பொலனறுவைச் சோழர் கோவில்கள்
(கனடாவிலிருந்து வெளியாகும் தாய்வீடு இதழின் 2023 ஓகத்து மாத இதழில் வெளியான கட்டுரை. இதழை இங்கு படிக்கலாம்) பொலனறுவை இராஜராஜ சோழனும் இராஜேந்திர சோழனும் “ஜனநாதமங்கலம்” என்ற பெயரில் ஆண்ட பூமி. அவர்களிடமிருந்து இலங்கையை மீட்ட விஜயபாகு மன்னன் அரசு புரிந்த மண். இலங்கையின் புகழ்பெற்ற மன்னர்களான முதலாம் பராக்கிரமபாகு, நிசங்கமல்லன் உள்ளிட்ட பலர் வாழ்ந்த தலைநகர். கலிங்க மாகோன் இறுதி மன்னனாக வீற்றிருந்து ஆண்ட நிலம். கடந்த ஒரு மாத இடைவெளியில் வெவ்வேறு காரணங்களுக்காக மூன்று நண்பர்களோடு பேசக்கிடைத்தது. அதிசயமாக மூவருமே பொலனறுவை பற்றிப் பேசினார்கள். இருவர் அங்கு குடும்பத்தோடு சுற்றுலா போய் அங்கிருந்த சைவ – வைணவக் கோவில்களைப் பார்வையிட்டு வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவரால் இரண்டே இரண்டு கோவில்களையே பார்க்க முடிந்திருந்தது. அவர் பாவமாக “பொலனறுவையிலுள்ள பெரும்பாலான சோழர் காலக் கோவில்கள் எங்கே இருக்கின்றன என்றே தெரியவில்லை. கூகிள் வரைபடத்திலும் ஒழுங்கான தரவு இல்லை. அந்தக் கோவில்கள் பற்றிய விபரம் எங்கு கிடைக்கும்?” என்று கேட்டார். பொலனறுவையில் அமைந்திருக்கும் பெரும...