தெத்தாதே உஞ்சில் தெத்தாதே!

புத்தாண்டு இனிதே கடந்து விட்டது. இன்னொரு ஆண்டு. இன்னொரு வயது. இந்தக் கட்டுரையாளனுக்கு வயது இப்போது முப்பதை அண்மிக்கிறது. இந்த முப்பது ஆண்டுகளிலும் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்டு வந்த - வருகின்ற மாற்றத்தை கண்ணெதிரே, கண்டு உணர்ந்து திகைத்துப் போய் நிற்கிறான் அவன்.

போன வாரம் அவன் பிறந்தகமான தம்பிலுவில்லில் நாட்டுக்கூத்து ஒன்று இடம்பெற்றிருந்தது. சுமார் நாற்பதாண்டு இடைவெளிக்குப் பின் சித்திரைக்காக வட்டக்களரியில் இடம்பெற்ற கூத்து அது என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அப்போதெல்லாம் சித்திரை பிறந்தாலே கூத்துத் தானாம். வைகாசியில் கண்ணகியம்மன் கோவில் கதவு திறக்கும் வரை, ஏன் திறந்த பின்னும் கூட, நாட்டுக்கூத்தும் வசந்தனும் விலாசமும் நாடகமும் மாறி மாறி இடம்பெறுமாம். 

“உப்ப நீங்க இரிக்கிர வூடு இரிக்கே. அதுக்கு முன்னுக்கு இரிந்த பாழ்வளவுக்குப் பேர் வெள்ளமணல் வளவு. சித்திராபோர்ணமில அங்க வட்டக்களறி போட்டு ஆடினா நிலவுல சும்ம அந்தமாதிரி இரிக்கும். மத்தளம் பேசின அரவாசி நாட்டுக்கூத்து அங்க தான் அரங்கேறிரிக்கி. அப்ப எங்களுக்கு பத்து பன்ரெண்டு வயது. பூலோகறம்பை பொம்பிள வேசம் போட்டுக்கொண்டு போடியார் சுறுட்டடிச்சி நடப்பாரு. ‘என்னகா றம்பை இது கோலம்’ எண்டு நாங்க பின்னுக்கு நக்கலடிச்சிக்கொண்டு ஓடுவம்” என்றார் ஒரு முதியவர். அவர்களது அந்த சித்திரையை நான் அனுபவித்ததில்லை. நான் அனுபவித்த சித்திரையையா இன்றுள்ள சிறுவர்கள் அனுபவிக்கிறார்கள்?

வருசம் பிறக்கிறதென்றால், எனக்கு முதலில் நினைவுக்கு வருவது ‘உஞ்சில்’ தான். ஊஞ்சல்! உஞ்சில் போடுவதற்கு பெரும்பாலும் ஒரு நிமித்தம் பார்ப்பது நினைவிருக்கிறது. குயில் கூவவேண்டும். குயில் கூவினால் உஞ்சில் போடவேண்டும், அல்லது போன வருடம் போட்டு இடையில் அறுந்துவிட்ட உஞ்சிலை திருத்திப் போடவேண்டும் என்று அடம் பிடிப்பேன். பெரும்பாலும் மார்ச் 27, 28இல் முதல் குயில் கூவும். வருடம் பிறப்பதைச் சொல்வது குயிலிசை தான் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்த பருவம் அது.


இன்று யோசித்தால் அதுவும் உண்மை என்றே தோன்றுகிறது. தமிழரின் வருடத்தை அறிவிப்பது பஞ்சாங்கமா, நாட்காட்டியா? இரண்டுமே இல்லையே, இயற்கையல்லவா? கொன்றை பூப்பதும், வேங்கை பூப்பதும், மரங்களெல்லாம் மஞ்சளில் குளித்து நிற்பதும் இளவேனிலில் பிறக்கும் புத்தாண்டை வரவேற்கத்தானே?

பெரும்பாலும் மார்ச் மாத முடிவில் அல்லது ஏப்ரல் மாத ஆரம்பத்தில் எங்கள் வீட்டில் நிற்கும் மாமரத்தில் அப்பா ஊஞ்சல் போடுவார். அது ஒருவர் ஆடும் சிறிய ஊஞ்சல் அல்ல. நீளமான கட்டில் பலகை ஒன்றின் இரு அந்தங்களிலும் தவாளிப்புகளை ஏற்படுத்தி ஊஞ்சல் பலகை தயாராகும். தடித்த நைலோன் கயிற்றை வாங்கி வந்து அதை தவாளிப்புகளில் இணைத்து மேலே மாமரக் ‘கந்தில்’ கட்டினால் ’உஞ்சில்’ தயார். எத்தனை முறுக்குகளை இருபுறமும் போடுகிறோமோ அத்தனை உறுதியாக இருக்கும் உஞ்சில்.



உஞ்சில் ஆடுவது என்பது ஒரு கலை. குறைந்தது மூன்று பேர், கூடியது ஐந்து பேர் அதற்குத் தேவை. பலகையின் இருபுறமும் இருவர் நின்று கயிற்றைப் பிடித்துக் கொள்வோம். ஒன்று தொடக்கம் மூன்று பேர் நடுவில் உட்கார்ந்து கொள்வோம். முதலில் பலகையில் அமர்ந்திருப்பவர்கள் கால்களால் தரையைத் தட்டித் தட்டி உஞ்சிலுக்கு விசை கொடுக்க வேண்டும். உஞ்சில் ஊசல் போல மெல்ல ஆட ஆரம்பித்ததும், இருபுறமும் கயிற்றைப் பிடித்தபடி நிற்பவர்கள் மெதுவாகக் குந்தி எழுந்து கால்களால் பலகைக்கு விசையைக் கொடுப்பார்கள். அதற்குப் பெயர் உன்னுதல். 


ஒருவர் மாறி ஒருவர் என்று, நிற்கும் இருவரும் மாறி மாறி உன்னி விசை கொடுக்க, உஞ்சில் வேகமாக இருபுறமும் ஆடத்தொடங்கும். ஒரு அந்தம் உஞ்சில் கட்டப்பட்டிருக்கின்ற கிளைக்குச் சமாந்தரமாக வரும் வரை அதிக பட்ச விசை கொடுத்து உஞ்சில் ஆடலாம். அதற்குப் பிறகு ‘உன்னக்’ கூடாது. நிற்பவர்கள் இருவரும் அமர்ந்துவிட வேண்டும். எல்லாரும் கூச்சலிட்டு மகிழ உஞ்சில் மெல்ல மெல்ல சமநிலைக்கு வரும். 


ஒருவேளை தெரியாமல் தொடர்ந்து உன்னிக்கொண்டிருந்தோமென்றாலும் எப்படியும் நமக்குத் தெரிந்துவிடும். உஞ்சில் 180 பாகைக் கோணத்தில் இயங்கும் போது எப்படியும் வேலியைத் தாண்டி பக்கத்து வீட்டுக்கும் உஞ்சில் போய் வரும். சமைத்துக்கொண்டிருக்கும் பக்கத்து வீட்டு சித்தி அல்லது அத்தை எப்படியும், ‘குசினி’ யன்னலால் நம்மை பார்த்து விடுவார். பெரும்பாலும் அவர் பிள்ளையும் நம்மோடு உஞ்சிலில் ஆடிக்கொண்டிருக்கும் என்பதால், உஞ்சிலுக்குப் போட்டியாக ஆடியபடி அவர் கூச்சலிடுவார். சிலநேரங்களில் பக்கத்து வீட்டு அன்ரி கத்தத் தொடங்குவது தான் ஆபத்தான புள்ளி என்று அளவிடத் தொடங்கி, அதுவரை உன்னிக் கொண்டிருப்பதும் நடந்திருக்கிறது.


உன்னி முடித்ததும் ஊஞ்சல் சமநிலைக்கு வரும். அந்த இனிய மயக்கமும் கிறுகிறுப்பும் தீரும் வரை கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருப்போம். அப்படி ஆறிய பிறகு தான் அடுத்த சுற்று ஆரம்பமாகும். இதன் போது பாடுவதற்கென்று நிறைய ஊஞ்சல் பாடல்கள் இருந்தன. எனக்கு இப்போது நினைவில் இருப்பது ஒன்று தான். 


“ஒரு கொத்துக் கச்சான் வறுத்துக் குத்தி
ஒம்பது பொண்டுகள் சேந்து குத்தி
கல்லும் மண்ணும் கலந்து குத்தி 
கல்லடி மீனாச்சிக்குக் கலியாணம்
காரில போவுதாம் பலகாரம் 
வேப்பங்குச்சி மாப்பிள்ளையாம்
வெக்கங்கெட்ட றோசாவாம்”


திருமணமொன்றைக் கேலி செய்யும், ஏதோ இடக்கரடக்கலாக அமைந்த பாடல். இப்போதும் அதன் அர்த்தம் தெளிவாகப் புரியவில்லை. பொண்டுகள், கலியாணம் இந்த இரண்டு சொற்களும் அப்போது சிறுவர்கள் உச்சரிக்க வெட்கப்படுபவை. எனவே இந்தப் பாடலை கூட்டாகப் பாடும் போது இடையில் யாரோ களுக்கென்று சிரிப்பார்கள். பிறகு எல்லோருமே சிரிப்போம். காரணமில்லாத சந்தோஷங்கள் எத்தனை இனிமையானவை!


ஒருவேளை அன்று உஞ்சில் ஆடுவதற்கு இன்னும் ஓரிருவர் அதிகமாக வந்து விட்டார்கள் என்றால் தயங்காமல் அவர்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வோம். ‘உஞ்சிலின் கவுறு பாரங்கூடினா நீளும், அறுந்து போகாது’ என்பது எங்கள் நம்பிக்கை. ஆனால், ஆட்களின் எண்ணிக்கை கூடும் போது, கயிறு மரத்தில் நெருக்கமாக உரோஞ்சுவதால் ‘கடக்’ என்று சத்தம் கேட்கும். கூடவே நேராக எளிமை இசை இயக்கத்தை ஆற்றுவதற்குப் பதில் உஞ்சில் ஒரு கோணத்தில் அலையத் தொடங்கும். அதற்கு தெத்துதல் என்று பெயர். அதற்கும் ஒரு பாடல் பாடுவோம். 


“தெத்தாதே உஞ்சில் தெத்தாதே 
தெத்துப் பலகாரம் சுட்டுத்தாறேன்
நேரே போ உஞ்சில் நேரே போ 
நேத்தடிச்ச காத்தோரம்”


தெத்துப்பாட்டு படித்துக் கொண்டே உன்னுபவர்கள் செய்யும் முயற்சியில் எப்படியும் உஞ்சில் நேராக ஆடத்தொடங்கும். அது தெத்துப்பாட்டின் சக்தி தான் என்று வியந்தபடியே அடுத்த சுற்றை மகிழ்ச்சியாக ஆரம்பிப்போம். 

உஞ்சில் மட்டுமா? எத்தனை சந்தோஷங்கள் அப்போது? வருசத்துக்கான சிற்றுண்டிகள் செய்வதெல்லாம் பெரும்பாலும் குழுக்களாகவே இடம்பெற்று வந்தன. உறவினர்கள் மட்டுமன்றி, அடுத்த வீட்டு எல்லைமானக் காரர்களும் முறை வைத்துக்கொண்டு இணைவார்கள். இன்று இங்கு பலகாரம் சுடுவோம், நாளை அங்கு தொதல் கிண்டுவோம், நாளை மறுநாள் அடுத்த வீட்டில் முறுக்கு என்று பங்கு போட்டுக்கொண்டு சிற்றுண்டிகள் செய்து பகிர்ந்து உண்ட அழகான காலம் அது. 


குஞ்சாத்தை, அம்மம்மா, அப்பம்மா, சீனியம்மா, ஆசையம்மா, முன்வீட்டு சித்தி, பக்கத்து வீட்டு அத்தை, பின் வீட்டு அன்ரி என்று பலரும் கூடியிருக்கும் அந்த சிற்றுண்டி தயாரிப்பு முகாம்களில் சுவாரசியமான உரையாடல்கள் இடம்பெற்றபடி இருக்கும். பெண்கள் கூடினால் கேட்கவும் வேண்டுமா? அடுத்த வைகாசிக்கு வர இருக்கின்ற திருமணங்கள், வைகாசிச்சடங்கு எப்போது, கதிர்காம யாத்திரைக்கு ஆராரு போறாங்கள், பேய்க்கதைகள், கூடவே சிலபல ஊர் வம்புகள் என்று சுவையான பல கதைகள். 

முறுக்கைக் கடிக்கச் செல்வது போல ஆர்வமற்ற கண்களைக் காட்டிக்கொண்டு ஊர் வம்புக் கதைகளை கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்போம். பேச்சு எல்லை மீறும் தருணத்தில் எப்படியோ உணர்ந்து கொண்டு “குளந்தப்பிள்ளேலுக்கு இஞ்சென்ன வேல, ஓடுங்கோ” என்று அகப்பையால் விரட்டி விடுவார்கள். ஆனால், வட்டக்காவடி விளையாடும் போதோ, கிட்டிப்புள்ளு அடிக்கும் போதோ அவர்கள் முணுமுணுத்துக்கொண்ட முழுக்கதை எங்களுக்கும் தெரிந்துவிடும். யாரோ ஒருவன் அல்லது ஒருத்தி முழுமையாக மோப்பம் பிடித்திருப்பான்/ள்.

சிறுவர்களுக்கு வருஷப்பிறப்பில் கிடைக்கும் இன்னொரு மகிழ்ச்சியே அது அவர்களின் உழைப்பாளர் தினம் என்பது தான். கைவிசேடம்! ஒருவர் விடாமல் எல்லா உறவினர்களிடமும் “கைமுழுத்தம்” வாங்கி விட வேண்டும். தன் நண்பனை அல்லது அண்ணாவை தங்கையை விட, தான் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதில்  அவர்கள் பல்வேறு ராஜதந்திரங்களை வகுப்பார்கள். ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் உறவினர் வீட்டுக்குப் போவதும், சில்லறைகளைக் கொட்டி எண்ணி “உன்ன விட எனக்கு ரெண்ட்றூவா கூடவே”, “இல்லயே, நான் உப்ப அம்மாச்சி வீட்ட போய் அஞ்ச்றூவா கைமுழுத்தம் வாங்குவனே” என்று தங்கள் சேகரிப்பைப் பற்றி பெருமிதமாகப் பேசுவதும், அடுத்த வருஷம் வரை தன் கைமுழுத்தத்தை பொக்கிஷம் போல் காப்பதும், ஒருவரின் கைமுழுத்தச் சேமிப்பில் இன்னொருவர் ரகசியமாகக் கைவைப்பதும், சிறுவயது வருஷப்பிறப்புகளின் இனிமையான நினைவுகள். 

இன்று சமூக வலைத்தளங்களிலெல்லாம் 'நைண்டிஸ் கிட்ஸ்' என்று கிண்டல் செய்யும் துணுக்குகளைக் காணும் போதெல்லாம் புன்னகைத்தபடியே இழந்தவற்றை எண்ணி ஏக்கப்பெருமூச்சு விடுவேன். வெறும் முப்பதாண்டுகளில் எத்தனை மாறக்கூடும், உண்மையில் எத்தனை இழந்திருக்கிறோம் என்பது உண்மையிலேயே திகைக்க வைக்கிறது. இன்று உஞ்சில் இல்லை. உறவினர்கள் ஒன்று கூடி சிற்றுண்டி செய்வதும் இல்லை, கைமுழுத்தம் கொஞ்சமாக எஞ்சியிருக்கிறது, சில்லறைகள் முற்றாக மறைந்துபோய், நூறு ரூபாய், இருநூறு ரூபாயென. கைகளுக்குப் பாரமில்லாத, ஆனால் மனதுக்குப் பாரமான கைமுழுத்தங்கள். மனம் எப்போதாவது இருந்து விட்டு ‘தெத்தாதே உஞ்சில் தெத்தாதே’ பாடுகின்றது. என்ன, இந்த உஞ்சிலில் முன்னே மட்டும் தான் செல்லமுடியும். திரும்பிச் செல்லவே முடியாது!


அரங்கம் பத்திரிகையின் 19.04.2019 இதழில் வெளியான கட்டுரை.

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner