“சுவாமி,
அருட்தந்தை சிமோ டீ கோயம்பரா இங்குள்ள விருத்தாந்தங்களை தங்களுக்கு அறிவிப்பதற்காக இந்தியாவுக்கு யாத்திரைப்படும் போது இங்கு எழுந்தருளினதை தேவரீர் அறிவீர். அவர், சத்தியத்தை நோக்கி அடியேன் மனத்தை திறந்ததுடன், தங்கள் கத்தோலிக்க வேதம் பற்றியும் பிரசங்கித்தார். அடியேன் ஜீவனை இரட்சிக்கவும், போர்த்துக்கேய சக்கரவர்த்திகளுக்கு அன்யோன்யச் சிற்றரசாக மாறவும் நீண்ட நாட்களாக வெகு விருப்பமாயிருக்கிறேன்.
இப்போது யான் மனதளவில் சத்திய கிறிஸ்தியானி என்றாலும், ஞானஸ்நானத்துக்கான முழுக்காட்டு தீர்த்தத்தைப் பெறாததனால் மிக வருத்தமுற்றவனாயிருக்கிறேன். யான் இன்னும் கிறிஸ்தியானியாகவில்லை என்றால், அது தமியேனின் அபிலாஷையால் அல்ல சுவாமி; தேசத்தின் நிலைமையை அறியவொண்ணாததினாலேயே.
எதுவாகினும் சுவாமி, அடியேனின் இராச்சியத்துக்கான வாரிசான என்னுடைய குமாரன், சத்திய வேதத்தைத் தழுவி, தொம் லூயிஸ் என்ற நாமத்தையும் பெற்றிருக்கிறான். நான் என் எல்லா இனசனங்களோடும், என்னால் ஆளப்படுகின்ற எல்லா மக்களோடும் சுவிசேஷத்தை அறிவதற்காக தேவரீர் அல்லது தேவரீரின் புதல்வர் வரவேணுமென்று பிரயாசைப்பட்டுக் காத்திருக்கிறேன். தேவரீர் இவ்விடம் எழுந்தருளும்போது தேவபக்தி இங்கு பரவுமென்று நான் பரிசுத்த மரியன்னை மீது விசுவசிக்கிறேன்.
ஆகையால் சுவாமி, ஆண்டவரின் திருப்பெயரால், மரியாளின் திருப்பெயரால் மன்றாடுகிறேன். என்னையும் கண்டி இளவரசனையும் கிறிஸ்தவர்களாக்குவதற்கு, தேவரீர் வரவேணும். அல்லது தேவரீரின் புதல்வரை அனுப்பி வைக்கவேணும். ஏற்கனவே கிறிஸ்தவனாயிருக்கப்பட்ட என் குமாரனும், அவ்வாறு விசுவசிக்கும் நானும், போர்த்துக்கல் சக்கரவர்த்திகளின் திருக்கரங்களிலும் இரட்சிப்பிலும் எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். ஒரு கிறிஸ்தியானியாக, போர்த்துக்கல் சக்கரவர்த்திகளின் சைனியத்துணைவனாக, உபராசனாக, தேவரீர் எனக்கு சகாயமும் இரட்சையும் தரவேணும்.
இப்போதிருந்து என்னையும் என் தேசத்தையும் தங்கள் சொந்த ஆஸ்தி போலவே தாங்கள் பயன்படுத்தக் கூடுமாயிருக்கும். என் துறைமுகத்தில் படகுகளும் கப்பல்களும் தெப்பங்களும் கட்டுமரங்களும் கட்டுவதற்கு, தாங்கள் கட்டளை வழங்க முடியுமாயிருக்கும். தங்களுக்குத் தேவையான அளவு மரக்கட்டைகளை தமியேன் தரக்கூடுமாயிருக்கும். என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேணுமென்றால், இந்தப் பாதிரியாரைக் கேட்கவும். அவரிடம் நான் கூறச்சொன்ன காரியங்களெல்லாம் அவர் அறிவிப்பார். தேவன் தங்களுக்கு சொஸ்தம் தருவாராக.”
-----------------------------------------------------------
மட்டக்களப்பின் மன்னன், போர்த்துக்கேய பிரான்சிஸ்கன் பாதிரியாரான சிமோ டீ கோயம்பரா ஊடாக கோவாவின் போர்த்துக்கேய ஆளுநருக்கு அனுப்பி வைத்த 1546 டிசம்பர் 25ஆம் திகதியிட்ட கடிதத்தின் தமிழாக்கம்.
கிழக்கிலங்கையில் கண்டி, சீதாவாக்கை, வியாளை (யால) ஆகிய அரசுகளை எல்லையாகக் கொண்ட "மட்டக்களப்பு" (மட்டிக்கலோ/Matecalo) எனும் சிற்றரசு நிலவியது என்பதைச் சொல்லும் மிகப்பழைய காலனித்துவ ஆவணம் இக்கடிதமாகும். இந்த மன்னனின் உண்மைப் பெயர் தெரியவில்லை.
இங்கு சொல்லப்படும் கண்டி இளவரசன், குசுமாசன தேவியின் தந்தை கரலியத்தை பண்டாரம்(ஆட்சி 1552 - 1582) என்று கருதப்படுகிறான்.போர்த்துக்கேய அரசுக்கு ஆதரவாக, மட்டக்களப்பு அரசன் கண்டி அரசோடு இணைந்து படைக்கூட்டு கொள்ள முயல்வது, கோட்டை அரசுக்கு எதிராக என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இக்கடிதம் எழுதப்பட்டு ஆறாண்டுகளில் கோட்டை அரசு போர்த்துக்கேயர் கைகளில் வீழ்கிறது.
இந்தக் கடிதம், பெரும்பாலும் மட்டக்களப்பு மன்னன் சொல்லச்சொல்ல பாதிரியார் கோயம்பரா தன் கைப்பட எழுதியதாக இருக்கவே வாய்ப்பதிகம். அந்தப் போர்த்துக்கேய கடிதத்தின் ஆங்கில மொழியாக்கம், சுவாரசியத்துக்காக இங்கு கத்தோலிக்கத் தமிழில் மொழிமாற்றப்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment