நித்திய கன்னியர்

0 comments

சிறுவயதில் அம்மா எனக்குத் தலையில் எண்ணெய் வைக்கும் போது ஒரு மந்திரம் சொல்வார் "மாவலி பரசுராமன் வாயுமைந்தன் வாசுதேவன் மேவிய சுக்கிரீவன் விளங்குகின்ற விபூசணன் என்றென்றும் பதினாறு வயது மார்க்கண்டனாக இருக்கக்கடவாய்."

இதில் சொல்லப்படும் ஏழு பேரும் வைதிக மரபில் ஏழு சிரஞ்சீவிகளாக, சாகாவரம் பெற்று வாழ்பவர்களாக சொல்லப்படுபவர்கள் (இந்தப் பட்டியலில் வேறு பெயர்களும் இடம் பெறுவதுண்டு).

இப்படி ஆண்கள் நினைத்துப் பார்க்கவேண்டியவர்கள் என்று சொல்லப்படும் ஏழு சிரஞ்சீவிகள் போலவே, பெண்கள் தினமும் காலையில் நினைத்துப் பார்க்கவேண்டியவர்களின் பட்டியல் ஒன்றும் நம் மரபில் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. பஞ்சகன்னியர். அந்த ஐந்து கன்னியரும் திரௌபதி, குந்தி, தாரை, மண்டோதரி, அகலிகை. (குந்திக்குப் பதில் சீதை சொல்லப்படும் பட்டியலும் உண்டு.)


இந்தப்
பட்டியலில் உள்ள முரண்நகை என்னவென்றால் இந்த ஐவரும் வழக்கமான அர்த்தத்தில் கன்னியரே இல்லை. திரௌபதிக்கு ஐந்து கணவர்கள். குந்திக்கும் கணவர் ஐந்து பேர். அகலிகை, கணவன் இருக்க இந்திரனோடு குலாவியவள்.
வான்மீகி இராமாயணத்தின் படி மண்டோதரி, இராவணன் கொல்லப்பட்ட பிறகு விபீஷணனை திருமணம் செய்து கொள்கிறாள். வாலியின் மனைவி தாரை, வாலி கொல்லப்பட்ட பிறகு சுக்கிரீவனை மணக்கிறாள்.

பெண்களுக்கு இன்றைய சமூகம் வகுத்திருக்கும் ஒழுக்க விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரான வாழ்க்கை வாழ்ந்த இந்த ஐவரையும் ஒவ்வொரு பெண்ணும் அதிகாலையில் எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் தான் என்ன?

இப்போதே இத்தனை கட்டுப்பாடுகள் இருக்கையில், பழங்காலத்தில் ஒரு பெண்ணுக்குரிய சுதந்திரம் எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத்தேவையில்லை. அதிலும் பெண் முதன்மையாக ஒடுக்கப்படுவது அவளது பெண்மையாலேயே. இன்றைக்கெல்லாம் ஒரு ஆணை இழிவுபடுத்த வேண்டுமென்றால், அவனது தாயின், மனைவியின், தமக்கையின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கினாலே போதும்.

அந்தப் பெண்மை என்ற வரம்பைத் தான் இந்த ஐவரும் மீறினார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இவர்கள் செய்த சாதனை ஒன்றே ஒன்று தான். தனக்குரிய பாலியல் சுதந்திரத்தை தைரியமாகப் பெற்றுக்கொண்டது. அதேவேளை தங்கள் கன்னிமையைக் காத்துக் கொண்டது. இந்த உலகம் தன்னைத் திருப்திப்படுத்த, பெண்கள் மீது மட்டும் போட்டிருக்கும் கற்பு என்ற கவசம் மீதான காறி உமிழல் அது. திரௌபதி வழிபாட்டில் அடிக்கடி சொல்லப்படும் "ஐவருக்கும் பத்தினி, அழியாத கன்னி" என்ற கூற்றிலுள்ள முரணை இதன் மூலமே புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், பாலியல் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதற்காகத் தான் இந்த ஐவரை பெண்கள் தினமும் காலையில் நினைவு கூர வேண்டுமா?

இல்லை. அப்படிச் சுருக்குவது அபத்தம். ஐந்து பாத்திரங்களும் மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் எப்படி எப்படியெல்லாம் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்த்தால் தான் முழுமையான சித்திரம் துலங்கி வரும்.

இராமாயணத்தில் மண்டோதரி மற்றும் தாரையின் நுண்ணறிவும் இராஜதந்திரமும் பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவற்றைக் கண்டு முறையே இராவணனும், வாலியும் சுக்கிரீவனும் வியக்கும் இடங்களும் அங்கு வருகின்றன. மகாபாரதத்தில் திரௌபதியும் குந்தியும் கூட அவ்வாறே. பெண்கள் தரப்பில் பாரதப்போரின் சூத்திரதாரிகள். எஞ்சியுள்ள அகலிகை வேறொரு விதத்தில் அணுகப்பட வேண்டியவள்.

உண்மையிலேயே இந்தப் பெண்கள் இரத்தமும் சதையுமாக இந்த உலகில் நடமாடியவர்கள் என்றால், அவர்கள் அனுபவித்திருக்கக்கூடிய வசைகள், வலிகள் தான் எத்தனை எத்தனை? அவர்களின் நிமிர்வும் ஆளுமையும் ஆணுலகைச் சீண்டியிருக்கும். அதை அடக்கத் தூண்டியிருக்கும். இதிகாசங்களில் கூட அவர்கள் ஐவருமே தோற்றவர்கள் தான். ஆனால் பெண்ணாக வென்றவர்கள். காலமுள்ள வரை நினைவுகூரப்பட வேண்டியவர்கள். அதனால் நித்திய கன்னியர்.

நிஜ வாழ்க்கையில் எத்தனையோ இடத்தில் நாம் குந்திகளை, மண்டோதரிகளை, தாரைகளை, திரௌபதிகளை, அகலிகைகளை கடந்து கொண்டு தான் இருக்கிறோம். நம் பக்கத்து வீட்டில், நம் தொழிலகத்தில், நம் நட்பு வட்டத்தில், நம் சொந்தத்தில், யாரோ ஒருத்தி பஞ்ச கன்னியரில் ஒருத்தி பட்ட வலியையும் வேதனையையும் சுமந்துகொண்டு புன்னகையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

நான் கண்ணகியை போற்றுபவன். ஆனால் பஞ்ச கன்னியரை அவளுக்கும் மேலானவர்களாக ஆராதிக்கிறேன். கண்ணீரை மறைத்துக்கொண்டு என் உலகில், என்னைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ கன்னியரில் அவர்களைக் கண்டு கண் கலங்கியிருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் என் வணக்கம். மகளிர் தின வாழ்த்துக்கள்.
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner