அறுகம்பைக் கடலோரம் - ஒரு இடப்பெயர் ஆய்வு


கிழக்கிலங்கை என்றதும் இரு சுற்றுலாத்தலங்கள் தவறாமல் நினைவுக்கு வரும். ஒன்று, பாசிக்குடா இன்னொன்று அறுகம்பே.  நாம் இப்போது வந்திருப்பது அறுகம்பேக் கடலோரம்.  என்ன முழிக்கிறீர்கள்? சீசன் இல்லாத காலத்தில் ஏன் நாம் அறுகம்பைக்கு வரவேண்டும் என்றா? ஹலோ, நாம் இங்கு வந்திருப்பது, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை புதினம் பார்த்து வாய் பிளக்கவோ, கடலில் குதித்து குளித்து மகிழவோ இல்லை. இந்த இடத்தின் பெயரை ஆய்வு செய்ய. கவனம் அலைகளில் கால் படாமல் தள்ளி நின்றுகொண்டே சொல்வதைக் கேளுங்கள். 

“அறுகம் மட்டக்களப்புக்குக் கிழக்குப்புறம் 64 மைல் தொலைவிலுள்ள ஒரு கிராமம். அதேபெயரிலுள்ள ஒரு குடாவின் கரையில் அது அமைந்திருக்கிறது. அங்கு  களியாலான சிறுகோட்டையொன்று இடச்சுக்களால் ஒருமுறை இராணுவ முகாமாகப் பயன்பட்டது. தற்போது அங்கு நெல் சேமிக்கப்படும் ஒரு களஞ்சிய அறை உள்ளது" என்று 1834இல் எழுதுகிறார் சைமன் காசிச்செட்டி. 

யாரிந்த சைமன் காசிச்செட்டி? இலங்கையின் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர் சைமன் காசிச் செட்டி. புத்தளம் கற்பிட்டியில் பிறந்த இவர், இலங்கையின் சட்டவாக்கக் கழகத்தில் தமிழ்ப்பிரதிநிதியாகப் பதவி வகித்தவர். இலங்கைத் தமிழர் மற்றும் தமிழ் மொழி பற்றி பிரித்தானியரின் கவனத்தை அதிகம் ஈர்த்தவை, இவரது ஆக்கங்களே என்றால் மிகையாகாது. உதயாதித்தன் என்ற தமிழ்ச்சஞ்சிகை, தமிழ்ப்புலவர் வரலாறு கூறும், "தமிழ் புளூடாக்", இலங்கை வரலாற்றைக் கூறும் சரித்திர சூதனம் என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவை. 
சைமன் காசிச்செட்டி

எனினும் இவை எல்லாவற்றையும் விட அதிகம் புகழ்பெற்றது, இலங்கையின் மாவட்டங்கள், கிராமங்கள், சாதிகள், சமயங்கள் பற்றிய சுருக்கமான சமகாலத் தொகுப்பான சிலோன் கசெற்றியர். கொட்டாவை தேவாலய திருச்சபையால் 1834இல் வெளியிடப்பட்ட இந்நூலில் உள்ள தகவல்கள், அவற்றின் சமகால இயல்பால் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்கின்றன. அந்நூலில் தான் அறுகம் பற்றிச் சொல்கிறார் காசிச்செட்டி.

அறுகம் என்று காசிச்செட்டி சொல்லும் இந்தக் கிராமம் வேறெதுவுமில்லை. இன்றைய புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான அறுகம்பை தான். அறுகாமம் என்பதே அதன் சரியான பெயர். பசறையில் தோன்றி கிழக்கே ஓடிவந்து அறுகாமத்துக்கு அருகில் கடலில் கலக்கும் ஆற்றுக்கும் அறுகாம ஆறு என்று தான் பெயர். இன்று அதை குருந்த ஓயா என்கிறார்கள். 

அறுகாம ஆற்றினால்  அறுக்கப்பட்டதால் தான் இவ்வூருக்கு அறுகாமம் என்று பெயர் வந்ததோ, தெரியவில்லை.  அல்லது அறுகம்புற்கள் செறிந்து வளர்ந்த பகுதியாகவும் இருந்திருக்கலாம்.  கிழக்கிலங்கைத் தொன்மங்களில் இது "அறுகமனப் பூமுனை" என்று அழைக்கப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பின் முதற்பெரும் தேசத்துக்கோவில் இறைவனான திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமியின் ஆளுகைக்குட்பட்ட வட எல்லையாக அம்பிளாந்துறையையும், தென்னெல்லையாக இந்த அறுகமப்பூமுனையையும் சொல்வது மரபு. 

அறுகம், அறுகாமம் என்பவற்றுக்கு சம்பந்தமின்றி, அறுகம்பையில் வரும் அந்த 'பை” ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? வேறொன்றுமில்லை. நம்மவர்கள் தான் அதீத அறிவாளிகள் ஆயிற்றே. அறுகம் குடா என்ற தமிழ்ச்சொல்லை வெள்ளையன் அறுகம்பே (Arugam Bay) என்று  மொழியாக்கினால், நாம் அதை மீண்டும் அறுகம்பை என்று தமிழ்ப்'படுத்தியிருக்கிறோம்'. 

பழைய பாணமைப்பற்றில் முக்கியமாக இருந்த இரு ஊர்களில் ஒன்று அறுகாமம். மற்றையது பெரிய பாணகை என்று அறியப்பட்ட இன்றைய பாணமை. பிற்காலத்தில், அறுகாமம் என்ற தனி ஊர்,  பொத்துவில், அறுகம் என்று இரு தனித்தனி ஊர்களாக இனங்காணப்படத் தொடங்கிவிட்டது என்பது வேறு ஐரோப்பியப்   பதிவுகளில் தெரியவருகிறது. 

பொத்துவில் இன்று முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நகரம். பொத்துவில் என்ற இடப்பெயரை ஆராய்ந்தால், அது பொதுவில் அல்லது புற்றுவில் அல்லது போதிவில் என்ற சொற்களிலிருந்து தோன்றியிருக்கக்கூடும். வில் என்றால் ஈழத்தமிழில் சிறுகுளத்தைக் குறிக்கும். வில் வடிவில் வளைந்திருக்கும் இந்தச் சிறுகுளங்களின் இன்னொரு குறிப்பிடத்தக்க இயல்பு, இவை கோடைகாலத்தில் வற்றி மேய்ச்சல் நிலமாக மாறிவிடும் என்பது. அப்படி பல சமூகத்தவருக்கும் பொதுவாக இருந்த, அல்லது புற்றுக்கு அண்மையில் இருந்த, அல்லது போதிமரத்துக்கு (அரசமரம்) அருகில் இருந்த வில்லொன்றின் காரணமாக பொத்துவில் என்ற பெயர் தோன்றியிருக்கலாம். ஒரு காலனித்துவ வரைபடத்தில் 'போதிவில தூபி' (Potevila Pagoda) என்று உச்சரிக்கக்கூடிய ஒரு இடமொன்று குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் உற்றுநோக்கவேண்டும்.

பொத்துவில் முகுது மகா விகாரையிலுள்ள தொல்லெச்சங்கள்

இது மகாயான பௌத்த மையமாக இருந்திருக்கக்கூடும் என்பது, பொத்துவில் கடற்கரையோரமாக அமைந்திருந்த பழைமை வாய்ந்த முகுது மகா விகாரையில் கிடைத்துள்ள போதிசத்துவர் சிலைகள் மூலம் தென்படுகிறது. எனினும், சமீப காலமாக,  துட்டகைமுனுவின் தாய் விகாரமாதேவி கடலில் வந்து ஒதுங்கிய இடம் பொத்துவில் தான் என்றும், இங்கு தான் உரோகண மன்னன் காக்கைவண்ண தீசன் ஒரு விகாரம் எழுப்பினான் என்றும் ஐதிகங்கள் உருவாகிப் பரவுகின்றன. ஆரம்பத்தில்  இப்படி விகாரமாதேவி கடலில் அடைந்த இடம் என்று, அம்பாந்தோட்டையிலுள்ள கிரிந்த பகுதியைத் தான் சொல்லி வந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

பொத்துவில் இருக்கட்டும். உல்லைப் பக்கம் காலாற நடப்போம் வாருங்கள். அதென்ன உல்லை?  அறுகம்பையின் உள்ளுர்ப் பெயரான “உல்லை" என்பது எப்படி வந்ததென்று சரியாகத் தெரியவில்லை. அது 'நுல்லை” அல்லது 'நுள்ளை” என்ற மட்டக்களப்பு வட்டாரவழக்குச் சொல்லிலிருந்து திரிந்திருக்கலாம். நுல்லை என்ற சொல், இங்கு மாரி கால வெள்ளத்தால் கடக்கமுடியாதபடி பாதிக்கப்படும் சிறுவழிகளைக் குறிக்கும்.  அறுகங்களப்பின் இரு கரைகளையும் இணைத்த நுல்லை என்ற சிறுவழியின் பெயரே பின்பு உல்லை ஆகியிருக்கலாம். பேச்சுவழக்கு நுல்லை என்பது, பழந்தமிழில் 'நுழை' என்று எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

அடடே! சைமன் காசிச்செட்டி சொன்ன ஒரு முக்கியமான குறிப்பை நான் தவற விட்டுவிட்டேன். என்னவென்று கண்டுபிடித்தீர்களா?. அதே தான். அறுகங்குடாவில் இருந்த களிமண்ணாலான ஒல்லாந்தரின் சிறுகோட்டை. 
1813 பிரித்தானிய வரைபடமொன்றில் அறுகம் குடா,  பொத்துவில், பொத்துவில் தூபி, அப்புறத்தோட்டக் குடா, நாவலாறு.

ஆம்,  காசிச்செட்டியார் சொல்வது உண்மை தான். பழைய ஒல்லாந்து இலங்கை வரைபடங்களைத் தட்டினால், பாணகைக்கு வடக்கே  "அப்புறத்தோட்டை" அல்லது "அப்பர்ர தோட்டம்" என்ற பெயரில் அமைந்திருந்த சிறு இடச்சுக்கோட்டை ஒன்று காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஒல்லாந்து ஆளுநராக விளங்கிய வான்கூன்ஸ் என்பவர், தென்கிழக்கிலங்கையை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் தொடர்ச்சியாக வைத்திருக்க, இந்தக் கோட்டையைப் பெருப்பித்துக் கட்டும் திட்டம் கொண்டிருந்தாராம். இப்போது இந்தக் கோட்டையின் அடையாளம் எதுவும் இல்லை.  இது அறுகாமத்தின் அருகே இருக்கும் பசறிச்சேனை பகுதியில் அமைந்திருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது.

இப்படி பல வரலாற்றுத்தகவல்கள் நமக்கு அறுகம்பை சார்ந்து கிடைக்கின்றன. அடுத்த தடவை அறுகம்பைப் பக்கம் போகக்கிடைத்தால், தொபுக்கடீர் என்று தண்ணீரில் பாய்ந்து குளிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், இந்தப் பெயர் விடயங்களையும் மறக்காமல் அசைபோடுங்கள். ஏனென்றால், வரலாறு முக்கியம் அமைச்சரே!


(அரங்கம் இதழின் 2018.12.14 இதழில் வெளியான கட்டுரை)

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner