குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள்





நண்பனின் கைபேசி அழைப்பு.

“மகன் பிறந்திருக்கிறான். *@#$% நட்சத்திரம். கூட்டெண் *#%$ வரவேண்டும். நல்ல தனித் தமிழ்ப்பெயர் பார்த்துச் சொல்.”
நான் வேண்டுமென்றே கேட்டேன்.
“நல்ல தனித்தமிழ் என்றால் கிரந்த எழுத்து சேர்க்காத தூய தமிழ்ப்பெயர் தானே?”
“அப்படி எல்லாம் இல்லை. இன்றைய போக்குக்கு ஏற்ற நல்ல ஒயிலான பெயர். சொல்லிப்பார்க்க நன்றாக இருக்கவேண்டும்.”
🙂
உறவினர், நண்பர்களில் நிறைய குழந்தைகளுக்கு பெயர் வைக்க உதவியிருக்கிறேன். மிகச்சில சந்தர்ப்பங்களிலேயே அப்பெயரையிட்டு திருப்திப்பட முடிந்திருக்கிறது. காரணம் அக்குழந்தைகளின் பெற்றோர் போடும் இரண்டு அன்புக்கட்டளைகள். அந்தக் கட்டளைகளை அவர்களிடம் நிபந்தனையாகத் திணிப்பவர்கள் சோதிடர்கள்.
குழந்தைகளுக்கு சாதகம் எழுதும்போதே “பிறந்த நட்சத்திரம் இது என்பதால் இன்ன இன்ன எழுத்தில் பெயர் வைக்கவேண்டும், இன்ன இன்ன கூட்டெண் வருமாறு பெயர் வைக்க வேண்டும்” என்று இரண்டு விதிகளை எழுதிக்கொடுத்து விடுகிறார்கள்.
விளைவு தமிழ்ப்பெயர்கள் இன்று வைக்கப்படுவதில்லை. குறைந்தபட்சம் தமிழ்த் தோற்றம் காட்டும் இந்தியப் பண்பாட்டுப் பெயர்கள் கூட இன்றைய தமிழ்த் தலைமுறையினருக்கு வைக்கப்படுவதில்லை. வாயில் நுழையாத, அர்த்தமற்ற பெயர்கள். ஈழத்தமிழர் நிலை இன்று இதில் படுமோசம்.
அந்த இரண்டு நிபந்தனையிலும் அப்படி என்ன தான் சிக்கல் இருக்கிறது?
முதலாவது,
பெயர் வைப்பதற்கு கூட்டெழுத்து பார்ப்பது. A-Z வரையான ஆங்கில எழுத்துக்களை எழுதி அவற்றுக்கு 1 - 8 வரையான எண்களை ஒதுக்கிய இந்த எண் சோதிட அட்டவணையை நீங்கள் கண்டிருக்கலாம். அது தமிழ் மரபில் எங்கும் இருக்கவில்லை. 20ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கைசோதிடரும் அமெரிக்காவில் வசித்தவருமான “கெய்ரோ”வால் (Cheiro) 1927களில் எழுதப்பட்ட “எண்களின் புத்தகம்”(The book of Numbers) என்ற நூலில் தான் அந்த அட்டவணை முதன்முதலில் பதிவாகி இருக்கிறது.
இந்த எழுத்துக்கள் பண்டைய மெசப்பத்தோமியா நாட்டுப் பாபிலோனில் கால்டிய இனக்குழுவிடம் வழக்கில் இருந்து மறைந்ததாக கெய்ரோ அந்நூலில் உரிமைகோருகின்றார். நவீன மேலைத்தேய எண்சோதிடர்களும் அதை கால்டியன் அட்டவணை என்றே அழைக்கிறார்கள். ஆனால் இப்படி ஒரு அட்டவணை மெசப்பத்தோமியாவிலோ இந்தியாவிலோ எங்குமே வழக்கில் இருந்ததில்லை என்பதே உண்மை.
வரலாற்றில் A - Z வரையான ஆங்கில உரோமன் அரிச்சுவடி மிகப்பிற்காலத்தையது. J, V, W உள்ளிட்ட எழுத்துக்கள் அதில் இறுதியாகச் சேர்க்கப்பட்டவை. இப்படியிருக்க, A - Z வரையான இன்றைய ஆங்கில அரிச்சுவடியை 1 - 8 வரையான இலக்கங்களுக்கு ஒதுக்கி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் பாபிலோனியர்கள் பயன்படுத்தினர் என்பது நம்பவியலாதது.

இரண்டாவது,
நட்சத்திரங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெயர் எழுத்துக்கள். இன்ன இன்ன நட்சத்திரத்தில் பிறந்தோர் இன்ன இன்ன எழுத்தில் பெயர் வைக்கவேண்டும் எனும் ஓர் அட்டவணை. இந்த அட்டவணையைக் கூர்ந்து பார்த்தால் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் சரியாக நான்கு எழுத்து குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். அதென்ன சரியாக நான்கு எழுத்துகள் மட்டும்?
பிறப்புக்கும் விண்மீனுக்கும் தொடர்புள்ளது என்ற நம்பிக்கை நெடுநாளாகவே இருந்துவருவது தான். 108 வடமொழி எழுத்துக்களை ( = வர்ணம்) குறித்த ஒரு ஒழுங்கில் தேர்ந்தெடுத்து 27 விண்மீன்களுக்கும் தலா நான்கு என ஒதுக்கி (27 நட்சத்திரம் * 4 வர்ணம் = 108 பாதம் ) இந்த "பாத + வர்ண" நட்சத்திர அட்டவணை உருவாக்கப்பட்டது.

வரலாற்றுச் சான்றுகளைத் தேடினால், 1427 அளவில் ஆந்திரத்தில் அல்லது கன்னடத்தில் வாழ்ந்த வைத்தியநாத தீட்சிதரால் எழுதப்பட்ட “சாதக பாரிசாதம்” எனும் சோதிட நூலும், 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மத்தியப் பிரதேசத்தில் வாழ்ந்த ராம தைவஞ்சரால் எழுதப்பட்ட “முகூர்த்த சிந்தாமணி” எனும் நூலுமே முதன்முதலாக இந்தப் பாதவர்ண அட்டவணையைப் பாடுகின்றன - வடமொழியில்.
தமிழில் இது எப்போது எந்நூல் வழியாக உட்புகுந்தது என்று தெளிவாக அறியமுடியவில்லை. ஆனால், இலங்கையில் இதன் பயன்பாடு அண்மைக்காலமாக, குறிப்பாக சோதிடர்கள், பஞ்சாங்கங்கள் மூலம் தான் அதிகரித்திருக்கிறது. இலங்கையின் பழைய பஞ்சாங்கங்களுள் ஒன்றான இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கத்தை ஆராய்ந்தாலும், அதில் 1950 காலப்பகுதியில் தான் இந்த பாதவர்ண அட்டவணையே முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.
சிக்கல் என்னவென்றால்,
அ) பாதவர்ண அட்டவணை சங்கத மொழிக்காக உருவானது. அது தமிழ்மொழிக்குப் பொருந்தாது. அதில் குறிப்பிடப்படும் வர்க்க எழுத்துக்கள் வடமொழிகளுக்குச் சிறப்பானவை, தமிழில் இல்லாதவை.
உதாரணமாக பூராடத்தில் பிறந்ததால் உங்கள் மகனுக்கு “ப”இல் அல்லது “பு”இல் தொடங்கும் பெயர் வையுங்கள் என்று சோதிடர் எழுதித்தரலாம். ஆனால் அது “Pa”, “Pu” இல்லை. “Bha”, “Bu”. அந்த எழுத்துக்களில் தொடங்கும் பெயரெதுவும் தமிழில் இல்லை. இந்த அட்டவணைப்படி Pa உச்சரிப்பில் பெயர் எதுவும் தொடங்க முடியாது. Pu எழுத்து “அத்த” நட்சத்திரத்துக்குரியது.

ஆ) தொல்காப்பியமும் நன்னூலும் தமிழ் “மொழிமுதல் எழுத்துக்களை” பட்டியலிட்டிருக்கின்றன. மொத்தம் 247 எழுத்துக்களிலேயே அதிகபட்சம் 104 எழுத்துக்கள் தான் சொல்லின் முதல் எழுத்தாக வரலாம். “வழுவல கால வகையினானே” என்று விலக்கப்பட்ட சில எழுத்துக்கள் மொழிமுதலாக வருவதை ஏற்றுக்கொண்டு விட்டோம் தான். அதற்காக “ட”, “ல” வரிசை, கிரந்த எழுத்து வரிசையிலெல்லாம் பெயர் சூட்டுமளவு தாழ்ந்து போகும் தாராள மனப்பாங்கை என்னவென்பது?

இ) ஒரு நண்பன் தமிழிலுள்ள அரச படிவங்களையும் கூட எப்போதும் ஆங்கிலத்திலேயே நிரப்புவான். ஏன் என்று கேட்டால், “ன்” எழுத்தில் முடியும் அவன் பெயர் எண் சோதிடப்படி “nn” என்று ஆங்கிலத்தில் முடியும் போதே அதிக ஆற்றலைக் தருமாம். தாய்மொழியை விட ஆங்கிலம் பெரியதல்லவா! ஆக சொந்த மொழியை அழிக்க இன்னொரு ஆயுதம். இன்னொரு தாழ்வு மனப்பாங்கு.

ஈ) எகிப்தில் அண்மையில் கண்டறியப்பட்ட “சிகை கொற்றன்” என்ற பெயரைத் தமிழில் வாசிக்க முடிந்ததால் தான் அங்கு அப்பெயரைப் பொறித்தவன் ஒரு தமிழன் என்று தெரிந்தது. அதிலும் கூட “சிகை” என்ற சொல்லின் பொருளைத் திரித்து, அவன் “தமிழனாக இருக்கமுடியாது” என்று நிரூபிக்க பலர் படாதபாடு பட்டுக்கொண்டிருந்ததை இணைய உலகில் கண்டோம்.

ஆக, பெயர் ஒரு அடையாளம். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் ஒரு இனத்தை, குடும்பத்தை, பேசுமொழியை இனங்காண உதவச்செய்யும் ஒரு அடையாளம். இப்படி நூறாண்டுகளுக்குப் பின் நம் பெயர் கண்டறியப்பட்டால் நாம் என்ன இனமாக, என்ன மொழி பேசியோராக அடையாளப்படுத்தப்படுவோம்?

சரி, இதெல்லாம் நம்பிக்கை சார்ந்த விடயம், இலகுவாகக் கைவிடமுடியாதே என்று கேட்போருக்கு,
1. இயன்றவரை தனித்தமிழில் பெயர் வைக்க முயலுங்கள்.

2. முடியாத சந்தர்ப்பங்களில் குறைந்தபட்சம் பெயருக்குப் பொருள் இருக்கிறதா என்பதையாவது பாருங்கள். (பெயரைத் திரித்து வைத்துவிட்டு வலிந்து பொருள் கொள்ளவேண்டாம்.)

3. இளம் தம்பதியர், ( குறிப்பாக இளம் அன்னையர், அவர்கள் தான் நவநாகரிகம், அடுத்த வீட்டு அன்ரியின் அமெரிக்கப் பேத்தியின் பெயர் பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படுகிறார்கள் என்பது என் தனிப்பட்ட அவதானம்.) உங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைக்க முன் எதிர்காலத்தில் பாடசாலையிலோ பட்டமளிப்பு விழாவிலோ வைத்தியசாலையிலோ சபை நடுவே இப்பெயரில் உங்கள் பிள்ளை அழைக்கப்படும் போது அது எப்படி உணரும் என ஒன்றுக்கு நூறு தடவை சிந்தித்து பெயர் வையுங்கள்.

4. இதுதான் இறுதி மாற்று. ஒரு ஐரோப்பிய எண்சோதிட அட்டவணையையும், வடமொழிக்கென உருவான பெயர் எண் அட்டவணையையும் பயன்படுத்துவதை விட, உங்கள் நம்பிக்கையைப் புண்படுத்தாத இன்னொரு அட்டவணை கிடைக்கிறது. சொல்லப்போனால் அவை இரண்டையும் விட காலத்தால் முற்பட்டது. ஒரு தமிழ்ச்சோதிடச் சான்று. அதுவும் இலங்கையில் கிடைத்த சான்று. 1310இல் எழுதப்பட்ட சரசோதிமாலை!
அகரம் ஆடரி தேளாகும் அரிவை மீன் இகரமாகும்
உகரநீண் மிதுனம் வில்லாம் ஓகாரம் கும்பமாகும்
நிகரில் ஏகாரத்திற்கு நீள்விடை ஞெண்டு கோலாம்
பகரும் அக்கரம் ஆதி பலவகை நெறியில் கொள்ளே!
அகர வரிசை - மேடம், சிம்மம், விருச்சிகம்
இகர வரிசை - கன்னி, [மகரம்], மீனம்
உகர வரிசை - மிதுனம், தனுசு
ஓகார வரிசை - கும்பம்
ஏகார வரிசை - இடபம், கடகம், துலாம்.
இப்படி [மகப்பேறு இடம்பெற்ற இராசியைக் கொண்டு] ஒவ்வொரு வரிசையிலும் உள்ள பலவகை [உயிர்மெய்] எழுத்துக்களில் பெயர் வைப்பாயாக.
பிகு: பெயர் வைப்பது, எண்சோதிடத்தில் நம்பிக்கை வைத்திருப்பது எல்லாம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விடயம், அதில் ஏன் கருத்து என்று கேட்போரிடம் எனக்குச் சொல்லில்லை. அவர்களும் சமுக வலைத்தள அன்றாட சமூக - பண்பாட்டு - அரசியல் சிக்கல்களில் “அது அது அவரவர் தனிப்பட்ட விடயம் தானே” என்று கருத்துச் சொல்லாது பேசாமலிருந்து தம் சொல்லைக் காப்பர் எனில் மகிழ்வேன்.

Comments