இலங்கையின் மிகப்பழைய பிள்ளையார்

 தமிழ்ச்சூழலில் முற்போக்குவாதிகள் என்று தம்மை சொல்லிக்கொள்வோரால் பிள்ளையார் அளவுக்கு ஆரியக்கடவுள், வந்தேறித்தெய்வம் என்று பயங்கரமாகத் தாக்கப்பட்ட கடவுள் வேறெவரும் இருக்கமுடியாது. உண்மையில் பிள்ளையார் என்ற பெயரே பிள்ளையாருடையது இல்லை தான். தமிழில் சிவனின் பிள்ளைகளாகக் கருதப்பட்ட அத்தனை கடவுளருமே பிள்ளையார் என்று அழைக்கப்பட்டனர். மூத்த பிள்ளையார் (விநாயகர்), இளைய பிள்ளையார் (முருகன்), வடுகப் பிள்ளையார் (வைரவர்), சேய்ஞலூர்ப் பிள்ளையார் (சண்டேசுவரர்) என்று பல பெயர்களை கல்வெட்டு - இலக்கியங்களில் காணலாம். சம்பந்தருக்கும் "ஆளுடைய பிள்ளையார்" என்ற பெயருண்டு. இப்படி நிறையப் பிள்ளையார்கள் இருந்தபோதும், அந்தப்பெயர் பிற்காலத்தில் விநாயகருக்கே தனித்துவமான பெயரானது. தமிழில் இத்தனை வாஞ்சையோடு அழைக்கப்பட்ட கடவுள் எப்படி வந்தேறியாக இருக்க முடியும்?

கணபதி வெங்கலப்படிமம், பொலனறுவை
(12-13ஆம் நூற்றாண்டு)

பிள்ளையார் ஆரியக்கடவுள் என்ற எண்ணம் தமிழ் மனத்தில் பதிவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று கல்கியின் "சிவகாமியின் சபதம்". பல்லவத் தளபதியான பரஞ்சோதியாரால் வடக்கே வாதாபியில் வென்று கொணரப்பட்ட கணபதி விக்கிரகம் திருச்செங்காட்டக்குடியில் நிறுவப்பட்டது எனும் வாய்மொழிக் கதையை அந்தப் புதினம் எழுத்தில் பொறித்து பரவலாக்கியது. இருநூறாண்டுகளுக்கு முன் முத்துசுவாமி தீட்சிதர் பாடிய "வாதாபி கணபதிம் பஜே" எனும் பிரபல கருநாடக சங்கீதக் கிருதியும் அதனுடன் இணைந்துகொள்ள, வாதாபி கணபதியே தமிழகத்தின் முதலாவது கணபதி என்ற "வரலாற்றுத்தகவல்" வேகமாகப் பரவியது. சங்க இலக்கியங்களில் முருகன், சிவன், திருமால் போல எங்குமே பிள்ளையார் வெளிப்படையாகப் பதிவாகவில்லை என்பதைக் கண்டுகொண்ட தமிழார்வலர்களும், பிள்ளையார் வந்தேறி தான் என்று சான்றிதழ் கொடுக்க, அந்தச் செய்தி முடிந்த முடிபாகியது. எனவே, பிள்ளையார் ஒரு ஆரியக்கடவுள்.


பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குடைவரைச் சிற்பம்
(6ஆம் நூற்.)

விடயம் என்னவென்றால் வாதாபியிலிருந்து சிறுத்தொண்டர் கணபதி சிலை கொணர்ந்ததுக்கு எவ்வித வரலாற்றுச் சான்றுகளும் இல்லை. சிறுத்தொண்டர் காலத்துக்கும் (7ஆம் நூற்றாண்டு) முந்திய 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார்பட்டிக் கற்பக விநாயகர் சிற்பம், 4ஆம் அல்லது 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விழுப்புரம் ஆலக்கிராமம் பிள்ளையார் சிற்பம் என்பன அண்மைக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், பிள்ளையார் வடக்கிலிருந்து தமிழகம் வந்தவர் என்ற கருத்து பெரும்பாலும் அடிபட்டுப்போயிற்று என்றே சொல்லவேண்டும்.

என்றால் பிள்ளையாரை தென்னகத்தின் பூர்வீகக் கடவுளாகக் கொள்ளலாமா? தென்னகத்துக்கு மட்டுமில்லை, பிள்ளையாரை அதற்கும் தெற்கே உள்ள ஈழவள நாட்டுக்கும் பூர்வீகமான தெய்வம் என்று சொல்லலாம். தமிழ் ஊர்களுக்குச் சமனாக, இங்கே சிங்கள ஊர்களிலும் மூலைக்கு மூலை பிள்ளையார் சிலைகளைக் காண முடியும். சிங்களத்தில் அவர் பெயர் கணதெவியோ. கண என்றால் கர்ணம்; காது. காதுத்தெய்வம். யானைச்செவியால் பெயர் பெற்ற தெய்வம். சிறுபான்மையாக தமிழ்ச்சாயலில் "புல்லேயார்" என்று அவர்கள் அழைப்பதும் உண்டு.

ஆலக்கிராமம் பிள்ளையார்
(4-5ஆம் நூற்.)

கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் அனுராதபுரப் பகுதிச் சிங்களவர்களிடம் வழங்கிய நாட்டுப்புறக் கதையொன்றை மானுடவியல் ஆய்வாளர் கணநாத் ஒபேசேகர பதிவுசெய்திருக்கிறார். அதன்படி, தேவசமாகம் (தேவர்களின் ஒன்றுகூடல்) முடித்த இசிவரதேவன் (ஈஸ்வரன் = சிவன்) தன் யானையில் வீடு திரும்புகிறான். வீட்டில் மனைவி உமையாங்கனாவைக் காணவில்லை. அவளைத் தேடி ஆற்றங்கரைக்கு வரும் இசிவர, அங்கு அவள் நீராடிக் கொண்டிருப்பதையும், தன் மனைவியின் ஆடைகளுக்கு அருகே ஒரு இளைஞன் நின்றுகொண்டிருப்பதையும் கண்டு திடுக்கிடுகிறான். ஆத்திரத்தில் அவன் கண்கள் சிவக்கின்றன, மின்னல் வேகத்தில் அவன் கையிலிருந்த வாள் சுழல்கின்றது.

கரையில் நின்றிருந்த இளைஞனின் தலைவெட்டப்பட்ட சடலம் கால்களை உதைத்து தளர்கின்றது. உமையாங்கனா கத்திக்கூப்பாடு போடுகிறாள். அந்த இளைஞன் உமையாங்கனாவின் மகன்! நீராடுவதற்கு முன் பாதுகாப்பதற்காகத் தானே உருவாக்கிக் கொண்ட மகன். அவனை உயிர் மீட்காவிட்டால் தானும் ஆற்றில் பாய்ந்து இறந்துவிடுவேன் என்று அழுது குழறுகிறாள் அவள்.

நாளந்தாக் கடிகைப் பிள்ளையார், மாத்தளை (9-10ஆம் நூற்.)

ஆனால் இசிவர நம்ப மறுக்கிறான். அதெப்படி ஒரு பெண் தனியே குழந்தை பெற்றெடுக்க முடியும்? முடியும் என்று சொன்ன உமையாங்கனா ஒரு புல்லைப் பிய்த்து ஒரு மகனாக மாற்றுகிறாள். இப்படி ஒன்று இரண்டல்ல; ஏழு புல்களால் ஏழு சிறுவர்களை உண்டாக்கிய பின்னர் தான் இசிவர முழுமையாக நம்புகிறான். நெகிழ்ந்துபோய் "நான் பெற்ற செல்வங்களே" என்றபடி ஏழு பேரையும் கட்டியணைக்கிறான். எப்படியோ அவர்களில் அஞ்சிய ஒரு மகன் இசிவரவின் அக்குளுக்குள்ளால் நழுவி வெளியே வந்துவிட்டான். எஞ்சிய ஆறு மைந்தர்களும் இணைந்து ஆறு முகம், பன்னிரு கைகளுடன் ஒற்றைக் குழந்தை ஆனார்கள். இசிவர அணைத்தபோது "மகே கண்ட குமாரயா" என்று அழுததால் அந்தக் குழந்தைக்கு "கந்தகுமாரன்" என்ற பெயர் உருவானது. அக்குளுக்குள்ளால் ஓடிய மகனைப் பார்த்து "அடேய் விலகிப் பிரிந்தவனே" என்றான் இசிவர. எனவே அவன் பெயர் "கடவரை".

அப்போதும் உமையாங்கனாவின் ஒப்பாரி நிற்காததால் தனது யானையின் தலையை வெட்டி, வெட்டப்பட்ட மூத்தமகனின் கழுத்தில் பொருத்தி எழச்செய்தான் இசிவர. ஆனந்தக்கண்ணீருடன் அவனைக் கட்டியணைத்து பெரிய காதுகளைத் தடவிய உமையாங்கனா அவனுக்கு "காது" என்று பெயர் சூட்டினாள். அவன் தான் "கணதேவன்". வெட்டப்பட்ட கணதேவனின் மனிதத்தலை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு கரையொதுங்கி ஆம்பலும் (ஒலு) நீல அல்லியும் (மானெல்) பூக்கும் "ஒலுமானெல்வில" குளமாக மாறியது. அதேபோல் அறுக்கப்பட்ட யானையின் உடலும் ஆற்றில் விழுந்து "சுவண்ண ககுளுவோ" எனும் பொன் நண்டாக வாழத்தொடங்கியது.

ஈஸ்வரன் / இசிவர தெவியோவால் சொந்த மகனின் தலை வெட்டப்பட்டு யானைத்தலை ஒட்டப்பட்ட கதை, இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் போலவே, இலங்கைச் சிங்களவரிடம் பரவியிருக்கிறது. தென்னிலங்கையில் இந்தக் கதையின் வெவ்வேறு மாறிய வடிவங்கள் கிடைத்திருக்கின்றன. ஒரு கதையில், கணதேவனின் வெட்டப்பட்ட மானுடத்தலை தேங்காயாக மாறுகிறது. அதனாலேயே கணதேவன் முன் தேங்காய் உடைத்து வழிபடுவது முக்கியமான மரபாக மாறியது. இன்னொரு தொன்மத்தில் ஈஸ்வரனின் கையிலிருந்து நழுவி ஓடிய மகன் ஐயனார். அவர் கந்தகுமாரனுக்கு அய்யா (அண்ணா) என்பதால் அய்யநாயக்கன். ஆனால் தென்னிலங்கையில் அய்யநாயக்க என்ற பெயரில் புகழ்பெற்றுள்ள ஐயனாரும், கடவரை தெய்வமும் வேறுவேறு. கடவரை இன்று சிங்கள சாதிய அடுக்கில் ஒடுக்கப்பட்டுள்ள ரொடியா இனத்தவரின் குலதெய்வம்.

பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட "வதன் கவி பொத்த" கணதேவனைத் துதித்து சிங்கள அரிச்சுவடியைக் கற்பிக்கும் ஒரு சிறுவர் இலக்கியம். அந்நூலையும் பிள்ளையாரின் புகழ்பாடும் "கணதெவி ஹெல்ல" எனும் சிங்கள நூலையும்,சிறுவர்களுக்கு பாடமெடுப்பது கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சிங்களப் பாடசாலைகளில் வழக்கமாக இருந்ததாம். கணதேவன் அறிவின் தெய்வம்.

காலனிய ஆட்சிக்காலத்தில் இலங்கையில் பிள்ளையார் பிரபலமாக இருந்தமைக்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. பிரித்தானியர் ஆட்சியில் திருத்தப் பணிகள் ஆரம்பித்து 1946இல் முழுமையடைந்த களனி விகாரத்தில் இலங்கையின் மிக அழகான பிள்ளையார் சிலைகளில் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. பிரித்தானியரும் இடச்சுக்காரரும் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு உட்பட இலங்கை முழுவதும் யானைமுகக் கடவுள் பிரபலமாக இருப்பதைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

களனி இராசமா விகாரப் பிள்ளையார் (1946 நிறுவப்பட்டது)

மலபார்-சோழமண்டலம்-இலங்கை பற்றி பல அரிய தகவல்களை 1672இல் தன் நூலில் பதிவு செய்திருக்கும் பிலிப்பஸ் பால்டியஸ் எனும் இடச்சுப் பாதிரியார், கிழக்கிந்திய உருவவழிபாட்டுப் பாகன்களின் முதன்மையான தெய்வம் இக்சோராவின் (Ixora - ஈஸ்வரன்) மகனாக குயினவதியை (Quinevady - கணபதி) அறிமுகம் செய்கிறார். குயினவதி மலபார், சோழமண்டலத்தார், சிலோனீஸ் ஆகியோரின் விருப்புக்குரிய தெய்வம். நான்கு கரமும் நெற்றியில் இளம்பிறையும் கொண்ட குயினவதி யானைத்தலையும் பாம்பால் கட்டிய நீண்ட சடையும் கொண்டவர்.

குயினவதி, இக்சோராவின் மகன்
(பொபி 1672)

1601இல் மட்டக்களப்புக்கு வருகை தந்த ஸ்பில்பேர்கன் (Spillbergen) எனும் இடச்சு அதிகாரியின் குறிப்புகளில் ஞானம், செல்வம் என்பவற்றின் தெய்வமாக கண்டி அரசின் மக்கள் பிள்ளையாரை வழிபடுவது குறிப்பிடப்பட்டுள்ளது. யானைத்தலையும் மனித உடலும் ஆட்டின் கால்களும் கொண்ட அந்த தெய்வத்தின் ஓவியம் ஸ்பில்பேர்கனின் குறிப்பில் இணைக்கப்பட்டிருக்கிறது. இலங்கைப்பிள்ளையாருக்கு ஆட்டுக்கால் இருந்தது என்ற தகவல் விந்தையானது. ஆனால் அதற்கு முந்தைய உள்நாட்டுக் குறிப்புகளில் பிள்ளையார் சாதாரணமாக யானைத்தலையுடனேயே வருகிறார்.

"சிங்குளாயர்" ஞானமும் நலமும் வேண்டி வழிபடும் தெய்வம்
(1605 ஓவியம்)

பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிந்தையது என்று ஊகிக்கக்கூடிய யானைமுகப் பிள்ளையாரின் சுவர் ஓவியமொன்று மாத்தளை அலுவிகாரை குகை ஓவியங்களுக்கு மத்தியில் காணப்படுகிறது. பரவி சந்தேசய (புறாவிடு தூது) முதலிய 14 - 15ஆம் நூற்றாண்டு சிங்கள தூது இலக்கியங்களிலும் ஆனைமுகனான கணதேவன் துதிக்கப்படுகிறார்.

அலுவிகாரைக் கணபதி ஓவியம்
(கண்டி அரசு காலத்தையது. 15 - 18ஆம் நூற்.)

பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஸ்தபதி இராயர் எனும் தென்னகச் சிற்பியைக் கொண்டு கம்பளை அரசன் நான்காம் விஜயபாகு (1341-1351) அமைத்த இலங்காதிலக விகாரையில் புத்தபிரான் சிலையைச் சுற்றியுள்ள அலங்காரத் தோரணத்தில் பிள்ளையாரும் தேவர்களுக்கு மத்தியில் காட்சி அளிக்கிறார். கம்பளையை ஆண்ட மூன்றாம் விக்கிரமபாகுவால் (1357-1374) அமைக்கப்பட்ட எம்பக்கே முருகன் தேவாலயத்திலும் புத்தரின் பரிவாரமாக கணதேவன் தோன்றுகிறார். 9-10 நூற்றாண்டுகளுக்கிடையே கட்டப்பட்டதாகக் கருதப்படும் மாத்தளை நாளந்தா கடிகையிலும் தொன்மையான பிள்ளையார் சிற்பம் ஒன்று அமைந்துள்ளது.

என்றால், கணபதி வழிபாடு இலங்கையில் எப்போதிருந்து நீடித்து வருகிறது? தமிழகம் போலவே இங்கும் திடுதிப்பென்று தான் பிள்ளையார் தோன்றுகிறாரா?

இலங்காதிலக விகாரத்து புத்தபிரான் தேவதோரணத்தில் பிள்ளையார்.
14ஆம் நூற்றாண்டு.

அல்லது அவர் பௌத்தத் தெய்வமா? பிள்ளையாரை ஆரியக்கடவுள் என்று விமர்சித்த சிலர், இன்று வேறொரு விமர்சனத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். யானை பௌத்தத்தின் அடையாளம். எனவே பிள்ளையார், சிவனால் தலைவெட்டப்பட்டு சைவ/வைதிக சமயத்துக்குள் இழுக்கப்பட்ட புத்தர். இந்த இலங்கைச் சான்றுகளை அப்படிப் புரிந்து கொள்ள முடியுமா?

கணதேவன் வழிபாட்டுக்கு மேலெல்லை வகுப்பதற்கு இலங்கை வரலாற்று இலக்கியங்கள் உட்பட எங்கும் தெளிவான சான்றுகள் இல்லை, மர்மமான ஒரேயொரு சான்று தவிர!


அனுராதபுரத்தின் மிகிந்தலையிலுள்ளது கண்டக சைத்தியம் எனும் விகாரம். மகாவம்சம் முதலிய நூல்களில் தேவநம்பிய தீசனோடு இணைத்துச் சொல்லப்படும் இக்கட்டிடம், சூரதீச மன்னனால் அல்லது இளமணி தீச மன்னனால் (பொமு 119 -109) அமைக்கப்பட்டதாகலாம். குறைந்தது பொமு முதலாம் நூற்றாண்டில் இது நிறைவுற்றிருக்கவேண்டும் என்பது ஆய்வாளர் கருத்து. இலங்கையின் மிகப் பழைமைவாய்ந்த கலைவேலைப்பாடுகள் காணப்படும் இந்த விகாரத்தின் தளவரிசை அலங்காரமொன்றில் கனிகளும் தின்பண்டங்களும் அள்ளி வந்து வணங்கும் குள்ளர்களுக்கு நடுவே இருகரங்களுடன் அமர்ந்திருக்கிறார் பிள்ளையார்!

























கண்டக சைத்தியத்துக் கணபதி, மிகிந்தலை, அனுராதபுரம். (அண்ணளவாக பொமு 2 - 1ஆம் நூற்றாண்டு)

ஆலயக் கட்டிடக்கலையில் பூதவரியில் பிள்ளையார் அமைக்கப்படுவது தமிழகத்து வழக்கம். ஆனால் பல்லவ - சோழர் காலக் குடைவரை / கற்றளிகளுக்குப் பல நூற்றாண்டுகள் முன்பே இலங்கை விகாரமொன்றில் பிள்ளையார் சிற்பம் அமைந்தது எவ்வாறு என்பதை இன்றுவரை சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை.

தமிழகத்தில் தெற்கே பாண்டி நாட்டுக் குடைவரைகளில் தான் பிள்ளையார் திருவுருவங்கள் முதலில் தோன்றுகின்றன. 8ஆம் நூற்றாண்டளவிலேயே பல்லவக் குடைவரைகளில் பிள்ளையார் இடம்பிடிக்கத் தொடங்குகிறார். எனவே பாண்டிய நாட்டிலிருந்தே வட தமிழகத்துக்கு பிள்ளையார் வழிபாடு அறிமுகமாயிருக்கவேண்டும் என்று ஊகிப்பார் ஆய்வாளர் இரா.கலைக்கோவன்.

கண்டக சைத்தியத்து பிள்ளையாரை தமிழகக் கட்டிடக்கலையோடு இணைத்துப் பார்ப்பதென்றாலும், கண்டக சைத்தியத்தின் காலத்தை குறைந்தது பொபி 5ஆம் நூற்றாண்டுக்கு பின்னகர்த்தவேண்டும். அந்த சைத்தியத்தை ஆராய்ந்த பெரும்பாலான ஆய்வாளர்கள் இன்றுவரை அப்படிச்சொல்லவில்லை. கணபதி வழிபாடு பௌத்தத்துக்கு அத்தனை நெருக்கமானதல்ல எனும் கருத்திலுள்ள இலங்கை ஆய்வாளர்கள் சிலர், சுதேச நாட்டார் தெய்வமொன்று பௌத்தக் கட்டிடக்கலையில் இடம்பிடித்ததாகத்தான் ஊகிக்கிறார்கள். என்றால், பிள்ளையார் பாண்டிநாட்டுக்கும் தெற்கே இலங்கையில் தோன்றி வடக்கே பரவியவர் தானா? அச்சு அசலாக பிள்ளையார் தென்னகக் கடவுள் தானா?

யதார்த்தமாகச் சொல்வதென்றால், யானைக்கும் மனிதனுக்கும் உறவு உருவாகத் தொடங்கிய நாளிலிருந்தே யானைமுகக்கடவுள் வழிபாடு நீடிக்கிறது எனலாம். யானையின் பிரமாண்டமும் குழந்தைத்தனமும் அதைக் காணும் யாருக்குமே ஆர்வமூட்டக்கூடியவை. மனிதனை மலைக்கச் செய்யும் எல்லாமே அவனுக்கு அச்சமூட்டியிருக்கின்றன என்பதால், யானையும் கடவுளானதில் வியப்படைய எதுவுமில்லை. இன்றுள்ள யானைகளின் மூன்று இனங்களில் ஒன்றான ஆசிய யானை, தென்னாசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது தான். அது இந்த மண்ணின் விலங்கு. இந்தியாவிலிருந்து இந்தோனேசியா வரை ஆசிய யானை பரந்துள்ள எல்லா நிலங்களிலுமே யானைமுகத் தெய்வமொன்று வீற்றிருக்கிறது.
எம்பக்கே தேவாலயப் பிள்ளையார்
(14ஆம் நூற்.)


இந்திய மதங்கள் ஒன்றோடொன்று கொண்டும் கொடுத்தும் உருவானவை. பௌத்தத்திலும் சமணத்திலும் சிவனும் திருமாலும் வெவ்வேறு பெயரில் இடம்பிடித்திருப்பது போல, வைணவத்தில் தசாவதார மூர்த்தியாக புத்தர் இணைக்கப்பட்டது போல, இந்த ஒருங்கிணைப்பு பன்னெடுங்காலமாக தொடர்ந்துகொண்டே வருகிறது. தத்துவக்கோட்பாடுகளுக்கு ஒவ்வொரு மதமும் இன்னொரு மதத்துக்கு கடன்பட்டிருக்கிறது தான். ஆனால் தெய்வங்களைப் பொறுத்தவரை எந்தவொரு மதமும் இன்னொரு மதத்துக்கு கட்டுப்பட்டதே கிடையாது. ஏனெனில் கடவுளர் தோன்றிய பின்னர் தான் மதங்கள் தோன்றுகின்றன.

தெய்வங்களை மதங்கள் நிலைநிறுத்தலாமெனினும் தெய்வங்களை உருவாக்குபவை மதங்கள் அல்ல; நிலங்கள். கணபதி, யானைகள் உலவிய அத்தனை மண்ணுக்கும் உரிய இறைவன். சிங்களக் கணதெவியே தமிழ்ப் பிள்ளையார். தமிழ்ப் பிள்ளையாரே வடநாட்டுக் கணேஷ். கணேஷ் யப்பானில் கங்கிதன் (Kangiten) ஆகிறான். கங்கிதன் தாய்லாந்தில் ப்ரா பிகானட் (Phra Piganet) ஆகிறான்.

இத்தனைக்கும் தமிழில் பிள்ளையார் பற்றிய மிகப்பழைய பதிவில் இந்தத் தலை துண்டான கதையே இல்லை. சம்பந்தர் தேவாரத்தின் படி சிவனும் உமையும் களிறும் பிடியுமாக மாறியபோது பிறந்த குஞ்சரக்கன்றே கணபதி. இதையே குறியீடாக்கி சைவத்துக்கும் சாக்தத்துக்கும் தான் பௌத்தம் பிறந்தது என்று சொன்னால் எத்தகைய மொண்ணைத்தனமான கருத்து அது?

பிள்ளையார் சைவக்கடவுள் தான். பௌத்தக்கடவுள் தான். வைணவத்துக்கும் சமணத்துக்கும் கூட உரியவன் தான். ஆனால் அது சமாந்தர உறவு. இங்கு இதை அழித்து அதுவாக நிலைபெற்றது; அது ஒழிக்கப்பட்டு இதுவாக மாற்றப்பட்டது என்பதெல்லாம் அரைவேக்காட்டுத்தனமான அரசியல் நிலைப்பாடுகள். வெறும் தொன்மத்தை வைத்து ஊகிக்கக்கூடியவை அல்ல வரலாறும் பண்பாடும். ஒவ்வொரு நிலத்திலும் யானைமுகனுக்கு ஒவ்வொரு தோற்றம். அந்தந்த மண்ணின் மணம். வேழங்கள் விளையாடும் கிழக்குலக நாடுகள் அத்தனையும் பிள்ளையாருக்கு உரிமை கோர முடியும். அத்தனை நீண்டது களிற்றியானைநிரை. அத்தனை பழையவன் விநாயகன்.

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner