குடைந்தாடாய் திருத்தும்பீ! திருவெம்பாவை இன்பம்


கணினியிலோ கைபேசியிலோ, எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத பாடல்கள் என்று ஒரு பாடல்கள் பட்டியல் நம் எல்லோருக்கும் இருக்கும். என் அந்தப் பட்டியலில் உள்ள ஒரு பாடல், ஈராண்டுகளுக்கு முன் வெளிவந்த றெக்க திரைப்படத்தின் "கண்ணம்மா கண்ணம்மா" பாடல். ஆனால், கேட்கும் போதெல்லாம், இமானின் இசையை விட, அதில் வருகின்ற பாரதியின் காதலி "கண்ணம்மா"வை விட, அந்தப் பெண் குரல் என்னவோ செய்யும். மிக நெருக்கமாகப் பழகி மறந்த யாரையோ நினைவுகூரச் சொல்கின்ற இனிய குரல். கூகிளில் தேடிய போது அது "நந்தினி ஸ்ரீகர்" என்று அறிந்தேன். 




முன்பெல்லாம் வானொலிகளில் பாடல் ஒலிபரப்பானால்,  அந்தப் பாடலை இசையமைத்தவர் யார், பாடியவர் யார், எழுதியவர் யார் என்றெல்லாம் சொல்வார்கள். அப்படி வானொலியில் பல தடவை சொல்லிச் சொல்லி மனப்பாடமான பெயர் அது. நந்தினி ஸ்ரீகர். பள்ளிப்பருவத்து மறக்கமுடியாத பாடல்களில் ஒன்றான "நறும்பூக்கள் தேடும் திருத்தும்பியே" (திரைப்படம்: உற்சாகம்) பாடலைப் பாடியவர்.

அந்தப் பாடல், அந்தச் சிறுவயதிலேயே பிடித்துப்போனதற்கு காரணங்கள் இரண்டு. அவற்றில் முதலாவது, அதன் தூய தமிழ் வரிகள். இன்னொன்று அப்பாடலில் வரும் சொல்லொன்று என் பட்டப்பெயராக இருந்தது.   

சங்கத்தமிழின் சாயலில் எழுதப்பட்ட அந்த வைரமுத்துவின் வரிகளில்,  என்னை மிகவும் கவர்ந்த வரி "குதித்தாடவே குடைந்தாடவே பூ என்ன தேன் குடமா?" தன்னைப் பூவாகவும், நாயகனை தும்பியாகவும் உருவகிக்கும் நாயகி பொய்க்கோபத்துடன் இப்படிக் கேட்கிறாள். ஆனால் நீங்கள் விபரீதமாக நினைப்பது போல், அந்த வயதில் இப்படி அர்த்தம் புரிந்தெல்லாம் அந்த வரி பிடிக்கவில்லை! 😄 உண்மை என்னவென்றால், வரி பிடித்தற்கான காரணம், அந்தக் "குடைந்தாட" என்ற ஒரு சொல். ஒரேயொரு சொல்.

அந்தச் சொல், மெல்லிய மழை துமிக்கும் அதிகாலைப் பொழுதொன்றில் குடை பிடித்தபடி கடற்கரையோரம் நடக்கும் காட்சியை  என் மனத்திரையில் விரிக்கும். காரணம், திருவெம்பாவை.

இலங்கையின் எல்லா ஊர்க்கோவில்களும் போலவே, எங்கள் ஊரில் அமைந்துள்ள சிவன் கோவிலிலும் மார்கழி மாதம் திருவாதிரையை அண்டி, திருவெம்பாவை விழா பத்து நாட்கள் இடம்பெறும்.  கடற்கரையோரம் தாழம்புதர்களுக்கு மத்தியில் அமைந்துள்ள அழகான சிறிய கோவில் அது. இன்று தாழம்புதரும் இல்லை, மண்ணரிப்பால் கடற்கரையும் இல்லை.  கோவிலும் 2004 ஆழிப்பேரலையால் சிதைந்து இன்று மீளக்கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்றைக்கும் மார்கழிக் குளிரில் நடுங்கியபடி, அந்தக் கோவிலின் வாசலில் நின்று,  அதிகாலையில் கடல் மீது கதிரவன் எழுவதைக் காண்பதற்குக் கண்கள் கோடி வேண்டும்.

எங்களூர்ச் சிவன் கோவில், 2015இல் (நன்றி: கூகிள் வரைபடம்)

அதெல்லாம் சரி, உன் ஊர்க்கோவிலுக்கும், "குடைந்தாட"வுக்கும் என்ன சம்பந்தம்?
 மாணிக்கவாசகரின் திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்கள். 'மொய்யார் தடம் பொய்கை' என ஆரம்பிக்கும் பதினோராம் பாடலைப் பாடியதும், 'திருவெம்பாவை அரைவாசிப்பாட்டு முடிந்தது, விரைவில் பிரசாதம் கிடைத்துவிடும்' என்று ஒரு மெல்லிய பூரிப்பு ஏற்படும்  😁.  சில நேரங்களில் அதிகாலையில் தட்டுத்தடுமாறி எழுந்து குய்யோ முறையோ என்று கதறியபடி குளிர்நீரில் நீராடி, இந்தப்பாடல் பாடும் போது தான் கோவிலுக்குப் போய்ச் சேருவேன். ஆக, இருபது பாவைப்பாட்டுகளிலும் என்னால் அதிகம் கவனிக்க முடிந்த பாடல் இது.

அந்தப் பதினோராம் பாடலில் "கையால் குடைந்து குடைந்து உன் கழல் பாடி" என்றோர் வரி வரும். மார்கழி மாத அதிகாலை மென்பனி மழையில் குடை பிடித்தபடி விரைந்த எனக்கு, அந்தக் "குடைந்து குடைந்து" என்ற சொல் இப்படி நிலக்காட்சியாகப் பதிந்து போனதில் சந்தேகம் இல்லை தானே?😊

திருவெம்பாவை, அதிகாலைக் குளியல், சிவன் கோவில் போவது எல்லாம் பழங்கதைகள் ஆகி நெடுங்காலம். 😔 ஆனால் அதையெல்லாம் பெருமூச்சோடு எண்ணிப்பார்க்கும் சந்தர்ப்பம் சில நாட்களுக்கு முன் ஏற்பட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு செவிபன்னியில் கண்ணம்மா பாடல் கேட்டுக்கொண்டிருந்தேன். மனம் நந்தினி ஸ்ரீகரிடம் போய், அங்கிருந்து "நறும்பூக்கள் தேடு"முக்கு நகர்ந்து, ஒருகணம் "குடைந்தாடவே"யில் மயங்கி, அப்படியே சிவன் கோவிலடியில் சென்று நின்று, அங்கிருந்து திடுக்கிட்டு திருவெம்பாவைக்கு வந்து சேர்ந்தது. அடடே மணிவாசகா, உன் தேன்தமிழை நெருங்கித் தான் எத்தனை காலம் ஆயிற்று?  

திருவெம்பாவையில் "குடைந்து" என்ற சொல்லை பதினோராம் பாட்டில் மட்டுமன்றி, அதற்கு மேலும் கீழும் வந்த ஓரிரு பாடல்களிலும் வாதவூராளித் தேவர் எடுத்தாண்டிருக்கிறார். அப்படி  "கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கும்" எனும் வரி வருகின்ற 13ஆம் பாடலுக்குக் கண்கள் நகர்ந்த போது விவரிக்கவியலாத வியப்பை அனுபவித்தேன். அந்த வரியிலுள்ள சொற்களைப் பார்த்து விட்டு எடக்கு மடக்காக யோசிக்காமல், முதலில் பாடலைப் பருகுங்கள்.  😁

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை பெண்கள் நோற்ற நோன்பு என்பதையும், அந்நோன்பில்  பாவைப்பாடல்கள் பாடியபடி அதிகாலையில் நீர்நிலையொன்றில் நீராடுவது வழக்கமான ஒன்றாக இருந்தது என்றும் அறிந்திருப்பீர்கள். ஆனால் திருவெம்பாவையில் இந்தப் பாடல் கவனத்தைப் பெறுவது இது ஒரு சிலேடைப் பாடல் என்பதால் தான். ஒரே நேரத்தில் தாங்கள் நீராடும் நீர்நிலையையும் சிவசக்தியையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டு பாடும் இதன் கவித்துவ அழகு. 






நீர்நிலையை அதிகாலை அரையிருட்டில் பார்க்கிறார்கள் பெண்கள். "பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்"
அடர்ந்த நிறத்தில் குவளை மலர்களும், சிவந்த தாமரை மலர் மொட்டுக்களும் நிறைந்து காணப்படுகிறது நீர்த்தடாகம். அது கறுப்பு நிறத்து உமையையும், சிவந்த சிவத்தையும் அவர்களுக்கு நினைவூட்டுகிறது. 


(இக்கால ஓவியர்கள் சிவனை நீலமாகவும், உமையை சிவப்பாகவும் வரைகிறார்கள். மரபு அதுவல்ல.  சிவந்தவன் என்பதால் தான் அவன், சிவன். தேவி கறுத்தவள். கறுப்பி என்பதால் காளி. உலகின் முதல் கறுப்பழகி.  திருமாலும் கறுத்தவனே. 'மால்', 'கண்ணன்' என்ற தமிழ்ப்பெயர்களுக்கும் 'க்ருஷ்ண' என்ற வடமொழிப்பெயருக்கும் நேரடிப்பொருளே கறுப்பன் என்பது தான். தெய்வங்களின் உடல் வண்ணத்தை கறுப்பு என்று சொல்லாமல், பச்சை அல்லது நீலம் என்று  சொல்லுவது இலக்கிய வழக்கு.)


அடுத்த வரிக்கு வருவோம்.
'அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்'
தடாகத்தின் கரைகளில் குருகுப் பறவைகளும், அங்கங்கே தண்ணீர்ப்பாம்புகளும் தென்படுகின்றன. குருகு என்பது ஆங்கிலத்தில் Cinnamon Bittern என்று அறியப்படும் பறவை. விலங்கியல் பெயர் Ixobrychus cinnamomeus. தெற்கு -  தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட பறவை. சங்க இலக்கியங்களிலும் பக்தி இலக்கியங்களிலும், அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குருகு -  Cinnamon Bittern
குருகு என்று சங்கையும் சொல்வதுண்டு. சங்கை அறுத்துச் செய்வதால் வளையலுக்கும் குருகு என்று பெயர். அல்லது ஒன்றோடொன்று உரசும் போது, குருகுப்பறவை போல் ஒலிப்பதாலும் வளையலுக்கு அப்பெயர் வந்திருக்கலாம். ஆக, குளத்தின் கரையிலுள்ள குருகுகள் உமையவளின் கைகளிலுள்ள வளையலையும், நீர்ப்பாம்புகள் சிவனுடலில் நெளிந்தாடும் பாம்புகளையும் பாவைப்பெண்களுக்கு நினைவூட்டுகின்றன. 

'தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்'
காலைக்கடன் முடிப்போர் 'கழுவ' வந்து சேரும் இடமும் அதே நீர்நிலை தான். உயிரின் அழுக்கையும் சைவம் 'மலம்' என்றே சொல்கிறது. மும்மலம். அதை நீங்கச்செய்வது சிவம். உடலழுக்கை நீக்கும் தடாகம், அவர்களுக்கு உயிரழுக்கை நீக்கும் சிவசக்தியாகத் தோன்றுகின்றது. சைவத்தின் சிறப்பே, அருவருப்பையும் அச்சத்தையும் ஊட்டும் அம்சங்களிலும் இறைவனைக் காணும் பார்வையை பின்பற்றுநனுக்கு வழங்குவது தான். நீர்நிலையில்  காலைக்கடன் முடித்தோர் கழுவுவதையும், இறைவன் உயிர்களின் மும்மலத்தை கழுவுவதையும் ஒப்பிடுவதிலுள்ள கவித்துவம் கற்பனைக்கு அப்பாற்பட்டது.

ஆக, இப்படியெல்லாம் ஒப்பிட முடிவதால், இந்த நீர் பொங்கும் மடு, எங்கள் அரசனும் எங்கள் பிராட்டியுமான சிவனும் சக்தியும் போல் தோன்றுகிறது.
'எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த பொங்கு மடு'
சொல்லி வியக்கிறார்கள் பெண்கள். 

அதே வியப்போடு அவர்கள் நீரில் மூழ்கி பாய்ந்து நீராடி மகிழ்கிறார்கள். கைகளில் சங்குவளையல்கள் சத்தமிடுகின்றன, கால்களில் சிலம்புகள் சலசல ஒலியெழுப்புகின்றன.
'புகப் பாய்ந்து பாய்ந்து நம் சங்கம் சிலம்ப, சிலம்பு கலந்து ஆர்ப்ப'

மார்கழிக் குளிரில், நீரின் குளிரில், மார்பகங்கள் மயிர்க்கூச்செறிந்து விம்முகின்றன. நீரில் குடைந்து குடைந்து ஆடுகையில், நீரும் பொங்கிக் குதூகலிக்கிறது. 
'கொங்கைகள் பொங்க குடையும் புனல்பொங்க'

தாமரை மலர்கள் செறிந்த இந்தப்பூம்புனல் நீர்த்தடாகத்தில் பாய்ந்தாடுக எம்பாவாய் 
'பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்'
என்று முடிகிறது பாடல். 

பக்திச்சுவை சொட்டும் திருவாசக வரிகளைப் படித்து, பல தடவை மெய்மறந்து கண்ணீர் உகுத்திருக்கிறேன். ஆனால், அதன் குறியீட்டு அழகியலை உணர்ந்து மகிழச் செய்த அற்புதமான சந்தர்ப்பம், இப்பாடலை இரசித்த போது தான் கிடைத்தது. இயற்கையைப் போற்றும் மரபு, நமக்குத் தொன்றுதொட்டே உண்டு. ஒரு நீர்நிலையில் ஆண் பாதி, பெண் பாதியாக அமைந்த இறைவனைக் கண்டு மகிழ்வதும், அதிலே மகளிர் மகிழ்ந்தாடும் காட்சியை கண் முன்னே காட்டும்படி சொல்லோவியம் எழுதுவதும் தான் மணிவாசகத் தமிழின் அழகு. 

எங்கோ "கண்ணம்மா"வில் துவங்கிய என்னை, "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை" கண்ட மணிவாசகனிடம் இட்டு வந்த  கவிதையை, கடவுளை, கற்பனையை, வியப்போடு எண்ணிப் பார்த்தேன்.  மனம் ஒரு பெரும்போதை நாடும் தும்பி.  குடம் குடமாய் தேன் பருகினாலும், போதாதே அதற்கு!
குதித்தாடவே குடைந்தாடவே பூ என்ன தேன்குடமா?
இவ்வுலகே மலர்வனம்.
கவியின்பமே தேன்குடம்.
குதித்தாடாய் திருத்தும்பி!
குடைந்தாடாய் திருத்தும்பி!
ஆடேலோர் எம்பாவாய்! 💓


0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner