திரையிசை இலக்கியம்

12 comments

நண்பர்களுடன் திரைப்படப் பாடல்கள் பற்றிய சுவையான உரையாடல் போய்க்கொண்டிருந்தது.  இலக்கிய வரிகளை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே திரையிசையில் பயன்படுத்துவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். வைரமுத்து இப்படி இலக்கிய வரிகளை அப்படியே தான் எழுதும் பாடல்களில் எடுத்தாள்வதில் வல்லவர். அதிலும் ஆராய்ந்தால், அவர் குறிப்பாக குறுந்தொகை வரிகளையே அதிகம் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். உதாரணமாகச் சொன்னால், நறுமுகையே (யாயும் ஞாயும் 40), இதயம் (சிறுகோட்டுப் பெரும்பழம் 18, மந்தி உருட்டும் 38), தீண்டாய் (கன்றும் உண்ணாது 27) என்று இந்தப் பட்டியல் நீளும்.

சட்டென ஒரு நண்பன் ஒரு பாடலை ஒலிக்கவிட்டான். "தேவாவின் அரிதான, அழகான மெல்லிசை. வைரமுத்துவின் வரிகள். இதுவும் ஏதோ பழந்தமிழ்ப் பாடல் என்று தான் நினைக்கிறேன். என்னவென்று தெரியுமா?" அது கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படத்தின் "சின்னச் சின்னக்கிளியே" பாடல்.
                                             

அவனது ஊகம் சரி தான். அது அபிராமி அந்தாதி ஆறாம் பாடல். இதையெப்படி இத்தனை நாள் கவனிக்காமல் விட்டோம்? 

சென்னியது உன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே!

தேவியின் அடியவன் அவளது பாதங்களைத் தலையில் சூடியிருப்பான். சிந்தனை முழுக்க அவளது மந்திரமே ஓடும். ஏனைய அடியார்களுடன் சேரும் போதும், அவன் அவளது புகழ்மொழிகளையே கூறுவான்.

இந்த வரிகளை, நாயகன் நாயகியைப் பார்த்துப் பாடுகிறான் என்று கொண்டால், அவ்வரிகள், அக்காதலை வேறொரு தளத்துக்கே கொண்டு சென்று விடுகிறது, இல்லையா?

பக்தி மார்க்கத்து வரிகள், உலகியல் சார்ந்து நாயகனால் நாயகி மீது பாடப்படும் என்றால், உலகியல் சார்ந்து நாயகி மீது பாடப்பட்ட வரிகளை, பக்தி மார்க்கத்திலும் தெய்வம் மீது பயன்படுத்தலாம் தானே? வைஸ் வேர்சா.

திரையிசை அந்த முயற்சியிலும் இறங்கியிருக்கிறது.  தமிழகத் தொலைக்காட்சிகளின் பாடல் போட்டி நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பாடல் "சொல்லடி அபிராமி". 1971இல் வெளியான ஆதிபராசக்தி திரைப்படத்துக்காக கண்ணதாசன் எழுதிய பாடல் அது. சாதாரணமாகக் கேட்பவர்களுக்கே மெய்சிலிர்க்க வைக்கும் தருணம் அப்பாட்டில் வரும் இடம் ஒன்றுண்டு.
                                             

இந்த வரிகளும் தமிழ் இலக்கியத்துக்கு சொந்தமானவை தான். குற்றாலக் குறவஞ்சி. அதன் பாட்டுடைத் தலைவியான வசந்த சுந்தரி பந்து விளையாடுகிறாள். எப்படியென்றால்,


செங்கையில் வண்டு கலின் கலின் என்று
செயம் செயம் என்று ஆட, இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்து ஆட, இரு
கொங்கை ’கொடும் பகை வென்றனம்’ என்று
குழைந்து குழைந்தாட, மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே! 

சிவந்த கையிலுள்ள வளையல்கள் கலிங் கலிங்கென்ற ஒலியுடன் "வெற்றி வெற்றி" என்று கோஷம் இடுகின்றன. செம்மையான இசை என்று சொல்லும் படி,  சிலம்பும் தண்டையும் கலந்து ஒலிக்க இடை அசைந்தாடுகின்றது. இரு தனங்களும் "கொடிய பகையை வென்றுவிட்டோம்" என்று குழைந்து ஆட, மலர்க்கொடி போன்ற பெண்ணான வசந்த சௌந்தரி பந்து விளையாடுகிறாளாம். 

இன்பச்சுவை சொட்டும் இந்த வரிகளை, பக்திச்சுவை எனும் தட்டில் கொட்டி, "மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன் நிலவு எழுந்தாட" என்று உருகுகிறார் கண்ணதாசன். அங்கு அன்னை காதலி ஆகிறாள். இங்கு காதலி அன்னை ஆகிறாள்.  இலக்கியத்தின் அழகு!

யூரியூப்பில் தேடிய போது, இதைவிடப் பழைய இன்னொரு படமான "குறவஞ்சி"யில் இதே பாடல் வேறொரு விதமாகப் படமாக்கப்பட்டிருப்பதைக் கண்டறிய முடிந்தது.
                                             

என்ன கறுப்பு வெள்ளை சலிப்பூட்டுகிறதா? சரி, வேண்டாம். குற்றாலக் குறவஞ்சியை இசைப்புயலின் இசையில் கேட்டால் சந்தோஷப்படுவீர்களா? என்ன? இசைப்புயலா? குற்றாலக் குறவஞ்சிக்கு இசையமைத்திருக்கிறாரா? அதிர்ச்சி எல்லாம் அடையவேண்டாம். கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டு ஆறுதலாக இந்தப் பாட்டைக் கேளுங்கள்.



இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ
ரம்பையோ மோகினியோ மனம்
முந்தியதோ விழி முந்தியதோ கரம்
முந்தியதோ எனவே உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
சங்கு அணி வீதியிலே மணிப்
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி
பொன் பந்து கொண்டாடினளே!

இவள் திருமகளோ, பேரழகியோ, ரம்பையோ, மோகினியோ என்றெல்லாம் பார்த்தவர் வியக்க, பந்தை அடிக்க மனம் விரைகிறதா, விழிகள் முந்துகின்றனவா, கை முந்துகின்றதா என்று சிந்திக்க வைக்க, சந்திரனைச் சூடிய குற்றாலநாதரின் வீதியிலே மணியாபரணம் அணிந்த வசந்த சௌந்தரி பந்து விளையாடுகிறாள் என்பது பாடல் வரிகள். இரட்சகன் திரைப்படத்தில் பிரிந்திருந்த காதலர் சேரும் காட்சியில் மென்மையாக ஒலிக்கிறது இப்பாடல்.உள்ளத்தால் ஒருவரையொருவர் ஆரத்தழுவி, உடலால் இருவரும் விலகி நிற்கும் அந்தக் காட்சியில் இந்தப் பாட்டு வரிகள் எப்படிப் பொருந்துகின்றன? யூரியூப்பில் "ரீப்ளே" கொடுத்தபடி யோசியுங்களேன்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தமிழ் இலக்கியம் இடம்பெற்ற இந்தப் பட்டியல் நீளமானது. குறிப்பாக, கீழ்வரும் நான்கையும் சொல்லலாம். "கோச்சடையான்" திரைப்படத்தில் வரும் தாண்டவக் காட்சிக்கு முன் ஒலிக்கும் "மாசில் வீணையே" எனத் தொடங்கும் வரிகள். அப்பர் தேவாரத்திலிருந்து பெறப்பட்டது அது.
                                             

அதே போல், "காவியத் தலைவன்" திரைப்படத்தில் இடம்பெறும் "ஏவினை நேர்விழி" எனத் துவங்கும் திருப்புகழ். வாணி ஜெயராமின் குரல். வேதிகாவின் அற்புதமான அபிநயம். மயிற்பீலி போல வருடும் மெல்லிசை. அப்படியே உள்ளம் உருகச் செய்யும். பௌர்ணமி நள்ளிரவுகளுக்கான என் இசைத்தொகுதியில் இடம்பிடித்துள்ள முக்கியமான பாடல் இது.
                                             


இவற்றுக்கு கொஞ்சமும் குறையாமல், "மார்கழித் திங்களல்லவா"வுக்கு முன்பு வருகின்ற "மார்கழித் திங்கள்",  சிவாஜி திரைப்படத்தில் ஒலிக்கும் "மாலே மணிவண்ணா" ஆகிய இரு ஆண்டாள் பாசுரங்களும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், மெய் சிலிர்க்க வைப்பவை.  (இந்தப் பாடல் ஒலிக்கும் காட்சி நினைவிருக்கிறதா? இதில் வரும் 'யாழ்ப்பாணம்' என்ற சொல் தான் இந்தப் பாசுரத்தையே இனங்காட்டியது 😇).

சரி, சரி, இசைப்புயல் புகழ் போதும்.. எங்கள் இசைஞானி மட்டும் சளைத்தவரா என்று  எதிர்க்கோஷ்டியினர் கிளம்பி விடாதீர்கள். இசைப்புயலை விட, இசைஞானியின் பாடல்களில் தான் அதிகம் தமிழ் இலக்கியம் எடுத்தாளப்பட்டுள்ளது என்று பட்சி சொல்கிறது.  உடனடியாக நினைவுக்கு வரும் இளையராஜாவின் புதுப்பாடல், தாரை தப்பட்டை "பாருருவாய". முழுக்க முழுக்க திருவாசக வரிகள் அப்பாடல். சொன்னால் நம்ப மாட்டீர்கள். முதல் தடவை கேட்டபோதே ஏனென்று தெரியாமல் கண் கலங்கியிருக்கிறேன். காட்சியோடு பார்க்கும் போது மனதை அப்படியே பிழிந்து போடும். இந்தப்பாடலில் இரு வேறுமங்கள் (versions) இருக்கின்றன. ஒன்று கீழே. இன்னொன்று இங்கே.
                                             


திருப்புகழ், குறவஞ்சி என்று பிற்கால இலக்கியங்கள் தானா. வைரமுத்தரின் துண்டு துக்கடா வரிகள் போலன்றி, சங்க இலக்கியங்கள் ஒன்றும் முழுமையாக திரையிசையில் எடுத்தாளப்படவில்லையா என்று கேட்பீர்களென்றால்,  இருக்கிறது. மிக அண்மைக்காலத்தில் வெளியான ஒரு பாடல் இருக்கிறது. நம்மவர் சினமா "யாழ்" திரைப்படத்தில் இடம்பெற்ற 'சிவயநம' பாடல். அதில் பாடப்படுவது, பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான "பொருநராற்றுப்படை". பாடகர் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாகப் பாடியிருந்தால், இப்பாடல்  அடைந்திருக்கக்கூடிய உயரமே வேறு.
                                              



அத்தனை பிரபலமாகாத இன்னொரு பாடல் இருக்கிறது. "திங்கள் மாலை வெண்குடையான்".   'கரும்பு' திரைப்படத்தில் இடம்பெற்ற சிலப்பதிகாரக் கானல் வரிகள். 70களில்  தயாரிக்கப்பட்ட இப்படம் வெளியாகவில்லையாம். புகழ்பெற்ற இந்திய இசைமேதை சலீல் சௌத்ரியால் இசையமைக்கப்பட்ட பாடல் இது. 
                                             

இப்படி, நேற்றைய கண்ணதாசனிலிருந்து, இன்றைய வைரமுத்து வரை,  நேற்றைய எம். எஸ்.வி, ராமமூர்த்தியிலிருந்து, இன்றைய இசைஞானி, இசைப்புயல் வரை எல்லோருமே மரபைக் கொண்டாடித் தீர்த்தவர்கள் தான். திரையிசையில் இன்னும் மூழ்கினால்  இந்தப்பட்டியலில் நிறையப்பாடல்கள் இருப்பதைக் காணலாம்.

நூறு நூறாண்டுகள் கடந்த வரிகளை வெறும் இசையாக, வெறும் சொல்லாக  இரசிப்பதற்கும், "ஓ! இது இந்த இலக்கியத்தில் வந்த வரிகள்" என்று உணர்ந்து மகிழ்வதற்கும் வேறுபாடு உள்ளது. அந்த சுகமே அலாதியானது. புரிதலுக்காக இப்படிச் சொல்லலாம். சமூக வலைத்தளங்களில் பிரபலமான 'மீம்'களைப் புரிந்துகொள்வதற்கு, நமக்கு அந்த மீமில் இடம்பெறும் திரைப்படத் தருணமோ, அல்லது வசனங்களோ ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். அது தெரியாதவர்களுக்கு அந்த மீமிலுள்ள நகைச்சுவை முழுதாகப் புரியாது. திரையிசையும் அப்படித்தான்.

இலக்கியத் தமிழை திரையிசையில் இரசிக்க வேண்டுமென்றால்,  அகநானூறு, புறநானூறெல்லாம் படித்திருக்கவேண்டும், பாடமாக்கி இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. வெறும் பாரதியார் பாடல்கள், அன்றாடம் சொல்கின்ற தேவார, திருவாசக வரிகள் கூட  அப்படியே; அல்லது கொஞ்சம் மாற்றப்பட்டு திரையிசையில் ஒலிக்கலாம். அடுத்த தடவை ஏதேனும் பாடல்களைக் கேட்கும் போது, வரிகளைக் கூர்ந்து கவனியுங்கள். ஏதேனும் ஒரேயொரு சொல்லில் கூட இலக்கியமொன்றை உங்களால் அடையாளம் காணமுடியும். அதைக் கண்டுகொள்ளும் போது நீங்கள் அடையும் பூரிப்பை வர்ணிக்க வார்த்தை இருக்காது. 
     

மேலும் வாசிக்க »

திருக்கோவில் முருகு

0 comments
திருக்கோவில் ஆடி அமாவாசை ஆழிப்புனலாடல் காட்சி
(நன்றி: Akish 4K Studio )

இலங்கையின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்கள் இணைந்த பழைய மட்டக்களப்புத் தேசத்தில் முதன்மை பெற்று விளங்கிய திருத்தலம், திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம். வடக்கே ஏறாவூர்ப்பற்று முதல் தெற்கே கூமுனைப்பற்று வரை, சுமார் இருநூறு கிலோமீற்றர் நீளமான நிலப்பரப்பில் வாழ்ந்த சைவத்தமிழ் மக்கள் கொண்டாடிப் போற்றிய திருத்தலம் அது. முழு மட்டக்களப்புத் தேசத்துக்குமே உரிமையாகவிருந்த அக்கோவில், தேசத்துக்கோவில் என்ற மரியாதையைப் பெற்றிருந்தது. வரலாற்றில் சோழராட்சிக்காலத்துடனும், கலிங்க மாகன் காலத்துடனும் இணைத்து நோக்கக்கூடிய பழைமை வாய்ந்த திருக்கோவில், கண்டி மற்றும் கோட்டை மன்னர்களின் மானியங்களையும், மட்டக்களப்பை ஆண்ட சிற்றரசர்களின் மதிப்பையும் பெற்ற சரித்திரப் பிரசித்தி வாய்ந்த அருட்கோவில். அத்திருத்தலத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் வரலாற்று பூர்வமாக ஆராய்கின்றது இந்த ஆய்வுக்கட்டுரை.  

அறிமுகம்


திருக்கோவில் என்பது தமிழரைப் பொறுத்தவரை புனிதமான சொல்லாடல். புகழ்பெற்ற இறைக்கோட்டங்களை எல்லாம் திருக்கோவில் என்று போற்றுவது நமது பண்பாடு. ஆனால் ஒரு கோவில் மாத்திரமன்றி, அது அமைந்த தலமும் கூட “திருக்கோவில்” என்று அழைக்கப்படும் பெருமையை, தமிழ் கூறு நல்லுலகில், ஈழவளநாட்டின் ஒரேயொரு பதி மாத்திரமே பெற்றுள்ளது. கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அந்தப் பேர் பெற்ற திருக்கோவில் பதியில், கடலோரம், இயற்கை எழில் கொஞ்சும் அமைவிடத்தில், “ஈழத்துச்சீரலைவாய்”  எனும் செல்லப்பெயருடன்  அமைந்து விளங்குகின்றது திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம். 

கதிர்காம முருகனின் நிரந்தர வசிப்பிடமாகப் போற்றப்பட்ட இத்திருத்தலம், ‘கந்தன் கதிரையாண்டவன் கோவில்’ என்றும் போற்றப்பட்டிருக்கிறது (Nevill 1885:04; Vimala n.d). ஆரம்பத்தில் மூலவராக வேலாயுதத்தைக் கொண்டிருந்ததால், இங்குள்ள இறைவனுக்கு "சித்திரவேலாயுதர்" என்று பெயர். இந்த ஆய்வுக்கட்டுரையில், மரபுரைகள், கிடைத்துள்ள தொல்பொருள் சான்றுகள், காலனித்துவ ஆட்சியாளர்களின் குறிப்புகள் ஆகிய மூன்று வகை ஆவணங்களைப் பயன்படுத்தி, இக்கோவிலின் ஆதாரபூர்வமான வரலாற்றை நாம் கட்டியெழுப்ப இருக்கிறோம்.

மரபுரைகள்

திருக்கோவில் பற்றிய மரபுரைகளை தொன்மங்கள் என்றும் இலக்கியங்கள் என்றும் இரண்டாகப் பிரித்து நோக்கலாம். தொன்மங்கள், மக்கள் மத்தியில் கர்ணபரம்பரையாக நீடித்து நிலைப்பவை. இலக்கியங்கள் என்னும் போது, அவை எழுத்தில் - ஏட்டுருவில் பேணப்பட்ட தொன்மங்கள் என்று கொள்ளலாம். தொன்மம் -  இலக்கியம் என்பதெல்லாம், நமது வசதிக்காக  மேலோட்டமாகப் பிரித்துக்கொண்ட வகைப்பாடு என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

திருக்கோவிலின் தோற்றம் பற்றி மூன்று தொன்மங்கள்  கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று கதிர்காமத்துடனும், இன்னொன்று திருக்கோணேச்சரத்துடனும், திருக்கோவிலை இணைக்கின்றன. சூரபதுமனை கதிர்காமத்தில் அழித்த முருகனின் வேலானது உக்கிரம் தணியாமல் மாணிக்க கங்கையில் நீராடி எழுந்து, எதிர்ப்பட்ட வாகூரமலையை இரு கூறாக்கி இங்கிருந்த வெண்ணாவல் மரத்தின் கீழ் அமர்ந்ததாகச் சொல்கிறது முதல் தொன்மம் (நடராசா 1998:04). இங்கு வாழ்ந்த வேடர்கள், அவ்வாறு வந்தடைந்த வேலாயுதத்தைக் கண்டு வியந்து, கொத்துப்பந்தரிட்டு வழிபடுகிறார்கள். 

இந்தத் தொன்மம், பிற்காலத்தில் இன்னும் வளர்ச்சியடைந்து, மாணிக்க கங்கையில் நீராடிய போது வேலாயுதத்திலிருந்து மூன்று கதிர்கள் தோன்றியதாகவும், அவை வாகூர மலையைப் பிளந்து உகந்தை, திருக்கோவில், மண்டூர் ஆகிய மூன்று இடங்களிலும் கோவில் கொண்டதாகவும் சொல்கிறது (கந்தையா 1983:51). இன்னொரு கதை, இந்தக் கதிர்களின் எண்ணிக்கையை ஆறாக அதிகரித்து,  சித்தாண்டி, வெருகல், போரதீவு ஆகிய மூன்று கோவில்களையும் கூடச் சேர்த்துக்கொள்கிறது (கணபதிப்பிள்ளை 2000:16). 

திருக்கோவிலை கோணேச்சரத்துடன் இணைக்கும் இன்னொரு தொன்மத்தின் படி, திருக்கோவில் இராவணனால் வழிபடப்பட்ட ஒரு சிவாலயம் (Shanmugalingam n.d). கீழைக்கரையில் அமைந்திருந்த திருக்கோணேச்சரம், திருக்கோவில், உகந்தை ஆகிய மூன்று சிவாலயங்களையும் இராவணன் மூன்று வேளைகளிலும் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் என்று அந்தக்கதை நீள்கின்றது.

திருக்கோவிலை கதிர்காமத்துடனும் திருக்கோணேச்சரத்துடனும் இணைக்கும் இந்த இரு தொன்மங்களிலிருந்தும் நாம் இரண்டு விடயங்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஒன்று, வேடர்கள் அல்லது வேடர்களாக இனங்காணப்பட்ட ஈழத்துத் தொல்குடிகளால் இங்கு வழிபாடு ஆரம்பமாகி இருக்கிறது. இன்னொன்று திருக்கோவிலை இரு செவிவழிச்செய்திகளும் திருக்கோணேச்சரம் மற்றும் கதிர்காமத்துடன் இணைக்க முயல்வதால், அதுவும் அவ்விரு கோவில்களின் அளவு அல்லது அவற்றுக்குச் சற்று முன் பின்னான அளவு பழைமை வாய்ந்தது என ஊகிக்கலாம். 

திருக்கோவில் பற்றிய மூன்றாவது தொன்மம், அது தானாகவே திரும்பிய கதையைச் சொல்கின்றது. திருக்கோவில் முன்பு வடக்கு நோக்கிய கோவிலாக இருந்ததாகவும், அடியவர் ஒருவர் இது கிழக்கு நோக்கி இருந்தால் கதிரவன் எழுகையில் அழகாகத் தோன்றுமே என்று எண்ணியபடி உறங்கியதாகவும், காலையில் எழுந்து பார்த்தபோது மூலவர் வேலாயுதம் கிழக்கு நோக்கித் திரும்பிக் காட்சியளித்ததாகவும், அன்று முதல் திரும்பிய கோவில் என்ற பொருளில் அது “திருக்கோவில்” ஆனது என்றும் இக்கதை செல்லும் (கந்தையா 1983:56-57). 

திரும்பிய கோவிலே திருக்கோவில் ஆனது என்று சொல்வதை ஒரு நாட்டார் நம்பிக்கையாகவே கருதமுடியும். திருக்கோவில் என்ற பெயருக்கான காரணம், கிழக்கிலங்கையில் இக்கோவில் பெற்றிருந்த முதன்மையும் புகழுமே. திரும்பிய கோவில் திருக்கோவில் என்று ஆவதற்கு தமிழில் சொற்புணர்ச்சி விதிகள் எதுவும் இல்லை. ஆனால், இந்த ஆலயத்தின் முகப்பு முன்பு வடக்கு நோக்கி இருந்து பின்பு கிழக்கு நோக்கி மாறியிருக்கிறது என்பதற்குச் சான்றுகள் உண்டு. 

சில ஆண்டுகளுக்கு முன் வரை, திருக்கோவிலுக்கு வடக்கும் கிழக்கும் இரு வாயில்கள் இருந்ததையும், அவை இரண்டும் முறையே வேட முகப்பு, சாமி முகப்பு என்று அழைக்கப்பட்டதையும் இங்கு நாம் பொருத்திப் பார்க்கலாம். “வேடமுகப்பு” எனும் வடதிசை வாயில் இத்தலத்துக்கும் வேடருக்கும் இருந்த உறவைத் தெற்றெனக் காட்டுகிறது. வேடரின் வழிபாடு வடக்கு முகமாகவும், மேல்நிலையாக்கப்பட்ட ஆகம வழிபாடு கிழக்கு முகமாகவும் இடம்பெற்று வந்திருக்கிறது என்பதையே வேடமுகப்பு – சாமிமுகப்பு ஆகிய பெயர்கள் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றன. இரு வழிபாட்டு முறைகளும் இணைந்த புள்ளியை, கோவில் திரும்பியது எனும் தொன்மம் சுட்டிக்காட்டுகிறது என்று கொண்டால் அது தவறாகாது.

இனி தொன்ம இலக்கியங்களை எடுத்துக்கொண்டால், திருக்கோவில் பற்றிக் குறிப்பிடுகின்ற தொன்ம இலக்கியங்கள் இரண்டு. ஒன்று கண்ணகி வழக்குரை.  அடுத்தது மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம். 

கண்ணகி வழக்குரையோ அதன் வடபுலப் பிரதியான கோவலனார் கதையோ, யாழ்ப்பாண ஆரியச்சக்கரவர்த்திகளில் ஒருவரான செயவீரனால் எழுதப்பட்டிருக்கலாம் என்பது பொதுவான கருத்து. கண்ணகி வழக்குரையின் காலத்தை திருத்தமாகக் கண்டறியமுடியவில்லை. பதினான்கு அல்லது பதினைந்தாம் நூற்றாண்டு நூலாக அது வரையறுக்கப்படுவதே வழக்கம் (நடேசன் 2014). கண்ணகியின் சிலம்புக்குப் பரல் தேடி கீழைக்கரையோரமாகச் செல்லும் தூரி (படகு) ஒன்று, மட்டக்களப்பையும் அடுத்து கண்டபாணத்தையும் கடப்பதை, வழக்குரை ஓரிடத்தில் பாடுகிறது (கந்தையா 1968:42). மட்டக்களப்புப் பூர்வ சரித்திரமும் திருக்கோவிலை கண்டபாணத்துறை என்றே சில இடங்களில் அழைக்கிறது (நடராசா 1998:07). 

கிழக்குக் கடலோர வாணிப மையங்களில் திருக்கோவிலும் ஒன்று என்பதற்கு, துறை என முடியும் இப்பெயரும், ஒல்லாந்தர் வரைபடங்களும், தெளிவான ஆதாரங்களாக அமைகின்றன. பிரித்தானியர் காலம் வரை, இக்கோவிலின் அருகே கடல்மார்க்கமாக கொப்பரை ஏற்றுமதி இடம்பெற்றது என்ற தகவலையும் நாம் இணைத்துப் பார்க்கலாம். சமகாலத்தில் கண்டபாணத்துறை என்பதைக் கந்தபாணத்துறை என்று உச்சரிப்பதுடன், கந்தனின் பாணமான வேலாயுதத்தின் துறைமுகம் என்றும் விளக்கம் தருகிறார்கள் (சகாதேவராஜா 2018:22). எனினும் இரு மூலநூல்களிலும் அது கந்தபாணம் என்றில்லாமல், கண்டபாணம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நாம் அவதானிக்கவேண்டும். அப்பெயரின் பொருள் தெளிவாக விளங்கவில்லை. ஈழக்கரையோரம் வடக்கே யாழ்ப்பாணத்துறை, கிழக்கே கண்டபாணத்துறை, மேற்கே பாணந்துறை ஆகிய கடலோரப்பதிகள் ஒத்தபெயரில் இருப்பதற்குப் பின்னுள்ள காரணத்தை ஆராய்ந்தால் மேலும் பல  செய்திகள் கிடைக்கக் கூடும்.  


ஆலயத்தின் இன்றைய தோற்றம் 
இனி மட்டக்களப்புப் பூர்வசரித்திரத்தை எடுத்துக்கொண்டால், 1962இல் எஃப்.எக்ஸ்.சீ.நடராஜா அவர்களால் மட்டக்களப்பு மான்மியம் என்ற பெயரிலும், 2005இல் கமலநாதன் தம்பதியினரால் முற்குறித்த பெயரிலும், நூல்வடிவில் வெளியான ஏட்டுச்சுவடி அது. வம்சவரலாறுகளைச் சொல்லும் இதையொத்த ஏட்டுச்சுவடிகள் “திருப்படைப்பத்ததி” என்ற பெயரில் திருக்கோவில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் முதலான கோவில்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன (தட்சிணாமூர்த்தி 1992:1-3). அவற்றில் ஒன்றே வெளியாகி இந்த நூல் வடிவைப் பெற்றிருக்கின்றது.

மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தின் படி, கி.பி 08இல் மட்டக்களப்பை பிரசன்னசித்து எனும் மன்னன் ஆண்டுவரும் போது,  திருச்சோழனின் மகள் தம்பதி நல்லாளும், அவள் கணவன் கலிங்க இளவரசன் புவனேய கயவாகுவும் தம் பிள்ளையில்லாக்குறை தீர்க்க கதிர்காமத்துக்கு யாத்திரை வருகிறார்கள். பிரசன்னசித்து, அவர்கள் தன் உறவினர் என்றறிந்து வரவேற்று, தன் நாட்டிலுள்ள நாகர்முனைச் சுப்பிரமணியர் கோவில் பாழடைந்து கிடப்பதையும், அதைத் திருத்தித் தரும்படியும் கோரிக்கை விடுக்கிறான். புவனேயகயவாகு, தன் மாமனிடம்  செய்தியனுப்பி குடிகளும் உதவியும் பெற்று அக்கோயிலைத் திருத்தி அமைக்கும் போது, தம்பதி நல்லாள் கருப்பமடைகிறாள். பிரசன்னசித்து அவர்களுக்கு மட்டக்களப்பின் தென்பகுதியைப் பரிசளிக்க அங்கு உன்னரசுகிரி எனும் இராசதானி தோன்றுகிறது. 

அவர்களுக்குப் பிறக்கும் மேகவண்ணன், மனுநேயகயவாகு என்ற பெயரில் அரசுக்கட்டிலேறி திருக்கோவிலைக் கற்றளியாகப் புனரமைத்து, ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனபுரத்திலிருந்து வீரசைவக்குருக்களை வரவழைத்து ‘தம்பட்டர் ஊரில்’ குடியேற்றி, தன் தாய் நினைவாக ஒரு குளம் கட்டி அதற்குத் ‘தம்பதிவில்’ எனப் பெயர் சூட்டுகிறான் (நடராசா 1998:27-33கமலநாதன் கமலநாதன்  2005:15-19). மட்டக்களப்புப் பூர்வசரித்திரத்தின் இன்னோரிடம் சிவாலயங்களுக்குத் அரனூழியம் செய்ய கலிங்க மாகோனால் கோவசிய குலத்தார் நியமிக்கப்பட்டதை விவரிக்கின்றது. 

இந்தச் சரித்திரத்தில் குறிப்பிடப்படும் மன்னர்கள், கோவிலை புதிதாக அமைக்கவில்லை; பாழடைந்த கோவிலையே திருத்துகிறார்கள் என்பதை நாம் கவனிக்கவேண்டும். அது இக்கோவிலின் பழைமைக்கு இன்னொரு சான்று. பூர்வசரித்திரம் சொல்லும் தம்பட்டை, தம்பிலுவில் (தம்பதிவில்) ஆகிய இரு ஊர்களை இன்றும் திருக்கோவிலின் அருகே காணமுடியும். வீரசைவ சங்கமரின் பரம்பரையினரான குருக்கள் குடியினரும், மாகோன் அரனூழியம் வகுத்ததாகச் சொல்லப்படும் கண்டன், சருகுபில்லி, கட்டப்பத்தன் ஆகிய மூன்று கோவசியர் குலத்தவரும், இன்றும் அவ்விரு ஊர்களிலும் வசித்து வருகிறார்கள்.  இவை சார்ந்த தகவல்களை மட்டுமே பூர்வசரித்திரத்திலிருந்து நம்மால் உறுதியாக ஏற்றுக்கொள்ளமுடிகின்றது. 

பூர்வ சரித்திரமானது, சில இடங்களில் திருக்கோவிலை “புவனத்திருப்பணி” என்னும் பெயரால் அழைக்கின்றது (கமலநாதன் கமலநாதன் 2005:119-121). அதிலுள்ள “புவனேசர் கல்வெட்டு” எனும் பாடல், புவனேயகயவாகுவால் அக்கோவில் அமைக்கப்பட்ட வரலாற்றைப் பாடுகின்றது. எனினும், பூர்வ சரித்திரம் குறிப்பிடும் காலவரிசை ஆண்டுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, திருச்சோழனை திருமாவளவன் கரிகால் சோழனாக இனங்காணும் போக்கு ஆய்வுலகில் உண்டு (கோபால் 2005:49-50).

கற்றளிகள் பல்லவர் காலத்துக்குப் பிந்தியவை என்பதாலும், மட்டு பூர்வ சரித்திரம் வரலாற்று ரீதியில் அத்தனை நம்பகமானதல்ல (McGilvray  2008:58-63) என்பதாலும், வேறு சரித்திரச் சான்றுகள் கிடைக்காத வரை, திருக்கோவில் தொடர்பான இத்தொன்மங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் இன்றும் அப்பகுதி மக்களின் வாய்மொழியில் “மனுராசா” (மனுநேய கயவாகு?), “காலிங்க மாகோன்” “தம்பதியம்மாள்” முதலியோர் திருக்கோவிலைக் கட்டியது பற்றிய நம்பிக்கைகள் நிலவுவதால் அவர்களை வரலாற்று மாந்தர்களாகக் கொள்வதற்கு இடமிருக்கிறது. இவ்வாறு கொண்டால், திருக்கோவிலின் சரித்திர பூர்வமான தோற்றம் மாகோனுக்கு (1215 - 1256) சற்று முன், இலங்கை சோழராட்சியின் கீழ் இருந்தபோது, பத்தாம் – பதினோராம் நூற்றாண்டளவில் நிகழ்ந்தது என வரையறுக்கலாம். 

திருக்கோவிலை மட்டக்களப்புப் பூர்வசரித்திரம், “நாகர்முனை” என்றும் அழைக்கின்றது. இப்பெயரை வைத்து, இது ஈழத்து ஆதிக்குடிகளான நாகர் செறிந்து வாழ்ந்த பதி என்று கூறுகின்றனர் (Nirmala 2004:103). கீழைக்கரையின் மிகப்பழைமையான கண்ணகி வழிபாட்டு மையங்கள், தம்பிலுவில்லும் பட்டிமேடும். இவை இரண்டும் திருக்கோவிலுக்கு மிக அருகே உள்ள இடங்கள். இந்த இரு ஆலயங்களோடும் தொடர்புடைய நாட்டார் இலக்கியங்களில், கயிலையில் உமையின் அம்சமாக விளங்கிய “நாகமங்கலை” எனும் அணங்கு, கண்ணகியாக அவதரித்தாள் என்று சொல்லப்படுகிறது (கணபதிப்பிள்ளை 1971:67>99). இந்த இரண்டு தலங்களின் இலக்கியங்களிலுமே “நாகமங்கலை” என்ற பெயர் குறிப்பாக அழுத்திச் சொல்லப்படுவதன் மூலம், திருக்கோவில் பகுதி நாகர் வாழ்ந்த இடம் என்பதை ஓரளவு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

நாகமங்கலை எனும் நாகரின் தாய்த்தெய்வ வழிபாடு, பின்னாளில் அறிமுகமான பத்தினி வழிபாட்டுடன் இணைந்து, இன்றுள்ள தம்பிலுவில், பட்டிமேடு கண்ணகி ஆலயங்கள் உருவாகி இருக்கின்றன என்று இதை மேலும் விரித்துப் பார்க்கமுடியும்.  திருக்கோவிலின் அருகே அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு, சங்கமன்கண்டி ஆகிய இடங்களில் நாகர் தொடர்பான தொல்பொருட்சான்றுகள் அண்மையில் பேராசிரியர் பத்மநாதன் அவர்களால் வெளிப்படுத்தப்பட்டமை இங்கு இணைத்துப்பார்க்கத்தக்கது. 

தொல்பொருட் சான்றுகள்:

பழைய மன்னர் காலத்து நாணயங்களும், துருப்பிடித்த மணிமாலைகள், பதக்கங்கள், ஆபரணங்கள் என்பனவும், 2004 கடற்கோள் அனர்த்தத்துக்கு முன்பு, இவ்வாலய உள்வீதியில் இருந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை இக்கட்டுரையாளனால் நினைவுகூரமுடிகின்றது. இன்று அவை எவற்றையும் காணும் பாக்கியமோ, அவற்றின் மூலம் வரலாற்றைக் கட்டியெழுப்பும் தவப்பயனோ நமக்கு இல்லை. இதுபோலவே ஆலயத்தில் சேமிக்கப்பட்டிருந்த பல பெறுமதி வாய்ந்த ஆவணங்கள் காணாமல் போய்விட்டன. இவையொழிய தொல்பொருள் சான்றுகள் என்னும் போது திருக்கோவிலில் இன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இரண்டு  கல்வெட்டுக்களே எஞ்சியுள்ளன.

அக்கல்வெட்டுக்களில் ஒன்று, தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோவிலிலிருந்து இங்கு கொணர்ந்து நிறுவப்பட்ட தம்பிலுவில் கல்வெட்டு (Nevill 1885:04; இந்திரபாலா 1968:42). விசயவாகு தேவர் என்ற மன்னரின் பத்தாம் ஆட்சியாண்டில், சிவஞானசங்கரரின் கோவிலுக்கு, “வோவில்” கொடையளிக்கப்பட்ட செய்தியை அக்கல்வெட்டு சொல்கின்றது (பத்மநாதன் 2013:429-446). சில ஒல்லாந்து வரைபடங்கள் மூலம் “வோவில்” என்பது திருக்கோவிலுக்குத் தெற்கே இருந்த ஒரு பாரிய நீர்நிலை என்பதை அறியமுடிகின்றது (Nationaal Archief n.d). இக்கல்வெட்டின் படி, அக்குளமும் அதன் விவசாய உற்பத்தியும் திருக்கோவிலுக்கோ அல்லது அதன் அருகில் அமைந்திருந்த இன்னொரு கோவிலுக்கோ மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது. 

பூர்வ சரித்திரத்திலும், சங்கமண்கண்டி அருகே, இருபத்து நான்கு குளங்களை இணைத்து முப்பத்திரண்டு மதகுகள் வைத்து மனுநேயகயவாகுவால் அமைக்கப்பட்ட மாபெரும் ஏரி பற்றிய குறிப்பு வருவதை (நடராசா 1998:27-33கமலநாதன் கமலநாதன்  2005:15-19) நாம் அவதானிக்கலாம்.  அவ்விடத்தில் ஒன்றோடொன்று நீர்த்தொடர்பு கொண்டு இன்று காணப்படும் தாண்டியடிக்களப்பு – உமிரிக்களப்பு – முள்ளியடிக்களப்பு – கோரைக்களப்பு ஆகிய வாவிகளை, இந்த வோவில் ஏரியின் எச்சங்களாக இனங்காணலாம்.

இந்திரபாலா, பத்மநாதன் போன்ற வரலாற்றறிஞர்கள் தம்பிலுவில் கல்வெட்டைப் பொறித்த மன்னனை, கோட்டை மன்னன் ஆறாம் விஜயபாகு (1509 - 1521) என்று இனங்காணுகிறார்கள் (இந்திரபாலா 1968:42; பத்மநாதன் 2013:429-446). வரலாற்றுலகில் புகழ்பெற்ற “விஜயபாகு கொள்ளை” அல்லது “விஜயபாகு படுகொலை” என்ற சம்பவத்தில் மடிந்த மன்னன் இவன்.  எனவே, இக்கல்வெட்டு கி.பி 1519 இல் பொறிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் சில ஆய்வாளர்களின் கருத்துப்படி, கோட்டையின் விஜயபாகு ஆறாம் விஜயபாகு அல்ல, ஏழாம் விஜயபாகு ஆகின்றான் (Sivaratnam 1968:52; Mendis 1996:69). எனினும் இவனால் பொறிக்கப்பட்ட இன்னொரு கல்வெட்டு கொழும்பு அருங்காட்சியகத்தில் உள்ளமையாலும் (பத்மநாதன் 2013:429-446), இக்கல்வெட்டின் எழுத்தமைதி, 16ஆம் நூற்றாண்டுக்கு முந்தியதாக இருக்கமுடியாது என்பதை வரலாற்றறிஞர்கள் உறுதிப்படுத்துவதாலும், இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது 1519இலேயே என்று உறுதியாகச் சொல்லலாம்.

விசயவாகு தேவரைக் குறிப்பிடும் இன்னொரு கல்வெட்டு, முழுமையாக வாசிக்க முடியாத நிலையில் இங்கு காணப்படுகிறது. அது நாம் மேலே பார்த்த தம்பிலுவில் கல்வெட்டுக்குச் சமகாலத்தியது. இக்கல்வெட்டிலேயே “திருக்கோவில் சித்திரவேலாயுதர் ஆலயம்” என்ற பெயரை முதன்முதலாகத் தெளிவாகக் காணமுடிகின்றது. இக்கல்வெட்டின் இன்னொரு சிதைந்த வடிவத்தை சி.கணபதிப்பிள்ளை தன் நூலில் பதிவுசெய்துள்ளார். அதில்  ‘கிழக்கு கடல், மேற்கு கழிகாமமலை, தெற்கு அறுகமனப்பூமுனை, வடக்கு அன்பிலாந்துறை’ என்ற வரிகள் காணப்படுகின்றன (கணபதிப்பிள்ளை 1981:31-42). இதுதான் உண்மையான கல்வெட்டு வாசகமா, அல்லது தான் கேள்வியுற்ற வாய்மொழி மரபுரையொன்றை அவர் தன் நூலில் எழுதினாரா என்று உறுதிப்படுத்த முடியவில்லை. 
கோவில் கல்வெட்டுகளும் தூண்களும்

இவை இரண்டையும் விட, ஆலய வெளிவீதியில் மண்மூடிக் காணப்படும் பழைய திருச்சுற்று மதிலொன்றின் அத்திவாரம், மிகப்பழைமையான செங்கல் கட்டுமானமாகும். பழைமையான எழுத்து வரிவடிவங்களைக் கொண்ட உடைந்த சாசனங்களும் சிதைந்த கற்றூண்களும் இக்கோவில் வளாகத்தில் இன்றும் காணக்கிடைக்கின்றன. இவை எல்லாவற்றையும் முறைப்படி ஆய்வுக்குட்படுத்தும் போது, மேலும் பல தகவல்கள் பெறப்படலாம்.

திருக்கோவிலின் கருவறை விமானம் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று பல வரலாற்றறிஞர்கள் கருத்துக்கூறியுள்ளனர். போர்த்துக்கேயரிடமிருந்து தப்பிய பழைய கொக்கட்டிச்சோலை ஆலயமும், பொலனறுவை வானவன் மாதேவீச்சரமும் கிட்டத்தட்ட இதே விமான அமைப்பையே கொண்டிருப்பதைக் காணலாம். எனவே கற்றளி மண்டபங்கள் இடிக்கப்பட்டு ஆலயம் சூறையாடப்பட்டாலும் கருவறை இடிக்கப்படவில்லை என்று கொள்ளமுடியும். இதில் மேலதிக ஆய்வுகள் தேவை.

காலனியக் குறிப்புகள்:

காலனியக் குறிப்புகளில் திருக்கோவில் பற்றிக் குறிப்பிடும் மிகப்பழைய குறிப்பு ஒல்லாந்தருடையது. 1602ஆமாண்டு மே 30ஆம் திகதி,  மட்டக்களப்பு என்று தவறாக நினைத்து ஒரு முகத்துவாரத்துக்கு அருகே தங்கள் கப்பலைச் செலுத்தும் ஒல்லாந்தர்கள், அங்கு ஓர் ஆலயமும் கிராமமும் இருப்பதைக் காணுகிறார்கள். பின்பு அங்கிருந்து தாம்; மட்டக்களப்பை அடைய உதவும் அம்மக்களுக்கு ஒல்லாந்தர் கத்திகளை அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள். ஒல்லாந்தர் குறிப்பிடும் அந்த ஆலயம், திருக்கோவில் (Ferguson 1998:14-15).

ஒல்லாந்து வணிகரான ஜொகன்னஸ் வொன் ப்ரீ என்பவர்;, 1603 யூலை 13ஆம் திகதியிட்ட தன் நாட்குறிப்பில், முழுநிலவை அண்மித்து திருக்கோவிலில்  நடக்கும் திருவிழாவில் பெருமளவு மக்கள் பங்குபற்றுவதையும், மட்டக்களப்பு அரசனும் அங்கு செல்ல இருப்பதையும், அந்நாட்கள் தங்கள் வியாபாரத்துக்கு உகந்தவை அல்ல என்பதையும்  பதிவு செய்திருக்கிறார் (Ferguson 1998:112-113). இவர் சொல்வதை ஒட்டி,  1603இல் முழுநிலவு நாள், யூலை 23ஆம் திகதி வந்திருந்தது என்பதால், அப்போது திருக்கோவிலில் ஆடிப்பூரணையே விழாக்காலமாக இருந்திருக்கக்கூடும் என ஊகிக்கலாம். 

இவை இரண்டையும் அடுத்து, 1687இல் எழுதப்பட்ட போர்த்துக்கேய வரலாற்றாசிரியரான குவரோஸ் பாதிரியாரின் குறிப்புகளும் கவனிக்கத்தக்கவை.  அவர் திருக்கோவிலின் உண்மையான பெயர் “மூன்று கோவில்கள்” (திரி + கோவில்?) என்றும் அது அசவீடோவால் இடித்தழிக்கப்படும் வரை, இலங்கையின் புகழ்பெற்ற யாத்திரைத்தலமாக நிலவியது என்றும், அசவீடோ அக்கோவிலுக்குப் பொறுப்பாக இருந்த கணேசர்களைக் (?) கொன்று ஆலயத்தைச் சூறையாடியதால், மக்கள் இடப்பெயர்ந்து, அக்கோயிலும் சூழலும்; பாழடைந்துவிட்டதாகவும், இங்கு போல் யானைத்தந்தம், சாயவேர், தேன்மெழுகு, எலுமிச்சை, நெல் என்பன இலங்கையில் வேறெங்கும் சிறப்பாக விளைவதில்லை என்றும் பதிவுசெய்துள்ளார் (Queirós 1992:65). 

அவர் குறிப்பிடும் ஜெரோனிமோ டி அசவீடோ, இலங்கையின் போர்த்துக்கேய தளபதியாக கி.பி 1594 முதல் 1613 வரை பதவி வகித்தவன் (University of Ceylon  1948:282). ஜொகன்னசின்  திருக்கோவில் ஆடிவிழா சிறப்பாக இடம்பெற்ற 1603ஆம் ஆண்டுக் குறிப்போடு ஒப்பிட்டால், 1604 முதல் 1612இற்கு இடைப்பட்ட காலத்தில் தான் திருக்கோவில் போர்த்துக்கேயரல் இடிக்கப்பட்டிருக்கிறது என்று ஊகிக்கலாம். குவரோஸ் சந்தேகிப்பது போல, மூன்று கோவில்கள் அன்றி, சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த மூன்று கோபுரங்கள் சிதைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உண்டு.

திருக்கோவிலுக்காக குடியேறிய சங்கமக்குருக்களின் பரம்பரையினரான குருக்கள் குடியினர் தற்போது திருக்கோவிலுக்கு வடக்கே பன்னிரண்டு கி.மீ தொலைவிலுள்ள அக்கரைப்பற்றில் தான் பெரும் எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இவர்கள் தம்பட்டையிலிருந்து இடம்பெயர்ந்து அக்கரைப்பற்று சென்றதும், திருக்கோவிலின் ஊழியக்குலங்களான கலிங்க வெள்ளாளர் தம்பிலுவில்லுக்கு இடம்பெயர்ந்ததும் இந்த இடைப்பட்ட காலத்திலேயே இடம்பெற்றிருக்கவேண்டும். இதனாலேயே திருக்கோவில் சூறையாடப்பட்டு சுமார் 70 ஆண்டுகளின் பின், கோயிலும் சூழலும் பாழடைந்து கிடப்பதாக குவரோஸ் எழுதியிருக்கிறார்.

அடுத்த ஒரு நூறாண்டு காலத்துக்கு திருக்கோவில் பற்றிய எந்த வரலாற்றுத்தகவல்களும் சிக்கவில்லை. கண்டி மன்னர்களான இரண்டாம் இராஜசிங்கனும் அவனுக்குப்பிந்திய விமலதர்மன், நரேந்திரசிங்கன் போன்றோரும் மட்டக்களப்போடு கொண்டிருந்த உறவுகளுக்கு கண்ணகி இலக்கியங்கள் சான்றாவதால், அவர்கள் காலத்தில் தமிழகச்செட்டிகளின் உதவியுடன் திருக்கோவில் புனரமைக்கப்பட்டிருக்கிறது என்று கொள்ளமுடியும். இராசசிங்கனையும் நரேந்திரசிங்கனையும் புகழும் நரேந்திரசிங்கன் பள்ளு (ஐயர் 1940:41-45), தம்பிலுவில் கண்ணகி அம்மன் பள்ளு(31), தம்பிலுவில் மழைக்காவியம் (நவநாயகமூர்த்தி 1999:42-43) ஆகிய சிற்றிலக்கியங்கள் திருக்கோவில் பற்றியும் குறிப்பிடுவதால், இராசசிங்கன் (1635 - 1687)  மற்றும் நரேந்திரசிங்கன் (1707 - 1739)  காலத்தில் திருக்கோவில் அவர்களது மானியங்களைப் பெற்றிருக்கலாம் அல்லது, அவர்களுக்கு நன்கு அறிமுகமானதாக இருக்கலாம் என்பதற்குச் சான்றாகின்றன.

இனி, 1802ஆமாண்டு பிரித்தானிய ஆளுநர் பிரடரிக் நோர்த்தின் உதவியாளர் தோமஸ் கிறிஸ்டி திருக்கோணமலையிலிருந்து மாத்துறை நோக்கி கரையோரமாகப் பயணிக்கிறார். மே ஆறாம் திகதி, திருக்கோவிலுக்குத் தாங்கள் சென்றதையும், திருக்கோவிலின் புராதனமான விமானம் பற்றியும், ஆலயத்திலுள்ள சிற்பங்கள், தேர்கள், நடனமாதர் பற்றியும் அவர் தன் நாட்குறிப்பில் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் (Cordiner 1807:137)

திருக்கோவில் 1807ஆம் ஆண்டு மட்டக்களப்பு முதலியார் ஒருவரால் திருத்திக் குடமுழுக்குக் கண்;டதுடன், அங்கு கந்தபுராண படனம் நிகழ்த்துவதற்கான அனுமதியும் காலனிய அரசாங்கத்திடம் பெறப்பட்டிருக்கிறது (Vimala n.d). திருக்கோவிலின் அழகிய தேர்களும், மரத்தாலான மகாமண்டபமும் 1823 செப்டம்பர் 19இல் இடம்பெற்ற தீவிபத்தில் எரிந்து சாம்பலாகி விட்டன. அதற்குப் பின்னர், 1826 நவம்பர் ஆறாம் திகதி, திருக்கோவிலில் இன்னொரு குடமுழுக்கு இடம்பெற்ற குறிப்பைக் காணமுடிகின்றது. தீவிபத்தில் அழிந்துபோன மகாமண்டபம், 1851 ஒக்டோபர் 30ஆம் திகதி புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்டது (25). 

1803ஆமாண்டு அளவில் இக்கோயிலில் திருவேட்டைத் திருவிழா இடம்பெற்றிருக்கிறது என்பதற்கு அதேயாண்டில் எழுதிய ஓலைச்சுவடியொன்றில் காணப்படும் “திருவேட்டைக்கவி” பாடல்கள் சான்றாகின்றன. 1803இற்கும்  1820இற்கும் இடையே, வையாளிப்போடியார் என்பவர் இக்கோயிலின் நிலைமைப்போடியாக (தலைவராக) விளங்கிய காலத்தில், இங்கு கொள்ளையடிக்கப்பட்ட பெருமளவு செல்வம் மீட்கப்பட்டதை ஒரு ஓலைச்சுவடி அலங்கார அணிகளுடன் விவரிக்கின்றது (கணபதிப்பிள்ளை 1981:31-42). திருடப்பட்ட பொருட்கள் என்று அது பட்டியலிடும் ஆபரணங்களின் எண்ணிக்கையை நம்மால் முழுமையாக நம்பமுடியாது எனினும், மட்டக்களப்பின் முதற்பெரும் தேசத்துக்கோவிலான திருக்கோவில் போர்த்துக்கேயரால் கொள்ளையடிக்கப்பட்டு இருநூறாண்டுகளுக்குப் பின்பும், பெருமளவு செல்வங்களுடன் திகழ்ந்திருக்கிறது என்ற முடிவுக்கு நாம் வந்துசேர முடியும். 

1603 அளவில், ஆடிப்பூரணையே திருக்கோவிலின் உற்சவ காலமாக இருந்தது என்பதை ஒல்லாந்து வணிகரின் குறிப்பின் மூலம் அறிந்தோம். இடைப்பட்ட காலத்தில் கேதாரகௌரி - கந்தசஷ்டி விரத நாட்களும் உற்சவகாலமாக இருந்திருக்கிறது.  இதற்குச் சான்றாக, மட்டக்களப்பு எட்டுப்பகுதியும் கூடி, 1870 ஐப்பசி ஒன்பதாம் திகதி (1870.10.24) தேரோட்டம் நிகழ்த்தியதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள ஏட்டுக்குறிப்பைச் சொல்லலாம். பஞ்சாங்கத்தின் படி, அன்று ஐப்பசி அமாவாசை. அதாவது, தீபாவளிக்கு அடுத்த நாள். தற்போது ஆடி அமாவாசையே திருக்கோவிலின் தீர்த்தோற்சவ தினமாகக் காணப்படுகிறது.

திருக்கோவிலின் தலவிருட்சம் வெண்ணாவல் மரம். அதன் தீர்த்தமாக வங்கக்கடலே கொள்ளப்படுவதுடன்,  ஆடி அமாவாசையில் நீத்தார் வழிபாடும், சமுத்திர தீர்த்தோற்சவமும் மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. ஆலாத்திப்பெண்டான எண்பது வயது தங்கம்மைப் பாட்டி, ஏழு வயதுச் சிறுமியாக மாறி நின்றதையும், கிழக்குக்கரையையே புரட்டிப்போட்ட 2004 ஆழிப்பேரலை, கோவிலை வெறுமனே தழுவி வணங்கிச்சென்றதையும், இங்கிருக்கும் இறைவனின் அற்புதங்கள் என்று கூறி நெக்குருகுவார்கள் அடியவர்கள். வேண்டியதெல்லாம் அருளும் திருக்கோவில் சித்திரவேலாயுதனின் அருட்கோவில்,  2018 யூன் மாதம் இனிதே குடமுழுக்குக் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


உசாத்துணைகள்:

இந்திரபாலா, கா. (யூலை - அக்டோபர் 1968). "ஈழநாட்டுத் தமிழ்ச் சாசனங்கள்" கட்டுரை, சிந்தனை.
ஐயர், சதாசிவ. (1940). வசந்தன் கவித்திரட்டுகல்முனை:மட்டக்களப்பு தெற்கு ஆசிரியர் சங்கம்.
கணபதிப்பிள்ளை, க. (2000) முருக வழிபாடும் கதிர்காமப் பாதயாத்திரையும்,  கொழும்பு:பெ.கந்தக்குட்டி வெளியீடு.
கணபதிப்பிள்ளை, சி. (1971). மகாமாரித் தேவி திவ்விய கரணியாழ்ப்பாணம்:விவேகானந்தா அச்சகம்.
————. (1978). பத்தினி வழிபாடு, அட்டப்பள்ளம்.
————. (1981). பூர்வீக சப்த ஸ்தலங்கள், அட்டப்பள்ளம்.
கந்தையா, வீ.சீ. (பதி.) (1968). கண்ணகி வழக்குரை, காரைதீவு:இந்து சமய விருத்திச்சங்கம்.
————. (1983). மட்டக்களப்பு சைவக்கோவில்கள், பாகம் 1, மட்டக்களப்பு:பிரதேச அபிவிருத்தி, இந்து சமய, இந்து கலாசார, தமிழ் அலுவல்கள் அமைச்சு, 
கமலநாதன், சா.இ. கமலநாதன், கமலா. (2005). மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், கொழும்பு – சென்னை:குமரன் புத்தக இல்லம்.
கோபால், வெல்லவூர். (2005). மட்டக்களப்பு வரலாறு – ஒரு அறிமுகம்மட்டக்களப்பு:மனு வேதா வெளியீடு.
சகாதேவராஜா, வி.ரி. (2018.02.23). "திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய குடமுழுக்கு", அரங்கம், 1(4).
தட்சணாமூர்த்தி, சி. (1992). கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம், காரைதீவு.
நடராசா, எஃப்.எக்ஸ்.சி. (1998). மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்பு: மாவட்ட கலாசார பேரவை.
நவநாயகமூர்த்தி, நா. (1999), தம்பிலுவில் கண்ணகி வழிபாடு, பனங்காடு:வானதி வெளியீடு.
பத்மநாதன், சி. (2013). இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் II, கொழும்பு:இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
  • Cardiner, James. (1807). A Description of Ceylon containing an account of the country, inhabitants and natural productions, Volume II, London:Longman, Hurst, Rees, and Orme.
  • Ferguson, Donald. (1998).  The Earliest Dutch Visits to Ceylon, New Delhi:Asian Educational Services.
  • McGilvray, Dennis B. (2008). Crucible of Conflict: Tamil and Muslim Society on the East coast of Sri Lanka,  Durham (NC):Duke University Press.
  • Mendis, G.C. (1996). The Early History of Ceylon and Its Relations with India and Other Foreign Countries, New Delhi:Asian Educational Services.
  • Nevill, Hugh. (1885 September - October). The Taprobanian, Bombay:London Education Society’s Press.
  • Queirós, Fernão de, (1992). The Temporal and Spiritual Conquest of Ceylon, (S.G.Perera Trans.), Volume I,  New Delhi:Asian Educational Services.
  • Ramachandran, Nirmala. (2004). The Hindu Legacy to Sri Lanka, Pannipitiya:Stamford Lake (Pvt) Limited.
  • Sivaratnam, C.  (1968). The Tamils in early Ceylon, Colombo.
  • University of Ceylon, (1948), University of Ceylon Review, Volumes 6-8, University of Ceylon Publication, Colombo

வலைத்தளங்கள்:


இலங்கை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் கொழும்பில் இடம்பெற்ற மலேசிய திருமுருகன் திருவாக்கு பீடத்தின் நான்காவது அனைத்துலக முருக பக்தி மாநாட்டில் வெளியிடப்பட்ட "முருகு" சிறப்புமலரில் வெளியான கட்டுரையின் திருத்திய வடிவம். 
மேலும் வாசிக்க »

ஒரு பன்றியின் சிலையும் சில அக்கரை மாடுகளும்

0 comments


கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் தேரோட்டம்  கடந்த மாதம் இடம்பெற்றது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அக்கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழமை தான் என்றாலும், உற்சவத்தில் இதுவரை பங்குபற்றியதில்லை. இவ்வாண்டு எப்படியும் தவிர்ப்பதில்லை என்ற திட்டத்துடன் கடந்த செப்டம்பர் 27 வியாழக்கிழமை கோவிலுக்குப் புறப்பட்டேன்.

கோவிலுக்குள் நுழைந்ததுமே வாசலில் கம்பீரமாக நின்ற இரு தேர்களும் கவனத்தைக் கவர்ந்தன. அந்தத் தேர்களைப் பற்றி, ஆரையம்பதியைச் சேர்ந்த நண்பரும் ஆய்வாளருமான திரு.சொ.பிரசாத் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். பழைமைவாய்ந்த அத்தேர்களின் சிற்பங்கள் அறியாமையால் ஆண்டுக்காண்டு இழக்கப்பட்டு வருகின்றன என்பதையும், அந்தச் சிற்பங்களை ஆவணப்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தார். கொக்கட்டிச்சோலைத் தேர்களிலுள்ள சிற்பங்கள் பற்றி, ஆலயத்தின் 1998 குடமுழுக்கின் போது வெளியான சிறப்பு மலரான “தேரோட்டத்தில்”  கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலைவாணி கந்தசாமியால் எழுதப்பட்ட அருமையான கட்டுரையையும் முன்பு படித்திருந்தேன்.  எனவே ஆர்வம் தூண்ட தேர்களை நெருங்கி அவதானிக்கத் தொடங்கினேன்.

முதலில் பிள்ளையார் தேரை நெருங்கிப் பார்த்தேன். இப்போது தேரிலுள்ள வேலைப்பாடுகள் பல எளிமையானவை, கலை நுணுக்கங்கள் குறைவானவை.  தேரின் பழைய சிற்பங்களின் கதி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.  குடமுழுக்கு மலரில் வெளியான கட்டுரைக்கும் தேரிலுள்ள சிற்பங்களுக்குமிடையே நிறைய வேறுபாடுகள் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. சித்திரத்தேர் என்று அழைக்கப்படும் பெரிய தேரை நெருங்கினேன். கைபேசி வெளிச்சத்தில் கண்ட முதலாவது சிற்பமே அதிர்ச்சியை ஊட்டியது. சைவநெறியில் மிக அரிதாகக் கூறப்படும் சிவ வடிவம் அது. சிவனின் வராக அவதாரம்!
கொக்கட்டிச்சோலைத் தேர் சிவ வராகர்!

பாடசாலையில் சைவநெறி படித்த எல்லாருக்குமே "சிவபெருமான் பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்த கதை" தெரியும். வேடன் தாய்ப்பன்றியைக் கொன்றுவிட, அதன் குட்டிகள் பசியில் அழுவதைக் கண்டு இரங்கி ஈசன் தாய்ப்பன்றி உருவில் வந்து பால்கொடுக்கின்றான்.  சிவனின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் ஒன்றாகப் பதிவான கதை இது.  மணிவாசகரும் இச்சம்பவத்தை "ஏனக்குருளைக்கருளினை போற்றி" (ஏனம் + குருளை =  பன்றி +குட்டி) என்று போற்றித்திருவகவலில் பாடியிருக்கிறார். இந்தக்கதை, சைவமரபில் இறைவன் தாயுமானவன் என்பதையும், அவன் அளப்பருங்கருணையையும் சுட்டிக்காட்டச் சொல்லப்படும் இரண்டு கதைகளில் ஒன்று.  (மற்றையது, ஏழைக் கர்ப்பிணி ஒருத்திக்கு ஈசனே அவளது தாயின் வடிவில் வந்து பிரசவம் பார்த்த கதை). 


திருப்பரங்குன்றத்து சிவவராகர்.
 
சிவனின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் ஒன்றாகச் சொல்லப்படும் இக்கதை, மிக அரிதாகவே சிவாலயங்களில் இடம் பிடித்திருக்கிறது. பாண்டிய நாட்டு மதுரையிலும் திருப்பரங்குன்றத்திலும் உள்ள "ஏனக்குருளைக்கருளி" சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. அறியாமையால் இவை தற்போது ‘வராகி அம்மன்' என்று பக்தர்களால் வழிபடப்படுகின்றன. இந்த வடிவில், திருமாலின் வராக அவதாரம் போல,  மாந்தவுருவகப் பன்றியாக (anthropomorphic) ஈசன் சித்தரிக்கப்படுவதே சிறப்பு. கொக்கட்டிச்சோலையிலுள்ள இந்த வடிவமும் பன்றி முகமும் மனித உடலும் கொண்டிருந்தது. நான்கு கரங்கள். முன்னிரு கரங்களும் பன்றிக்குட்டிகளை அணைத்துப் பாலூட்ட, பின்னிரு கைகளும் மானும் மழுவும் தாங்கியிருந்தன. இந்த வகையிலுள்ள அரிதான சிற்பம் இலங்கையில் வேறெங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை.


இருளில் சரிவரத் தெரியாவிட்டாலும் தேரைச் சுற்றிவந்த போது, திருமாலின் தசாவதாரச் சிற்பங்கள்,  முப்புரம் எரித்தான், ஆனையுரி போர்த்தான், மாதொருபாகன், வீரபத்திரன், முதலான சிவனின்  சிற்பங்கள். தேவியின் பல வடிவங்கள் தென்பட்டன.  எல்லாமே இணையத்தில் கண்டு வியந்த தமிழகத்தின் பல அரிய சிற்பங்களை ஒத்தவை. 

தான்தோன்றீச்சரத்தின் தேர்கள் மிகப்பழையவை. குறைந்தது முந்நூறு நானூறு ஆண்டுகள் பழைமையானவையாக இருக்கவேண்டும். “சிலோன் கசெற்றியர்” எனும் புகழ்பெற்ற நூலை 1834இல் எழுதிய சைமன் காசிச்செட்டி,  “கொக்கட்டிச்சோலை ஸ்கந்தன் கோவில்” என்று குறிப்பிட்டு அந்நூலில் தான்தோன்றீச்சரம் பற்றி எழுதியுள்ளார். அக்குறிப்பில் இங்கு நிகழும் தேரோட்டம் பற்றிய விவரணமும் வருகின்றது. "புல்லுண்ட கல் நந்தி" கதை மூலம், தான்தோன்றீச்சரம் போர்த்துக்கேயரால் இடிக்கப்படவில்லை என்பது வாய்மொழியில் பதியப்பட்டுள்ளதால் அத்தேர்கள் மேலும் பழைமையானவையாகவும் இருக்கலாம். அங்கு முன்பு மூன்று தேர்கள் இருந்தனவென்றும், ஒன்று தானாகவே ஓடி மட்டக்களப்பு வாவியில் வீழ்ந்து மறைந்தது என்றும் சொல்லி, கோவிலின் அருகே வாவியில் இருக்கும் "தேர் தாண்ட பள்ளம்" எனும் பகுதியை சுட்டிக்காட்டுகிறார்கள்.  

கிழக்கில் தனது உற்சவ காலம் “தேரோட்டம்” என்று அறியப்படும் பெருமையைப் படைத்தது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஒன்றே. ஆனால் அந்தப் பெருமைக்குக் காரணமான இரு தேர்களும் இன்று நம் கண் முன்னே சிதைந்து வருகின்றன. பிள்ளையாரும் முருகனும் பவனி வரும் "பிள்ளையார் தேரில்" இப்போது பெருமளவு பழைய சிற்பங்கள் இல்லை.  சித்திரத் தேரும் அவ்வாறே. கவனிப்பின்மையால் செல்லரித்து உதிர்ந்து கொண்டிருப்பவை அதிகம். 


சிற்பக்கலை மனிதகுலம் கண்டுகொண்ட மகத்தான உன்னதங்களில் ஒன்று. அது தனியே ஒரு சமயத்துக்கோ இனத்துக்கோ சொந்தமானது அல்ல. அரிதான மரச்சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ள இத்தேரின் பாகங்கள், சைவம் தாண்டி, தமிழினம் தாண்டி காலமுள்ள வரை காப்பாற்றப்பட வேண்டியவை. அதிலும் கோணேச்சரம், கேதீச்சரம், நல்லூர், தேனவரை நாயனார் கோவில், திருக்கோவில் முதலான கலைப்பொக்கிஷங்களை அந்நியர் ஆக்கிரமிப்பில் இழந்து நிற்கும் நாம், எஞ்சியிருக்கும் இது போன்ற  கலைச்செல்வங்களை நம் அறியாமையாலோ கவனயீனத்தாலோ இழந்துவிடக்கூடாது.


எனக்குத் தெரிந்த பலர், பெருமையாகத் தமிழகத்துக்கு சுற்றுலா சென்று மாமல்லபுரம், தஞ்சை, மதுரை என்று சுற்றிவந்து இன்ஸ்ராகிராமிலும் பேஸ்புக்கிலும்  புகைப்படம் போட்டிருப்பார்கள். என்ன பார்த்தாய் என்று கேட்டால் பதில், "சும்ம கோவிலுகள் தான். அங்க ஒண்டும் இல்ல!". இருப்பது எப்படித் தெரியும்? சிற்பங்களைத் திருடி வெள்ளைக்காரனுக்கு விற்று கோடி கோடியாக உழைக்கிறார்கள் என்று செய்தி வாசிக்கும் போது மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்கள் தானே நாம்?  தமிழகத்தில் கூட அரிதான ஏனக்குருளைக்கருளி சிற்பம், இந்த ஈழமண்ணிலே, நமக்கு மிக அருகிலே ஒரு கோவிலில் இருக்கிறது என்பதும், இலங்கையின் மிகப்பழைய சிற்ப வடிவங்களில் சிலவற்றை நம்மூர்க் கோவிலொன்றின் தேரில் கண்டு மெய்சிலிர்க்க முடியும் என்பதும் தெரியாத நமக்கு, "தெரிந்து என்ன ஆகப்போகிறது?" என்று கேட்கும் நமக்கு, கலைச்செல்வங்களின் பெறுமதி எங்கே புரியப்போகிறது? 

ஆற அமர சிற்பங்களை இரசிக்கும் அளவுக்கு நேரம் இருக்கவில்லை. நடுங்கும் கரங்களால் சிவப்பன்றியைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தேன். “எல்லாரும் வித்தியாசமா பாக்கிறாங்கள், கெதியா வாங்க அத்தான்” என்று முணுமுணுத்தபடியே அருகில் நின்ற மைத்துனனுக்கு கைபேசியில் அழைப்பு. கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த அவனது நண்பனொருவன் "என்னடா, தேர் எண்ட ஒண்ட இப்ப தான் முதமுதலா பாக்கிறேலாக்கும்" என்று கேட்டான். நான் போவோம் என்று கையசைத்தபடியே பெருமூச்சு விட்டபடி கிளம்பினேன். பின்புறம் இரண்டு தேர்களும் என்னை விட்டு வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன.


(அரங்கம் பத்திரிகையின் 2018.10.26 இதழில் வெளியான கட்டுரை)

மேலும் வாசிக்க »

விகடனும் தவ்வையும்

0 comments


அன்னை தவ்வை, 
காஞ்சி கைலாசநாதர் கோவில் சிற்பம்.

"புலமைச்சொத்து" (Intellectual Property) பற்றிய அறிமுகமோ, விழிப்புணர்வோ நம் சமூகத்தில் அவ்வளவாக இல்லை. அதுவும் சமகால சமூக வலைத்தள யுகத்தில் "லைக் வாங்குவது, பெயர் வாங்குவது" என்பது ஒரு மனநோயாகிவிட்ட நிலையில், யாரோ ஒருவன் மணிக்கணக்கில் குந்தியிருந்து தன் பொழுதைச் செலவழித்து எழுதித்தள்ளும் ஏதோ ஒன்றை, "நன்றி:இன்னார்" என்று கூடக் குறிப்பிடாமல் இலகுவாகக் "கொப்பி - பேஸ்ட்" செய்து, எத்தனை விருப்பங்கள் வந்திருக்கின்றது என்று பார்க்கும் பேர்வழிகளே அதிகம். அது புலமைத்திருட்டு என்ற குற்றவுணர்வோ, யாரோ ஒருவன் உழைப்பை உறிஞ்சி உண்பதற்குச் சமன் என்ற மனக்கிலேசமோ அத்தகைய யாருக்குமே இருப்பதில்லை.

இப்படி "வெட்டி -ஒட்டி" லைக்கை எண்ணுவது, பெயர் தேடுவது ஒருவகைப் புலமைத்திருட்டு என்றால், ஒரு ஆக்கமொன்றை வரிக்கு வரி நுணுகிப் படித்து, சொற்களை மட்டும் முன்பின் மாற்றி இன்னொரு ஆக்கமொன்றை படைப்பது மிகநுண்மையான புலமைத்திருட்டு.

விகடனின் இந்தக்  கட்டுரையிலுள்ள ஒவ்வொரு பந்தியையும், "உவங்கள்" முதல் இதழில் வெளியான "தமிழரும் தவ்வை வழிபாடும்" கட்டுரையின் ஒவ்வொரு பந்தியையும் அடுத்தடுத்த தாவலில் திறந்து படித்துப் பாருங்கள். இத்தனை வெளிப்படையாகக்கூட புலமைத்திருட்டைச் செய்யமுடியுமா? (நடுவே "பட உதவி: விக்கிப்பீடியா" என்று குறிப்பிட்டிருந்தார்கள். விழுந்து விழுந்து சிரித்தேன்.  )


சரி விடு, ஓரிரு இடங்களிலாவது புதிதாய் ஒன்றிரண்டைச் சேர்த்திருக்கிறார்களே என்று திருப்திப்பட எண்ணினால், அக்கட்டுரையிலும் பொறுமையிழந்த இடமொன்று இருந்தது. நதித்தெய்வங்களைக் குறிக்க "நீரரமகளிர்" (நீர்+அரமகளிர் = தண்ணீர்த் தெய்வப்பெண்கள்) என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியிருந்தேன். மட்டக்களப்பு வாவியின் பாடும் மீன்மகளை உருவகிக்க, ஐயன் விபுலானந்தன் பயன்படுத்திய பழந்தமிழ்ச் சொல் அது. தட்டச்சுப்பிழையால் "நீரா மகளிர்" என்றாகியிருந்தது. "அச்சொல்லுக்குப் பொருளுண்டா?" என்பதை நொடி கூட சிந்தியாது அப்படியே எடுத்தாண்டுள்ள அந்தக் கட்டுரையாளரின் ஊடக அறத்தை என்ன சொல்லி மெச்சுவது? 

உவங்களில் பிரசுரமான ஆக்கம், உண்மையில், 2013இல், கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் விழா மலருக்காக எழுதிய கட்டுரையொன்றின் திருத்திய வடிவம். இரண்டு இரவுகள் இணையத்தில் தரவுகளைச் சேகரித்து அதை எழுதினேன். அதை எழுதிய இரவுகளில் வேறு காரணங்களால் நான் அனுபவித்துக்கொண்டிருந்த மன அழுத்தம், நான் மட்டுமே அறிந்தது.

இன்றைய திறமூல (Open source) உலகில், சிந்தனைகளைப் புதிதாகக் கண்டடைபவனையோ, தொகுத்துச் சொல்பவனையோ அறிஞனாகக் கொண்டாடுங்கள் என்றெல்லாம் கெஞ்சவில்லை. குறைந்த பட்சம், அவனது அந்த உழைப்புக்கு - அவன் செலவழித்த மணித்துளிகளுக்கு மரியாதை கொடுங்கள். அது போதும். 
மேலும் வாசிக்க »

சபரிமலைத் தீர்ப்பு - ஒரு சமூகவியல் பார்வை

0 comments
கடந்த ஒருமாத காலத்தில் இந்திய உச்சநீதிமன்றம் மரபுவாதிகளைக் கொந்தளிக்கச் செய்யும் சர்ச்சைக்குரிய மூன்று தீர்ப்புகளை வழங்கியிருந்தது. மூன்றுமே பாலினம், பாலியல்  தொடர்பானவை. முதலாவது, ஒருபாலுறவு குற்றம் அல்ல. இரண்டாவது, திருமணத்துக்கு அப்பாலான கரவுத்தொடர்புகள் குற்றம் அல்ல. மூன்றாவது, சபரிமலைக்குள் பெண்கள் நுழைவதற்கு எவ்வித தடையும் இல்லை.
சபரிமலை ஐயப்பன் கோவில்.
  
முதல் இரு தீர்ப்புகளைப் பொறுத்தவரை, அவை மறைமுகமாகவோ சிறிய அளவிலோ ஏற்கனவே நம் சமூகத்தில் வழக்கில் இருந்து வந்தன. புராணங்களில் பாலினச்சிறுபான்மையினர் பற்றிய குறிப்பு எதுவும் தெளிவாக இல்லை. என்றாலும், ஆண் பெண்ணாக மாறுவது (மோகினி,  இளை), பெண் ஆணாக மாறுவது (சிகண்டி), திருநங்கைகள் (பிருகன்னளை) பற்றிய குறிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கின்றன. பத்தாம் நூற்றாண்டு கஜூராகோ கலவிச்சிற்பங்களிடையே ஆண்-ஆண் கலவியும், பெண்-பெண் கலவியும் சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். திருமணத்துக்கு அப்பாலான உறவுகளுக்கு ஆதாரமாக நூற்றுக்கணக்கான புராண - இதிகாசக் கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. 

இதெல்லாம் ஏன் இன்று குற்ற உணர்வுடனும், ஒவ்வாமையுடனும் பார்க்கப்படுகின்றன? ஏனென்றால் இவை இன்றைய சமூக விழுமியங்களுக்கு அந்நியமானவை; பொருத்தமற்றவை. ஆனால் ஏதோ ஒரு காலத்தில், அவை நம் இதே சமூகத்தின் பண்பாட்டில் தவிர்க்கமுடியாத அம்சங்களாக நிலவியிருந்திருக்கும். இதில் மரபுவாதிகள் அஞ்சுவதற்கு எதுவுமே இல்லை.  காலத்திற்கேற்றால் போல் ஒவ்வொன்றும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒன்று இன்று தவிர்க்கப்படுகிறது என்பதற்காக, அது என்றுமே தவிர்க்கப்பட்டது, தவிர்க்கப்படவேண்டும் என்று அர்த்தம் இல்லை.  எதையும் காலமே தீர்மானிக்கிறது. இந்தத் தீர்ப்புகள் நடைமுறையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ஆனால், சபரிமலை தொடர்பான மூன்றாம் தீர்ப்பு விடயத்தில் எனக்கு கருத்து மாறுபாடு உண்டு. அதற்கு முன்பு ஒன்றைச் சொல்லவேண்டும். நான் சைவம் மீது பற்றுள்ளவன் என்ற வரையில் ஐயனை நேசிப்பவன். எனவே, சிவாகமப் புறம்பான ஐயப்ப வழிபாட்டில் ஆர்வமற்றவன். தலயாத்திரைக்கென நூற்றுக்கணக்கான தலங்களை தமிழ்ச்சைவர் பண்டுதொட்டே கொண்டிருக்கையில், நவீன ஊடக மற்றும் அரசியல் காரணங்களால் ஊக்குவிக்கப்படும் ஐயப்ப வழிபாடு மீது தனிப்பட்ட விமர்சனங்களும் உண்டு. 

ஆனால் இன்னொரு புறம்  ஐயப்ப பக்தர்கள் மீது பெருமதிப்பும் ஏற்பட்டு வருகிறது. கார்த்திகை மாதமானாலே இங்கு இலங்கையில் கூட கறுப்பாடைகளில் சுற்றிவரும் ஐயப்பன் அடியார்களைக் காண்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இளைஞர்கள். ஏனைய நாட்களில் குடி, புகை, கலாட்டா என்று வாழ்க்கையைக் கழிப்பவர்கள். ஆனால், ஐயப்ப விரத காலம் முழுவதும் அவர்களில் வந்து கூடும் அமைதியைக் கண்டால் வியப்பு ஏற்படும்.

சபரிமலை 2010 யாத்திரைக்காலத்தில்

இடையே நீங்கள் ஒரு குறுக்குக் கேள்வி கேட்கலாம். நாளெல்லாம் ரவுடித்தனம் செய்துவிட்டு நாற்பத்தெட்டு நாள் மட்டும் மாலை போட்டு நல்லவனுக்கு நடித்தால் போதுமா? நிச்சயம் போதும். அதற்குப் பெயர் பயிற்சி. சமயத்தின் பெயரில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் மரக்கறி உணவு உண்டு, ஏனைய நாட்களில் மாமிசம் உண்டு பம்மாத்து காட்டுகிறீர்களே, அதனால் என்ன பயன்  என்று உங்களில் சிலர் கேட்கும் மொண்ணைத்தனமான கேள்விக்கும் பதில் இது தான். பயிற்சி.

பரமசாதுவான பிள்ளைப்பூச்சி ஒருவன் அமைதியாக இருந்தால் யாராவது வியப்படைவீர்களா?  ஒரு பிராமணன் மரக்கறி உணவை உண்டால் பார்த்து ஆச்சரியம் அடைவீர்களா? இல்லை, ஏனென்றால் அது இயல்பு. அமைதியானவனால் அமைதியாக இருப்பதோ, தொடர்ந்து மரக்கறி உணவை உண்பவன் அதே உணவை உண்பதோ கடினமான செயல் அல்ல. ஆனால் பயங்கர அட்டகாசம் செய்யும் ஒருவன் ஐந்தாறு நாள் அமைதியாக இருக்கிறான் என்றால், மாமிசம் தவிர வேறேதும் உண்ணாத ஒருவன் ஏழெட்டு நாள் அந்தப் பக்கம் தலைவைத்தும் படுக்காமல் இருக்கிறான் என்றால் ஊரே வாயில் விரல் வைக்கும். "அதெப்படி, சாத்தியமே இல்லையே?" என்று தானே நாம் கேட்போம்?

வாரத்துக்கொருநாள் மரக்கறி வழக்கத்தில் நான் காண்பது இதைத்தான். அசைவப்பிரியர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் அந்த ஒரு நாள் அதை முற்றாகத் துறந்து வாழ்கிறார்கள். அல்லது வாழ முயல்கிறார்கள். "வாரத்துக்கொரு நாள்" என்று விதியைப் போட்டு அன்று மட்டுமாவது மாமிசம் ஒறுத்து வாழமுயல்வது. முடியாவிட்டால் அடுத்தமுறை முயல்வது. இது மெல்ல மெல்ல, வாரத்துக்கு இரண்டு நாள், மூன்று நாள், நாளுக்கு ஒரு வேளை என்று அதிகரித்து இறுதியில் முற்றிலும் புலால் மறுத்தோராக வாழ்வதற்கான பயிற்சியை வழங்கும். ஐயப்ப விரதம் என்பதும் அதே கதை தான். முரடர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுகிறார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் ஆறு வாரங்கள்! இன்று அவர்கள் எப்படி என்றாலும் என்றோ ஒருநாள் அவர்கள் சீர்திருந்துவார்கள். அந்த விரதம், அந்தப் பயிற்சி, அவர்களை சீர்திருந்த வைக்கும்.

சரி, மீண்டும் சபரிமலை விடயத்துக்கு வருவோம். இன்றைய நவீன உலகில் மதத்தின் பெயரில் பாலினப் பாகுபாடு காட்டுவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளத் தகாததே. சபரிமலையில் பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பு அந்த விதத்தில் வரவேற்கத்தக்கது. ஆனால், பொதுச்சமூக மனப்பான்மையில் இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும்?

உண்மையில் சபரிமலையில் பெண்கள் நுழைவது தடை என்பது மேம்போக்கான குற்றச்சாட்டு. பருவமடைந்ததிலிருந்து விலக்குநிறுத்தம் (Menopause) வரையான காலப்பகுதி மட்டுமே அங்கு பெண்கள் நுழைய முடியாது. பெண்குழந்தைகளும் முதிய பெண்டிரும் இன்றும் அங்கு வழிபட்டு வருகிறார்கள். ஐயப்பன் மணவொறுப்பு (பிரமச்சர்யம்) கைக்கொண்ட தெய்வம் என்பது அதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு, ஆணையோ, பெண்ணையோ தன் வழிபாட்டுக்கு அனுமதிக்காத தெய்வங்கள் இன்றும் நிறைய உண்டு. சபரிமலை அமைந்துள்ள அதே கேரளத்தின் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் அவர்களில் குறிப்பிடத்தக்கவள். அவள் உண்மையில் கண்ணகி. ஆண்குலத்தால் வஞ்சிக்கப்பட்ட அன்னைத்தெய்வமொன்றின் கடுங்கோபத்துடன் அங்கு வீற்றிருக்கிறாள். மாசி மாதம் அங்கு இடம்பெறும் பொங்காலா வைபவத்தில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. ஆண்கள் கோவில் வளாகத்தில் என்ன, ஊருக்குள்ளே கூட நுழைய முடியாது. அதுவே அங்கு விதி. அது ஆணின் எந்த உரிமையையும் பறிக்கவில்லை. அதில் -  அந்த நம்பிக்கையில் பாலினப்பாகுபாடு, பாலினச்சமத்துவம் என்றெல்லாம் புரட்சி பேசிக்கொண்டு ஆண்கள் உள்நுழைந்தால் அந்தக் குறியீடு, அந்தப் படிமம் என்ன ஆவது?
ஆற்றுக்கால் பொங்காலா -  பெண்களாலான உலகு.

இன்றும் கிழக்கிலங்கையின் சில கிராமங்களில் கண்ணகிக்குக் கொம்புமுறிக்கும் போது அப்பகுதியில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கொம்புமுறி மழை வேண்டி நிகழும் ஒரு வளச்சடங்கு. ஆணும் பெண்ணும் பத்தியம் காத்து பிள்ளை பெறுவது போல் வானாகிய தந்தைத் தெய்வமும் மண்ணாகிய அன்னைத் தெய்வமும்  ஊடல் முறிந்து கலவி கொள்ளவேண்டும்; மழை எனும் உயிர்த்துளிகளை மண் அன்னை மீது வான் தந்தை பொழியவேண்டும் என்பதே கொம்புமுறியின் மானுடவியல் நோக்கு. கொம்புச்சந்தி ஆண்களால் மட்டுமே ஆனது. பாலியல் கிளர்ச்சியூட்டும் பாடல்களும், ஆபாச வார்த்தைகளும் அங்கு சர்வசாதாரணம். ஆனால், கொம்புமுறி என்பது மழைவேண்டி பத்தியம் காக்கும் ஒரு விரதம். எனவே பெண்கள் விலக்கப்படுகிறார்கள். கொம்புமுறியின் இறுதி நாட்களில் அவர்கள் அங்கு வரலாம். ஊடல் தவிர்ந்து தத்தம் ஆடவருடன் கூடல் கொள்ளலாம். வெளியே மழைத்துளிகள் பெருகும்; வீடுகளில் உயிர்த்துளிகள் பெருகும். 

தமிழகத்தின் சில ஔவையாரம்மன் கோவில்களில் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. குமரிப் பகுதியில் பெண்கள் ஆடி மாதம் கடைப்பிடிக்கும் அவ்வை நோன்பைப் பார்க்கவோ கலந்துகொள்ளவோ ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வடநாட்டின் கார்த்திகேய மந்திர்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை. "ஆண்வாடை" பிடிக்காமல் காட்டிலும் ஊர் ஒதுக்குப்புறத்திலும் போய் அமர்ந்துகொண்ட காளிகள், பேச்சிகள் பற்றிய கதைகளை இன்றும் கிராமப்புறங்களில் கேட்கலாம். இதெல்லாம் அந்தந்தத் தெய்வங்கள், அவை சார்ந்த தொன்மங்கள் உருவாக்கி வைத்திருக்கும் குறியீடுகள், படிமங்கள். அவற்றை மறுதலிப்பது என்பது அந்தத் தெய்வத்தின் தனித்துவத்தை இல்லாமல் செய்கின்ற காரியங்கள். தெய்வத்துக்கு அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை. பாதிப்பு என்னவோ அவற்றை வழிபடுகின்ற பாமர மக்களுக்குத் தான்.  

சபரிமலை ஐயப்பன் கோவில், உண்மையில் ஒரு ஐயனார் கோவிலே. கேரளத்து தாந்திரீக வழிபாட்டு நடைமுறை மாற்றங்களால் அது ஐயப்பனை தனித்துவமான தெய்வமாக மாற்றிக்கொண்டது.  1940களுக்குப் பின்பு திரைப்படங்கள், வெகுசன ஊடகங்கள் கொடுத்த விளம்பரங்கள் என்பன காரணமாக யாத்திரைத் தலமாகப் புகழ்பெறத் தொடங்கியது. ஆயினும் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள மரபின் படி, அந்த இறைவன் மணவொறுப்பு நோன்பு கொண்டவன். எனவே அவனைப் பெண்கள் நெருங்கக்கூடாது. அவனை வழிபடும் அடியவர்களும் மணவொறுப்பும் கடுமையான விரதங்களும் மேற்கொண்டே அவனைத் தரிசிக்கச் செல்லவேண்டும்.  

கேரளத்தின் பழைய ஐயன் கோவில்கள் பல இன்று ஐயப்பன் கோவில்களாகவே அடையாளம் காணப்படுகின்றன. எனினும் அங்குள்ள மூலவர்கள் "தர்மசாஸ்தா" என்ற பெயரில் தம் பழைய ஐயன் அடையாளத்தை எஞ்சவைத்திருக்கிறார்கள். (சாஸ்தா என்பது ஐயனின் "சாத்தன்" எனும் பெயரின் வடமொழி மரூஉ.) குளத்துப்புழாவில் வீற்றிருக்கும் தர்மசாஸ்தா பாலகன். அதே போல், அச்சன்கோவில் எனும் தலத்தில், பூரணை, புஷ்கலை எனும் இரு தேவியருடன் வீற்றிருக்கும் தர்மசாஸ்தா  மணக்கோலநாதன். அங்கெல்லாம் பெண்கள் சென்று வழிபடத் தடையில்லை. ஆனால், சபரிமலை போல்  தர்மசாஸ்தா மணவொறுப்பு நோன்பு மேற்கொண்டுள்ள ஆரியங்காவு தர்மசாஸ்தா கோவிலிலும் பத்து முதல் ஐம்பது வரையான வயதுள்ள பெண்கள் உள்நுழைய முடியாது.

ஆணும் பெண்ணும் ஒருவர் இன்னொருவருக்கு கீழடங்குபவர் அல்லர். ஒருவரை ஒருவர் நிரப்புவதாலேயே ஒருவருக்கொருவர் சமனானவர், ஒருவர் இன்னொருவர் மீது ஆதிக்கம் செலுத்தமுடியாதவர்.  மற்றும்படி, ஆண் ஆண் தான்; பெண் பெண் தான்.  அதற்கு மேல் இயற்கையாலோ அறிவியலாலோ வேறெந்த விதத்திலும் அந்தச் சமத்துவத்தை நிரூபிக்கமுடியாது என்பதே உண்மை.   இந்த விடயத்தில் பெண்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்படவும் இல்லை. இன்றும் பெண்கள் உலாவும் ஐயப்ப அடியவர்கள் பலரது வீடுகளில் ஐயப்பனின் உருவப்படம் வைத்து வழிபடப்படுகிறது. ஐயப்பன் பெயரில் தமிழகத்திலும் இலங்கையிலும் உருவாகியுள்ள ஓரிரு ஆலயங்களிலும் பெண்கள் சாதாரணமாகத் தான் சென்று வருகிறார்கள். 

குறிப்பிட்ட பாலினத்தவர் குறித்த தெய்வத்தின் கோவிலுக்குள் நுழையமுடியாது, நுழையக்கூடாது என்பது மிகத்தொன்மையான நாட்டார் நம்பிக்கை. ஆண்மை, பெண்மை சார்ந்த சிக்கலான மானுட உறவுகள் மோதும் சமர்க்களங்கள் அவை. அவற்றின் குறியீட்டு அழகியலை இரசிக்கலாமே தவிர,  பாலினச்சமத்துவம் முதலான நவீனக்கொள்கைகளை அங்கு திணிப்பது அர்த்தமற்றது. அப்படி, பாலினச்சமத்துவம் தான் நோக்கம் என்றால் அதேபோல் பெண்கள் 'ஒடுக்கப்படும்'  ஆரியங்காவு மீதோ, ஆண்கள் 'ஒடுக்கப்படும்' ஆற்றுக்கால் மீதோ ஏன் இத்தகைய நீதிமன்ற வழக்குத்தாக்கல்கள் செய்யப்படவில்லை? சிக்கல், சபரிமலை ஒரு சுற்றுலாத்தலம் போல் மாறிவிட்டது என்பது தான். அந்தக் கொண்டாட்ட மனநிலையை, சிலர் பெண் என்ற ஒரே காரணத்தால் ஏன் அனுபவிக்கக்கூடாது என்று கேட்கும் அறியாமை.

காலவோட்டத்தில் இத்தகைய நம்பிக்கைகள் இயல்பாக மாற்றமடைய வாய்ப்புகள் அதிகம். ஐயப்பனை மணமுடிக்கக் காத்திருக்கும் மஞ்சள்மாதாவின் வேண்டுகோள் ஐயனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற தொன்மத்தை ஏற்றி அதை நிகழ்த்திக்காட்டவும் முடியும். அப்படி இயல்பாக நிகழும் போதே அதை சமூகக்கூட்டுமனம் ஏற்றுக்கொள்ளும். அதை விடுத்து, இப்படி சட்டம் போட்டு  நம்பிக்கையைச் சீண்டுவதை, தன் அடிவயிற்றில் கைவைப்பதாகவே அடியவன் ஒருவன் உணர்வான். அதன் விளைவுகள் விரும்பக்கூடியவை அல்ல. ஐயனுக்கு நீதிமன்று தீர்ப்பளித்து விட்டது. மாளிகைபுரத்தம்மைக்கு அவன் தீர்ப்பு என்ன?

ஐயப்பனுக்காக காத்திருக்கும் மாளிகைபுரத்தம்மை 



மேலும் வாசிக்க »

இலங்கைத் தமிழ் அடையாளமும் சைவமும்

0 comments
இலங்கைத் தமிழரின் இன அடையாளத்தில் மதத்தின் பங்களிப்பு என்ன? இந்தத் தலைப்பிலான விவாதத்தை முன்பொருமுறை எங்கோ வாசித்த நினைவு. அதைத் தொகுத்து அப்போது நான் புரிந்துகொண்டது இது. இணைய விவாதங்களில் இப்போது சிறிது கூட நம்பிக்கை இல்லை என்ற நிலையிலும், இந்தக் கேள்வியின் முக்கியத்துவம் கருதி இங்கு இதைப் பதிவுசெய்ய விழைகிறேன்.

திருக்கோணமலைக் கடலில் பழைய கோணேச்சரத்தின்  எச்சங்கள் 





1. உலகின் 90 வீதமான இனங்கள், மொழி சார்ந்தே தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. தேசியம், இனத்துவ அடையாளம் என்பன பொதுவாக மொழி சார்ந்தவையே.

2. இன அடையாளம் பேசும் மொழி சார்ந்தது என்பதால், மதம், சாதி, பிரதேசம் சார்ந்த ஏனைய அடையாளங்களை நிராகரிக்கும் முற்போக்குவாதிகள் கூட, மொழிசார்ந்த இனத்துவ அடையாளங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். எதிர்காலத்தில் தொழிநுட்பம் சார்ந்த ஒரு பண்பாட்டுப் புரட்சி ஏற்படும் போது, அதுவும் அழிந்து போகும், அதுவரை வேறு வழியில்லை என்பது அவர்கள் முன்வைக்கும் வாதம்.

3. ஆனால் இன அடையாளம் எப்போதும் மொழி சார்ந்து இருப்பதில்லை. முன்பும் சுட்டிக்காட்டிய பல உதாரணங்கள் இருக்கின்றன. மூன்றை முக்கியமாகச் சொல்லலாம்.
அ) ஒரேமொழியைப் பேசியபடி ருவாண்டாப் படுகொலையை மாறிமாறி நிகழ்த்திய டுட்சி, ஹூடு இனங்கள், 
ஆ) ஒரேமொழியின் வட்டார வழக்குகளைப் பேசியபடி யூகோஸ்லாவியாவின் உடைவுக்கு வழிவகுத்த சேர்பிய, பொஸ்னிய, குரோசிய இனங்கள்.
இ) பேஜா, அரபு, திக்கரே எனும் 3 மொழிகளைப் பேசினாலும் தம்மை ஒரே இனமாகக் காட்டிக்கொண்ட சூடானின் பேஜா இனம்.

4. இந்த இடங்களில், மொழி, இன அடையாளத்தைக் கட்டமைக்கவில்லை என்றால், அந்த அடையாளத்தைக் கட்டமைத்தது எது?
அ) ஹூடுக்கள் கிறிஸ்தவ மதமாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட பெரும்பான்மை உழைப்பாளர் சமூகம். டுட்சிகள், மதமாற்றத்தை எதிர்த்த சிறுபான்மை அரச குடும்பங்கள். (இன்று எல்லோருமே கிறிஸ்தவர்கள் தான்) .
ஆ) சேர்பியர்கள் பழைமைவாதக் கிறிஸ்தவர்களாகவும், குரோசியர்கள் கத்தோலிக்கர்களாகவும், பொஸ்னிக்குகள் இஸ்லாமியராகவும் இருந்தனர். 
இ) வெவ்வேறு மொழி பேசும், பேஜாக்கள் தம்மை ஒன்றிணைக்கும் பாலமாகக் கண்டுகொள்வது, தாம் அனைவரும் பின்பற்றும் இஸ்லாத்தை.

5. ஆக, சில இடங்களில் மொழியை விட வலுவான இனக்கட்டமைப்பு அலகாக மதம் இருந்திருக்கிறது, இருக்கவும் முடியும்.

6. இலங்கையைப் பொறுத்தவரை, பெரும்பான்மை இனமான சிங்களவர், பௌத்தம் சார்ந்தே தம்மை முன்னிறுத்துகின்றனர். இன்னொரு சிறுபான்மை இனமான சோனகரும் இஸ்லாம் சார்ந்தே தம்மை தனி இனமாகக் காட்டிக்கொள்கின்றனர்.

7. பௌத்த, இஸ்லாமிய முனைவாக்கங்கள் தமிழர் நிலங்களில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதை விளக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இலங்கைத்தமிழர் மொழி சார்ந்தே தம்மைத் தனி இனமாகக் கட்டமைத்தவர்கள்.

8. தமிழரின் பெரும்பான்மைச் சமயம் என்ற இடம் சைவத்துக்கு உண்டெனினும், அதை தமிழ் அடையாளத்தோடு முன்வைப்பதில் எவரும் அத்தனை தீவிரமாக இருந்ததில்லை. இன்றும் தமிழ் முற்போக்குவாதிகளும், இடதுசாரிகளும் அந்தத் தரப்பை வெறுப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

9. ஆனால், மும்முனைச் சமர்க்களத்தில் இரு சமூகங்கள் இனம், மதம் எனும் இரு ஆயுதங்களுடன் நிற்கும் போது, தமிழர் மட்டும் மதம் என்ற ஆயுதமின்றி எதிர்ப்பதன் வெற்றிடம் பலருக்கும் புரிவதில்லை. அதன் விளைவு இப்போது புரியப்போவதும் இல்லை.

10. இலங்கைத் தமிழரின் பண்பாடு என்பது சைவப்பண்பாடே. விளக்கேற்றுவது, பன்னீர், சந்தனம், குங்குமம் கொடுப்பது, நிறைகுடம் வைப்பதிலிருந்து தாம்பூலம் தரிப்பது வரை, சைவத்தில் அங்கீகரிக்கப்பட்ட மரபுகளே.

11. இலங்கை இனப்போராட்டத்தில், தமிழர் சார்பில் முன்னின்றவர்களில், தமிழ் பேசும் கிறிஸ்தவருக்குள்ள வகிபாகத்தை மறுப்பதற்கில்லை. ஆனால் சிங்களபௌத்தம், சோனக இஸ்லாம், என்பன போல, மூன்றாம் இனத்தின் அடையாளமாக முன்னிறுத்த வேண்டியது, தமிழ்ச்சைவம்.

12. இங்கு கிறிஸ்தவத்தை பின்னுக்குத் தள்ளுவதில் இன்னொரு காரணமும் இருக்கின்றது. இலங்கையில் கடந்த நூறு ஆண்டுகளுக்குள் பாழடைந்த ஒரு கிராமத்துக்குள் செல்கிறீர்கள். ஒரேயொரு வழிபாட்டிடத்தின் இடிபாடுகள் எஞ்சியிருக்கிறது. அது ஒரு விகாரை என்றால் அது சிங்களக்கிராமம். ஒரு மசூதியின் சிதைவுகள் தென்பட்டால், அது இஸ்லாமியக்கிராமம். ஒரு கோவிலின் எச்சங்கள் காணப்பட்டால் அது தமிழ்க்கிராமம். அதுவே ஒரு தேவாலயத்தின் இடிபாடுகள் என்றால்? தமிழ்க்கிராமம் என்பதா? சிங்களக்கிராமம் என்பதா?

13. சில சிங்கள கத்தோலிக்கர்களைச் சந்தித்திருக்கிறேன். "ஆனால் நாங்கள் புத்தரை நேசிக்கும் குடும்பம். நண்பர்களோடு சிலவேளைகளில் விகாரைக்கும் போவதுண்டு" என்பார்கள். தமிழ்க்கத்தோலிக்கரது பொதுவான நிலைப்பாடும் அதுவே.

14. இலங்கையின் சைவக் கோவில் திருவிழாக்களில் கத்தோலிக்கர்கள் கலந்துகொள்வதுண்டு. அங்கு திருநீறு தரிப்பதில்லை. தெய்வங்களை வணங்குவதில்லை. ஆனால் பொட்டுவைத்து பூச்சூடி, வேட்டி கட்டி, மாமிசம் விலக்கி சைவரோடு கைகோர்த்து நிற்பார்கள். சிங்களக் கத்தோலிக்கன் எந்தளவு பௌத்தப் பண்பாட்டை நேசிக்கிறானோ, ஒரு தமிழ்க்கத்தோலிக்கனும் அந்தளவு சைவப்பண்பாட்டை நேசிக்கிறான். (நான் பார்த்தவரை! ஏனைய கிறிஸ்தவர்களுக்கோ வேறு கத்தோலிக்கருக்கோ அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம்.)

15. தனிப்பட்ட ரீதியில், அரசியல் என்பது மதச்சார்பின்மை கொண்டதாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம், அது சைவமாகவே இருந்தாலும் கூட. இந்த "மதச்சார்பின்மை" என்பது தமிழக திராவிடக் கட்சிகள் நடத்திக்காட்டிய "மாமியார் உடைச்சா மண்குடம், மருமகள் உடைச்சா பொன்குடம்" கணக்கான மதச்சார்பின்மை அல்ல. அரசு இயந்திரம் ஒரு மதத்தைச் சார்ந்து இயங்கியபடியே, ஏனைய எல்லாச் சமயங்களுக்கும் சம முன்னுரிமை கொடுக்கும் மத(ப்பக்க)ச்சார்பின்மை.

16. சைவம் மீது கொள்ளும் நம்பிக்கைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. கிருமிகண்ட சோழன், கலிங்க மாகோன் ஆகிய இருவர் தவிர, சைவத்தின் வரலாற்றில் எதிர்மறையாகப் பதிவு செய்யப்பட்ட மன்னர்கள் இருந்ததில்லை. தமிழ்நாட்டின் சோழர், பாண்டியரிலிருந்து, இந்தோனேசியாவின் மஜாபாகித் பேரரசு, கம்போடியாவின் கெமர் பேரரசு வரை, சைவம் ஒப்பீட்டளவில் சமத்துவமான அரசாட்சியையே எல்லாச் சமய மக்களுக்கும் கொடுத்திருக்கிறது.

17. ஆக, தமிழரின் இனத்துவ அடையாளத்தில் எவ்வித தயக்கமுமின்றி சைவத்தையும் இணைத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த சைவம் ஒரு மறுபரிசீலனைக்குள்ளான, தனது பிற்போக்கான அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்காத, அதிகாரத்தில் இருப்பவர்களின் நம்பிக்கைகளை மற்றவர்களுக்கும் திணிக்காத, இலட்சிய சைவமாக இருக்கவேண்டியது அவசியம்.

18. "சைவத்தை வளர்த்தல்" என்றாலே நம்மவர்கள் "மதமாற்றத்தை ஒழித்தல்" என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். எதிர்க்கும் பலர் "பிராமண ஆதிக்கத்தை அதிகரித்தல், இந்துத்துவ அரசியலை முன்னெடுத்தல்" என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். சைவத்தை ஆதரித்தோ எதிர்த்தோ இங்கு கூக்குரலிடும் பலருக்கு சமயமே தெரியாது. அவ்வளவு ஏன், அடிப்படை "பஞ்சபுராணமே" கூடப் பாடத் தெரியாது.

எதிர்ப்பவர்களுக்கோ ஆதரிப்பவர்களுக்கோ சமயம் ஒழுங்காகத் தெரியாது என்பது முதலாவது பிரச்சினை. இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து தமிழ்ச்சைவ அடையாளத்தை சகல சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியல் தளங்களிலும் முன்னிறுத்துவது எப்படி என்பது இரண்டாவது பிரச்சினை. சிங்கள பௌத்த அடையாளத்துக்குள் சிங்கள கிறிஸ்தவர்கள் எத்தகைய பாதுகாப்பையும் ஒன்றிணைவையும் உணர்கிறார்களோ, அதே பாதுகாப்பையும் ஒன்றிணைவையும் தமிழ்க் கிறிஸ்தவர்கள் உணர்வதற்கான சுதந்திர வெளியையும் உத்தரவாதத்தையும் தமிழ்ச்சைவர்கள் ஏற்படுத்திக்கொடுப்பது எப்படி என்பது மூன்றாவது பிரச்சினை.

கல்லில் நார் உரிக்கும் வேலை தான். ஆனால், வாழை, கல் போல் தோற்றமயக்கம் காட்டும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு.
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner