கார்த்திகைத் திருநாள்

0 comments


 "அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி" பாடலில் ஒரு வரி வரும். “கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே”. போதாக்குறைக்கு "வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்" பாட்டிலும் அதே வரி வருகிறது. "கார்த்திகை போனால் மழை இல்லை மானே". அது உண்மையா? கார்த்திகை பிறந்தால் தானே இப்போதெல்லாம் மழையே வலுக்கிறது?

வேறு காரணமொன்றும் இப்போதைக்கு சொல்ல முடியாது. காலநிலை மாற்றம் அவ்வளவு தான். ஆனால் "கார்த்திகை போனால் கடும் மழை இல்லை" என்ற பழமொழிக்கு ஈராயிரம் ஆண்டு அனுபவமும் வானியல் அறிவும் இருக்கிறது. அதற்கு ஆதாரம் சங்க இலக்கியமான அகநானூறு. அதன் 141ஆம் பாடல் அப்படித் தான் சொல்கிறது.
கணவனைப் பிரிந்திருக்கும் தலைவி அண்ணாந்து பார்க்கிறாள். “வானத்தில் மழையைக் காணவில்லை. முயல் என்று நாமெல்லாம் சொல்லும் களங்கம் நிலவில் பளிச்சிட்டுத் தெரிய, பூரண நிலவு கார்த்திகை நட்சத்திரத்தை நெருங்குகிறது. எல்லோரும் விளக்கேற்றி வைத்து மாலை தூக்கி தோரணம் கட்டுகிறார்கள். என்னோடு இந்தப் பொழுதைக் கொண்டாடவாவது அவர் வரவேண்டுமே” என்று பெருமூச்செறிகிறாள்.
“வானில் மழை வரும் அறிகுறி இல்லை” என்று தலைவி சொல்வது, "கார்த்திகை போனால் மழை இல்லை" பழமொழியைத் தான். கார்த்திகை நட்சத்திரம் இப்பாடலில் “அறுமீன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கார்த்திகைப் பூரணையில் விளக்கேற்றி, மாலை தோரணம் கட்டித் தமிழர் கொண்டாடினர் என்பதற்கான மிகப்பழைய சான்றுகளில் ஒன்று இது.
கார்த்திகை விளக்கீட்டுக்கு இன்னொரு சங்கச் சான்று இருக்கிறது. நற்றிணையின் 202ஆம் பாடலில் தலைவனும் தலைவியும் வீட்டை விட்டு ஓடிப்போகிறார்கள். ஓடிப்போவதை அப்போது 'ஸ்டைலாக' "உடன்போக்கு" என்று அழைப்பார்கள். அவளது கவலையைப் போக்குவதற்காக பாதை நெடுகிலும் “புதினம்” காட்டிச் செல்கிறான் தலைவன். வீதியோரம் கோங்கு மரங்கள் பூத்துக்குலுங்குகிறது. அதைக்காட்டி “உன் தந்தை பல தருமகாரியங்கள் செய்யும் கார்த்திகைத் திங்களில் வரிசையாகச் செல்கின்ற தீபங்கள் போல பல கோங்க மலர்களைச் சூடி நிற்கும் இக்காட்டைப் பார்” என்கின்றான் தலைவன். கோங்கமரத்தின் மஞ்சள் பூக்களை தீபங்களோடு ஒப்பிட்டது சரியான உவமை தான். கார்த்திகை விளக்கீட்டை இப்பாடலில் “அறுமீன் கெழீஇய அறம்செய் திங்கள்” என்று பாடுகிறார், புலவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.

கோங்கம் பூக்கள் - Cochlospermum religiosum.


“கார்த்திகை விளக்கீடு” என்ற சொல்லை முதன்முதலில் தமிழிலக்கியத்தில் பயன்படுத்தியவர் சம்பந்தர். மயிலையில் பூம்பாவையை உயிர்ப்பித்த பதிகத்தைப் பாடும் போது, விளக்கீடு காணாமல் போதியோ பூம்பாவாய் என்று பாடுகின்றார் அவர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது இதைக் “கார்த்திகைச் சாறு” (சாறு = விழா) என்று பாடியிருக்கிறது. (திருவண்ணா)மலை உச்சியில் கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்பட்டது பற்றி பற்றி சீவக சிந்தாமணி “குன்றில் கார்த்திகை விளக்கீட்டென்ன” என்று பாடுகிறது. இன்னும் தொல்காப்பியத்தில் வருகின்ற “வேலி நோக்கிய விளக்கு நிலையும்” (பொருளதிகாரம் புறத்திணையியல், 35) என்ற வரிகளுக்கு கார்த்திகை விளக்கு என்று விளக்கம் சொல்கிறார் நச்சினார்க்கினியர். இதெல்லாம் கார்த்திகை விளக்கீட்டின் பழைமையையும் புகழையும் விளக்கப் போதுமானவை.
தீபாவளியும் கார்த்திகையும் உண்மையில் ஒரே மூலத்தைக் கொண்டவை தான். தீபாவளி கொண்டாடப்படவேண்டிய திதி, ஐப்பசி மாத பதினான்காம் தேய்பிறை. கார்த்திகை கொண்டாடப்படவேண்டிய திதி, கார்த்திகை மாத பூரணை. இரண்டு நாட்களுக்கும் கணக்கிட்டால் பெரும்பாலும் பதினைந்து நாள், சிறுபான்மை நாற்பத்தைந்து நாள் வித்தியாசமே வரும். சுமார் ஒரு மாத இடைவெளிக்குள், அமாவாசையில் கொண்டாடப்பட்ட தீபவிழாவும், பூரணையில் கொண்டாடப்பட்ட தீபவிழாவும் முறையே தீபாவளியாகவும், கார்த்திகையாகவும் மாறி வளர்ச்சி கண்டிருக்கின்றன என்பதே உண்மை. இதற்கு இன்னொரு சான்றாக, ஐப்பசி பதினான்காம் தேய்பிறைக்குப் பதில், தமிழகம் தவிர்ந்த அனைத்து இந்தியப்பகுதிகளிலும், ஐப்பசி அமாவாசையிலேயே தீபாவளி கொண்டாடப்பட்டுவருகிறது என்பதைக் காணலாம்.
இரண்டு விழாக்களும் ஒன்று தான் என்பதற்கு இன்னொரு வலுவான சான்றும் உள்ளது. பெரும்பாலான தமிழருக்கு இன்றும் தீபாவளி முன்னோர் வழிபாட்டு நாள் தான். பண்டிகை, கொண்டாட்டங்களுக்கு மேல் அதுவே தீபாவளியன்று முதலிடம் பிடிக்கின்றது. கார்த்திகையும் அதே முன்னோர் வழிபாட்டு நாள் தான் என்பதை நாம் இன்றும் காண்கிறோம். தீபாவளி பற்றிய மிகப்பழைய குறிப்புகளில் ஒன்று இலங்கையிலும் கிடைத்திருக்கிறது. 13ஆம் நூற்றாண்டளவில் இலங்கையில் எழுந்த சரசோதிமாலை நூல். அதில் “பிதிர்கள் இன்பமுறு தீபாவலி” என்று தான் தீபாவளி சொல்லப்பட்டிருக்கிறது. பிதிர்கள் என்றால் முன்னோர்கள். எழுநூறு ஆண்டுகளுக்கு முன் இலங்கையிலும் அது முன்னோர் வழிபாட்டு நாளே தான் என்பதை நாம் ஊன்றிக்கவனிக்கவேண்டும்.
சரி, இரண்டும் ஒரே பண்டிகை தான் என்றால், இரு வேறு தினங்கள் எப்படி வந்திருக்கின்றன? ஒன்று பூரணை, ஒன்று அமாவாசை, ஒரே விழா எப்படி இரு வேறு சம்பந்தமில்லாத நாட்களுக்கான விழாக்களாக உருத்திரிந்திருக்க முடியும்?

ஒரு விழா கொண்டாடப்படுவதற்கும் கைவிடப்படுவதற்கும் புவியியல் பிரதேசம் முக்கியமான காரணியாக அமைகின்றது. சில இந்திய நாட்காட்டிகள் மாதத்தை அமாவாசையிலிருந்து தொடங்க, இன்னும் சில நாட்காட்டிகள் பூரணையிலிருந்தே மாதத்தை ஆரம்பிக்கின்றன. நாம் தமிழில் இவை இரண்டின் படியும் இல்லாமல் சூரிய வழியில் மாதத்தைக் கணிக்கின்றோம். என்றாலும், பாரம்பரியமாக நாம் கொண்டாடிவந்த சந்திர வழியிலான பண்டிகைகள் இன்றும் தொடர்கின்றன.

அமாவாசையில் மாதம் தொடங்குவோர் அந்நாளிலும், பூரணையில் மாதம் தொடங்குவோர் பூரணையிலும் கார்த்திகை விளக்கீட்டைக் கொண்டாடி வந்திருக்கின்றனர். அல்லது, பாவை நோன்பு போல அது மாதம் முழுவதும் கொண்டாடப்பட்ட நோன்பாகவும் இருந்திருக்கலாம். அப்படி அந்த விழா தொடங்கிய மற்றும் முடிந்த நாட்கள், வடக்கே தீபாவளியாகவும் தெற்கே கார்த்திகை விளக்கீடாகவும் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது. தமிழரின் தீபாவளி அமாவாசைக்கு ஒருநாள் முன்பே கொண்டாடப்படுவதால், இதற்கு பழைய முன்னோர் வழிபாட்டுத் தொடர்ச்சியும் இருக்கக்கூடும்.

தாய்லாந்திலும் கேரளத்திலும் கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்படும் சான்றுகள் கிடைத்தாலும், இன்று அது தமிழரால் மாத்திரமே பெருவாரியாகக் கொண்டாடப்படும் பண்டிகை. தீபாவளி மவுசின் முன்னிலையில் நாம் நம் எஞ்சியிருக்கும் மிக நீண்ட பாரம்பரியத்தை மறுதலித்து வருகிறோம்.

அதற்காக ஏற்கனவே இந்துப் பண்பாட்டுத்திருவிழாவாக புகழ்பெற்றிருக்கும் தீபாவளியைக் கைவிடுவதோ, புறக்கணிப்பதோ சாத்தியமல்ல. அதற்கும் மேல், ஆரியப்பண்டிகை, திட்டமிட்ட சதி என்றெல்லாம் சொல்லப்படும் மொண்ணைத்தனமான பரப்புரைகளில் எந்த உண்மையும் இல்லை. அதுவும் நம் கார்த்திகையின் திரிந்த வடிவம் தான். கார்த்திகையை, தீபாவளியை விட விமரிசையாகக் கொண்டாடுவது ஒன்றே நாம் செய்யக்கூடியது.

இந்தக் “கார்த்திகை விளக்கீடு” என்ற சொல்லை இன்று நாம் சாதாரணமாகப் பயன்படுத்தி வருகிறோம். இது சம்பந்தர் காலத்தில் புழங்கிய சொல். குறைந்தது, 1300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சொல் என்று எண்ணிப்பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது. சங்க இலக்கியங்கள் என்று செல்லும் போது, அதன் பழைமை இன்னும் பின்னுக்குத் தள்ளப்பட்டு சுமார் 2000 வருடங்கள் என்று செல்கின்றது. சாதாரண மனித ஆயுள் வெறும் 70 – 80 ஆண்டுகள் இருக்குமா? சும்மா கணக்குப் போட்டுப் பாருங்களன், 2000 ஆண்டு என்றால் எத்தனை தலைமுறை தாண்டிச் சென்றிருக்கும்?

அத்தனை ஆண்டுகள் முந்தி வாழ்ந்த நம் முப்பாட்டி ஒருத்தியோடு, முப்பாட்டன் ஒருவனோடு நாம் கொள்ளும் உறவு தான் இந்தக் கார்த்திகைத் திருவிழா. அவனும் அவளும் கொண்டாடியது போலவே அகல் விளக்கில் தீபமேற்றி, முன்னோரைப் போற்றிக் கொண்டாடுகிறோம், நாம் அவர்களை இக்கணத்தில் எண்ணிப்பார்ப்பது போலவே, அவர்கள் அவர்களுக்கும் முந்திய முன்னோரை இதே நாளில் எண்ணிப் பார்த்திருப்பார்கள் என்பதை சிந்தியுங்கள். எத்தனை ஆயிரம் ஆண்டுகள் முந்தி வாழ்ந்த நம் இரத்தசொந்தம் ஒன்றுடன் மானசீகமாக உறவாடுகிறோம். எண்ணிப் பார்க்கவே கண்கள் பனிக்கச் செய்யும் அற்புதமான தருணங்களுள் ஒன்று அது!

இனிய கார்த்திகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
(இரண்டாண்டுகளுக்கு முன் "தமிழரின் விளக்கொளி விழா" என்ற தலைப்பில் அரங்கம் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் திருத்திய வடிவம்)
மேலும் வாசிக்க »

விருந்து

0 comments




போனவாரம் தான் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாயின. அந்தப் பரீட்சையை நான் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் எழுதினேன். அந்தப் பரீட்சையில் மறக்கமுடியாத ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஐந்து வசனம் எழுதுமாறு கோரி, வினாத்தாளில் வந்த கேள்வி "எனது வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்தபோது..." என்று ஆரம்பித்திருந்தது.

நான் இப்படி எழுதினேன்.
1. எனது வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் மாலை நேரத்தில் வந்தார்.
2. அவர் என் பெற்றோரைப் பார்த்து "பசி பசி" என்று அழுதார்.
3. அம்மா வீட்டில் இருந்த கொஞ்ச மாவைப் பயன்படுத்தி உரொட்டி தயாரித்தார்.
4. நாங்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உரொட்டி சாப்பிட்டோம்.
5. விருந்தினர் எங்களுக்கு நன்றி கூறி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.
வினாத்தாள் அத்தனை கடினமாக இருக்கவில்லை. பரீட்சை எழுதி முடித்ததும் பாடசாலை அதிபர் ஓடோடி வந்தார். அந்தப் பாடசாலையிலேயே அதிகம் பேர் சித்தியடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அணி எங்களுடையது. "வசனம் எழுதுற கேள்வி என்ன தலையங்கம் வந்தது? என்ன எழுதினேல்?" என்று அதிபர் பதகளிப்புடன் கேட்டார். கூடியிருந்த என் நண்பர்கள் ஒவ்வொருவரும் அவரவர் எழுதிய பதில்களைச் சொன்னார்கள். நானும் பெருமிதத்துடன் என் பதிலைச் சொன்னேன். அவர் முகம் மாறியது. "முழுப்பிழை. என்ன தம்பி, உங்கட வீட்ட விருந்தினர் வந்தா பசிக்குது பசிக்குது எண்டு வாயால கேட்டுத் தான் சாப்பாடு போடுவேலா?"
எல்லோரும் கொல்லென்று சிரிக்க, திடுக்கிட்ட நான் "இல்ல ரீச்சர்..." என்று இழுத்தேன். அவர் கவனிக்காமல் அடுத்த மாணவரிடம் பதில் கேட்கச் சென்றுவிட்டார்.
எனக்கு அழுகை அழுகையாக வந்தது. ஒருபக்கம் எல்லோருக்கும் முன் அதிபர் ஏசிவிட்டார் என்ற அவமானம். மற்றப் பக்கம் பரீட்சையில் புள்ளிகளை இழந்த சோகம். வீட்டுக்கு வந்து சொன்னால் அங்கு அதிபரை விட அதிகமாக கிழி விழுந்தது. சோகம் தாங்காமல் விம்மி அழுதபடியே போய் படுத்து விட்டேன்.
பயந்தது போல் இல்லாமல், நான் சித்தியடைந்து விட்டேன். 16 பேர் சித்தியடைந்து, அதிகம் பேர் ஒரே தடவையில் சித்தியடைந்த அணி என்று என் அணியினர் பெயரும் பெற்று விட்டோம். அதே பாடசாலையில் கற்ற ஒரு மாணவி, 2010ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியிலும் முதலிடம் பெற்றார்.
ஆனால் நான் ஏன் அப்படி விருந்தினர் என்பதைத் தவறாகப் புரிந்து அப்படி 'சின்னப்பிள்ளைத்தனமான' வசனங்களை எழுதினேன்? உண்மையிலேயே சின்னப்பிள்ளை - விருந்தினர் என்பதற்கு வரைவிலக்கணம் தெரியாத பத்து வயது - என்பதாலா?
இல்லை. அந்தப் பிழைக்குக் காரணம், வாசிப்புப் பழக்கம்.
என்ன? வாசிப்புப் பழக்கத்தால் பிழையா? அதெப்படி?
இராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்ட "விவேகானந்தர் சொன்ன கதைகள்" என்றோர் சிறுவர் புத்தகம் எங்கள் வீட்டில் இருந்தது. அதில் இருந்த பொற்கீரி கதை மகாபாரதத்தின் கிளைக்கதைகளில் ஒன்று. உங்களுக்கும் முன்பே தெரிந்திருக்கலாம்.
தருமர் இராசசூய வேள்வி செய்து முடித்த பின்னர் ஒரு விந்தையான கீரி அங்கு வருகிறது. அதன் பாதியுடல் பொன்னிறத்தில் இருக்கிறது. அங்கு விழுந்து புரண்டெழுந்து விட்டு "இங்கு அப்படி ஒன்றும் சிறப்பான தர்மச்செயல் இடம்பெறவில்லை" என்கிறது கீரி. ஏன் என்று அங்கிருந்தோர் கேட்க அது சொல்கிறது.
"என் பாதியுடல் பொன்னிறமானது ஒரு ஏழையின் வீட்டில். பஞ்சகாலத்தில் அவன் கஷ்டப்பட்டு கொஞ்சம் தானியம் சேகரித்து வீட்டில் கொணர்ந்து கொடுத்தான். அதில் மனைவி ஒரு சிறிய உரொட்டி சுட, மகன், மருமகள் என்று அவர்கள் நால்வர் சாப்பிட உட்கார்ந்தார்கள். அப்போது பார்த்து ஒரு விருந்தினர் அங்கு வந்துவிட்டார். இவர்களைப் பார்த்து 'பசிக்கிறது' என்று சொல்லிக் கண்ணீர் வடித்தார்.
தந்தை தன் பங்கு உரொட்டியைக் கொடுத்தான். விருந்தினர் பசி அடங்கவில்லை. தாய் தன் பங்கைக் கொடுத்தாள். அப்போதும் அவர் பசி அடங்கவில்லை. இறுதியில் மகனும் மருமகளும் தங்கள் தங்கள் பங்கைக் கொடுத்துவிட்டார்கள். அவர் பசியாறி மகிழ்ச்சியோடு புறப்பட்டுச் சென்றார். அந்தக் குடும்பத்தினர் பசி தாங்காது அன்றிரவே இறந்துவிட்டனர். அங்கு அடுப்பின் அருகே சிந்திக்கிடந்த மாவு என் பாதி உடம்பில் பட்டதும் அது பொன்னாகி விட்டது. மீதியைப் பொன்னாக்க பல இடங்களிலும் சுற்றி வருகிறேன். உங்கள் இந்த வேள்விச்சாலை உட்பட எங்கும் என் மீதி உடல் பொன்னாகவில்லை. அப்படி, தன் உயிரையும் துச்சமென மதித்து, பசித்து வந்தவனுக்கு தன் உணவை வழங்கும் அறச்செயலுக்கு இந்த இராசசூயம் நிகரில்லை. " என்று சொல்லிச் சென்றுவிடுகிறது கீரி. வேள்வியில் தான் செய்த தானதருமங்கள் பற்றி தலைக்கனம் கொண்டிருந்த தரும மகாராசா வெட்கித் தலைகுனிந்து விடுகிறார்.
இந்தக் கதையும் அது சொன்ன நீதியும் அப்போதே என் மனதில் ஆழப்பதிந்து விட்டிருந்தது எனவே தான் பரீட்சையில் "விருந்தினர்" என்ற சொல்லைக் கண்டதுமே வேறெதையும் சிந்தியாது பொற்கீரிக்கு மனம் தாவிவிட்டது. வீட்டிற்கு வந்த விருந்தினர் "பசி பசி" என்று அழுததும், எங்கள் அம்மாவும் கூட கொஞ்ச மாவைப் பயன்படுத்தி விருந்தினருக்கு உரொட்டியே சுட்டதற்கும் அந்தக் கதை ஏற்படுத்திய பாதிப்பே காரணம்.
சரி. விருந்தினர் என்ற சொல்லைப் பிழையாகப் புரிந்துகொண்டது என் தவறு தான். அதற்காக வாசிப்பைக் குற்றம் சொல்லக்கூடாதே.
ஆனால் விருந்தோம்பல் நம் பண்பாட்டில் எத்தகைய இடம் வகிக்கிறது?
விருந்து என்ற சொல்லுக்கு "புதுமை" என்றும் பொருள் உண்டு. விருந்தினர் என்றால் புதியவர். நம் இருப்பிடத்துக்குப் புதிதாக அல்லது மேலதிகமாக வருபவர் விருந்தினர். விருந்தினரை தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று இரண்டாகப் பிரிக்கிறது, திருக்குறளின் பரிமேலழகர் உரை. திருவள்ளுவர் விருந்தோம்பல் என்று தனி அதிகாரமே எழுதி வைத்திருக்கிறார். நேரங்கெட்ட நேரத்தில் வந்து தொலைத்துவிட்டார்கள் என்று விருந்தினரை முகம் சுருங்கிப் பார்ப்பதே தவறு என்ற விழுமியத்தைச் சொல்லும் "மோப்பக்குழையும் அனிச்சை" திருக்குறள் இக்காலத்துக்கும் பொருந்துவது தான்.
"தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை" எனும் இன்னொரு திருக்குறள், தனக்குச் சமனாக, இறந்த முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் எனும் நால்வரையும் சமனாகக் கருதக் கோரிய அக்கால வழமையைச் சுட்டிக்காட்டுகிறது.
ஒரு விருந்தினன் இறைவனுக்குச் சமன் என்று கூறுகின்ற "அதிதி தேவோ பவ" என்பது புகழ் பெற்ற உபநிடத வாக்கியம். வாளைமீன், ஆமையிறைச்சி, கரும்புத்தேன், குவளைமலர் என்பன விருந்தினர்களை மகிழ்விக்க வழங்கப்பட்டதை புறநானூறு ஓரிடத்தில் (42) பாடுகிறது.
சைவ நாயன்மார் வரலாற்றில், தண்ணீர்ப்பந்தல் அமைப்பது, காட்டுப்பாதையில் பொதிசோறு வழங்குவது, பஞ்சத்தில் நாடு வாடியபோது நெல்லுப் பெற்றும், படிக்காசு பெற்றும் ஏழை எளியோருக்கு உணவிடுவது என்று பல விருந்தோம்பல் செயல்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றன. விருந்தினர் மனம் கோணி விடுமே என்பதற்காக விருந்து தயாரிப்பில் மகன் இறந்ததை மறைத்த அப்பூதி அடிகள் நாயனார் வரலாறும், விருந்தினரின் அதிர்ச்சி தரும் வழக்கத்தை ஏற்று, பெற்ற மகனையே கொன்று கறியாக்கிய சிறுத்தொண்ட நாயனாரின் வரலாறும், விருந்தோம்பலுக்காக எந்த எல்லை வரை செல்லமுடியும் என்பதைக் காட்டும் இருபெரும் உச்சங்கள்.
விருந்தோம்பல் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், பசி என்ற உணர்வு மனிதனுக்கு இருப்பதால் தான். பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்பது புகழ்பெற்ற பழமொழி.
வெட்கம், குலப்பெருமை, கற்ற கல்வி, புகழ், அறிவு, தானம் செய்யும் பண்பு, இறைபக்தி, தங்களது உயர்வு, விடாமுயற்சி, பெண்ணாசை எதுவுமே பசிக்கு முன் நிற்காது, பறந்துபோகும் என்கிறார் ஔவையார். கவலையாக இருக்கிறேன் என்பதையே "என்னால் சாப்பிட முடியவில்லை" என்று சொல்பவர்கள் இங்குண்டு. பசியே மிகப்பெரிய விடயம். அதைவிடப் பெரிது தன் சோகம் என்று காண்பிக்கிறார்கள்.
பசியின் அருமை தெரிந்ததால் தான் ஏழை எளியவருக்கு உணவளித்தல் ஒரு மகத்தான பண்பாடாக நம் மத்தியில் வளர்ந்து வந்திருக்கிறது. குன்றாமல் உணவளிக்கக்கூடிய பாண்டவரின் அட்சய பாத்திரம், ஆபுத்திரனின் அமுதசுரபி இதெல்லாம் பசி தீர்ப்பதன் முக்கியத்துவத்தைச் சொல்கின்ற மரபுரைகள் தான். மனிதனாய்ப் பிறந்தவன் செய்யவேண்டியவை என்று மரபாக முப்பத்திரண்டு அறங்கள் சொல்லப்படுவதுண்டு. அவற்றில் பதினொரு அறங்கள் உணவளிப்பதோடு தொடர்புடையவை. ஆதுலர்சாலை (அனாதை இல்லம்), ஓதுவார்க்குணவு (வேதியருக்கு உணவு),
அறுசமயத்தோர்க்குணவு, பசுவுக்கு வாயுறை, சிறைச்சோறு (கைதிகளுக்கு உணவு), ஐயம் (பிச்சை), நடைத்தின்பண்டம் (யாத்திரிகருக்கு உணவு), மகச்சோறு (சிறுவர்க்கு உணவு), மகப்பால் (தாயிழந்த பிள்ளைக்குப் பாலூட்டல்), அட்டூண் (அயலவருக்கு உணவு வழங்கல்), தண்ணீர்ப்பந்தர் என்ற பதினொன்றும் அவை.
நிற்க;
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். .படத்தின் அருமையான கதைக்கரு, நயன்தாரா அம்மன், ஆர்ஜே பாலாஜியின் திரைக்கதை எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்தது ஒரு பாடல். "பார்த்தேனே விழியின் வழியே". மனதை இலேசாக்கும் இசை. என்ன காரணத்தாலோ "ஏன் பெண்ணென்று பிறந்தாய்" பாடலை நினைவுகூரச் செய்த மெட்டு. ஜெய்ராம் பாலசுப்பிரமணியன் எனும் புதுமுகம் பாடியிருக்கிறார். அவர் பாடிய வேறு பாடல்களைக் காணக்கிடைக்கவில்லை. ஆனால் அற்புதமான குரல்.



பா.விஜய் எழுதிய அந்த அருமையான பாடலில் ஒரு வரி வருகிறது.
"வேதங்கள் மொத்தம் ஓதி யாகங்கள் நித்தம் செய்து பூசிக்கும் பக்தி அதிலும் உன்னைக் காணலாம்.
பசி என்று தன் முன் வந்து கை ஏந்திக் கேட்கும் போது தன் உணவைத் தந்தால் கூட உன்னைக் காணலாம்"
இது திருமந்திரத்தில் ஒலித்த ஒரு குரல்.
"படமாடக் கோவில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோவில் நம்பர்க்கு ஒன்று ஆகா
நடமாடக் கோவில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோவில் பகவற்கு அது ஆமே"
மாடத்தில் சுவாமிபடம் வைத்த கோவிலிலுள்ள இறைவனுக்கு நீங்கள் ஒன்றைக் கொடுக்கும் போது, நடமாடும் கோவில்களான அடியவர்களுக்கு அது பயன்படாது. ஆனால் நடமாடும் கோவில்களான அடியவர்களுக்கு ஒன்றை நீங்கள் கொடுத்தால், அது அதே கோவில் இறைவனுக்குக் கொடுத்ததாகிவிடும்.
நம்பர் என்றால் நம்மவர்கள் என்று பொருள். அதை நம் போன்ற அடியவர் என்று சுருக்காமல், நம்மைப் போன்ற மனிதர்கள் என்றும் விரிக்கலாம். அதே போல் கோவிலில் கொடுக்கும் காணிக்கையை உணவு அல்லது பிரசாதம் என்று கொண்டால் மேற்படி பாடல் வரி வந்துவிடும். திருமந்திரம் சொல்வதும் இது தான். பொற்கீரி சொன்னதும் இது தான். பசி எனும் மானுட இயல்பு. பசி தீர்க்க எழுந்த விருந்தோம்பல் எனும் விழுமியம். இரண்டையும் இணைத்து இறைபக்தி தருகின்ற சமரசப்பார்வையில் எழுகின்றது மானுடப் பெருங்கருணை.
கடந்தவாரம் புலமைப்பரிசில் பெறுபேறு வெளிவந்தபோது மூக்குத்தி அம்மன் படம் பார்த்துக்கொண்டிருந்தேன். "பார்த்தேனே" பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கையில், பத்து வயதில் என் மனதில் பதிந்திருந்த "விருந்தினர்" என்ற உருவகமும் இயல்பாகவே கண் முன் எழுந்து விட்டது.
இந்தப் பெருந்தொற்று சீர்குலைத்துள்ள அறங்களில் விருந்தோம்பலும் ஒன்று. வீட்டுக்கு வீடு விருந்தினர் வருகைகள் அவ்வளவாக இடம்பெறுவதில்லை. நாமும் இன்னொருவர் வீட்டுக்கு விருந்தினராகச் செல்வதில்லை. தப்பித்தவறி யாரும் விருந்தினர் வந்துவிட்டால் சந்தேகக்கண்ணோடு பார்த்து "எப்போது செல்வார்களோ, எங்கிருந்து நோய் காவி வந்திருப்பார்களோ" என்ற அச்சத்திலேயே பொழுது கழிகிறது.
அது விரைவில் மாறவேண்டும். செல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருக்கும் நிலைமை மீண்டும் திரும்பவேண்டும். அது விரைவில் நிகழவேண்டும் என்று இறைவனை வேண்டுவது தவிர வேறு வழி ஏது?
மேலும் வாசிக்க »

மாவடி வைகும் செவ்வேள்

0 comments


 மிளகாய்த்தூளோடு அல்லது உப்புத்தூளோடு பச்சை மாங்காய் சாப்பிட்ட பால்ய கால அனுபவம் நம் எல்லோருக்குமே இருக்கும். மாங்காய் தெற்காசியாவைத் தாயகமாகக் கொண்ட தாவரம். Mangifera Indica என்பது தாவரவியற் பெயர்.

மேங்கோ என்ற ஆங்கிலச்சொல் மாங்காய் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது. ஆனால் ஆங்கில சொற்பிறப்பியல் அகராதியில் பார்த்தால், அது மலையாளச் சொல்லிலிருந்து வந்தது என்று போட்டிருக்கும். மலையாளத்திலும் மாங்காய் "மாங்ஙா" தான். ஆரம்பகால காலனித்துவக் குறிப்புகளின் படி மாங்காய் என்பது மலபார் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்த சொல். அப்போது மலபார் என்பது மலையாளிகளை மாத்திரமன்றி தமிழர்களையும் குறித்தது.

இலங்கை பற்றிய பழைய ஐரோப்பியக் குறிப்புகளில் சிங்களீஸ் மற்றும் மலபார் என்று இரண்டு மொழி இங்கு பேசப்படுவது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்துக்குத் தனித்துவமான தேசவழமைச் சட்டம், மலபார்களுக்கான சட்டமாகவே இன்றுவரை உத்தியோகபூர்வ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன் பொருள் இலங்கையில் இருந்தவர்களும் இருப்பவர்களும் மலையாளிகள் என்பதல்ல; காலனித்துவ காலத்தில் மலபார் என்பது தமிழரையும், அரைத்தமிழரான மலையாளிகளையும் ஒட்டுமொத்தமாகக் குறித்தது என்பதே சரியான பொருள்கோடல்.

சமகாலத்து பொதுவழக்கில் மலபார் என்பது மலையாளி என்று சுருங்கிவிட்டதால், பழைய ஆங்கில சொற்பிறப்பியல் அகராதியை மீள்பதிப்புச் செய்தவர்கள், மலபார் எல்லாவற்றையும் மலையாளம் என்று மாற்றிவிட்டார்கள். அதனால் மேங்கோவின் மூலமொழியும் மலையாளம் ஆகிவிட்டது.

மா, வடமொழியில் ஆம்ரம் என்று அழைக்கப்படுகிறது. ஒற்றை மாமரத்தின் (ஏக+ஆம்ரம்) அடியில் வீற்றிருந்த சிவனுக்கு வடமொழியில் ஏகாம்ர ஈஸ்வரர் என்று பெயர். தமிழில் மகர மெய்க்கு அருகே ரகர வர்க்க எழுத்து வராது என்பதால் ஏகாம்ரம் என்பது ஏகாம்பரம் ஆகிவிட்டது. அதை ஏகம்பம் என்றும் சொல்லுவார்கள். இதே இலக்கணப்படி சிம்ரன் என்ற பெயர் சிம்பிரன் என்று தான் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். சரி, எதுக்கு சிம்ரன் அதெல்லாம்! நாம் மீண்டும் மாமரத்துக்கே போவோம்.

தென்னை, பனை, என்பது போல மா என்ற சொல்லை நாம் மரத்துக்கான தனிச்சொல்லாகப் பயன்படுத்துவது குறைவு. ஆனால் பேச்சுவழக்கிலேயே மா பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாந்தோட்டம், மாங்காடு, மாந்தீவு, மாவடிச்சேனை, மாவடிவேம்பு என்றெல்லாம் இங்கு பல ஊர்ப்பெயர்கள் இருக்கின்றன.

சிங்களத்தில் மாவை அம்ப என்கிறார்கள். கறுத்தக்கொழும்பான் என்பது இலங்கையின் உள்ளூர் மா இனங்களில் ஒன்று. அதற்கு சிங்களத்திலும் அதே பெயர் தான். வெள்ளைக்கொழும்பானும் உண்டு. இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்புக்குச் சொல்லப்படும் சிங்களச் சொற்பிறப்புகளில் ஒன்று அதை கொலம்ப தோட்ட = பச்சை மாமரங்கள் (கொல+அம்ப) அடர்ந்திருந்த துறைமுகம் (தோட்டம்) என்கிறது. திருக்கேதீச்சரம் அமைந்திருந்த மாந்தைத் துறைமுகமும் மாதோட்டம் தான். தெற்கே இருக்கும் மாத்துறையையும் சில சிங்கள நூல்கள் மாதோட்ட என்று அழைக்கின்றன. இன்னொரு விதத்தில் மாத்துறை-மாதோட்ட இரண்டுக்கும் ஒரே பொருள். பெரிய துறைமுகம்.

தமிழ்ப்பண்பாட்டில் மாமரத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. சங்க இலக்கியங்களிலிருந்தே அதற்கு தொடர்ச்சியான இலக்கியப்பதிவு இருக்கிறது. மா முக்கனிகளில் ஒன்று. அன்றிலிருந்து இன்றுவரை பொதுவான உடம்பு நிறத்தைச் சொல்ல தமிழில் "மாநிறம்" என்ற சொல் தான் பயன்படுகிறது. மாந்தளிர் நிறம். சங்ககால நாயகிகள் மாமை நிறம் கொண்டவர்கள். "திதலை அல்குல் என் மாமைக்கவினே" என்பது புகழ்பெற்ற குறுந்தொகை வரி.

கலித்தொகையின் ஓரிடத்தில் பெண்ணொருத்தியின் கண்ணை வருணிக்க,"இளமாங்காய் போழ்ந்தன்ன" என்ற உவமை கையாளப்பட்டிருக்கிறது. பிளந்த மாங்காய். அரிதான உவமை தான். "கனிகளிலே அவள் மாங்கனி", "குண்டுமாங்காத் தோப்புக்குள்ள", "மாம்பழமாம் மாம்பழம்" என்றெல்லாம் தமிழ்த் திரையுலகமும் மாம்பழத்தை புகழ்ந்து பாடித்தான் வந்திருக்கிறது.

தமிழுக்கும் வெளியே பண்பாட்டு ரீதியில் நிறைய இனக்குழுக்களிடையே மா முக்கியத்துவம் பெறுகிறது. தென்னகம், வங்கம் போன்ற பகுதிகளில், நிறைகுடங்கள் மாவிலை வைத்துத் தான் அலங்கரிக்கப்படுகின்றன. மங்கல - அமங்கல நிகழ்வுகளில் மாவிலையைத் தோரணமாகக் கட்டுவது அங்கெல்லாம் பொதுவாகக் காணக்கூடிய அலங்காரம்.

மாம்பூ மன்மதனின் ஐங்கணைகளில் ஒன்று. அதற்கு மதனம் என்று பெயர். மதனத்தை மன்மதன் தன் கரும்புவில்லில் பூட்டி காதலரின் மார்பில் எய்யும் போது அவர்களுக்கு "விப்பிரயோகம்" எனும் அவஸ்தை உண்டாகுமாம். விப்பிரயோகம் என்றால் பிரிவாற்றாமை.

பௌத்தத்தில் மாமரத்தையும் புத்தரையும் இணைத்து பல ஜாதகக் கதைகள் இருக்கின்றன. பெயரில் மாவைக் கொண்ட "ஆம்ரபாலி" எனும் நாட்டியமங்கை பற்றிய கதை அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. இலங்கையின் தமிழ் - சிங்கள தொன்மங்களின் படி பத்தினி கண்ணகி மாங்கனியில் தோன்றியவள். தெய்வம், பெண்ணாகத் தோன்றிய அதே மாங்கனி காரணமாக, இன்னொரு பெண் பேயாகி இருக்கிறாள். காரைக்காலம்மையார்.

தன் கணவன் தந்த மாம்பழமொன்றை அடியவர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டு, இறைவனருளால் இன்னொரு மாம்பழத்தை வரவழைத்துக்கொடுத்ததால் கணவன் அவள் மீது அச்சம் கொண்டு கைவிட, அதனால் பேயாக மாறிய அபலைப் பெண் தான் காரைக்காலம்மை. மாம்பழத்தால் மண்ணில் இப்படி சம்பவங்கள் நடக்க, விண்ணிலோ, ஒரு தெய்வக்குடும்பத்தில் பயங்கர களேபரம் ஏற்பட்டிருக்கிறது. "ஞானப்பழம்!".

ஞானப்பழம் கிடைக்காத காலத்திலிருந்தே முருகனுக்கு மா எதிரி தான் போல. சூரபதுமனை முருகன் அழிக்கும் போது அவன் கடல் நடுவே போய் மாமரமாகத் தான் நிற்கிறான். முருகனின் வேல் அம்மரத்தை இருகூறாக்கும் போது சேவலும் மயிலுமாக மாறி முறையே முருகனின் கொடியும் வாகனமும் ஆகின்றான்.

சரி, இப்போது ஏன் இந்த'மா'புராணம்?

நம் பண்பாட்டை உற்றுப்பார்த்தால், அங்கு முக்கியத்துவம் பெறும் தாவரங்கள் அல்லது விலங்குகள் பற்றிய ஒரு உண்மையைக் கண்டுகொள்ளலாம். அவை நம் மண்ணுக்கே உரித்தான உயிரினங்கள். முக்கனிகளான மா,பலா, வாழை தென்னகத்தில் பிறந்தவை. தெய்வங்களோடு பெரும்பான்மையாக இணைத்துச் சொல்லப்படும் மாடு, சுண்டெலி, மயில், நாகபாம்பு, யானை, கோழி, செம்பருந்து/கலுழன் (கருடன்), குரங்கு எல்லாமே இந்தியத் துணைக்கண்டத்தை முதன்மையான தாயகமாகக் கொண்டவை. இவற்றின் அதே குடும்பத்தைச் சேர்ந்த வேறு இனங்கள் உலகின் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும், தொன்மங்களிலும் சித்தரிப்புகளிலும் சொல்லப்படுவது உள்ளூர் இனங்கள் தான்.

ஏனென்றால், அவை தான் நம்மோடு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருபவை. நம் பாட்டன், முப்பாட்டன், கொள்ளுப்பாட்டன் முதல் நூறு நூறு தலைமுறைகளாக நம்மோடு கூடி வாழ்கின்றவை. அந்த உறவைப் புரிந்துகொள்ளாமல் சில மெத்தப்படித்தவர்கள் மொண்ணைத்தனமாகக் கேட்பார்கள். "அது ஏன் நம் தெய்வங்கள் உள்ளூர் மிருகங்களோடும் தாவரங்களோடும் தான் சம்பந்தப்படுகிறார்கள், ஏன் கடவுளரின் வாகனமாக கங்காருவோ பென்குயினோ இல்லை; ஒலிவ் மரத்தையோ டியூலிப் மரத்தையோ அம்மனாக வெள்ளைக்காரன் ஏன் வழிபடவில்லை?" என்று.

இந்த சமயம் - இந்த வாழ்வியல் - இந்த மண்ணில் பிறந்தது. இந்த மண்ணின் உயிர்ப்பல்வகைமையோடு தான் இந்தப் பண்பாடு ஒத்துப்போகும். இந்த மண் இல்லாமல் நாம் இல்லை. இப்படி அன்றாட வாழ்வியலிலும் வழிபாட்டிலும் அதே மண்ணின் உயிர்களுக்கு இடம் கொடுப்பதன் மூலம் அவற்றை மதிக்கிறோம். மரியாதை செலுத்துகிறோம். வாழ்த்துகிறோம். நன்றி செலுத்துகிறோம்.

இப்போது கந்தசஷ்டி நோன்பு நோற்கப்படுகிறது. அதன் முத்தாய்ப்பாக நிகழும் சூரன் போரில் கடலுக்கு நடுவே நிற்கும் சூர மாமரம் முருகனால் இரு கூறாக்கப்பட்டது நடித்துக் காட்டப்படும். சூரபதுமன் சைவ சித்தாந்த நோக்கின் படி மூன்றாவது மலமான ஆணவம். இலக்கியத்தில் இனிமை, அழகு, ஞானம், கற்பு என்று பல படிமங்களாக உருவகிக்கப்படும் மா, இங்கு முழுமையான ஆணவத்தின் குறியீடாக கிளைபரப்பி நிற்கிறது. அளவுக்கு மீறிய அமுதம் நஞ்சல்லவா? அளவுக்கு மீறிய அழகும் அறிவும் கல்வியும், ஆணவமாகத் தானே மாறிவிடுகின்றன?

ஆனால் முழுத்த ஞானத்தின் வடிவான வேலால் பிளக்கப்பட்டதும், மாமரம் சேவலும் மயிலுமாக மாறுகிறது. சேவல் சூரியன் வரவை அறிவிப்பது. மயில் மழையின் வரவில் மகிழ்வது. அது செம்மை. இது கருமை. அது விடிவானம். இது இருள்மேகம். முற்றிலும் ஒன்றுக்கொன்று எதிரான முரண் இருமை.

தூய ஞானம், ஆணவத்தை இருகூறாக்கிவிடும். ஞானத்தால் ஆணவம் வலிகெட்ட ஆன்மா, தன் இருமையைக் கண்டுகொள்கிறது. அந்த ஆன்மாவை இறைவன் அன்போடு அணைக்கிறான். சேவலைக் கொடியாக்கி மயிலை வாகனமாக்குகிறான். ஆன்மாவின் ஒளியறிவு கொடியாக உயர்ந்து பட்டொளி வீசுகிறது. இருளறிவில் இறைவனே ஏறி அமர்ந்து வழிநடத்துகிறான்.

இரண்டையும் ஒன்றே எனக் கண்டுகொள்ளும் மனநிலைக்கு சித்தாந்தத்தில் கலைச்சொல் ஒன்று உண்டு. இருவினையொப்பு. இன்று ஒப்பாரி வைத்து அழுத ஒரு சம்பவத்தை எண்ணி கொஞ்ச நாட்களுக்குப் பின் விழுந்து விழுந்து சிரிப்போம். அன்புக்குரியவரோடு மகிழ்ந்திருந்த நாட்கள், அவர் நம்மை விட்டு விலகிய பின் துன்பம் தரும் நாட்களாகி விடுகின்றன. எனவே நன்மையும் தீமையும் நிரந்தரமல்ல; நல்வினையோ தீவினையோ இரண்டும் ஒத்தவை என்று சொல்வது தான் இரு-வினை-ஒப்பு.

இன்று முருகனை வழிபடும் எல்லா அடியாரும் சேர்த்தே வழிபடுவது அவனது கொடியும் வாகனமுமாக வீற்றிருக்கும் அவன் எதிரி சூரபதுமனையும் கூட. அவனைப்பிளந்த வேல் கூட அருகே தான் தோளில் சார்த்தி இருக்கும். இறைவன் என்றால் அப்படித்தான். அவனுக்கு எதிலும் பேதமில்லை. எல்லாமே ஒன்று தான். சைவசித்தாந்தம் சொல்லும் இறைவன் அவன் தான். "கரைந்து கை தொழுவாரையும் காதலன், வரைந்து வைதெழுவாரையும் வாடலன்" உருகி கைகூப்புவோர் மீது அதிக அன்பு கொண்டவன்; ஆனால் அதற்காக திட்டி ஏசுவோர் மீது கோபம் கொள்ளாதவன். ஏனென்றால் அதுதான் இறைவனின் குணம். "அனாதிபோதன்" என்று சொல்வார்கள். இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கியவன் என்று பொருள்.இறைவனின் இக்குணத்தை வியந்த மெய்யடியார்கள் தான் இருமையாய் நிற்கும் சூரபதுமன் எனும் ஆணவத்துக்கும், அதை வலுக்குறைத்த மெய்ஞ்ஞான வடிவான வேலுக்கும் ஒருசேர வணக்கம் செலுத்துகிறார்கள் "சேவலும் மயிலும் போற்றி, திருக்கைவேல் போற்றி போற்றி" என்று!

இப்படி முரண்களைக் கடந்த இறைவன் வீற்றிருக்கும் இடமும் வியப்பளிப்பது தான். மாமரத்தின் கீழ். மாமரமொன்றைப் பிளப்பித்தவன் வீற்றிருக்கும் இடமும் ஒரு மாமரத்தடி தான். காஞ்சிபுரத்து மாமரத்தடி. காஞ்சி மாவடி.

"மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி - காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி - அன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி" - கந்தபுராணம்
மேலும் வாசிக்க »

அன்பென்று கொட்டு முரசே

0 comments



வீட்டில் நண்பர்களுடன் ஒரு விருந்துபசாரம். இஸ்லாமிய நண்பி ஒருத்தியும் குடும்பமாக வருகை தந்திருந்தாள். கொஞ்சநேரம் அளவளாவிய பின் உணவுக்கு ஆயத்தமானோம். எல்லோரும் மேசையில் வந்து அமர்ந்தார்கள். அவள் மட்டும் தயங்குவது தெரிந்தது. எனக்குப் புரிந்துவிட்டது. புன்னகையுடன் சொன்னேன். "பயப்பிடத் தேவல்ல. சாப்பிடுங்க. இது ஹலால். உங்கட ஊர்ல வாங்கின கோழி இறைச்சி தான்" அவள் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. "தேங்ஸ். " என்றாள்.

இது ஒரு நண்பனுக்கு நடந்தது. தனது இஸ்லாமியத் தோழன் ஒருவன் வீட்டுக்கு முதன்முதலாகப் போயிருக்கிறான். இவன் முன் சிற்றுண்டி கொணர்ந்து வைக்கப்பட்டது. இவன் உண்ணவில்லை. அவன் "டேய் இது மாட்டிறைச்சி இல்லடா, நீ சாப்பிடலாம்" என்றிருக்கிறான். இவன் பேசாமலிருக்க, அவன் புன்னகை மாறாமல் சொன்னானாம் "வெள்ளிக்கிழமை தானே. நீ வாறாயெண்டு மரக்கறி ரோல்ஸ் தான் எடுத்து வெச்சன். சாப்பிடு." நண்பன் நெகிழ்ந்து விட்டான். அவன் உள்ளூர் வழக்கப்படி வெள்ளிக்கிழமைகளில் மரக்கறி உண்பவன்.
முன்பொருமுறை பிள்ளையாருக்கென பொங்கிய பொங்கலை "இது படையலில வைக்காத பொங்கல். சாப்பிடுங்க" என்று சொல்லி கிறிஸ்தவ நண்பனொருவனுக்கு பகிர்ந்தளித்தபோது அவன் முகத்தில் ஏற்பட்ட பிரகாசத்தை நான் கண்டிருக்கிறேன். ஏனெனில் பிற தெய்வங்களுக்கென சமர்ப்பிக்கப்பட்ட உணவை கிறிஸ்தவரோ இஸ்லாமியரோ உண்பதில்லை.
இந்த மூன்றுமே மதம் அல்லது மதம் சார்ந்த வாழ்வியலால் உணவுப்பழக்க வழக்கத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள். ஆனால் இந்த மூன்று சந்தர்ப்பங்களிலுமே சம்பந்தப்பட்ட இரு தரப்பினருமே குதூகலித்துப் போயிருக்கிறார்கள். அடுத்தவன் பண்பாட்டை தான் அறிந்திருந்ததால் நாகரிகமாக நடந்துகொள்ள முடிந்தது என்ற பெருமிதம், அவ்வாறு நடந்து கொண்டவருக்கு. தன் பண்பாட்டை இவர் இத்தனை மதிக்கிறாரே என்பதை அறிந்துகொண்டதால் நட்புணர்வு பலமடங்கான பூரிப்பு அவ்வாறு நடத்தப்பட்டவருக்கு.
இரு இனத்தவர்கள், அல்லது இரு சமயத்தவர்கள், நெருங்கி வாழ முடியாமல் போவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று அன்றாட வாழ்க்கை முறைமை வேறுபடுவது. நமது அன்றாட வாழ்க்கை முறைமையே சிறந்தது - உயர்ந்தது என்ற எண்ணம் பொதுவாக நம் எல்லோருக்குமே இருக்கிறது. அதைக் கடைப்பிடிக்காதவர்கள் நமக்குக் கீழானவர்கள் என்ற எண்ணமும் இயல்பாகவே வந்துவிடுகிறது. இந்த மேல் தட்டு எண்ணம் தனிமனிதனுக்கு என்று இல்லாமல், ஒரு குடித்தொகைக்கு இருக்கும் போது, அது அங்கீகாரமும் பெற்றுவிடுகிறது. எனவே தான் தனிமனிதனை விட சமூக உணர்வு முன்னிலைப்படுத்தப்படும் சமயம்-இனம்-சாதி-பிரதேசம் முதலிய பிரிவினைகளில் வன்மம் சற்று அதிகமாகவே வெளிப்படுகிறது.
இன்றும் உலகின் முக்கியமான சிக்கல்களில் ஒன்று மதச்சகிப்பின்மை தான். தன் மதத்தின் வழக்கம் தான் உசத்தி; மற்றவனுடையது கீழானது என்ற மேலாதிக்க மனப்பான்மை எழும்போது சிக்கல் பெரிதாகிறது. நான் என் மதவழக்கப்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்கிறேன். அவன் தன் விருப்பப்படி வாழ்க்கைமுறையை அமைத்திருக்கிறான். அவன் அவனுக்கு விதித்தபடி நடக்கட்டும்.ஆனால் நான் எனக்கு விதித்தபடி நடப்பேன். இருவரும் குழம்பிக்கொள்ளத் தேவையில்லை. இப்படி எண்ணிக் கொள்வதும் அதை நடைமுறைப்படுத்துவதும் தான், யதார்த்தத்துக்குப் பொருத்தமான தீர்வு.
ஆனால் இறைமறுப்பு தரப்பினர் இந்த சந்தர்ப்பங்களுக்குச் சொல்லும் எளிய தீர்வொன்று இருக்கிறது. "இந்த மூன்று சந்தர்ப்பங்களிலுமே தயங்கிய முதல் தரப்பினர் தங்கள் நம்பிக்கையை தற்காலிகமாகவேனும் விட்டொழித்து விட்டு அப்போதைக்கு இயல்பாக நடந்துகொண்டிருக்க வேண்டும்".
அது அத்தனை இலகுவானதல்ல. அவர்கள் எண்ணுவது போல் சராசரி மனிதன் ஒருவனால் இலேசில் தன் உணவுப் பழக்கவழக்கத்திலிருந்து வெளியேறமுடியாது. ஏன் இறைமறுப்பர்களாலேயே கூட. "பூகோள வெப்பமயமாதலுக்கு கால்நடைகள் தான் காரணம். இனி ஆயுள் முழுக்க அனைவரும் மரக்கறி உணவு மட்டும் உண்ணவேண்டும்" என்று அரசாங்கம் சட்டம் கொணர்ந்தால் அவர்கள் ஆமாம் சாமி போட்டுவிட்டு பேசாமல் அமர்ந்து விடுவார்களா? ஊரே ரணகளம் ஆகியிருக்காது?
🙂
உணவுப் பழக்கவழக்கம் என்பது உணர்வு சார்ந்தது. மத அடையாளம் இல்லாவிட்டாலும், கிழக்கு ஆசியர் நாயையும் பூச்சிகளையும் உண்ணுவதைக் காணும் போது நமக்குக் குமட்டிக்கொண்டு வருவதற்கும், 'வௌவால் சாப்பிட்டு கொரோனா தொற்றை உலகெலாம் பரப்பினான் சீனன்' என்று குரூரமாக இனவாதம் பேச நம்மை அனுமதித்ததும், இந்த அன்றாட வாழ்க்கை முறைமை சார்ந்த 'மேற்றட்டு உணர்வு' தான் முக்கியமான காரணம்.
சுவாரசியம் என்னவென்றால் அதே உணர்வு சம்பந்தப்படுவதால் தான், முரண்பாடு ஏற்பட்டிருக்கவேண்டிய இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும், எல்லாத் தரப்பினர் இடையேயும் அன்யோன்னியமும் நெருக்கமும் கூடும் வாய்ப்பு ஏற்பட்டது.
இப்படியும் சொல்லலாம். இறைமறுப்பர்கள் பரிந்துரைப்பது, வண்ணங்களை எல்லாம் அழித்துவிட்டு எல்லாவற்றையும் வெள்ளை நிறமாக்கி விடுவோம் என்ற ஒரு இலட்சிய (ideal) கருதுகோளை. இலட்சியம் என்பதாலேயே அது நடக்காது. நடக்கவும் முடியாது. ஏனென்றால் இயற்கை என்பதே பல்வகைமை (diversity) தான். மாறல்கள் (variation) இருப்பதால் தான் கூர்ப்பு அல்லது பரிணாமமே இடம்பெறுகிறது என்பது அடிப்படை விஞ்ஞானம் தெரிந்தவர்களும் ஏற்றுக்கொள்ளும் உண்மை.
எந்த சமயம் அதிகமான பின்பற்றுநர்களை வைத்திருக்கிறது, எது சமகாலத்துக்குப் பொருத்தமான கருத்துக்களை தன் வசம் வைத்திருக்கிறது என்பதல்ல தற்போதுள்ள பிரச்சினை. எந்த சமயம் ஏனைய சமயத்தை பின்பற்றுபவனின் உணர்வுகளை மதிக்கிறது, அவனையும் அங்கீகரிக்கிறது என்பது தான் சமகாலத்தில் முக்கியமாகக் கருதவேண்டிய பிரச்சினை. ஆம் அங்கீகாரம் தான் முதன்மையான பிரச்சினை.
மதம் ஒரு பக்கம் இருக்கட்டும். மனிதன் என்றால் உங்களால் சகமனித உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். எப்போதாவது அடுத்த சமயத்தவனோடு பழகும் வாய்ப்புக் கிடைக்கும் போது அவனது வாழ்வியலை நீங்கள் மதிக்கிறீர்கள், அங்கீகரிக்கிறீர்கள் என்பதற்கு ஒரு சிறு சான்றையாவது காட்டிவிடுங்கள். அப்போது அவன்/ அவள் முகத்தில் பூக்கும் புன்னகைக்கு விலை இல்லை. அப்படி விலை தீர்மானிக்க முடிந்தால் அதன் பெறுமதி தான் உங்களுக்கான அங்கீகாரம். மாற்றுமதத்தவனின் உங்கள் மதத்துக்கான அங்கீகாரம் கூட.
அன்பென்று கொட்டு முரசே.
❤
மேலும் வாசிக்க »

உயிர் மெய்

0 comments



வெட்கத்தை விட்டுச் சொல்வதென்றால் உன் பெயர் அழகாக இருக்கிறது என்று நிறையப்பேர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் துலாஞ்சனன் என்பது சிங்களப்பெயர். சிங்களவரிடம் அந்த உச்சரிப்பை ஒத்த "டுலங்ஜன்" என்ற பெயர் நல்ல பிரசித்தம். (ஒளிர்கின்ற கண் இமையைக் கொண்டவன் என்ற விந்தையான பொருள்.

சிங்களத்தில் "ஞ்ச" என்ற ஒலிக்கூட்டு வழக்கத்தில் இல்லை. அது ஞ்ஞ அல்லது ங்ஜ என்று தான் வரும். என்றாலும் அங்கு ஞகரத்தைக் குறிக்கும் எழுத்துக்கள் இருக்கின்றன. தமிழ் போலவே சிங்களத்திலும் ஞகரம் அரிதான ஒலிப்பு. எனவே துலாங்ஜனன், துலான்ஸனன், துலாஞ்ஞனன் என்றெல்லாம் என் பெயர் சிங்களத் தோழர்களால் கடித்துக் குதறப்பட்டு வந்தது. போதாக்குறைக்கு ஒரு தமிழ் ஆசிரியரே கஷ்டப்பட்டு துலாங்ஙன் என்று அழைத்த கிருபை.. ச்சீ பெருமை அதற்குண்டு.

உத்தியோகபூர்வ ஆவணங்களில் என் பெயரை சிங்களத்தில் எழுதும்போது சிக்கலாக இருந்தது. கடந்த ஆண்டு தொழில் நிமித்தம் முறைப்படி சிங்களத்தை கற்கத் தொடங்கியபோது ஆசிரியையிடம் என் சிக்கலைச் சொன்னேன். அவர் பூர்வீக சிங்களவர். இளம்பெண் கூட. மொழி இலக்கணத்தை தாங்கள் பெயர் எழுதும் போது பார்ப்பதில்லை. விரும்பியபடி எழுதுங்கள் என்று அவர் சொன்ன பின்னர் தான் என் சந்தேகம் தீர்ந்தது. ஆங்! நான் சொல்லவந்தது என் பெயர் பற்றியோ அழகான சிங்கள ஆசிரியை பற்றியோ இல்லை. சிங்களம் கற்றது பற்றி.

போன ஆண்டு முறைப்படி கற்ற போது தான் சிங்கள அரிச்சுவடியை கவனித்தேன். சிங்கள உயிரெழுத்துக்கள் 20. தமிழ் பன்னிரண்டுடன் எஹ், ஏஹ், ருஹ், ரூஹ், லுஹ், லூஹ், அங், அஃ என்று எட்டு எழுத்துக்கள் மேலதிகம்.
ஆனால் சிங்கள மெய்யெழுத்துக்களுக்கு நிலையான எண்ணிக்கை இல்லை. அது மாறிக்கொண்டே செல்லும் என்பதால் இத்தனை தான் என்று எண்ணிக்கை சொல்லிக் கற்பிக்கமாட்டார்கள். எஃப்பிற்கான சிங்கள எழுத்து அண்மையில் தான் சிங்கள அரிச்சுவடியில் சேர்க்கப்பட்டது. தற்போது இஸ்ஸட்டிற்கான எழுத்தைச் சேர்க்கும் திட்டம் வரைவில் இருக்கிறது.

என்றாலும் சிங்கள மெய்யெழுத்துக்களைக் கற்பிக்கும் போது ஒரு ஒழுங்கில் கற்பிக்கிறார்கள். முதலில் க, ச, ட, த, ப என்னும் ஐந்து எழுத்துக்களும் அவற்றுக்கான மூன்று வர்க்க எழுத்து வகைகளும் ('க'விற்கு ka, kha, ga, gha, 'ச'விற்கு cha, ccha, ja, jha, 'ட'விற்கு ta, tta, da, dda, 'த'விற்கு tha, ttha, dha, ddha, 'ப'விற்கு pa, pha, ba, bha) கற்பிக்கப்படுகின்றன.

பிறகு ங, ஞ, ண, ன, ம என்னும் ஐந்து எழுத்துக்களும், அவற்றை முறையே க, ச, ட, த, ப உடன் புணர்த்தி, ங்க, ஞ்ஞ, ண்ட, ந்த, ம்ப ஆகிய ஐந்து கூட்டெழுத்துக்களும் கற்பிக்கப்படுகின்றன.

அடுத்து ய, ற, ல, வ எனும் நான்கு எழுத்துக்கள். இறுதியாக அந்த அரிச்சுவடியில் இறுதியாக சேர்க்கப்பட்ட ஶ, ஷ, ச, ஹ, ள, ஃப மெய்களுடன் அரிவரிப் பயிற்சி ஏறத்தாழ நிறைவுறுகிறது.

தமிழ் அரிச்சுவடியை சிங்கள அரிச்சுவடியோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது தமிழ் அரிச்சுவடியும் ஒரு ஒழுங்கிலேயே அமைந்திருந்ததைக் காண முடிந்தது. தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் தலா ஆறாக பதினெட்டு மெய்யெழுத்துக்கள் என்று படித்திருக்கிறோமல்லவா? அந்த ஒழுங்கில் தான் வண்ணமாலை அமைக்கப்பட்டிருக்கிறது. எப்படி?

வல்லினம் ஆறில் க,ச,ட,த,ப என்னும் ஐந்தும், மெல்லினம் ஆறில் ங, ஞ, ண, ந, ம என்னும் ஐந்தும் மாறி மாறி ஒன்று விட்டு ஒன்று என்ற ஒழுங்கில் வருகின்றன.
க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம.
இந்தப் பத்துக்குப் பின்னர் ய, ர, ல, வ, ழ, ள என்னும் ஆறு இடையினங்கள் வருகின்றன. விடுபட்ட வல்லினம் றவும், விடுபட்ட மெல்லினம் னவும் இணைக்கப்பட்டு இறுதியில் தமிழ் வண்ணமாலையின் 18 மெய்களும் பூர்த்தியாகின்றன.
க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம
ய, ர, ல,வ, ழ, ள
ற, ன
ஏன் இந்த ஒழுங்கு? றகரமும், னகரமும் ஒழுங்கு மாறி ஏன் இறுதியில் சேர்க்கப்பட்டிருக்கின்றன?
இந்தக் கேள்விக்கான விடை எளிமையானது. சிங்கள அரிச்சுவடி சுட்டிக் காட்டுவது போல, தமிழிலும் ஆரம்பத்தில் வல்லினமும் மெல்லினமும் ஐந்து ஐந்து தான். தமிழ் மொழி வளர்ச்சி கண்டபோது, அரிச்சுவடியில் இறுதியாக சேர்க்கப்பட்ட எழுத்துக்கள் தான் றவும் னவும். ரகரத்தின் வலிய பலுக்கல் றகரம். ஒரே உச்சரிப்பு போல இருக்கும் நகரமும் னகரமும் தமிழில் பல்லாண்டுகளாக குழப்பத்தை ஏற்படுத்தியதை கல்வெட்டுக்களிலேயே காணலாம். அங்கெல்லாம் னக்குப் பதில் ந பல இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது.
இப்படிச் சொல்வதற்கான ஆதாரங்களை நாம் தமிழி எழுத்துருவில் மிக எளிதாக கண்டுகொள்ளலாம். தமிழி எழுத்துரு அல்லது தமிழ்ப்பிராமி எழுத்துரு, கி.பி முதலாம் நூற்றாண்டு வரை தமிழை எழுதப் பயன்பட்ட எழுத்து வடிவம். புரிகிற மாதிரிச் சொன்னால் நாம் குறுஞ்செய்தியில் roman ezuththil thamizai ezuthuvathu pola. எழுத்து வடிவம் வேறு. ஆனால் எழுதப்பட்ட மொழி தமிழ். திருக்குறள் முதலிய பழந்தமிழ் இலக்கியங்கள் தாம் எழுதப்பட்ட போது, தமிழி எழுத்துருவில் தான் எழுதப்பட்டிருக்கின்றன.
தமிழி அரிச்சுவடியில் 'ற'வை எழுதப் பயன்படும் எழுத்து 𑀶. உரோமன் Cயும் கிரேக்க லம்டாவும் (𑀢) இணைந்த வடிவம். உரோமன் C என்பது தமிழியில் ட. கிரேக்க லம்டா 𑀢 என்பது தமிழியில் த.
ற என்பது டகரத்திகற்கும் தகரத்திற்கும் இடையே ஒலிப்பதால், ற என்ற புதிய ஒலிப்பை அரிச்சுவடியில் சேர்த்த போது அந்த 'ட'வையும் 'த'வையும் சேர்த்து (C+𑀢) புதிய எழுத்தை ( 𑀶) உருவாக்கி இருக்கிறார்கள்.
அதே போல், தமிழியில் ந என்பது தலைகீழ் T (𑀦). ன என்ற எழுத்தை இறுதியாக இணைத்தபோது ந எழுத்தின் உச்சியை சுழித்து தலைகீழ் J என்ற எழுத்தை (𑀷) அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
இதே எழுத்து மாற்றத்தை, ஒத்த உச்சரிப்புக் கொண்ட ல, ள எழுத்துக்களிலும் காணலாம். ல என்பது தமிழியில் பக்கவாட்டு கேள்விக்குறி 𑀮 . ள என்ற எழுத்துக்கு அந்த எழுத்தோடு சிறு கால் - 𑀴 - இணைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் அரிச்சுவடியின் இறுதி மூன்று எழுத்துக்களும், தேவைக்காக, ஏற்கனவே இருந்த மூன்று எழுத்துக்களின் உச்சரிப்பை ஒத்து உருவாக்கி சேர்க்கப்பட்டவை என்பது இப்படித் தெளிவாகிறது.
சிங்கள அரிச்சுவடி சுட்டிக்காட்டுவது போல ஆதியான தமிழ் அரிச்சுவடியும் ஒரு காலத்தில் 'வ'கரத்துடனேயே நின்றிருக்கலாம். அதற்குப் பிறகு தமிழின் சிறப்பெழுத்தான ழகரமும், அடுத்த மூன்று எழுத்துக்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தச் சேர்ப்பெல்லாம் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நடந்து முடிந்திருக்கிறது. இல்லாவிட்டால், 12,18, 1, 216, என்ற திருத்தமான எழுத்துக் கணக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்ணில் நீடித்திருக்க முடியாது.
ஆனால், இதையெல்லாம் கண்டறிந்து வியப்பதற்கு முறைப்படி சிங்களம் கற்றுக்கொள்ளவேண்டி இருந்தது. சிங்களம் இந்தோ - ஆரியத் தோற்றம் காட்டினாலும், அதன் மொழியமைப்பு அது அப்பட்டமாக திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தது தான் என்று சுட்டிக்காட்டப் போதுமானதாகி விடுகிறது.
இன்னொரு வியப்பு என்னவென்றால், தமிழியில் லகரத்திலிருந்து ளகரத்தை வருவித்துக்கொண்டது போல, நகரத்திலிருந்து னகரத்தை வருவித்துக் கொண்டது போல, றகரத்தை உருவாக்கிய மொழியறிஞன், அதை ரகரத்திலிருந்து வருவிக்கவில்லை.
இரண்டின் உச்சரிப்பும் ஒத்தது என்றாலும், இனம் வேறு என்ற தெளிவு அவனுக்கு இருந்தது. ர இடையினம், ஆனால் ற வல்லினம். அதனால் 'ர'வின் வலிந்த உரப்பாக 'ற' பிறக்கும் என்று சொல்லாமல், தகரத்துக்கும் டகரத்துக்கும் இடையே இன்னொரு வல்லினமாக ற பிறக்கும் என்பதை அந்த ஆசான் சுட்டிக்காட்ட முயன்றிருக்கிறான்.
மொழி என்பதை வெறுமனே தொடர்பாடல் ஊடகம் என்று வரையறுத்து விட்டு எளிதாகக் கடந்து சென்று விடுகிறோம். ஆனால் அதை உருவாக்குவதற்கு, இலக்கணம் படைத்து வரையறுப்பதற்கு, எத்தகைய ஆழ்ந்த ஞானம் படைத்திருக்கவேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றது தமிழ் அரிச்சுவடியின் ஒழுங்கு.
மொழியை வரம்பறுத்தவனை இறைவன் என்பதில் என்ன தவறு?
அந்த ஆலமர் செல்வனை வியந்து பணிகிறேன்.
அவன் படைத்த தமிழ் காலம் தாண்டித் திகழ்க.
குறிப்பு 01:
வட இந்திய, அல்லது ஏனைய திராவிட மொழிக்குடும்பங்களின் வண்ணமாலைகள் எவ்வாறு கற்பிக்கப்படுகின்றன என்று எனக்குத் தெரியாது. வேறு மொழிகளில் வல்லின - மெல்லின - இடையின பாகுபாட்டோடு அரிச்சுவடி கற்பிக்கப்படுகிறதா, அவற்றில் தமிழின் தாக்கம் எந்தளவு இருக்கிறது என்பதை பன்மொழி அறிஞர்களே கூறவேண்டும்.
குறிப்பு 02:
சிங்கள அரிச்சுவடியைக் கற்றபோது நான் அடைந்த ஊகத்தை, தமிழி எழுத்துவடிவத்தின் தோற்றம் பற்றிய அருமையான கட்டுரை ஒன்றின் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டேன். என் ஐயம் சரி என்றால், அது பெரும்பாலும்
கி இராம
ஐயாவின் வளவு வலைத்தளத்தில் வெளியாகியிருக்கவேண்டும். அந்த இணைப்பைக் கண்டறிந்தால் இங்கு பகிர்கிறேன்.
குறிப்பு 03:
மொழிக்கட்டமைப்பின் வரலாற்றை ஆராயும் போது, மொழிப்பற்றுக் கடந்து அறிவியலோடு இணைத்து நிறைய சிந்திக்கவேண்டி இருக்கிறது. சிங்களம் இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது என்றாலும், அதன் மொழியமைப்பு திராவிடச் சாயல் கொண்டது என்பதை பலர் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதன் அரிச்சுவடியிலிருந்து தமிழ் வரிவடிவ வளர்ச்சியையும் ஊகிக்க முடிவதால், அதில் உண்மை இருக்கக்கூடும். சிங்களம் எத்தனை பழைய மொழி, தமிழுக்கும் அதற்குமான உறவென்ன, தமிழின் ஆதிமொழி உரிமைகோரல் முதலிய பொருட்கோடல்கள் எல்லாம் தனியே ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.
மேலும் வாசிக்க »

ஒரு விசுவசிப்பு

0 comments

 


“சுவாமி,
அருட்தந்தை சிமோ டீ கோயம்பரா இங்குள்ள விருத்தாந்தங்களை தங்களுக்கு அறிவிப்பதற்காக இந்தியாவுக்கு யாத்திரைப்படும் போது இங்கு எழுந்தருளினதை தேவரீர் அறிவீர். அவர், சத்தியத்தை நோக்கி அடியேன் மனத்தை திறந்ததுடன், தங்கள் கத்தோலிக்க வேதம் பற்றியும் பிரசங்கித்தார். அடியேன் ஜீவனை இரட்சிக்கவும், போர்த்துக்கேய சக்கரவர்த்திகளுக்கு அன்யோன்யச் சிற்றரசாக மாறவும் நீண்ட நாட்களாக வெகு விருப்பமாயிருக்கிறேன்.
இப்போது யான் மனதளவில் சத்திய கிறிஸ்தியானி என்றாலும், ஞானஸ்நானத்துக்கான முழுக்காட்டு தீர்த்தத்தைப் பெறாததனால் மிக வருத்தமுற்றவனாயிருக்கிறேன். யான் இன்னும் கிறிஸ்தியானியாகவில்லை என்றால், அது தமியேனின் அபிலாஷையால் அல்ல சுவாமி; தேசத்தின் நிலைமையை அறியவொண்ணாததினாலேயே.
எதுவாகினும் சுவாமி, அடியேனின் இராச்சியத்துக்கான வாரிசான என்னுடைய குமாரன், சத்திய வேதத்தைத் தழுவி, தொம் லூயிஸ் என்ற நாமத்தையும் பெற்றிருக்கிறான். நான் என் எல்லா இனசனங்களோடும், என்னால் ஆளப்படுகின்ற எல்லா மக்களோடும் சுவிசேஷத்தை அறிவதற்காக தேவரீர் அல்லது தேவரீரின் புதல்வர் வரவேணுமென்று பிரயாசைப்பட்டுக் காத்திருக்கிறேன். தேவரீர் இவ்விடம் எழுந்தருளும்போது தேவபக்தி இங்கு பரவுமென்று நான் பரிசுத்த மரியன்னை மீது விசுவசிக்கிறேன்.
ஆகையால் சுவாமி, ஆண்டவரின் திருப்பெயரால், மரியாளின் திருப்பெயரால் மன்றாடுகிறேன். என்னையும் கண்டி இளவரசனையும் கிறிஸ்தவர்களாக்குவதற்கு, தேவரீர் வரவேணும். அல்லது தேவரீரின் புதல்வரை அனுப்பி வைக்கவேணும். ஏற்கனவே கிறிஸ்தவனாயிருக்கப்பட்ட என் குமாரனும், அவ்வாறு விசுவசிக்கும் நானும், போர்த்துக்கல் சக்கரவர்த்திகளின் திருக்கரங்களிலும் இரட்சிப்பிலும் எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். ஒரு கிறிஸ்தியானியாக, போர்த்துக்கல் சக்கரவர்த்திகளின் சைனியத்துணைவனாக, உபராசனாக, தேவரீர் எனக்கு சகாயமும் இரட்சையும் தரவேணும்.
இப்போதிருந்து என்னையும் என் தேசத்தையும் தங்கள் சொந்த ஆஸ்தி போலவே தாங்கள் பயன்படுத்தக் கூடுமாயிருக்கும். என் துறைமுகத்தில் படகுகளும் கப்பல்களும் தெப்பங்களும் கட்டுமரங்களும் கட்டுவதற்கு, தாங்கள் கட்டளை வழங்க முடியுமாயிருக்கும். தங்களுக்குத் தேவையான அளவு மரக்கட்டைகளை தமியேன் தரக்கூடுமாயிருக்கும். என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேணுமென்றால், இந்தப் பாதிரியாரைக் கேட்கவும். அவரிடம் நான் கூறச்சொன்ன காரியங்களெல்லாம் அவர் அறிவிப்பார். தேவன் தங்களுக்கு சொஸ்தம் தருவாராக.”
-----------------------------------------------------------
மட்டக்களப்பின் மன்னன், போர்த்துக்கேய பிரான்சிஸ்கன் பாதிரியாரான சிமோ டீ கோயம்பரா ஊடாக கோவாவின் போர்த்துக்கேய ஆளுநருக்கு அனுப்பி வைத்த 1546 டிசம்பர் 25ஆம் திகதியிட்ட கடிதத்தின் தமிழாக்கம்.
கிழக்கிலங்கையில் கண்டி, சீதாவாக்கை, வியாளை (யால) ஆகிய அரசுகளை எல்லையாகக் கொண்ட "மட்டக்களப்பு" (மட்டிக்கலோ/Matecalo) எனும் சிற்றரசு நிலவியது என்பதைச் சொல்லும் மிகப்பழைய காலனித்துவ ஆவணம் இக்கடிதமாகும். இந்த மன்னனின் உண்மைப் பெயர் தெரியவில்லை.
இங்கு சொல்லப்படும் கண்டி இளவரசன், குசுமாசன தேவியின் தந்தை கரலியத்தை பண்டாரம்(ஆட்சி 1552 - 1582) என்று கருதப்படுகிறான்.போர்த்துக்கேய அரசுக்கு ஆதரவாக, மட்டக்களப்பு அரசன் கண்டி அரசோடு இணைந்து படைக்கூட்டு கொள்ள முயல்வது, கோட்டை அரசுக்கு எதிராக என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இக்கடிதம் எழுதப்பட்டு ஆறாண்டுகளில் கோட்டை அரசு போர்த்துக்கேயர் கைகளில் வீழ்கிறது.
இந்தக் கடிதம், பெரும்பாலும் மட்டக்களப்பு மன்னன் சொல்லச்சொல்ல பாதிரியார் கோயம்பரா தன் கைப்பட எழுதியதாக இருக்கவே வாய்ப்பதிகம். அந்தப் போர்த்துக்கேய கடிதத்தின் ஆங்கில மொழியாக்கம், சுவாரசியத்துக்காக இங்கு கத்தோலிக்கத் தமிழில் மொழிமாற்றப்பட்டிருக்கிறது.


மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner