அலகிலா ஆடல் நூல் விமர்சனம் | நடேசபிள்ளை சிவேந்திரன்



அலகிலா ஆடல் வாங்க: 

எழுத்தாளர் வி.துலாஞ்சனனால் எழுதப்பட்ட “அலகிலா ஆடல்:சைவத்தின் கதை” என்ற நூல், இலங்கை சைவநெறிக்கழகத்தால் அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. சைவத்தின் கதை என்று உப தலைப்பு அளிக்கப்பட்டிருக்கும் இந்நூல் பழங்குடிகளின் தெய்வமாக இருந்து பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி தனி ஒரு பெருந்தெய்வமாகி சிவம் என்று தத்துவத்தளத்தில் விரியும் பரம்பொருளின் கதையைக் கூறுகிறது என்று சொன்னால் அது, மிகமிக எளிமைப்படுத்தப்பட்ட கூற்றாகவே இருக்கும்.

பெயரே சற்று வித்தியாசமாக இருக்கும் இந்த “அலகிலா ஆடல்” எவ்வகையான நூல்? சொல்லப்போனால் இது சைவ நம்பிக்கை சார்ந்த சமய நூல் அல்ல. சைவத்தை புறவயமாக வரலாற்றுப் போக்கில் அள்ள முனையும் நூல். மிகப்பெரும் காட்டினுள் அதனூடாக ஓடும் ஆறொன்றின் கரையோரமாக உள் நுழையும் அனுபவத்தையே இந்த நூல் தருகின்றது. பயணத்தில் ஒவ்வொரு மரமாக, செடி, கொடியாக, பறவைகள், விலங்குகளாக, ஒன்றையும் விட்டுவிடப் போவதில்லை என்று அறிமுகப்படுத்திச் செல்கிறார் நூலாசிரியர். சைவ வரலாற்றுக் கலைக்களஞ்சியம் என்று சொல்லத்தக்க அத்தனை தகவல்கள். அவர் குறிப்பிட்டுச் செல்லும் ஒவ்வொன்றையும் ஆர்வமுள்ளவர்கள் மேலும் மேலும் தேடியறிந்து சென்று கொண்டே இருக்கலாம். உண்மையிலேயே அலகிலா ஆடல்தான்.

இன்று சைவம், இந்து என்ற இரண்டு சொற்களையும் வைத்து விவாதங்கள் நடைபெறுவதை சமூக வலைத்தளங்களில் அவதானிக்க முடிகின்றது. இரண்டு சொற்களையும் சரியான விதத்தில் புரிந்துகொண்டால் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்ற தவறான நோக்கில் எழும் வாதங்கள் தேவையற்றனவாகிவிடும்.

இந்து என்பது இந்தியாவில் உருவான ஊடும் பாவும் உடைய பல்வேறு மதங்களுக்கான பொதுப் பெயர். இந்து என்பதை இந்து மதம் என்று தனியொரு மதமாக கருதுவது தவறு/ இந்து என்றால் இந்துமதங்கள் என்று கொள்வதே சரி. சைவம் அதில் பழமையான முதன்மையான மதம். இதைத்  தெளிவுபடுத்தும் விதமாக ‘ஓங்காரம்’ என்னும் அறிமுக அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

இந்திய தெய்வ வடிவங்கள் பொது ஆண்டுக்கு முன் நான்காம் நூற்றாண்டில் நடந்த அலெக்ஸாண்டரின் படையெடுப்புக்குப் பின்னரான கிரேக்க செல்வாக்கின் தாக்கத்தால் உருவானவை என்ற வாதம் வரலாற்றாய்வாளர்களிடம் உள்ளது.

சைவத்தின் ஆரம்பகாலச் சுவடுகளை விபரிக்கும் ‘படைத்தல்’ என்னும் முதல் அத்தியாயத்தில் பொது ஆண்டு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குஷாணர் இலச்சினையில் காணப்படும் மூன்று முக சிவ வடிவம்,  சிந்துவெளி நாகரிக மூன்று முக முந்து சிவ வடிவத்தின் நீட்சியாக இருக்கவேண்டும் என்பது சுட்டிக்காட்டப்படுகின்றது. பொது ஆண்டு ஆறாம் நூற்றாண்டு எலிபண்டா குகை திரிமூர்த்தியும் இந்த மூன்று முக சிவ வடிவத்தின் வளர்ச்சியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தொடர்புடுத்தல் கிரேக்க செல்வாக்கால் இந்திய தெய்வ வடிவங்கள் உருவானவை என்ற கருத்துக்கு வலுவான எதிர்வாதமாக இருக்கின்றது. ‘காத்தல்’ என்னும் இரண்டாம் அத்தியாயம் பல்வேறுபட்ட சைவப்பிரிவுகளை ஆராய்கின்றது.

அண்மையில் கோசைநகரான் என்பவர் தமிழகத்தில் நடத்திவரும் திருமுறைத் தமிழ்வழித் திருமணமொன்றின் ஒளிப்பதிவைப் பார்த்தபோது ஒரு நிகழ்வு கவனத்தை ஈர்த்தது. சிவபூசை செய்த பின்னர் மணமகன் ஏனையோருடன் இணைந்து ஒரு மின்னல் வேக நடனமொன்றை ஆடி முடிக்கிறார். இன்று மேலைநாடுகளின் வீதிகளில் கிருஷ்ண பக்தி இயக்கத்தினர் பாடலுடன் ஆடிச் செல்லும் முறையின் மூலம் சைவத்தில் இருந்து சென்றிருக்கவேண்டும் என்று தோன்றியது.

ஆதிசைவப் பிரிவுகளில் ஒன்றான பாசுபதம், சிவ வழிபாட்டில் சிரித்தல், ஆடுதல்,பாடுதல், வணங்குதல், செபித்தல், ஹூடுக் என்னும் மந்திரம் உச்சரித்தல் என்னும் ஆறு உபசாரங்கள் செய்யப்படவேண்டும் என்று கூறுகின்றது என்பதை வாசித்தபோது அது சரியாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணம் வலுப்படுகின்றது. பழங்குடிகள் நிகழ்த்திய வேலன் வெறியாட்டு போன்ற தெய்வம் இறங்கும் ஆடல்களின் செம்மையான மீள் நிகழ்த்துகையாக,  நடனத்தை சைவம் உள்வாங்கி வளர்த்திருக்கக்கூடும்.

‘அழித்தல்’ என்னும் மூன்றாம் அத்தியாயம் ஏனைய இந்திய மதங்களுடனும் கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்களுடனுமான சைவத்தின் ஊடாட்டங்களையும் முரண்பாடுகளையும் பேசுகின்றது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் காலத்தின் பின்னர் ஆண்ட இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் ஒரு வைணவனாவான். பல்லவ நாட்டை ஆண்ட சிம்மவிஷ்ணுவுடன் பல்லவ பரம்பரை முடிவுற்றதால் கம்புஜதேசத்தில் (இன்றைய கம்போடியா) ஆட்சி செய்துகொண்டிருந்த பல்லவ கிளை மரபினைச் சேர்ந்த இவனை, பல்லவ நாட்டிலிருந்து சென்ற குழு அழைத்து வந்து அரசுக்கட்டிலேற்றியது. இவனே தில்லையில் கோவிந்தராஜப் பெருமாள் சிலையை வைத்ததாகக் கூறப்படுகின்றது. ஏறத்தாழ 500 வருடங்களின் பின்னர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் அந்தச் சிலை அகற்றப்பட்டது. சிதம்பரம் கோயிலை விரிவுபடுத்தவே கோவிந்தராஜர் சிலை அகற்றப்பட்டதாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டாலும் குலோத்துங்க சோழன் உலாவில் ஒட்டக்கூத்தர்,
"தில்லைத் திருமன்ற முன்றிற் சிறுதெய்வத்
தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து” என்று பாடுகிறார்.
கோவிந்தராஜனால் ஏற்பட்ட தொல்லைக் குறும்பு என்னவாக இருக்கக்கூடும் என்பதற்கு ‘அழித்தல்’ என்னும் இந்த அத்தியாயத்தில் வைணவம் குறித்து வரும் பகுதியில் ஒரு பிடி கிடைக்கிறது.
"விஷ்வக்சேன சம்ஹிதை எனும் வைணவ நூலும், 14 ஆம் நூற்றாண்டு வேதாந்த தேசிகரின் பாஞ்சாராத்திரரக்ஷா எனும் நூலும், கிரண, காமிக ஆகமங்களிலுள்ள விஷ்ணு ஸ்தாபன வரிகளைக் குறிப்பிட்டு, வேதத்தால் கண்டிக்கப்படும் சைவரின் இம்மரபை ஏற்கக்கூடாதென்றும் சைவ ஸ்தாபனம் செய்யப்பட்ட விஷ்ணு விக்கிரகங்களை பாஞ்சாராத்திர முறையில் மீண்டும் ஸ்தாபனம் செய்யவேண்டும் என்றும் ஆயிரம் குடங்களால் அபிஷேகம் செய்து கழுவாய் தேடவேண்டும் என்று சொல்கின்றன” என்ற வரிகள். 

சைவ ஆகம முறைப்படி ஸ்தாபனம் செய்யப்பட்டிருந்த தில்லை கோவிந்தராஜர் விக்கிரகத்தை இராமானுஜர் காலத்தில் வைணவர் பாஞ்சாராத்திர முறைப்படி மீள் ஸ்தாபனம் செய்ய முனைந்திருக்கவேண்டும். இதுவே பூசலுக்கு வழிவகுத்த காரணமாக இருக்கலாம். இராமானுஜர் பாஞ்சாராத்திர முறைப்படி வைணவக் கோயில்களை மாற்றியமைத்த வரலாற்று நிகழ்வுகள் இந்தக் கோணத்தை வலுப்படுத்துகின்றன.

‘மறைத்தல்’ என்னும் நான்காம் அத்தியாயம் பொது ஆண்டு ஆறாம் நூற்றாண்டில் இருந்து பொது ஆண்டு 14ஆம் நூற்றாண்டு வரை சுமார் ஆயிரம் ஆண்டுகள் தென்னக ஆசியாவில் (தெற்கு - தென்கிழக்கு ஆசியா) அரச மதமாக பல்வேறு நாடுகளில் கோலோச்சிய சைவத்தின் பெருமையையும் அதற்கு அடித்தளமாக அமைந்த, அனைவரையும் உள்வாங்கும் அதன் தன்மைகளையும் விபரிக்கின்றது.

சில சைவ நூல்களில் அரச பட்டாபிஷேகத்திற்கென இடம்பெற்றுள்ள விரிவான கிரியைகள் அளவுக்கு வேறெந்த பழைய வைணவ, பௌத்த, வைதீக நூல்களிலும் இடம்பெறவில்லை என்று குறிப்பு சைவம் இராஜாங்க சைவம் என்று பெயர்பெற்றது வெற்றுப் புகழ்ச்சி இல்லை என்பதைக் காட்டுகின்றது.


வைதீகப் பிராமணர்கள் அரசனுக்கு புரோகிதர்களாகவே இருந்தார்கள், சைவ சித்தாந்த வழியிலான சிவப்பிராமணர்கள் மன்னனுக்கு அறிவுரையும் அறவுரையும் கூறும் இராஜகுரு என்னும் உயரிய பொறுப்பில் இருந்தார்கள் என்ற தகவலும் அதை உறுதி செய்கின்றது.

“மனிதர் என்ற ஒரேயொரு சாதியே உள்ளது. பிறப்பை வைத்தோ நிறத்தை வைத்தோ எவரையும் அளவிடக்கூடாது. எல்லோரும் சாதாரண கலவி மூலம் பிறந்த உயிர்களே. தவிர ஆன்மாக்களில் ஒன்று உயர்ந்தது இன்னொன்று தாழ்ந்தது என்று இல்லை” என்று சொல்கின்ற பௌஸ்கரபரமேஸ்வர ஆகமத்தின் கூற்று, சைவத்தின் முடிசூடிய வெற்றியின் அடித்தளமாக இருந்தது மானிட சமத்துவமே என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

இதுவே சைவ அரசர்களின் காலத்தில் பல்வேறு குடிகளை உள்வாங்கி சிற்றரசுகள் பேரரசுகளாக உருவாக அடிப்படையாக அமைந்த உந்துவிசையாகும்.

மேலும் சாதாரண கலவியில்தான் எல்லா மனிதர்களும் பிறக்கிறார்கள் என்ற பௌஸ்கரபரமேஸ்வர ஆகமத்தின் பிரகடனம் வைதீகம் தூக்கிப் பிடிக்கும் முகம், தோள், தொடை, கால் வர்ணத் தோற்றத்தை நேராகவே நிராகரிக்கும் தன்மையுடன் அமைந்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

ஐந்தாவதும் இறுதியுமான ‘அருளல்’ என்னும் அத்தியாயம் சைவத்தின் எதிர்காலம் குறித்தும் இனி அதை எவ்வாறு காலத்துக்குத்தக நிலைநிறுத்துவது என்பது குறித்தும் பேசி நிறைகின்றது. அதேவேளை அது காலத்துக்கேற்ற மாற்றம் என்பது சைவத்தின் தனித்துவத்தை சிதைத்து ஆப்ரஹாமிய மதங்களைப் போன்று மாற்றுவதல்ல என்பதையும் வலியுறுத்துகின்றது.

கிறிஸ்தவர்களுக்கு பைபிள், இஸ்லாமியர்களுக்கு குர்ஆன், பௌத்தர்களுக்கு திரிபிடகம் போன்று சைவர்களுக்கு என்ன என்ற கேள்வி சாதாரணமாகவும், பொது அறிவுக் கேள்வியாகவும் எழுப்பப்படுவதும் அதற்கு அறியாமை காரணமாக எவரேனும் பகவத்கீதை என்று பதில் கூறுவதும் நாம் சந்தித்திருக்கக்கூடிய நிகழ்வுதான்.

சைவர்களுக்கு தனியொரு புனித நூல் கிடையாது. புனித நூல் தொகுதியே உள்ளது. வடமொழியில் உள்ள வேதங்கள், ஆகமங்கள்,  தென்மொழியாகிய தமிழில் உள்ள திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள் என்னும் திருநெறிகள் ஆகிய நான்கும் புனித நூல் தொகுதியில் முக்கியமானவை. உங்கள் புனித நூல் எது என்ற கேள்விக்கு குறைந்தபட்சம் இந்த நான்கு நூல் தொகுதிகளையும் கூறக்கூடியவர்களாக சைவர்கள் இருக்கவேண்டும்.

சைவர்களைப் பொறுத்தவரை பகவத்கீதை ஒரு துணை நூல் மாத்திரமே என்பதை மறந்துவிடக்கூடாது. ‘அலகிலா ஆடல்’ நூல் தரும் தகவல்களை நான் என் சிந்தனையுடன் எவ்வாறு இணைத்துக்கொண்டேன் என்ற விளக்கவே ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஓரிரு பொறிகளை எடுத்துக்காட்டினேன். இந்த நூல் முன்னரே குறிப்பிட்டது போன்று ஒரு கானகப் பயணம். இது வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் வாசிக்கும் ஒவ்வொரு தடவையும் புதிய புதிய திறப்புகளை அளித்துக்கொண்டே இருக்கும்.

இந்த நூலின் பின்னணியில் இருக்கும் உழைப்பு சாதாரணமானதல்ல என்பதை வாசிப்பவர் அனைவரும் உணர்வர். இந்த நூல் வெளிவருவதற்குப் பின்னணியில் இருந்த இலங்கை சைவநெறிக் கழகத்துக்கு பாராட்டுகள்.

(25 நவம்பர் 2018 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியான கட்டுரை)

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner