ஒரு பன்றியின் சிலையும் சில அக்கரை மாடுகளும்
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் தேரோட்டம் கடந்த மாதம் இடம்பெற்றது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அக்கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழமை தான் என்றாலும், உற்சவத்தில் இதுவரை பங்குபற்றியதில்லை. இவ்வாண்டு எப்படியும் தவிர்ப்பதில்லை என்ற திட்டத்துடன் கடந்த செப்டம்பர் 27 வியாழக்கிழமை கோவிலுக்குப் புறப்பட்டேன். கோவிலுக்குள் நுழைந்ததுமே வாசலில் கம்பீரமாக நின்ற இரு தேர்களும் கவனத்தைக் கவர்ந்தன. அந்தத் தேர்களைப் பற்றி, ஆரையம்பதியைச் சேர்ந்த நண்பரும் ஆய்வாளருமான திரு.சொ.பிரசாத் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். பழைமைவாய்ந்த அத்தேர்களின் சிற்பங்கள் அறியாமையால் ஆண்டுக்காண்டு இழக்கப்பட்டு வருகின்றன என்பதையும், அந்தச் சிற்பங்களை ஆவணப்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தார். கொக்கட்டிச்சோலைத் தேர்களிலுள்ள சிற்பங்கள் பற்றி, ஆலயத்தின் 1998 குடமுழுக்கின் போது வெளியான சிறப்பு மலரான “தேரோட்டத்தில்” கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலைவாணி கந்தசாமியால் எழுதப்பட்ட அருமையான கட்டுரையையும் முன்பு படித்திருந்தேன். எனவே ஆர்வம் தூண்ட தேர்களை நெருங்கி அவதானிக்கத் தொடங்கினேன். மு...