கூத்த யாத்திரை: இலங்கைக் கூத்துக்கலையின் குறுக்குவெட்டுப் பார்வை
கூத்து, இலங்கைத்தமிழரின் ஆடற்கலைகளில் ஒன்று. கூத்துக்கலையில் செவ்வியல் கூறுகள் இனங்காணப்பட்டிருப்பதால், அதை நாட்டார் கலை என்று மட்டும் முத்திரை குத்த இயலாது என்ற கருத்து தற்போது ஈழத்து ஆய்வுலகில் தோன்றியிருக்கிறது. ஆனால் தமிழ்ப்பண்பாட்டு ஆர்வலனாக, சுமார் பத்தாண்டுகளாக கூத்து தொடர்பாக என்னை அரித்துக்கொண்டிருக்கும் வினாக்கள் இரண்டு. இன்றுவரை, இலங்கையில் தமிழர் தேசிய நடனம் என்றால், பரதநாட்டியமே முன்வைக்கப்படுகிறதே, கூத்துக்கு அந்த இடம் ஏன் வழங்கப்படவில்லை? என்பது முதலாவது வினா. இரண்டாவது வினா, அப்படி தமிழர் தேசிய நடனமாகக் கூத்துக்கு இடம் கொடுப்பதென்றால், கூத்தில் ஊருக்கு ஊர், இடத்துக்கிடம் ஆட்டமுறைகளில் வேறுபாடு நிலவுகையில், அதில் எதை சரியான வடிவமாகக் கருதி, அரங்காற்றுகைக்கென அங்கீகரிப்பது?