திழையாளொடும் பாடி, என்று பலவாறு வருகின்றது. பதினொரு பாட்டின் எல்லா ஐந்தாம் வரிகளும் “கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்” என்று முடிகின்றன. இதற்கு முன்பு தான் அறியாத ஏதோவொன்றைத் தான் கண்டுவிட்டேன். அப்படிக் கண்டதால் அவர் திருப்பாதம் கண்டேன் என்று பொருள்.

சிவன் தலையில் அணிந்த பிறையைப் பாடுவதில் தொடங்கி பாதங்களைப் பாடுவதில் முடியும் இப்பாடல் “கேசாதிபாதம்” எனும் பிற்கால சிற்றிலக்கிய வகைக்கு அடிப்படை. தெய்வங்களை உச்சி (கேசம் - தலைமுடி) முதல் உள்ளங்கால் (பாதம்) வரை வர்ணிப்பது தான் கேசாதிபாதம். பிற்காலத்தில் பாதத்திலிருந்து தலை வரை மாறிப் பாடும் வழக்கமும் ஏற்பட்டது. அதற்கு “பாதாதிகேசம்” என்று பெயர்.

பதினொரு பாடல்களிலும் கேசாதிபாதம் பாடும் அப்பர், ஈசனுடன் இணைபிரியாதிருக்கும் உமையவளையும் பாடுகிறார். இப்படி இருவரையும் அடி முதல் முடி வரை கண்ணாரக் கண்டுவிட்டதால், கண்டறியாதன கண்டுகொண்டேன் என்கிறார் அவர். அப்படி என்ன கண்டறியாததைக் கண்டுவிட்டார் அப்பர்?

இதற்கான பதில் ஒவ்வொரு பாட்டிலும் நான்காவது வரியில் வருகின்றது. ஒவ்வொரு பாட்டிலுமே ஒவ்வொரு விலங்குச்சோடி பாடப்படுகிறது. நாம் மேலே பார்த்த களிறும் பிடியும், சேவலும் கோழியும், அன்னமும் பேடும், இப்படி பதினொரு விலங்குகளின் இணையைப் பார்த்ததைத் தான் கயிலையில் சிவனுமையைக் கண்டதாகப் பாடுகிறார் அப்பர்!

ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்ட, ஆனால் முற்றாக மாறுபட்ட இரண்டை இறைவனின் உருவமாகக் காணும் மரபே சைவமரபு. மணிவாசகர் “மெய்மையும் பொய்மையும் ஆயினாருக்கு, சோதியுமாய் இருள் ஆயினார்க்கு, இன்பமும் துன்பமும் ஆயினார்க்கு” என்று முரண்களின் இருமையாகவே இறைவனைப் பாடுவார். சிவனும் உமையுமே கூட முரண்களின் இருமை தான். அவன் ஆண், அவள் பெண்; அவன் சிவப்பு, அவள் கறுப்பு; அவன் நெருப்பு அவள் நீர். அந்த இருமையைத் தான் அப்பர் பாடுகிறார். யானைச்சோடி, அன்னச்சோடி, கிளிச்சோடி என்றெல்லாம்.

வீட்டில் முடங்கியும் முடங்காமலும் கிடக்கும் இந்தக் காலத்தில் இறைவன் என்பதை முரண்களின் இருமையாகத் தான் நாமெல்லாம் உணர்ந்திருப்போம். இதுபோல சோர்வான, வெறுக்கத்தக்க, அசாதாரணமான சூழலை நாம் இதற்குமுன் கடந்ததில்லை. ஆனால் இதுபோலவே மகிழ்வான, கொண்டாட்டமான, பூரிப்பான காலமெதையும் கூட நாம் கடந்ததில்லை.

இறைவனின் அடியையும் முடியையும் ஆனானப்பட்ட பிரம்மா விஷ்ணுவாலேயே காணமுடியாது என்பது ஐதிகம். ஒன்றை ஒன்று நிரப்புகின்ற – ஒன்றாலொன்று ஆன இயற்கையின் ஆண்-பெண் இருமையில் சிவசக்தியைக் கண்டுகொண்ட அப்பர், அடிமுடி கண்டதாக உரிமைகோருகிறார். கயிலையைக் கண்டேன், கண்டறியாதன கண்டுகொண்டேன் என்று மகிழ்ந்தாடுகிறார்.

தமிழ்ப்பக்தி மரபில் அப்பரின் கயிலைப்பதிகம், முக்கியமான புரட்சி. கயிலைக்கெல்லாம் புறப்பட்டுக் கடவுளைத் தேடி நீ போகத் தேவையில்லை. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு உயிர்ச்சோடியுமே சிவனுமை தான். நாம் வாழும் இடமே கயிலை தான் என்ற மகத்தான தரிசனம் இடம்பெற்ற பாடல் அது. எத்தனை மனமுடைந்திருந்தாலும், மனதுக்குப் பிடித்தவர் அருகில் இருக்கிறார் என்று கற்பனை செய்துகொள்வதே சில சந்தர்ப்பங்களில் நாம் மீண்டுகொள்ளப் போதுமானது. கடவுளே நம்மருகில் இருக்கிறான் என்று எண்ணிக்கொள்வது? அவனது இடத்தில் இப்போது நாம் இருக்கிறோம் என்று எண்ணிக்கொள்வது?

அந்த மகிழ்ச்சியைத் தருவது இந்தக் கயிலைப்பதிகம். ஈஷாவின் தேவார இசைத்தொகுதியில் வெளியான “மாதர்ப்பிறைக்கண்ணி” இப்போது யூடியூப்பில் காட்சி விழியமாக தரவேற்றப்பட்டிருக்கிறது. பார்த்து மகிழுங்கள். வீட்டுக்குள்ளேயே அடைபட்டிருந்தாலும் நாம் கவலைப்பட ஒன்றுமில்லை. நாம் கயிலையில் இருக்கிறோம். சிவனுமையின் கண்காணிப்பின் கீழ் இருக்கிறோம் என்ற சிந்தனையே மகிழ்ந்தாட வைக்கும். இன்னும் கொஞ்சநாள் தான். பழையபடி மீண்டுவிடுவோம். ஏனென்றால் நாம் என்றும் இருப்பது கயிலையில். எங்கெங்கும் இருக்கும் சிவசக்தியின் அருகில்.
“கண்டேனவர் திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்!” 🔱
பதிக வரிகள் இங்கு

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner