அன்பென்று கொட்டு முரசே



வீட்டில் நண்பர்களுடன் ஒரு விருந்துபசாரம். இஸ்லாமிய நண்பி ஒருத்தியும் குடும்பமாக வருகை தந்திருந்தாள். கொஞ்சநேரம் அளவளாவிய பின் உணவுக்கு ஆயத்தமானோம். எல்லோரும் மேசையில் வந்து அமர்ந்தார்கள். அவள் மட்டும் தயங்குவது தெரிந்தது. எனக்குப் புரிந்துவிட்டது. புன்னகையுடன் சொன்னேன். "பயப்பிடத் தேவல்ல. சாப்பிடுங்க. இது ஹலால். உங்கட ஊர்ல வாங்கின கோழி இறைச்சி தான்" அவள் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. "தேங்ஸ். " என்றாள்.

இது ஒரு நண்பனுக்கு நடந்தது. தனது இஸ்லாமியத் தோழன் ஒருவன் வீட்டுக்கு முதன்முதலாகப் போயிருக்கிறான். இவன் முன் சிற்றுண்டி கொணர்ந்து வைக்கப்பட்டது. இவன் உண்ணவில்லை. அவன் "டேய் இது மாட்டிறைச்சி இல்லடா, நீ சாப்பிடலாம்" என்றிருக்கிறான். இவன் பேசாமலிருக்க, அவன் புன்னகை மாறாமல் சொன்னானாம் "வெள்ளிக்கிழமை தானே. நீ வாறாயெண்டு மரக்கறி ரோல்ஸ் தான் எடுத்து வெச்சன். சாப்பிடு." நண்பன் நெகிழ்ந்து விட்டான். அவன் உள்ளூர் வழக்கப்படி வெள்ளிக்கிழமைகளில் மரக்கறி உண்பவன்.
முன்பொருமுறை பிள்ளையாருக்கென பொங்கிய பொங்கலை "இது படையலில வைக்காத பொங்கல். சாப்பிடுங்க" என்று சொல்லி கிறிஸ்தவ நண்பனொருவனுக்கு பகிர்ந்தளித்தபோது அவன் முகத்தில் ஏற்பட்ட பிரகாசத்தை நான் கண்டிருக்கிறேன். ஏனெனில் பிற தெய்வங்களுக்கென சமர்ப்பிக்கப்பட்ட உணவை கிறிஸ்தவரோ இஸ்லாமியரோ உண்பதில்லை.
இந்த மூன்றுமே மதம் அல்லது மதம் சார்ந்த வாழ்வியலால் உணவுப்பழக்க வழக்கத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள். ஆனால் இந்த மூன்று சந்தர்ப்பங்களிலுமே சம்பந்தப்பட்ட இரு தரப்பினருமே குதூகலித்துப் போயிருக்கிறார்கள். அடுத்தவன் பண்பாட்டை தான் அறிந்திருந்ததால் நாகரிகமாக நடந்துகொள்ள முடிந்தது என்ற பெருமிதம், அவ்வாறு நடந்து கொண்டவருக்கு. தன் பண்பாட்டை இவர் இத்தனை மதிக்கிறாரே என்பதை அறிந்துகொண்டதால் நட்புணர்வு பலமடங்கான பூரிப்பு அவ்வாறு நடத்தப்பட்டவருக்கு.
இரு இனத்தவர்கள், அல்லது இரு சமயத்தவர்கள், நெருங்கி வாழ முடியாமல் போவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று அன்றாட வாழ்க்கை முறைமை வேறுபடுவது. நமது அன்றாட வாழ்க்கை முறைமையே சிறந்தது - உயர்ந்தது என்ற எண்ணம் பொதுவாக நம் எல்லோருக்குமே இருக்கிறது. அதைக் கடைப்பிடிக்காதவர்கள் நமக்குக் கீழானவர்கள் என்ற எண்ணமும் இயல்பாகவே வந்துவிடுகிறது. இந்த மேல் தட்டு எண்ணம் தனிமனிதனுக்கு என்று இல்லாமல், ஒரு குடித்தொகைக்கு இருக்கும் போது, அது அங்கீகாரமும் பெற்றுவிடுகிறது. எனவே தான் தனிமனிதனை விட சமூக உணர்வு முன்னிலைப்படுத்தப்படும் சமயம்-இனம்-சாதி-பிரதேசம் முதலிய பிரிவினைகளில் வன்மம் சற்று அதிகமாகவே வெளிப்படுகிறது.
இன்றும் உலகின் முக்கியமான சிக்கல்களில் ஒன்று மதச்சகிப்பின்மை தான். தன் மதத்தின் வழக்கம் தான் உசத்தி; மற்றவனுடையது கீழானது என்ற மேலாதிக்க மனப்பான்மை எழும்போது சிக்கல் பெரிதாகிறது. நான் என் மதவழக்கப்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்கிறேன். அவன் தன் விருப்பப்படி வாழ்க்கைமுறையை அமைத்திருக்கிறான். அவன் அவனுக்கு விதித்தபடி நடக்கட்டும்.ஆனால் நான் எனக்கு விதித்தபடி நடப்பேன். இருவரும் குழம்பிக்கொள்ளத் தேவையில்லை. இப்படி எண்ணிக் கொள்வதும் அதை நடைமுறைப்படுத்துவதும் தான், யதார்த்தத்துக்குப் பொருத்தமான தீர்வு.
ஆனால் இறைமறுப்பு தரப்பினர் இந்த சந்தர்ப்பங்களுக்குச் சொல்லும் எளிய தீர்வொன்று இருக்கிறது. "இந்த மூன்று சந்தர்ப்பங்களிலுமே தயங்கிய முதல் தரப்பினர் தங்கள் நம்பிக்கையை தற்காலிகமாகவேனும் விட்டொழித்து விட்டு அப்போதைக்கு இயல்பாக நடந்துகொண்டிருக்க வேண்டும்".
அது அத்தனை இலகுவானதல்ல. அவர்கள் எண்ணுவது போல் சராசரி மனிதன் ஒருவனால் இலேசில் தன் உணவுப் பழக்கவழக்கத்திலிருந்து வெளியேறமுடியாது. ஏன் இறைமறுப்பர்களாலேயே கூட. "பூகோள வெப்பமயமாதலுக்கு கால்நடைகள் தான் காரணம். இனி ஆயுள் முழுக்க அனைவரும் மரக்கறி உணவு மட்டும் உண்ணவேண்டும்" என்று அரசாங்கம் சட்டம் கொணர்ந்தால் அவர்கள் ஆமாம் சாமி போட்டுவிட்டு பேசாமல் அமர்ந்து விடுவார்களா? ஊரே ரணகளம் ஆகியிருக்காது?
🙂
உணவுப் பழக்கவழக்கம் என்பது உணர்வு சார்ந்தது. மத அடையாளம் இல்லாவிட்டாலும், கிழக்கு ஆசியர் நாயையும் பூச்சிகளையும் உண்ணுவதைக் காணும் போது நமக்குக் குமட்டிக்கொண்டு வருவதற்கும், 'வௌவால் சாப்பிட்டு கொரோனா தொற்றை உலகெலாம் பரப்பினான் சீனன்' என்று குரூரமாக இனவாதம் பேச நம்மை அனுமதித்ததும், இந்த அன்றாட வாழ்க்கை முறைமை சார்ந்த 'மேற்றட்டு உணர்வு' தான் முக்கியமான காரணம்.
சுவாரசியம் என்னவென்றால் அதே உணர்வு சம்பந்தப்படுவதால் தான், முரண்பாடு ஏற்பட்டிருக்கவேண்டிய இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும், எல்லாத் தரப்பினர் இடையேயும் அன்யோன்னியமும் நெருக்கமும் கூடும் வாய்ப்பு ஏற்பட்டது.
இப்படியும் சொல்லலாம். இறைமறுப்பர்கள் பரிந்துரைப்பது, வண்ணங்களை எல்லாம் அழித்துவிட்டு எல்லாவற்றையும் வெள்ளை நிறமாக்கி விடுவோம் என்ற ஒரு இலட்சிய (ideal) கருதுகோளை. இலட்சியம் என்பதாலேயே அது நடக்காது. நடக்கவும் முடியாது. ஏனென்றால் இயற்கை என்பதே பல்வகைமை (diversity) தான். மாறல்கள் (variation) இருப்பதால் தான் கூர்ப்பு அல்லது பரிணாமமே இடம்பெறுகிறது என்பது அடிப்படை விஞ்ஞானம் தெரிந்தவர்களும் ஏற்றுக்கொள்ளும் உண்மை.
எந்த சமயம் அதிகமான பின்பற்றுநர்களை வைத்திருக்கிறது, எது சமகாலத்துக்குப் பொருத்தமான கருத்துக்களை தன் வசம் வைத்திருக்கிறது என்பதல்ல தற்போதுள்ள பிரச்சினை. எந்த சமயம் ஏனைய சமயத்தை பின்பற்றுபவனின் உணர்வுகளை மதிக்கிறது, அவனையும் அங்கீகரிக்கிறது என்பது தான் சமகாலத்தில் முக்கியமாகக் கருதவேண்டிய பிரச்சினை. ஆம் அங்கீகாரம் தான் முதன்மையான பிரச்சினை.
மதம் ஒரு பக்கம் இருக்கட்டும். மனிதன் என்றால் உங்களால் சகமனித உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். எப்போதாவது அடுத்த சமயத்தவனோடு பழகும் வாய்ப்புக் கிடைக்கும் போது அவனது வாழ்வியலை நீங்கள் மதிக்கிறீர்கள், அங்கீகரிக்கிறீர்கள் என்பதற்கு ஒரு சிறு சான்றையாவது காட்டிவிடுங்கள். அப்போது அவன்/ அவள் முகத்தில் பூக்கும் புன்னகைக்கு விலை இல்லை. அப்படி விலை தீர்மானிக்க முடிந்தால் அதன் பெறுமதி தான் உங்களுக்கான அங்கீகாரம். மாற்றுமதத்தவனின் உங்கள் மதத்துக்கான அங்கீகாரம் கூட.
அன்பென்று கொட்டு முரசே.
❤

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner