பொலனறுவைச் சோழர் கோவில்கள்

 (கனடாவிலிருந்து வெளியாகும் தாய்வீடு இதழின் 2023 ஓகத்து மாத இதழில் வெளியான கட்டுரை. இதழை இங்கு படிக்கலாம்)

 

பொலனறுவை இராஜராஜ சோழனும் இராஜேந்திர சோழனும் “ஜனநாதமங்கலம்” என்ற பெயரில் ஆண்ட பூமி. அவர்களிடமிருந்து இலங்கையை மீட்ட விஜயபாகு மன்னன் அரசு புரிந்த மண். இலங்கையின் புகழ்பெற்ற மன்னர்களான முதலாம் பராக்கிரமபாகு, நிசங்கமல்லன் உள்ளிட்ட பலர் வாழ்ந்த தலைநகர். கலிங்க மாகோன் இறுதி மன்னனாக வீற்றிருந்து ஆண்ட நிலம்.


கடந்த ஒரு மாத இடைவெளியில் வெவ்வேறு காரணங்களுக்காக மூன்று நண்பர்களோடு பேசக்கிடைத்தது. அதிசயமாக மூவருமே பொலனறுவை பற்றிப் பேசினார்கள். இருவர் அங்கு குடும்பத்தோடு சுற்றுலா போய் அங்கிருந்த சைவ – வைணவக் கோவில்களைப் பார்வையிட்டு வந்திருந்தார்கள்.  அவர்களில் ஒருவரால் இரண்டே இரண்டு கோவில்களையே பார்க்க முடிந்திருந்தது. அவர் பாவமாக “பொலனறுவையிலுள்ள பெரும்பாலான சோழர் காலக் கோவில்கள் எங்கே இருக்கின்றன என்றே தெரியவில்லை. கூகிள் வரைபடத்திலும் ஒழுங்கான தரவு இல்லை. அந்தக் கோவில்கள் பற்றிய விபரம் எங்கு கிடைக்கும்?” என்று கேட்டார்.

 

பொலனறுவையில் அமைந்திருக்கும் பெரும்பாலான சைவ – வைணவக் கோவில்கள் ஈழத்தில் சோழரின் ஆட்சி ஏற்பட்ட பின்னணியிலேயே எழுந்தவை. அவற்றை மேலோட்டமாகப் பார்ப்பது, ஈழத்துக்கும் சோழத்துக்குமான வரலாற்று உறவைப் ஆராய்வதற்கு ஒரு அறிமுகமாக நமக்கு அமைவதுடன், பொலனறுவைக்குச் சுற்றுலா செல்லும் ஏனையோருக்கும் அவற்றைப் பார்த்துவருவதற்கு வசதியாக இருக்கும். எனவே இன்றைய தொடரில் அந்தக் கோவில்களைப் பற்றிப் பார்க்கலாம்.


இலங்கையின் பிரித்தானியர் காலத் தொல்லியல் ஆய்வேடுகளின் படி, பொலனறுவையில் மொத்தம் பதினான்கு சைவ - வைணவக்கோவில்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.  அவற்றை மேற்கோள் காட்டி, பேராசிரியர் பத்மநாதன் தன் “இலங்கையில் இந்து கலாசாரம்” நூலில் விரிவான தகவல்களைத் தந்திருக்கிறார். அவர் தரும் பட்டியலின் படி, சிவன் கோவில்கள் ஏழு, திருமால் கோவில்கள் ஐந்து, கொற்றவை கோவில் ஒன்று. இன்னொன்று அகழப்பட்டபோது இன்ன கடவுளுக்கு உரியதென அடையாளங் காணப்படாத கோவில் - ஆக மொத்தம் பதினான்கு.

 

அடையாளம் காணப்படாத கோவிலருகே பிற்காலத்தில் பிள்ளையார் சிலையொன்று கிடைக்கப்பெற்றதால் அதை பிள்ளையார் கோவில் என்று கருதுகின்றனர். சிவன் கோவில்களுக்கும் திருமால் கோவில்களுக்கும் அவை அகழாய்வில் இனங்காணப்பட்ட வரிசையில் முதலாம் இலக்க சிவாலயம், இரண்டாம் இலக்க சிவாலயம், முதலாம் இலக்க விண்ணகரம், இரண்டாம் இலக்க விண்ணகரம் என்றவாறு இலக்கமிடப்பட்டுள்ளன.  விண்ணகரம் என்றால் திருமால் கோவில். பொலனறுவையின் சிவாலயங்களுக்கும் விண்ணகரங்களுக்கும் சூட்டப்பட்ட பெயர்கள் அவை கண்டறியப்பட்ட ஒழுங்கில் தான் என்பதால் அதை வைத்து அக்கோவில்களின் பழைமையை அளவிடக்கூடாது.

 

ஆனால் இந்தப் பட்டியலையும் நேரடி அவதானிப்பையும் வைத்துப் பார்த்தபோது கிடைத்த பெறுபேறுகள் வேறு. பொலனறுவையில் ஏழு சிவாலயங்களுக்குப் புறம்பாக தொல்லியல் அறிக்கைகளில் “சிவாலயம் ஏ (A)” என்று அடையாளமிடப்பட்ட எட்டாவது சிவாலயம் ஒன்றும் இருக்கிறது. ரன்கொத் விகாரத்தை அண்டி “தேவாலயம்” என்று இனங்காணப்பட்டுள்ள குறைந்தது இரண்டு கட்டட இடிபாடுகள் காணப்படுகின்றன. இவையும் சைவ – வைணவத் தெய்வங்களுக்கு அமைக்கப்பட்டிருந்த கோவில்கள் என்று கொள்ளலாம்.

 

முதலாம் விண்ணகரம் என்று அடையாளமிடப்பட்ட திருமால் கோவில் இன்று இல்லை. பிரித்தானிய தொல்லியல் அறிக்கைகளை ஆராய்ந்தால், இரண்டாம் சிவாலயத்தையே ஆரம்பத்தில் “முதலாம் விண்ணகரம்” என்று அடையாளப்படுத்தி, பின்பு தொடர்ச்சியான அகழாய்வுகளின் வழியே அது சிவாலயம் என்பதை அறிந்து அதற்கு “இரண்டாம் சிவாலயம்” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

 

ஐந்தாம் விண்ணகரத்தினதும் கொற்றவை கோவிலினதும் அமைவிடங்கள் பற்றிய தகவல்கள்  கிடைக்கின்ற போதும்,  புலத்தில் அவை இரண்டும் இன்று மறைந்துவிட்டன. அவை அங்கு தான் காட்டில் எங்கேனும் மறைந்திருக்கவேண்டும். அல்லது தெரிந்தோ தெரியாமலோ அழிக்கப்பட்டிருக்க வேண்டும். இலங்கையின் தொல்லியல் முக்கியத்துவமிக்க சுற்றுலா நகரொன்றில் ஆவணப்படுத்தப்பட்ட இரு தொல்லியல் தலங்கள் வெறும் நூறாண்டுகளில் தடயமேதுமின்றி மறைந்துவிட்டன என்பது அவ்வளவு மகிழ்ச்சிகரமான செய்தி இல்லை.

 

ஆக, இப்போது கிடைக்கின்ற தரவுகளின் படி, சிவாலயங்கள் எட்டு, விண்ணகரங்கள் மூன்று, பிள்ளையார் கோவில் ஒன்று என்றவாறு மொத்தம் 12 சைவ – வைணவக் கோவில்களை நீங்கள் பொலனறுவையில் தரிசிக்க முடியும் (உரு.01). அடையாளம் காணப்படாமல் ரன்கொத் விகாரத்தின் அருகே உள்ள இரு கோவில்களையும் சேர்த்தால், அதே பதினான்கு கணக்கே வருகின்றது.


உரு. 01 பொலனறுவைச் சோழக் கோவில்களின் அமைவிடம். இனங்காணல் வசதிக்காக பௌத்த விகாரங்களின் அமைவிடங்கள் காட்டப்பட்டுள்ளன. இலக்கங்கள் கோவிலைக் குறிக்கும். உ-ம். 1 – முதலாம் சிவாலயம்

 

கேள்விப்பட்டதும் தாமதிக்காமல் இந்தப் பதினான்கு கோவில்களையும் பார்ப்பதற்கு பொலனறுவைக்கு சுற்றுலாவுக்கு கிளம்பிவிட்டீர்கள் என்றால், கொஞ்சம் பொறுங்கள். இந்தக் கோவில்களில் நாம் இரசிக்க வேண்டியவை என்னென்ன என்பதைப் பார்க்கவேண்டி இருக்கிறது. முதலாம் - இரண்டாம் சிவாலயங்கள் ஓரளவு பிரபலமானவை என்பதால் அவற்றைக் கண்டுபிடிப்பது சுலபம். ஏனையவற்றுக்கென நிறுவப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகைகள் பல சிதைந்துள்ளன. தெளிவான குறிப்புகளும் ஓரிரு கோவில்களுக்குத் தான் வைக்கப்பட்டுள்ளன.

 

பொலனறுவையில் பௌத்தத் தலங்களான  தலதா முற்றம், இரன்கொத் விகாரம், கிரி விகாரம், கல் விகாரம், பவள விகாரம் (சிங்களம்: பபளு விஃகார), மாணிக்க விகாரம் (சிங்களம்: மெணிக் விஃகார) என்பன சிறப்பாகப் பேணப்பட்டு வருகின்றன என்பதால் அவற்றுக்கு தெளிவான வழிகாட்டிப் பலகைகள் உள்ளன. அவற்றை வைத்து இந்தக் கோவில்களைத் தேடிப் பிடிப்பது இலகுவாக இருக்கும்.

 

கொழும்பையும் மட்டக்களப்பையும் இணைக்கும் A11 இலக்க திருக்கொன்றையடிமடு – மருதங்கடவலை வீதியானது பராக்கிரம சமுத்திரம், பெந்திவாவி (தோப்பவாவி) எனும் இரு ஏரிகளின் கரையோரமாக பொலனறுவை புனித நகரை ஊடறுத்துச் செல்கின்றது. பொலனறுவைத் தொல்லியல் மையத்துக்கான பிரதான நுழைவிடம், இந்த ஏ11 வீதியோடு இங்குராங்கொடை வீதி இணையும் சந்தியிலிருந்து தெற்கே ஒரு கிமீ தொலைவில் இடப்பக்கமாக வருகின்றது. பிரதான நுழைவிடத்தில் நுழைந்ததும் நுழைவுச்சீட்டு நிலையத்தின் அருகே வீதியின் மறுபுறம் அமைந்திருப்பது முதலாம் சிவாலயம். முதலாம் சிவாலயத்துக்கு வடக்கே தான் தலதா முற்றம் அமைந்துள்ளது. நான்காண்டுகளுக்கு முன்னர் பெய்த கடும் மழையில் முதலாம் சிவாலயம் சிதைந்துவிட்டபடியால் தற்போது தொல்லியல் திணைக்களத்தால் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

அப்படியே தலதா முற்றத்தைத் தாண்டி புனித நகரின் வடக்குப் பிரதான வீதி வழியாகச் செல்லும் போது  வரும் சந்தியில் வலப்புறம் பிரியும் வீதி பவள விகாரத்தைத் தாண்டிச் சென்று இரண்டாம் சிவாலயத்துக்குக் கொண்டுசென்று விடும். இரண்டாம் சிவாலயத்தின் உண்மையான பெயர் வானவன் மாதேவீச்சுரம். கருவறையும் விமானமும் சிதையாமல் ஓரளவு முழுமையாக இருக்கும் ஒரேயொரு பொலனறுவைக் கோவில் இது. இக்கோவில் பொலனறுவையின் பழைய கோட்டையின் தென்கிழக்கு மூலையில் அமைந்திருந்தது.  வானவன் மாதேவீச்சுரத்திற்கு முன்புறம் இடிந்த கோட்டைச்சுவரை இன்றும் காணலாம்.

 

வானவன் மாதேவீச்சுரத்திற்குத் திரும்பாமல் அந்தச் சந்தி வழியே வடக்குப் பிரதான வீதியில் நேரே சென்றால், பொலனறுவைக் கோட்டையின் வடக்கு வாசலை அடையலாம். இந்த வடக்கு வாசலில் மூன்று கோவில்கள் அமைந்துள்ளன. ஒன்றை ஒன்று நோக்கியபடி ஏழாம் சிவாலயமும் இரண்டாம் விண்ணகரமும் (உரு.02) அமைந்துள்ளன. ஏழாம் சிவாலயத்துக்கு தெற்குப் புறமாக பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.

 

உரு. 02 வடக்கு வாசல் விண்ணகரம் (இரண்டாம் விண்ணகரம்) மூலவர்

வடக்கு வாசலைத் தாண்டினால் இடப்புறம் மாணிக்க விகாரம் வரும். மாணிக்க விகாரத்திற்கும் ரன்கொத் விகாரத்துக்கும் நடுவே அதே இடப்பக்கம் வீதியோரமாக அமைந்துள்ளது எட்டாவது சிவாலயமான “சிவ தேவாலயம் ஏ”. சிவாலயத்தோடு இணைந்தவாறு காமக்கோட்டம் (அம்மன் கோவில்) அமைந்திருக்கக்கூடும் என்று ஊகிக்கத்தக்க விந்தையான அமைப்பில்  இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.

 

எட்டாம் சிவாலயத்தைத் தாண்டிச் செல்ல, இரன்கொத் விகாரம் வரும். அதன் இருபுறமும் அமைந்துள்ள பல கட்டட இடிபாடுகளிடையே கோவில்களின் அமைப்பில் ‘தேவாலயம்’ எனும் இரு அடித்தளங்கள் அமைந்துள்ளன. இந்த இரன்கொத் விகாரம் நிசங்கமல்ல மன்னனால் கட்டப்பட்டது என்பதும், இதைக் கட்டுவதற்கு முன் இங்கிருந்த பெரிய மரமொன்று வெட்டப்பட்டதாகவும், அம்மரத்தை வெட்டுவதற்கு முன், அம்மரத்தில் குடியிருந்த இரத்தினாவளி எனும் தேவதைக்கு பலிகொடுத்து அவளை அங்கிருந்து நீங்கச்செய்ததாகவும் சிங்கள மரபுரைகள் இருக்கின்றன. இரன்கொத் விகாரத்தின் பழைய பெயரும் இரத்தினாவளி சைத்தியம் தான்.

 

வடக்குப் பிரதான வீதி முடிவடையும் சந்தியில் கல் விகாரமும் வாகனத் தரிப்பிடமும் அமைந்துள்ளன. வாகனத் தரிப்பிடத்துக்கு எதிரே கிரி விகாரம் அமைந்துள்ளது. கிரி விகாரத்துக்கு மேற்கே சென்றால் ஆறாம் சிவாலயத்தைக் காணலாம். இந்தச் சிவாலயத்தில் ஏழு கன்னிமாருக்கு தனிச்சன்னதிகள் முன்பு அமைந்திருக்கின்றன என்பது தெரிகின்றது. பிரித்தானியர் காலக் தொல்லியல் அறிக்கைகளின் படி இந்த சிவாலயத்துக்குத் தெற்கே தான் ஐந்தாம் விண்ணகரம் அமைந்திருந்தது. இன்று அக்கோவிலைக் காணமுடியவில்லை. சிவாலயத்துக்கு சற்று அப்பால் காணப்படும் இன்னொரு கட்டட இடிபாடு, புத்தக் கலைப்பாணியையே காட்டுகின்றது.

 

ஆறாம் சிவாலயத்தைத் தாண்டி மேற்கே செல்லும் வீதி, இங்குராங்கொடை வீதியில் முடிவடைகின்றது. இந்த இங்குராங்கொடை வீதியில் தெற்கே திரும்பி 1 கிமீ பயணித்தால், நாம் மீண்டும் ஏ11 பிரதான வீதியின் இங்குராங்கொடைச் சந்தியை அடையலாம். நாம் நின்றுகொண்டிருக்கும் இந்தச் சந்தியிலிருந்து தெற்கே 400 மீ அல்லது ஏ11 பிரதான வீதி இங்குராங்கொடைச் சந்தியிலிருந்து வடக்கே 600 மீ பயணிக்கும் போது இன்னொரு ஆலயத்தொகுதியை வந்தடைவோம். அறிவித்தல் பலகையில் ‘நய்பெண விகாரம்’ (நாகபட விகாரம்) என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த இடிபாடு ஐந்தாம் சிவாலயம் ஆகும் (உரு. 03). ஐந்தாம் சிவாலயத்தின் பழைய பெயர் ஐநூற்றுவ ஈச்சுரம் என்பது கல்வெட்டுகளிலிருந்து தெரிய வந்திருக்கிறது. ஐந்தாம் சிவாலயம் அமைந்துள்ள அதே வளாகத்திலேயே அக்கோவிலுக்கு வடக்காக நான்காம் விண்ணகரம் அமைந்துள்ளது. ஐநூற்றுவ ஈச்சரத்துக்குக் கிழக்கே வீதியின் மறுபுறம் மூன்றாம் சிவாலயம் காணப்படுகின்றது.

 

உரு. 03 ஐநூற்றுவ ஈச்சரம் (ஐந்தாம் சிவாலயம்) – கருவறை

 

ஐநூற்றுவ ஈச்சரத்திலிருந்து இங்குராங்கொடை வீதியில் மேலும் 600 மீ பயணித்து நாம் ஏ11 வீதியை வந்தடைகிறோம். இங்குராங்கொடைச் சந்தியிலேயே பொலனறுவை நகரின் எல்லை ஆரம்பிக்கின்றது. அந்த இடத்தில் நான்காம் சிவாலயம் அமைந்துள்ளது. இந்த நான்காம் சிவாலயத்தின் அருகில் வீதிக்கு மறுபுறம்  மூன்றாம் விண்ணகரம் உள்ளது. மூன்றாம் விண்ணகரம் அமைந்துள்ள பகுதி யானைத்தடுப்பு மின்சார வேலியிட்டு அடைக்கப்பட்டுள்ளதால், அந்த விண்ணகரத்தை தரிசிப்பது சற்றுக் கடினமானது.  மூன்றாம் விண்ணகரத்துக்கும் நான்காம் சிவாலயத்துக்கும் அருகில் தான் கொற்றவை கோவில் அமைந்திருந்ததாக பிரித்தானியர் குறிப்புகள் சொல்கின்றன. இன்று அக்கோவிலை அடையாளம் காண முடியவில்லை. இந்தக் கொற்றவை கோவிலில் கிடைத்த அரிதான அரிகண்டச் சிற்பமொன்று தற்போது பொலனறுவை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

பதினான்கு சைவ  - வைணவக் கோவில்களில் வானவன் மாதேவி ஈச்சரம், ஐநூற்றுவ ஈச்சரம், ஆறாவது சிவன் கோவிலான கன்னிமார் சிவாலயம் ஆகிய மூன்றும் மிகப்பழையவை ஆகும். இவை சோழராட்சி இலங்கையில் ஏற்பட்ட பத்தாம் நூற்றாண்டளவில் அமைக்கப்பட்டவை. இந்தக் கோவில்களிலும் ஏழாம் சிவாலயமான கோட்டைவாசல் சிவாலயம், மூன்றாம் சிவாலயம் என்பவற்றிலும் சோழர் காலப் படிமங்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதிகளவான சைவ வெண்கலச்சிலைகள் கிடைத்த முதலாம் சிவாலயத்தின் கருங்கல் வேலைப்பாடுகளின் கலைப்பாணி பிற்பட்டதாகையால் அது பதின்மூன்றாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது என்பதே பொதுவான அறிஞர் கருத்தாக இருக்கிறது. என்றாலும் அதுவும் சோழர் காலத்தைச் சேர்ந்த கோவிலாகவே இருக்கவேண்டும் என்பது தற்போதைய மீள்கட்டுமானத்தில் வெளிப்பட்டுள்ள செங்கல்லாலான கருவறை, அர்த்த மண்டப அடிப்பகுதிகளிலிருந்து தெரியவந்துள்ளது (உரு.04).

உரு. 04 முதலாம் சிவாலய மீள்கட்டுமானப் பணிகளின் போது வெளிப்பட்ட பழைய செங்கற்றளி அடித்தளம்

 

 

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner