கார்த்திகைத் திருநாள்

0 comments


 "அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி" பாடலில் ஒரு வரி வரும். “கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே”. போதாக்குறைக்கு "வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்" பாட்டிலும் அதே வரி வருகிறது. "கார்த்திகை போனால் மழை இல்லை மானே". அது உண்மையா? கார்த்திகை பிறந்தால் தானே இப்போதெல்லாம் மழையே வலுக்கிறது?

வேறு காரணமொன்றும் இப்போதைக்கு சொல்ல முடியாது. காலநிலை மாற்றம் அவ்வளவு தான். ஆனால் "கார்த்திகை போனால் கடும் மழை இல்லை" என்ற பழமொழிக்கு ஈராயிரம் ஆண்டு அனுபவமும் வானியல் அறிவும் இருக்கிறது. அதற்கு ஆதாரம் சங்க இலக்கியமான அகநானூறு. அதன் 141ஆம் பாடல் அப்படித் தான் சொல்கிறது.
கணவனைப் பிரிந்திருக்கும் தலைவி அண்ணாந்து பார்க்கிறாள். “வானத்தில் மழையைக் காணவில்லை. முயல் என்று நாமெல்லாம் சொல்லும் களங்கம் நிலவில் பளிச்சிட்டுத் தெரிய, பூரண நிலவு கார்த்திகை நட்சத்திரத்தை நெருங்குகிறது. எல்லோரும் விளக்கேற்றி வைத்து மாலை தூக்கி தோரணம் கட்டுகிறார்கள். என்னோடு இந்தப் பொழுதைக் கொண்டாடவாவது அவர் வரவேண்டுமே” என்று பெருமூச்செறிகிறாள்.
“வானில் மழை வரும் அறிகுறி இல்லை” என்று தலைவி சொல்வது, "கார்த்திகை போனால் மழை இல்லை" பழமொழியைத் தான். கார்த்திகை நட்சத்திரம் இப்பாடலில் “அறுமீன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கார்த்திகைப் பூரணையில் விளக்கேற்றி, மாலை தோரணம் கட்டித் தமிழர் கொண்டாடினர் என்பதற்கான மிகப்பழைய சான்றுகளில் ஒன்று இது.
கார்த்திகை விளக்கீட்டுக்கு இன்னொரு சங்கச் சான்று இருக்கிறது. நற்றிணையின் 202ஆம் பாடலில் தலைவனும் தலைவியும் வீட்டை விட்டு ஓடிப்போகிறார்கள். ஓடிப்போவதை அப்போது 'ஸ்டைலாக' "உடன்போக்கு" என்று அழைப்பார்கள். அவளது கவலையைப் போக்குவதற்காக பாதை நெடுகிலும் “புதினம்” காட்டிச் செல்கிறான் தலைவன். வீதியோரம் கோங்கு மரங்கள் பூத்துக்குலுங்குகிறது. அதைக்காட்டி “உன் தந்தை பல தருமகாரியங்கள் செய்யும் கார்த்திகைத் திங்களில் வரிசையாகச் செல்கின்ற தீபங்கள் போல பல கோங்க மலர்களைச் சூடி நிற்கும் இக்காட்டைப் பார்” என்கின்றான் தலைவன். கோங்கமரத்தின் மஞ்சள் பூக்களை தீபங்களோடு ஒப்பிட்டது சரியான உவமை தான். கார்த்திகை விளக்கீட்டை இப்பாடலில் “அறுமீன் கெழீஇய அறம்செய் திங்கள்” என்று பாடுகிறார், புலவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.

கோங்கம் பூக்கள் - Cochlospermum religiosum.


“கார்த்திகை விளக்கீடு” என்ற சொல்லை முதன்முதலில் தமிழிலக்கியத்தில் பயன்படுத்தியவர் சம்பந்தர். மயிலையில் பூம்பாவையை உயிர்ப்பித்த பதிகத்தைப் பாடும் போது, விளக்கீடு காணாமல் போதியோ பூம்பாவாய் என்று பாடுகின்றார் அவர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது இதைக் “கார்த்திகைச் சாறு” (சாறு = விழா) என்று பாடியிருக்கிறது. (திருவண்ணா)மலை உச்சியில் கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்பட்டது பற்றி பற்றி சீவக சிந்தாமணி “குன்றில் கார்த்திகை விளக்கீட்டென்ன” என்று பாடுகிறது. இன்னும் தொல்காப்பியத்தில் வருகின்ற “வேலி நோக்கிய விளக்கு நிலையும்” (பொருளதிகாரம் புறத்திணையியல், 35) என்ற வரிகளுக்கு கார்த்திகை விளக்கு என்று விளக்கம் சொல்கிறார் நச்சினார்க்கினியர். இதெல்லாம் கார்த்திகை விளக்கீட்டின் பழைமையையும் புகழையும் விளக்கப் போதுமானவை.
தீபாவளியும் கார்த்திகையும் உண்மையில் ஒரே மூலத்தைக் கொண்டவை தான். தீபாவளி கொண்டாடப்படவேண்டிய திதி, ஐப்பசி மாத பதினான்காம் தேய்பிறை. கார்த்திகை கொண்டாடப்படவேண்டிய திதி, கார்த்திகை மாத பூரணை. இரண்டு நாட்களுக்கும் கணக்கிட்டால் பெரும்பாலும் பதினைந்து நாள், சிறுபான்மை நாற்பத்தைந்து நாள் வித்தியாசமே வரும். சுமார் ஒரு மாத இடைவெளிக்குள், அமாவாசையில் கொண்டாடப்பட்ட தீபவிழாவும், பூரணையில் கொண்டாடப்பட்ட தீபவிழாவும் முறையே தீபாவளியாகவும், கார்த்திகையாகவும் மாறி வளர்ச்சி கண்டிருக்கின்றன என்பதே உண்மை. இதற்கு இன்னொரு சான்றாக, ஐப்பசி பதினான்காம் தேய்பிறைக்குப் பதில், தமிழகம் தவிர்ந்த அனைத்து இந்தியப்பகுதிகளிலும், ஐப்பசி அமாவாசையிலேயே தீபாவளி கொண்டாடப்பட்டுவருகிறது என்பதைக் காணலாம்.
இரண்டு விழாக்களும் ஒன்று தான் என்பதற்கு இன்னொரு வலுவான சான்றும் உள்ளது. பெரும்பாலான தமிழருக்கு இன்றும் தீபாவளி முன்னோர் வழிபாட்டு நாள் தான். பண்டிகை, கொண்டாட்டங்களுக்கு மேல் அதுவே தீபாவளியன்று முதலிடம் பிடிக்கின்றது. கார்த்திகையும் அதே முன்னோர் வழிபாட்டு நாள் தான் என்பதை நாம் இன்றும் காண்கிறோம். தீபாவளி பற்றிய மிகப்பழைய குறிப்புகளில் ஒன்று இலங்கையிலும் கிடைத்திருக்கிறது. 13ஆம் நூற்றாண்டளவில் இலங்கையில் எழுந்த சரசோதிமாலை நூல். அதில் “பிதிர்கள் இன்பமுறு தீபாவலி” என்று தான் தீபாவளி சொல்லப்பட்டிருக்கிறது. பிதிர்கள் என்றால் முன்னோர்கள். எழுநூறு ஆண்டுகளுக்கு முன் இலங்கையிலும் அது முன்னோர் வழிபாட்டு நாளே தான் என்பதை நாம் ஊன்றிக்கவனிக்கவேண்டும்.
சரி, இரண்டும் ஒரே பண்டிகை தான் என்றால், இரு வேறு தினங்கள் எப்படி வந்திருக்கின்றன? ஒன்று பூரணை, ஒன்று அமாவாசை, ஒரே விழா எப்படி இரு வேறு சம்பந்தமில்லாத நாட்களுக்கான விழாக்களாக உருத்திரிந்திருக்க முடியும்?

ஒரு விழா கொண்டாடப்படுவதற்கும் கைவிடப்படுவதற்கும் புவியியல் பிரதேசம் முக்கியமான காரணியாக அமைகின்றது. சில இந்திய நாட்காட்டிகள் மாதத்தை அமாவாசையிலிருந்து தொடங்க, இன்னும் சில நாட்காட்டிகள் பூரணையிலிருந்தே மாதத்தை ஆரம்பிக்கின்றன. நாம் தமிழில் இவை இரண்டின் படியும் இல்லாமல் சூரிய வழியில் மாதத்தைக் கணிக்கின்றோம். என்றாலும், பாரம்பரியமாக நாம் கொண்டாடிவந்த சந்திர வழியிலான பண்டிகைகள் இன்றும் தொடர்கின்றன.

அமாவாசையில் மாதம் தொடங்குவோர் அந்நாளிலும், பூரணையில் மாதம் தொடங்குவோர் பூரணையிலும் கார்த்திகை விளக்கீட்டைக் கொண்டாடி வந்திருக்கின்றனர். அல்லது, பாவை நோன்பு போல அது மாதம் முழுவதும் கொண்டாடப்பட்ட நோன்பாகவும் இருந்திருக்கலாம். அப்படி அந்த விழா தொடங்கிய மற்றும் முடிந்த நாட்கள், வடக்கே தீபாவளியாகவும் தெற்கே கார்த்திகை விளக்கீடாகவும் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது. தமிழரின் தீபாவளி அமாவாசைக்கு ஒருநாள் முன்பே கொண்டாடப்படுவதால், இதற்கு பழைய முன்னோர் வழிபாட்டுத் தொடர்ச்சியும் இருக்கக்கூடும்.

தாய்லாந்திலும் கேரளத்திலும் கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்படும் சான்றுகள் கிடைத்தாலும், இன்று அது தமிழரால் மாத்திரமே பெருவாரியாகக் கொண்டாடப்படும் பண்டிகை. தீபாவளி மவுசின் முன்னிலையில் நாம் நம் எஞ்சியிருக்கும் மிக நீண்ட பாரம்பரியத்தை மறுதலித்து வருகிறோம்.

அதற்காக ஏற்கனவே இந்துப் பண்பாட்டுத்திருவிழாவாக புகழ்பெற்றிருக்கும் தீபாவளியைக் கைவிடுவதோ, புறக்கணிப்பதோ சாத்தியமல்ல. அதற்கும் மேல், ஆரியப்பண்டிகை, திட்டமிட்ட சதி என்றெல்லாம் சொல்லப்படும் மொண்ணைத்தனமான பரப்புரைகளில் எந்த உண்மையும் இல்லை. அதுவும் நம் கார்த்திகையின் திரிந்த வடிவம் தான். கார்த்திகையை, தீபாவளியை விட விமரிசையாகக் கொண்டாடுவது ஒன்றே நாம் செய்யக்கூடியது.

இந்தக் “கார்த்திகை விளக்கீடு” என்ற சொல்லை இன்று நாம் சாதாரணமாகப் பயன்படுத்தி வருகிறோம். இது சம்பந்தர் காலத்தில் புழங்கிய சொல். குறைந்தது, 1300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சொல் என்று எண்ணிப்பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது. சங்க இலக்கியங்கள் என்று செல்லும் போது, அதன் பழைமை இன்னும் பின்னுக்குத் தள்ளப்பட்டு சுமார் 2000 வருடங்கள் என்று செல்கின்றது. சாதாரண மனித ஆயுள் வெறும் 70 – 80 ஆண்டுகள் இருக்குமா? சும்மா கணக்குப் போட்டுப் பாருங்களன், 2000 ஆண்டு என்றால் எத்தனை தலைமுறை தாண்டிச் சென்றிருக்கும்?

அத்தனை ஆண்டுகள் முந்தி வாழ்ந்த நம் முப்பாட்டி ஒருத்தியோடு, முப்பாட்டன் ஒருவனோடு நாம் கொள்ளும் உறவு தான் இந்தக் கார்த்திகைத் திருவிழா. அவனும் அவளும் கொண்டாடியது போலவே அகல் விளக்கில் தீபமேற்றி, முன்னோரைப் போற்றிக் கொண்டாடுகிறோம், நாம் அவர்களை இக்கணத்தில் எண்ணிப்பார்ப்பது போலவே, அவர்கள் அவர்களுக்கும் முந்திய முன்னோரை இதே நாளில் எண்ணிப் பார்த்திருப்பார்கள் என்பதை சிந்தியுங்கள். எத்தனை ஆயிரம் ஆண்டுகள் முந்தி வாழ்ந்த நம் இரத்தசொந்தம் ஒன்றுடன் மானசீகமாக உறவாடுகிறோம். எண்ணிப் பார்க்கவே கண்கள் பனிக்கச் செய்யும் அற்புதமான தருணங்களுள் ஒன்று அது!

இனிய கார்த்திகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
(இரண்டாண்டுகளுக்கு முன் "தமிழரின் விளக்கொளி விழா" என்ற தலைப்பில் அரங்கம் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் திருத்திய வடிவம்)
மேலும் வாசிக்க »

தைத்திருநாளும் தமிழுலகும்

0 comments
வழக்கமாக தைப்பொங்கலன்று பேஸ்புக் வந்தாலே "சித்திரையா, தையா, எது தமிழர் புத்தாண்டு?" என்று, 'உலக தமிழ்ப்புத்தாண்டு பாதுகாவலர் சங்கம்' சார்பாக பொங்குவது தான் என் வழக்கம். இம்முறை அந்தச் 'சங்கம் முக்கியமில்லை; சாப்பாடு தான் முக்கியம்' என்ற சரித்திர முக்கியத்துவம் மிக்க முடிவை எடுத்திருப்பதால் ஒரு 'பொங்கல்' சாப்பாட்டுப் பதிவு. 😊

'பொங்கல்' என்ற சொல்லுக்கு சங்க இலக்கியங்களைப் பொறுத்தவரை "கொதித்து மேலெழல்" அல்லது "செழித்தல்" என்ற பொருள் மட்டும் தான் உண்டு. அது ஒரு உணவுப்பொருளின்பெயராக முதன்முதலாக சீவக சிந்தாமணியில் தான் வருகிறது. "மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்" என்கிறார் திருத்தக்கதேவர். சிந்தாமணியின் காலம் 9ஆம் நூற்றாண்டு என்று கொள்ளப்படுகிறது.


அதற்கு முன் பொங்கல் என்று ஒரு சாப்பாடு இருக்கவில்லையா? என்று கேட்டால், சரியாகச் சொல்லமுடியாது. சம்பந்தர் தன் மயிலைப் பதிகத்தில் தைப்பூசத்தில் பெண்கள் தயாரிக்கும் "நெய்ப்பூசு ஒண்புழுக்கல்" எனும் உணவு பற்றிப் பாடுகிறார். ஆண்டாள், மார்கழி மாதப் பாவை நோன்பின் இறுதியில் "பாற்சோறு மூட நெய் பெய்து" அது முழங்கையில் வழிய இன்பமாக உண்பதை குறிப்பிடுகிறார். ஆண்டாள் இங்கு பாடிய உணவு, வைணவக்கோவில்களில் இன்றும் படையலிடப்படும் "அக்கார அடிசில்" என்று சொல்கிறார்கள். இதெல்லாம் பொங்கலுக்கு முந்திய, அல்லது பொங்கலை ஒத்த தமிழர் உணவுகள் ஆகக்கூடும். (சம்பந்தரின் "தை"ப்பூசம், ஆண்டாளின் "மார்கழித்" திங்கள், இரண்டையும் கவனியுங்கள்!)

சிங்களவரிடம் தேங்காய்ப்பாலில் சோற்றை புழுங்கச் செய்யும் 'கிரிபத்' முக்கியமான பண்பாட்டு உணவாக இருக்கிறது. கேரளாவில் அறுவடைக்குப் பின் புதிரை கோவிலுக்குக் கொடுத்து பொங்கல் வைக்கும் நிகழ்வை 'பொங்காலா' என்கிறார்கள். கேரளத்தலைநகர் திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் கண்ணகி கோவிலில் மாசி மாதம் நிகழும் 'ஆற்றுக்கால் பொங்காலா' மிக விசேடம். அங்கும் பெண்களுக்கே முன்னுரிமை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு இலங்கையில், எங்களூர்ப் பக்கம், அறுவடை முடிந்த பின் 'களவட்டிப்பொங்கல்' (களம் வெட்டிப் பொங்கல்) வைத்து சூரியனுக்கும் பூமிதேவிக்கும் நன்றி சொல்லும் மரபு உண்டு. சோழர் கல்வெட்டுக்களில் சொல்லப்படும், அறுவடைத் திருநாளான 'புதுயீடு' என்பதே பின் தைப்பொங்கலாக வளர்ந்தது என்கிறார்கள்.

ஆக, தென்னகச்சமூகத்தின் முக்கியமான திரவ உணவான பால், திண்ம உணவான நெல்லரிசிச்சோறு, அந்த உணவைத் தந்த கதிரவன், அந்த உணவு கிடைக்கும் பிரதான வழிவகையான அறுவடை, இவையெல்லாமே இணையும் மையப்புள்ளி தான் தைப்பொங்கல். பொங்கல் நம் மத்தியில் விசேடமான உணவாக மாறியதிலும், இயல்பாகவே ஒரு கொண்டாட்ட நாளாக வளர்ச்சி கண்டதிலும் வியப்பேதும் இல்லை தானே?

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 😇🌾🌞🙏

(இந்தப் பதிவை நான் முகநூலில் பதிந்த பின்னர் சுவையான இரு கருத்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. அந்தப் பின்னூட்டங்களும் அவற்றுக்கான பதில்களும் கீழே:



சங்க இலக்கியங்களில் தை நீராடல் மட்டும் தானே சுட்டப்படுகிறது? பிற்காலத்தைய ஆண்டாளும் நோன்பு, நீராடல் என்று தானே பாடுகிறார்!!

உழவர் திருநாள், பொங்கல், சூரிய வணக்கம் இவ்வாறு எப்படி மாற்றம் கண்டது? ஏதேனும் தரவுகள் உண்டா?





இது சற்று ஆர்வமூட்டும் கேள்வி தான். இரண்டு விடயங்கள் இருக்கின்றன.
1. இன்றைய தை மாதமும், தமிழ் இலக்கியங்கள் சொல்லும் தை மாதமும் ஒன்றல்ல.
2. அறுவடைத்திருநாளும் சூரியவணக்கமும் இணைந்தே தைப்பொங்கல்.
எப்படியென்றால்,

தமிழ் காலக்கணிப்பு சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. (பிறந்த நட்சத்திரம், இறந்த திதி, விரதங்கள்...). எனினும் நாம் இன்று பயன்படுத்தும் காலக்கணிப்பில் சூரியனின் இயக்கத்தையும் கருத்தில் கொள்கிறோம். தமிழ் நாட்காட்டி சூரிய - சந்திர கலப்பு நாட்காட்டியாக மாறியது எப்போது என்று சரியாகத் தெரியவில்லை. அதுவே குழப்பத்தின் ஆரம்பம்.

இராசிகளில் சூரியனின் நிலையை வைத்துக் கணிக்கும் மாதங்களை இராசிகளின் பெயரிலேயே அழைத்தார்கள். உதாரணமாக, சூரியன் மேட இராசியில் நிற்கும் முப்பது நாட்களும் 'மேட ஞாயிறு' என்று அழைக்கப்பட்டது. இப்படி, பன்னிரண்டு இராசிக்கும் பன்னிரண்டு ஞாயிறுகள் சேர்ந்தது ஒரு ஆண்டு.

ஆனால், சந்திர வழியில் ஒரு பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரை, ஒரு திங்கள். பன்னிரண்டு திங்கள்கள் சேர்ந்தது ஒரு ஆண்டு.

சோழர் காலத்தில் தான் சூரியவழிக் கணிப்பு தமிழரிடம் புகழ்பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் அவர்களின் கல்வெட்டுகளில் தான் சூரியவழி மாதப்பெயர்கள் (விருச்சிக ஞாயறு, மகர நாயிறு) காணக்கிடைக்கின்றன. ஆனால் இந்த மாதப்பெயர்கள் கல்வெட்டுகளோடு நின்றுவிட்டன.அன்றாட வழக்கில் சூரியவழி மாதங்களுக்கும் சந்திரவழி மாதப்பெயர்களான சித்திரை, வைகாசி என்பனவற்றையே தொடர்ந்தும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். 

பஞ்சாங்கக் கணிப்பாளர்கள் விட்ட தவறு இதுவே. மாதக்கணிப்பில் மட்டும் சூரியவழிக்கு மாறிவிட்டு, சந்திரவழிப் பெயர்களை அப்படியே மாற்றாமல் பயன்படுத்தி வந்தது. 

பழைய சந்திர வழியில் பார்த்தால்,தை மாதம் பிறப்பது, தைப்பௌர்ணமியில் - தைப்பூசத்தில்! அன்று தான் பெண்கள் தைந்நீராடல் செய்து, தமது மார்கழித்திங்கள் பாவை நோன்பை நிறைவு செய்கிறார்கள். ஆண்டாள் மார்கழி இறுதியில் பெண்கள் உண்பதாகச் சொல்லும் அதே நெய்ப்பாற்சோற்றையே, தைப்பூசமன்று பெண்கள் 'நெய்ப்பூசும் ஒண்புழுக்கல்' கொண்டாடுவதாக சம்பந்தர் பாடியிருக்கிறார். இப்படிப் போகும் போது தான், சங்க இலக்கியங்கள் புகழும் தைமாதமும், நமது இன்றைய தைமாதமும் வேறுவேறு என்பது தெரியவருகிறது. 

இனி சூரியவழி நாட்காட்டியில், சூரியனின் வடக்கு - தெற்கு நகர்வுகள் முதன்மையானவை. எனவே சூரியனின் வடக்குச் செல்கையான உத்தராயணம் துவங்கும் மகர சங்கிராந்தி குறிப்பிடத்தக்க இடம் பெற்றிருக்கிறது. 

அதே போல், விவசாயம் சார்ந்த 'புதுயீடு' / முதல் அறுவடை என்பது ஒரு சடங்காக வளர்ந்திருக்கலாம். தை மாதமே அறுவடை ஆரம்பிக்கும் காலம் என்பதால், அறுவடைத்திருநாள் அம்மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்பட்டிருக்கலாம். (இன்றும் இலங்கையில் எங்கள் பக்கம், தைப்பூசம் பிறந்தால் தான் அறுவடை என்பதே பொது வழக்காக இருக்கிறது. மாட்டுப்பொங்கலும் அன்று நிகழ்வது தான். காலக்கணிப்புக் குழப்பத்தோடு தை மாதம் சந்திரவழியிலிருந்து சூரியவழிக்கு மாற்றமுற்றதையும் சிந்திக்கவேண்டும்.) 

ஆக, , காலக்கணிப்பு மாற்றத்தின் ஊடாக, 
1. மகர சங்கிராந்தி (சூரிய வழிபாடு), 
2. பழைமையான அறுவடைத்திருநாள் 
ஆகிய இரு கூறுகளின் ஒன்றித்த வடிவமே இன்றைய தைப்பொங்கல் என்றே நாம் கொள்ளலாம். :)

ஆனால் "திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்'' என்ற நெடுநல்வாடை வரிகள்(வரிகள் 160 முதல்..) மூலம் சூரிய நாட்காட்டி முறையின் வழக்கம் சங்க காலத்திலேயே பழக்கத்தில் உள்ளதாகத் தெரிகிறதே?


ஆம். தமிழர் மத்தியில் மிகப்பழங்காலந்தொட்டே சூரிய நாட்காட்டியும் வழக்கில் இருந்திருக்கிறது எனலாம். ஆனால் சூரியவழி மாதங்களை தவறாக சந்திரவழி மாதங்களின் பெயர் கொண்டு அழைத்ததால் ஏற்பட்ட விபரீதத்தையே இங்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.

சந்திரவழியை நாட்காட்டியாக கைக்கொள்ளும் மரபு இன்றும் ஆந்திரா முதல் பல இடங்களில் உள. ஆனால் அது இன்று ஒரு வளர்பிறை பிரதமை தொட்டு அமாவாசை வரையான காலமாகவே கணிக்கப்படுகிறது. இதை சாந்த்ரமானம் என்கின்றனர். நமது நவராத்திரி, விநாயகசதுர்த்தி இவையெல்லாம் சாந்த்ரமானப்படியே அனுசரிக்கப்படுகின்றன.


ஆம். சந்திரவழிக் காலக்கணிப்பில் அமாந்தம், பூர்ணிமாந்தம் என்று இரு வகை உண்டு. ஒரு அமாவாசைக்கும் அடுத்த அமாவாசைக்கும் இடைப்பட்ட காலத்தை ஒரு மாதமாகக் கணிப்பது அமாந்தம். அதையே இரு பௌர்ணமிகளுக்கு இடையே கணிப்பது பூர்ணிமாந்தம். நீங்கள் சொல்வது போல் இன்று பல இடங்களில் அமாந்த முறை நாட்காட்டியே பயன்படுகிறது.

ஆனால் மார்கழித்திருவெம்பாவை மார்கழிப்பௌர்ணமிக்கு முன் பத்து நாட்கள் அனுசரிக்கப்படுகிறதே?

ஆம். மார்கழித் திருவாதிரையில் கன்னியர் அம்பா ஆடுவதை "தைந்நீர் ஆடுதல்" என்று பரிபாடலும் குறிப்பிட்டிருக்கிறது. தை மாதம் தைப்பூசத்தில் (தைப்பௌர்ணமி) பிறந்தால், மார்கழிமாதம் பிறக்கும் மார்கழித் திருவாதிரையில் (மார்கழிப் பௌர்ணமி) எப்படி தைந்நீராட முடியும்?

உண்மையில், பூர்ணிமாந்த மாதம் துவங்கும், முடியும் இரு பௌர்ணமிகளில் எந்தப் பௌர்ணமியின் பெயரை அந்த மாதத்தின் பெயராகக் கொண்டார்கள் என்பது பற்றிய தெளிவான குறிப்பெதுவும் நம்மிடம் இல்லை. உதாரணமாக, தை மாதம் தைப்பௌர்ணமியில் முடிந்ததா அல்லது ஆரம்பித்ததா என்பது நமக்கு சரியாகத் தெரியாது. 

அப்படி ஒரேநேரத்தில் வெவ்வேறு கூட்டத்தினரால் இருவிதமாகவும் மாதம் கணிக்கப்பட்டிருக்கலாம் என்பதே நாம் ஊகிக்கக்கூடியது. அதனால் பரிபாடல் பாடும் இந்த ஒரு நோன்பு, ஆண்டாள் காலத்தில் மார்கழி நீராடலாகவும் தை நீராடலாகவும் இருவேறு விழாக்களாக வளர்ந்திருக்கிறது. திருப்பாவையில் மார்கழித்திங்களைப் பாடும் ஆண்டாள், தன் நாச்சியார் திருமொழியில் "தையொரு திங்களை" பாடுவதால், இந்த வளர்ச்சி ஆண்டாள் காலத்தில் முற்றுப்பெற்றிருக்கக் கூடும். இந்த வேற்றுமை இன்னும் தெளிவடைந்து, இவை இரண்டும் இன்றுள்ளது போல், முறையே மார்கழிப் பாவை நோன்பாகவும், தைப்பூசமாகவும் மாறியிருக்கலாம் என்பது அடுத்த ஊகம். (ஊகம் மட்டுமே. இதில் முடிவெடுக்க இன்னும் ஆராய வேண்டும்.)

தமிழ் வானியலும் புத்தாண்டும் - ஓர் அலசல்

சார்வரி: தமிழ் ஆண்டுகளுக்கு வடமொழிப் பெயர் ஏன்?
திருவள்ளுவர் ஆண்டு - ஒரு மறைக்கப்பட்ட வரலாறு
மேலும் வாசிக்க »

மலைக்கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே!

0 comments


கார்த்திகை விளக்கீடு கடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. (இவ்வாண்டு தமிழ்ப்பஞ்சாங்கங்களைப் பொறுத்து நவம்பர் 22, 23 ஆகிய தினங்களில் கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டது). ஆனால்,  அதுவும் தீபாவளியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பண்டிகைகள் தான். இரண்டிலும் விளக்கு வழிபாடும் முன்னோர் வழிபாடுமே முதன்மை பெறுகின்றன. தனித்துவம் என்னவென்றால், விளக்கீடு தமிழர் மத்தியில் மட்டுமே வழக்கில் இருக்கின்றது.

தீபாவளி, தமிழர் மத்தியில் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் தமிழகத்தில் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தான் (பொ.பி 17ஆம் நூற்றாண்டு) பரவலாகக் கிடைக்க ஆரம்பிக்கின்றது என்பது பொதுவான தகவல். ஆனால் தீபாவளி தொடர்பான மிகப்பழைய தமிழ்ச்சான்று எங்கு கிடைக்கின்றது தெரியுமா? இலங்கையில்.

தம்பைமாநகர் (குருணாகல் - தம்பதெனியா) அரசனான (3ஆம் அல்லது 4ஆம்) பராக்கிரமபாகு முன்னிலையில், போசராச பண்டிதரால் பொ.பி 1310இல் அரங்கேற்றப்பட்ட சோதிட நூல் சரசோதிமாலை. இதன் ஏழாவது தெய்வவிரதப் படலத்தில் தீபாவளி கடைப்பிடிப்பது எப்படி என்பது பற்றிய செய்யுளொன்று காணப்படுவதுடன், அதில் "பிதிர்கள் இன்பமுறு தீபாவலி" என்ற வரியைக் காணமுடிகின்றது. (அடுத்த செய்யுளில் 'ஆரல் நலமாமதி' என்று கார்த்திகை தீபம் சொல்லப்படுவதால், அதுவும் இதுவும் அப்போதே தனித்தனியாகவே வழக்கில் இருந்தமை தெரிகின்றது).

ஒரு சோதிட நூலாக இருந்த போதும், 13ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி பல்வேறு சுவையான தகவல்களைத் தரும் நூல், சரசோதிமாலை. ஆர்வமுள்ளோர் இங்கு தரவிறக்கிப் படிக்கலாம்: 



சரி. அதை விட மேலதிகமாக, மூன்று குறிப்புகளை நாம் கவனிக்கவேண்டும். 

குறிப்பு 01:
தமிழில் "குன்றில் இட்ட தீபம் போல" என்றோர் உவமை இருக்கிறது. பலர் காண, அல்லது பலர் புகழ வாழும் ஒருவரைக் குறிப்பிட இந்த மரபுத் தொடர் பயன்படுவதுண்டு. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி "குன்றில் கார்த்திகை விளக்கீட்டென்ன" என்று இதே உவமையை எடுத்தாண்டிருக்கிறது. இன்றும் கார்த்திகைத் தீபமன்று, திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் விளக்கு புகழ்பெற்ற ஒன்று. திருப்பரங்குன்றம் போன்ற வேறு சில கோவில்களிலும், கார்த்திகை விளக்கீடன்று மலையுச்சியில் தீபம் ஏற்றப்படுகின்றது.

குறிப்பு 02:
இலங்கையில், குறிப்பாக எங்கள் ஊர்ப்பக்கம் மூதாட்டிகள் வாழ்த்தும் போது, "கதிரமலைல வச்ச விளக்குப் போல வாழுங்கோ" என்று வாழ்த்துவார்கள். கதிரமலை, கதிர்காமத்திலுள்ள மலை. அங்கு இன்று விளக்கேதும் எரிவதாகத் தெரியவில்லை. ஆனால், கார்த்திகை விளக்கீட்டின் தொடர்ச்சியாக, இப்போதும் கதிர்காமத்தில் "இல் மஹ கச்சி பெரகரா" இடம்பெறுகிறது. பொதுவாக நவம்பரில் (தமிழ் கார்த்திகை) வருகின்ற முழுநிலவைத் தான் சிங்களப் பஞ்சாங்கம் 'இல்' என்று அழைக்கிறது. மூன்று நாட்கள் இடம்பெறும் இத்திருவிழா, வருடாந்த ஆடிவேல் விழாவுக்கு அடுத்தபடியாக கதிர்காமத்தில் புகழ்பெற்ற ஒன்று.

குறிப்பு 03:
கிழக்கிலங்கைத் தொன்மங்களின் தொகுப்பான மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் "ஆடகசௌந்தரியின் மகன் சிங்ககுமாரன் ஆடித்திங்கள், அமாவாசை இருநாளும் இராவணேஸ்வரன் பெயரில் உக்கந்தத்திருப்பணியில் பெரிய தீபம் ஏற்றும்படி திட்டம்செய்தான்" என்ற குறிப்பு உள்ளது. இங்கு சொல்லப்படுவது கீழைக்கரையின் தென்கோடியிலுள்ள உகந்தமலை.

இப்போது கேள்வி இது தான். மலையுச்சியில் விளக்கேற்றி வழிபடும் வழக்கம், குறிப்பாக முன்னோர் வழிபாடாக மலையுச்சியில் தீபமேற்றும் வழக்கம், பண்டு தொட்டே நம் மத்தியில் இருந்திருக்கிறதா? பலர் காண மலையுச்சியில் தீபம் ஏற்றுவதற்கு, ஏற்றியதற்கு, சடங்கு - மரபு தவிர்ந்த வேறேதும் காரணங்கள் இருந்திருக்கக்கூடுமா? பழந்தமிழ் இலக்கியங்களில் வேறு எங்கேனும் இத்தகைய தகவல்கள் பதிவாகி இருக்கின்றனவா? எல்லாவற்றுக்கும் மேல், என்றோ நம் தொல்மூதாதை ஒருவர் கண்ட எரிமலை வெடிப்பு, அல்லது மலைச்சரிவுக் காட்டுத்தீ தம் முன்னோரை அழித்ததை நினைவுகூரவே இது நோன்பாக மாறித் தொடர்ந்ததா? 

அறிந்தவர் விளக்கினால், விளக்கெனத் தொழுவேன்.
பிந்திய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்! 
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner