தெத்தாதே உஞ்சில் தெத்தாதே!

2 comments
புத்தாண்டு இனிதே கடந்து விட்டது. இன்னொரு ஆண்டு. இன்னொரு வயது. இந்தக் கட்டுரையாளனுக்கு வயது இப்போது முப்பதை அண்மிக்கிறது. இந்த முப்பது ஆண்டுகளிலும் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்டு வந்த - வருகின்ற மாற்றத்தை கண்ணெதிரே, கண்டு உணர்ந்து திகைத்துப் போய் நிற்கிறான் அவன்.

போன வாரம் அவன் பிறந்தகமான தம்பிலுவில்லில் நாட்டுக்கூத்து ஒன்று இடம்பெற்றிருந்தது. சுமார் நாற்பதாண்டு இடைவெளிக்குப் பின் சித்திரைக்காக வட்டக்களரியில் இடம்பெற்ற கூத்து அது என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அப்போதெல்லாம் சித்திரை பிறந்தாலே கூத்துத் தானாம். வைகாசியில் கண்ணகியம்மன் கோவில் கதவு திறக்கும் வரை, ஏன் திறந்த பின்னும் கூட, நாட்டுக்கூத்தும் வசந்தனும் விலாசமும் நாடகமும் மாறி மாறி இடம்பெறுமாம். 

“உப்ப நீங்க இரிக்கிர வூடு இரிக்கே. அதுக்கு முன்னுக்கு இரிந்த பாழ்வளவுக்குப் பேர் வெள்ளமணல் வளவு. சித்திராபோர்ணமில அங்க வட்டக்களறி போட்டு ஆடினா நிலவுல சும்ம அந்தமாதிரி இரிக்கும். மத்தளம் பேசின அரவாசி நாட்டுக்கூத்து அங்க தான் அரங்கேறிரிக்கி. அப்ப எங்களுக்கு பத்து பன்ரெண்டு வயது. பூலோகறம்பை பொம்பிள வேசம் போட்டுக்கொண்டு போடியார் சுறுட்டடிச்சி நடப்பாரு. ‘என்னகா றம்பை இது கோலம்’ எண்டு நாங்க பின்னுக்கு நக்கலடிச்சிக்கொண்டு ஓடுவம்” என்றார் ஒரு முதியவர். அவர்களது அந்த சித்திரையை நான் அனுபவித்ததில்லை. நான் அனுபவித்த சித்திரையையா இன்றுள்ள சிறுவர்கள் அனுபவிக்கிறார்கள்?

வருசம் பிறக்கிறதென்றால், எனக்கு முதலில் நினைவுக்கு வருவது ‘உஞ்சில்’ தான். ஊஞ்சல்! உஞ்சில் போடுவதற்கு பெரும்பாலும் ஒரு நிமித்தம் பார்ப்பது நினைவிருக்கிறது. குயில் கூவவேண்டும். குயில் கூவினால் உஞ்சில் போடவேண்டும், அல்லது போன வருடம் போட்டு இடையில் அறுந்துவிட்ட உஞ்சிலை திருத்திப் போடவேண்டும் என்று அடம் பிடிப்பேன். பெரும்பாலும் மார்ச் 27, 28இல் முதல் குயில் கூவும். வருடம் பிறப்பதைச் சொல்வது குயிலிசை தான் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்த பருவம் அது.


இன்று யோசித்தால் அதுவும் உண்மை என்றே தோன்றுகிறது. தமிழரின் வருடத்தை அறிவிப்பது பஞ்சாங்கமா, நாட்காட்டியா? இரண்டுமே இல்லையே, இயற்கையல்லவா? கொன்றை பூப்பதும், வேங்கை பூப்பதும், மரங்களெல்லாம் மஞ்சளில் குளித்து நிற்பதும் இளவேனிலில் பிறக்கும் புத்தாண்டை வரவேற்கத்தானே?

பெரும்பாலும் மார்ச் மாத முடிவில் அல்லது ஏப்ரல் மாத ஆரம்பத்தில் எங்கள் வீட்டில் நிற்கும் மாமரத்தில் அப்பா ஊஞ்சல் போடுவார். அது ஒருவர் ஆடும் சிறிய ஊஞ்சல் அல்ல. நீளமான கட்டில் பலகை ஒன்றின் இரு அந்தங்களிலும் தவாளிப்புகளை ஏற்படுத்தி ஊஞ்சல் பலகை தயாராகும். தடித்த நைலோன் கயிற்றை வாங்கி வந்து அதை தவாளிப்புகளில் இணைத்து மேலே மாமரக் ‘கந்தில்’ கட்டினால் ’உஞ்சில்’ தயார். எத்தனை முறுக்குகளை இருபுறமும் போடுகிறோமோ அத்தனை உறுதியாக இருக்கும் உஞ்சில்.



உஞ்சில் ஆடுவது என்பது ஒரு கலை. குறைந்தது மூன்று பேர், கூடியது ஐந்து பேர் அதற்குத் தேவை. பலகையின் இருபுறமும் இருவர் நின்று கயிற்றைப் பிடித்துக் கொள்வோம். ஒன்று தொடக்கம் மூன்று பேர் நடுவில் உட்கார்ந்து கொள்வோம். முதலில் பலகையில் அமர்ந்திருப்பவர்கள் கால்களால் தரையைத் தட்டித் தட்டி உஞ்சிலுக்கு விசை கொடுக்க வேண்டும். உஞ்சில் ஊசல் போல மெல்ல ஆட ஆரம்பித்ததும், இருபுறமும் கயிற்றைப் பிடித்தபடி நிற்பவர்கள் மெதுவாகக் குந்தி எழுந்து கால்களால் பலகைக்கு விசையைக் கொடுப்பார்கள். அதற்குப் பெயர் உன்னுதல். 


ஒருவர் மாறி ஒருவர் என்று, நிற்கும் இருவரும் மாறி மாறி உன்னி விசை கொடுக்க, உஞ்சில் வேகமாக இருபுறமும் ஆடத்தொடங்கும். ஒரு அந்தம் உஞ்சில் கட்டப்பட்டிருக்கின்ற கிளைக்குச் சமாந்தரமாக வரும் வரை அதிக பட்ச விசை கொடுத்து உஞ்சில் ஆடலாம். அதற்குப் பிறகு ‘உன்னக்’ கூடாது. நிற்பவர்கள் இருவரும் அமர்ந்துவிட வேண்டும். எல்லாரும் கூச்சலிட்டு மகிழ உஞ்சில் மெல்ல மெல்ல சமநிலைக்கு வரும். 


ஒருவேளை தெரியாமல் தொடர்ந்து உன்னிக்கொண்டிருந்தோமென்றாலும் எப்படியும் நமக்குத் தெரிந்துவிடும். உஞ்சில் 180 பாகைக் கோணத்தில் இயங்கும் போது எப்படியும் வேலியைத் தாண்டி பக்கத்து வீட்டுக்கும் உஞ்சில் போய் வரும். சமைத்துக்கொண்டிருக்கும் பக்கத்து வீட்டு சித்தி அல்லது அத்தை எப்படியும், ‘குசினி’ யன்னலால் நம்மை பார்த்து விடுவார். பெரும்பாலும் அவர் பிள்ளையும் நம்மோடு உஞ்சிலில் ஆடிக்கொண்டிருக்கும் என்பதால், உஞ்சிலுக்குப் போட்டியாக ஆடியபடி அவர் கூச்சலிடுவார். சிலநேரங்களில் பக்கத்து வீட்டு அன்ரி கத்தத் தொடங்குவது தான் ஆபத்தான புள்ளி என்று அளவிடத் தொடங்கி, அதுவரை உன்னிக் கொண்டிருப்பதும் நடந்திருக்கிறது.


உன்னி முடித்ததும் ஊஞ்சல் சமநிலைக்கு வரும். அந்த இனிய மயக்கமும் கிறுகிறுப்பும் தீரும் வரை கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருப்போம். அப்படி ஆறிய பிறகு தான் அடுத்த சுற்று ஆரம்பமாகும். இதன் போது பாடுவதற்கென்று நிறைய ஊஞ்சல் பாடல்கள் இருந்தன. எனக்கு இப்போது நினைவில் இருப்பது ஒன்று தான். 


“ஒரு கொத்துக் கச்சான் வறுத்துக் குத்தி
ஒம்பது பொண்டுகள் சேந்து குத்தி
கல்லும் மண்ணும் கலந்து குத்தி 
கல்லடி மீனாச்சிக்குக் கலியாணம்
காரில போவுதாம் பலகாரம் 
வேப்பங்குச்சி மாப்பிள்ளையாம்
வெக்கங்கெட்ட றோசாவாம்”


திருமணமொன்றைக் கேலி செய்யும், ஏதோ இடக்கரடக்கலாக அமைந்த பாடல். இப்போதும் அதன் அர்த்தம் தெளிவாகப் புரியவில்லை. பொண்டுகள், கலியாணம் இந்த இரண்டு சொற்களும் அப்போது சிறுவர்கள் உச்சரிக்க வெட்கப்படுபவை. எனவே இந்தப் பாடலை கூட்டாகப் பாடும் போது இடையில் யாரோ களுக்கென்று சிரிப்பார்கள். பிறகு எல்லோருமே சிரிப்போம். காரணமில்லாத சந்தோஷங்கள் எத்தனை இனிமையானவை!


ஒருவேளை அன்று உஞ்சில் ஆடுவதற்கு இன்னும் ஓரிருவர் அதிகமாக வந்து விட்டார்கள் என்றால் தயங்காமல் அவர்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வோம். ‘உஞ்சிலின் கவுறு பாரங்கூடினா நீளும், அறுந்து போகாது’ என்பது எங்கள் நம்பிக்கை. ஆனால், ஆட்களின் எண்ணிக்கை கூடும் போது, கயிறு மரத்தில் நெருக்கமாக உரோஞ்சுவதால் ‘கடக்’ என்று சத்தம் கேட்கும். கூடவே நேராக எளிமை இசை இயக்கத்தை ஆற்றுவதற்குப் பதில் உஞ்சில் ஒரு கோணத்தில் அலையத் தொடங்கும். அதற்கு தெத்துதல் என்று பெயர். அதற்கும் ஒரு பாடல் பாடுவோம். 


“தெத்தாதே உஞ்சில் தெத்தாதே 
தெத்துப் பலகாரம் சுட்டுத்தாறேன்
நேரே போ உஞ்சில் நேரே போ 
நேத்தடிச்ச காத்தோரம்”


தெத்துப்பாட்டு படித்துக் கொண்டே உன்னுபவர்கள் செய்யும் முயற்சியில் எப்படியும் உஞ்சில் நேராக ஆடத்தொடங்கும். அது தெத்துப்பாட்டின் சக்தி தான் என்று வியந்தபடியே அடுத்த சுற்றை மகிழ்ச்சியாக ஆரம்பிப்போம். 

உஞ்சில் மட்டுமா? எத்தனை சந்தோஷங்கள் அப்போது? வருசத்துக்கான சிற்றுண்டிகள் செய்வதெல்லாம் பெரும்பாலும் குழுக்களாகவே இடம்பெற்று வந்தன. உறவினர்கள் மட்டுமன்றி, அடுத்த வீட்டு எல்லைமானக் காரர்களும் முறை வைத்துக்கொண்டு இணைவார்கள். இன்று இங்கு பலகாரம் சுடுவோம், நாளை அங்கு தொதல் கிண்டுவோம், நாளை மறுநாள் அடுத்த வீட்டில் முறுக்கு என்று பங்கு போட்டுக்கொண்டு சிற்றுண்டிகள் செய்து பகிர்ந்து உண்ட அழகான காலம் அது. 


குஞ்சாத்தை, அம்மம்மா, அப்பம்மா, சீனியம்மா, ஆசையம்மா, முன்வீட்டு சித்தி, பக்கத்து வீட்டு அத்தை, பின் வீட்டு அன்ரி என்று பலரும் கூடியிருக்கும் அந்த சிற்றுண்டி தயாரிப்பு முகாம்களில் சுவாரசியமான உரையாடல்கள் இடம்பெற்றபடி இருக்கும். பெண்கள் கூடினால் கேட்கவும் வேண்டுமா? அடுத்த வைகாசிக்கு வர இருக்கின்ற திருமணங்கள், வைகாசிச்சடங்கு எப்போது, கதிர்காம யாத்திரைக்கு ஆராரு போறாங்கள், பேய்க்கதைகள், கூடவே சிலபல ஊர் வம்புகள் என்று சுவையான பல கதைகள். 

முறுக்கைக் கடிக்கச் செல்வது போல ஆர்வமற்ற கண்களைக் காட்டிக்கொண்டு ஊர் வம்புக் கதைகளை கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்போம். பேச்சு எல்லை மீறும் தருணத்தில் எப்படியோ உணர்ந்து கொண்டு “குளந்தப்பிள்ளேலுக்கு இஞ்சென்ன வேல, ஓடுங்கோ” என்று அகப்பையால் விரட்டி விடுவார்கள். ஆனால், வட்டக்காவடி விளையாடும் போதோ, கிட்டிப்புள்ளு அடிக்கும் போதோ அவர்கள் முணுமுணுத்துக்கொண்ட முழுக்கதை எங்களுக்கும் தெரிந்துவிடும். யாரோ ஒருவன் அல்லது ஒருத்தி முழுமையாக மோப்பம் பிடித்திருப்பான்/ள்.

சிறுவர்களுக்கு வருஷப்பிறப்பில் கிடைக்கும் இன்னொரு மகிழ்ச்சியே அது அவர்களின் உழைப்பாளர் தினம் என்பது தான். கைவிசேடம்! ஒருவர் விடாமல் எல்லா உறவினர்களிடமும் “கைமுழுத்தம்” வாங்கி விட வேண்டும். தன் நண்பனை அல்லது அண்ணாவை தங்கையை விட, தான் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதில்  அவர்கள் பல்வேறு ராஜதந்திரங்களை வகுப்பார்கள். ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் உறவினர் வீட்டுக்குப் போவதும், சில்லறைகளைக் கொட்டி எண்ணி “உன்ன விட எனக்கு ரெண்ட்றூவா கூடவே”, “இல்லயே, நான் உப்ப அம்மாச்சி வீட்ட போய் அஞ்ச்றூவா கைமுழுத்தம் வாங்குவனே” என்று தங்கள் சேகரிப்பைப் பற்றி பெருமிதமாகப் பேசுவதும், அடுத்த வருஷம் வரை தன் கைமுழுத்தத்தை பொக்கிஷம் போல் காப்பதும், ஒருவரின் கைமுழுத்தச் சேமிப்பில் இன்னொருவர் ரகசியமாகக் கைவைப்பதும், சிறுவயது வருஷப்பிறப்புகளின் இனிமையான நினைவுகள். 

இன்று சமூக வலைத்தளங்களிலெல்லாம் 'நைண்டிஸ் கிட்ஸ்' என்று கிண்டல் செய்யும் துணுக்குகளைக் காணும் போதெல்லாம் புன்னகைத்தபடியே இழந்தவற்றை எண்ணி ஏக்கப்பெருமூச்சு விடுவேன். வெறும் முப்பதாண்டுகளில் எத்தனை மாறக்கூடும், உண்மையில் எத்தனை இழந்திருக்கிறோம் என்பது உண்மையிலேயே திகைக்க வைக்கிறது. இன்று உஞ்சில் இல்லை. உறவினர்கள் ஒன்று கூடி சிற்றுண்டி செய்வதும் இல்லை, கைமுழுத்தம் கொஞ்சமாக எஞ்சியிருக்கிறது, சில்லறைகள் முற்றாக மறைந்துபோய், நூறு ரூபாய், இருநூறு ரூபாயென. கைகளுக்குப் பாரமில்லாத, ஆனால் மனதுக்குப் பாரமான கைமுழுத்தங்கள். மனம் எப்போதாவது இருந்து விட்டு ‘தெத்தாதே உஞ்சில் தெத்தாதே’ பாடுகின்றது. என்ன, இந்த உஞ்சிலில் முன்னே மட்டும் தான் செல்லமுடியும். திரும்பிச் செல்லவே முடியாது!


அரங்கம் பத்திரிகையின் 19.04.2019 இதழில் வெளியான கட்டுரை.
மேலும் வாசிக்க »

தம்பை மாநகர் புத்தாண்டு

0 comments
"போன ஆண்டுக்கான இலையைத் தலையில் வைத்து, வரும் ஆண்டுக்கான இலையைக் காலில் வைத்து, முறைப்படி மருத்து நீர் வைத்து நீராடி, வருடம் பிறக்கும் அன்றைய இலக்கினத்துக்கு உரிய நிறத்தில் புத்தாடை அணிந்து, பலவிதமான உணவுகள், சிற்றுண்டிகள் சாப்பிட்டு மகிழுங்கள்."

தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது என்பதைச் சொல்லும், 709 ஆண்டுகள் பழைமையான குறிப்பு இது. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், சித்திரைப்புத்தாண்டு பற்றிக் கிடைக்கின்ற மிகப்பழைய குறிப்பே இது தான். இன்னொரு வியப்பு என்னவென்றால், இந்தக் குறிப்பு எழுதப்பட்டது இலங்கையில். அதிலும் ஒரு சிங்கள மன்னனின் வேண்டுகோளின் அடிப்படையில்! தேனுவரைப் பெருமாள் எனும் போசராசபண்டிதரால் எழுதப்பட்ட 'சரசோதிமாலை'யில் தான் இந்தச் செய்யுள் வருகிறது.

 "போனவாண்டிலை தலைக்குப் புகுதுமாண்டிலை காலுக்கு
மான நேர் வைத்துச் சொன்ன மருத்து நீராடி வார
வான லக்கினத்து வண்ண வண்டுகில் புனைந்து கூறும்
போனகமுன்னே துய்த்துப் போசனம் பலவுஞ் செய்யே."
- 9:71
தம்பைமாநகரை ஆண்ட பராக்கிரமபாகு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவனது ஏழாம் ஆட்சியாண்டில் இந்நூலை தான் எழுதியதாக தேனுவரைப்பெருமாள் பாடுகிறார். நூலின் பாயிரம் குறிப்பிடும் சக ஆண்டுக் கணக்கு, பொ.பி 1310ஆம் ஆண்டோடு ஒத்துப்போகிறது.

இந்நூலின் ஒன்பதாவது சுபாசுப படலம், வருஷப்பிறப்புக் கருமத்தைப் பாடுகிறது. சித்திரை முதலாம் திகதி தான் வருடம் பிறக்கிறது என்று அது தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால் வேறு இடங்களில் 'சித்திரை முதல் பங்குனி' என்ற மாத ஒழுங்கையே அது பயன்படுத்துவதாலும், இன்றும் ஈழத்தமிழர் மத்தியில் அது கூறும் முறைப்படியே வருடப்பிறப்புக் கருமங்கள் கடைப்பிடிக்கப்படுவதாலும், சரசோதிமாலை, சித்திரைப்புத்தாண்டையே பாடுகிறது எனலாம்.

சரசோதிமாலை கூறும் "தம்பைமாநகர் பராக்கிரமவாகு", தம்பதெனியாவை தலைநகராகக் கொண்டு ஆண்ட நான்காம் பராக்கிரமபாகு என்கிறார்கள். இன்று தம்பதெனியா, குருநாகலுக்கு அருகே உள்ள ஒரு சிற்றூர். ஆனால் 14ஆம் நூற்றாண்டு முழுவதும், அது சிங்கள அரசரின் தலைநகராக விளங்கியது. அதை ஆண்ட மன்னர்களில் நான்காம் பராக்கிரமபாகு தலைசிறந்தவன். சிங்கள இலக்கியம் வளர்வதில் மகத்தான பங்களிப்பை ஆற்றிய அவன் "பண்டித பராக்கிரமபாகு" என்று போற்றப்பட்டிருக்கிறான். சிங்கள மூலங்களில் அவன் ஆட்சிக் காலம் இன்னதென்று அறிய முடியாமல் இருக்க, சரசோதிமாலைக் குறிப்பு மூலம், அவன் பொ.பி 1303இல் அரசுக்கட்டில் ஏறினான் என்பது தெரியவருகின்றது.

தேனுவரைப் பெருமாள் கோவிலின்  இன்றைய தோற்றம், தெவிநுவர.

நூலாசிரியரின் பெயர் தேனுவரைப் பெருமாள். அது ஈழத்தின் தென்கோடியில் தேவநகரத்தில் கோவில் கொண்டிருந்த திருமாலின் பெயர். மாத்துறைக்கு அருகே அமைந்திருந்த தேவநகரத்தின் இன்றைய பெயர் தெவிநுவர. அங்கே இன்றும் திருமாலுக்கு ஒரு தேவாலயம் உண்டு. எனில் இந்நூலாசிரியர் தேனுவரை இறைவனைக் குலதெய்வமாகக் கொண்டிருந்தவரா? அவருக்கும் தென்னிலங்கைக்குமான தொடர்பு என்ன?

பராக்கிரமபாகு ஏன் ஒரு சோதிடநூலைத் தமிழில் எழுதித் தரும்படி கேட்டான்? இன்று தனிச்சிங்களப்பகுதியான குருநாகல் பகுதியில், எழுநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ் நூலுக்கான தேவை என்ன? இன்றும் சிங்களவர் கடைப்பிடிக்கும் வருடப்பிறப்புக் கருமங்களுக்கும், ஈழத்தமிழர் வருடப்பிறப்புக் கருமங்ளுக்குமான ஒற்றுமை - வேற்றுமைகள் என்னென்ன?

பல கேள்விகள். பல பதில்கள். சில வெளியே சொல்லமுடியாதவை. அவர்களிடம் நாம் "சுப அலுத் அவுருத்தக் வேவா" சொல்லும் போதும், அவர்கள் நம்மிடம் "இணிய புத்தாண்டு வாள்த்துக்கல்" சொல்லும் போதும், மலர்கின்ற புன்னகைகளில் பொதிந்திருக்கின்றன அந்த விடைகள்.

அனைவருக்கும் மனமார்ந்த  சித்திரைப்பெருநாள் வாழ்த்துக்கள்! <3

மேலும் வாசிக்க »

சுராங்கனிட்ட மாலு கெனாவா

0 comments
இலங்கையில் மாத்திரமன்றி, தமிழகத்திலும் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற "சுராங்கனி" பாடலை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். இலங்கையின் பொப்பிசை மன்னன் ஏ.ஈ.மனோகரனால் 1970களில் எழுதப்பட்ட இப்பாடல், இலங்கை வானொலியால் தமிழகத்திலும் களை கட்டியது. பிற்காலத்தில் இந்தி  மற்றும்  கொங்கணியிலும் மொழிமாற்றப்பட்டு பட்டையைக் கிளப்பியது.  சில ஆண்டுகளுக்கு முன், விஜய் அண்டனிதினேஷ் கனகரட்ணத்தின் தயவில் மீண்டும் பரவலாக பேசப்பட்டது.

இப்போது விடயம், சுராங்கனி பாட்டு அல்ல, அந்தப் பாட்டில் வரும் "சுராங்கனி"யைத் தெரியுமா? யார் அந்த சுராங்கனி?

அதைப் பார்ப்பதற்கு முன் சுராங்கனி இடம்பெறுகின்ற ஒரு சிங்கள நாட்டார் கதையொன்றை நாம் பார்க்கவேண்டும். 
ரவிவர்மாவின் மோகினி ஓவியம்

ஊஞ்சலில் அமர்ந்து சந்தோசமாக பாடல் பாடி ஆடிக்கொண்டிருந்தாள் சுராங்கனி. தூரத்தில் யாரோ தன்னை உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வு. "யாரது?" என்றபடியே திரும்பினாள். மரத்தின் மறைவில் இருந்து வெளியேறினான் அந்த இளைஞன். 

பேரழகன். அவள் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு கேட்டாள் "யார் நீ? இங்கே என்ன செய்கிறாய்?" அவன் புன்னகைத்தான். "என் பெயர் ஈஸ்வரன். உன்னைப் பார்க்கவே  ஒளித்திருந்தேன்." அவள் பொய்க்கோபத்துடன் திரும்பினாள் "என்ன வேண்டும் உனக்கு?" "எனக்கு என்ன வேண்டுமென்று உனக்குத் தெரியாதா என்ன?" அவன் அவளை நெருங்கி கைகளை நீட்ட அவள் திடுக்கிட்டு மெல்ல விலகினாள் "நீ திருமணமானவன்". அவன் வியப்படைந்தான். "எப்படித் தெரியும் உனக்கு?" அவள் அவன் பக்கம் திரும்பாமலே "குழந்தைகள் இருக்கிறதா?" என்று கேட்டாள். "ஒரு மகன்"  சொல்லும் போது அவன் தலை குனிந்திருந்தது.

திரும்பிய அவள் கண்களில் மாறாத காதல். "எனக்கொன்றும் தடை இல்லை. என்னால் உன் குடும்ப வாழ்க்கை சிதையக்கூடாது. போய் இப்படி ஒரு பெண்ணை மாற்றாளாக ஏற்க உன் மனைவி தயாரா என்று கேட்டு வா." அவன் கண்கள் மகிழ்ச்சியில் மலர்ந்தன. "நிஜமாகவா சொல்கிறாய்?" "இதில் விளையாட்டு ஒன்றும் இல்லை. அவள் சம்மதம் பெற்று என்னை வாழ்நாள் முழுவதும் உன் வீட்டில் ஒன்றாக வைத்திருப்பாய் என்றால் மட்டுமே நான் உனக்கு இணங்குவேன்". "அவள் சம்மதிப்பாள்" ஈஸ்வரன் மெதுவாகச் சிரித்தான்.

அவன் மனைவி உமையாங்கனி, கண்ணகியைத் தூக்கிச் சாப்பிடுமளவு பத்தினி. கணவன் சொன்னதை பொறுமையாகக் கேட்ட அவள் மறுப்பெதுவும் சொல்லவில்லை. ஈஸ்வரனுக்கோ மகிழ்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.  அதே வேகத்தில் சுராங்கனியிடம் ஓடினான்.

அங்கு அவனுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி. சுராங்கனி கர்ப்பிணியாக இருந்தாள். அவளது தயக்கம் தீரவில்லை. "ஒரு பெண் தன் வாழ்க்கையில் இன்னொரு பெண்ணுக்கு இடம் கொடுப்பதே பெரிய விடயம். ஆனால் கர்ப்பிணியான ஒருத்தியை சக கிழத்தியாக ஏற்க யாருக்குத் தான் மனம் வரும்? உன் மனைவியின் அனுமதி கிடைக்காமல் நான் வரமாட்டேன்" ஈஸ்வரன் தயங்காமல் மீண்டும் போய் அனுமதி வாங்கி வந்தான். 

வந்தவனுக்கு இன்னொரு அதிர்ச்சி. ஒரு வயது மகனுடன் அவள் மீண்டும் கர்ப்பமாக இருந்தாள். "நானென்றால் கர்ப்பிணியை மாற்றாளாக ஏற்றாலும், இரண்டு பிள்ளைக்குத் தாயை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன். அதிலும் உன் மனைவிக்கே ஒரே ஒரு மகன் தான். என்னை அவளால் எப்படி சரிசமமாக நடத்த முடியும்?" சுராங்கனி மூக்கைச் சிந்தும் போது ஈஸ்வரனாலும் என்ன தான் செய்ய முடியும், பாவம்? மீண்டும் உமையாங்கனியிடம் அனுமதி பெறச் சென்றான் அவன்.

இப்படி ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல, ஏழு தடவைகள் உமையாங்கனியிடம் ஈஸ்வரன் சென்றதும், சுராங்கனிக்கு ஏழு ஆண் குழந்தைகள் பிறந்ததும் நடந்தது. ஏழாவது தடவை செல்லும் போது ஈஸ்வரனுக்கே கொஞ்சம் சந்தேகமாகத் தான் போய்விட்டது. இதென்ன அதிசயம் இப்படி ஏமாற்றுகிறாள்? அவள் ஏதும் வன தேவதையா? மோகினிப்பிசாசா? பார்ப்போம் நீயும் வா என்று உமையாங்கனியையும் அழைத்துக்கொண்டு திரும்பினான் ஈஸ்வரன்.

ஆனால் அங்கு சுராங்கனி இருக்கவில்லை. உமையாங்கனியின் அண்ணன் உற்பலவண்ணன் ஆறு குழந்தைகளுடனும் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். "நீங்கள் எப்படி இங்கே? சுராங்கனி எங்கே? ஆறு பேர் தானே உங்களோடு நிற்கிறார்கள்? மூத்தவன் எங்கே?" ஈஸ்வரன் பரபரப்படைந்தான். உற்பலவண்ணன் உதட்டை மடித்து குறும்புச்சிரிப்பு சிரித்தார். "அவன் பூப்பறிக்கப் போய் விட்டான் அத்தான்." 

உமையாங்கனியோ வைத்த கண் வாங்காமல் ஆறு குழந்தைகளையும் விழுங்குவது போல் பார்த்துக்கொண்டிருந்தாள். "என் குழந்தைகள் தானடி தங்கச்சி" உற்பலவண்ணன் சொல்லும் போதே அவளது கண்கள் மகிழ்ச்சியில் குளமாகி விட்டன. "அனே மகே ஐயாகே கந்த குமாரயா" (ஐயோ, என் அண்ணாவின் மலை [போல் வளர்ந்த] மக்களே) என்று அழுதபடியே ஆறு பேரையும் கட்டியணைத்தாள் உமையாங்கனி. அப்போது தான் அந்த விந்தை நிகழ்ந்தது. அறுவரும் ஒருவராகினர். ஆறு பேருக்குப் பதில் அங்கு ஒருவன் -  கந்தகுமாரன் நின்று கொண்டிருந்தான். ஈஸ்வரன் திகைத்தபடி நிற்க, விழுந்து விழுந்து சிரித்தபடியே உற்பலவண்ணன் சொன்னான் "ஐயோ அத்தான், நான் தான் அந்த சுராங்கனி!"

கதை எங்கு போய் முடிகிறது என்று ஊகித்திருப்பீர்களே! ஆம். அதே கந்த புராணத்தில் தான். சிவன் - மோகினி கதை தான் சிங்கள நாட்டார் வழக்கில் மாற்றமுற்று இப்படி ஈஸ்வர தெவியோ -  சுராங்கனி கதையாக மாறி நிற்கின்றது!   உபுல்வன் தெவியோ என்று சிங்களத்தில் அழைக்கப்படும்  உற்பலவண்ணன்  திருமாலும் அப்படியே வருகிறார் இங்கு. கந்தன் திருமாலுக்குப் பிறப்பது தான் கதையில் சுவாரசியமே!

ஆம். சிங்களத்தில் சுராங்கனி என்றால் தேவதை அல்லது மோகினி என்று தான் பொருள். சுரா என்பதற்கு மது என்ற அர்த்தமும் உண்டு. மயக்கும் சுராபானம் போன்றவள் சுராங்கனா. கொசுறுத்தகவல் இரண்டு சொல்லவேண்டும். எனக்குத் தெரிந்த ஒரு சிங்கள நண்பியின் பெயர், உமையாங்கனா. இன்னொருத்தியின் பெயர் அதே சுராங்கனி. மரபு!

ஆங். எத்தனை பேர் கவனித்தீர்கள்? ஒரு விடயத்தை நான் சொல்லவே இல்லை. சுராங்கனியின் ஏழு பிள்ளைகளில் பூப்பறிக்கப் போன  மூத்த மகன் எங்கே?

அவன் தான் மூத்த தலைவன். அண்ணாவை சிங்களத்தில் 'ஐயா' என்பார்கள். எனவே மூத்ததலைவனின் சிங்களப்பெயர் ஐயநாயகன்.  வேறு யார்? சிவனுக்கும் மோகினிக்கும் மகனான சாட்சாத் நம் ஐயனாரே தான்!
அய்யநாயக்க, சிங்கள ஐயனார்
சில இடங்களில் ஈஸ்வரனும் சுராங்கனியும் சந்திப்பதற்கு முன், சைவ - வைணவப்புராணங்களில் கூறப்படும் பஸ்மாசுரன் கதை, முற்சேர்க்கையாக வருகின்றது.  அவற்றில் ஒரு சில கதைகளில் சுராங்கனிக்கு ஐயநாயகன் மட்டுமே பிறக்கிறார். பெருங்கருணை கொண்டவளான சுராங்கனி, அதன் பின் குழந்தைகளைக் காக்கும் "கிரி அம்மா" (கிரி =  பால்) எனும் தெய்வம் ஆகின்றாள்.

சிங்கள மரபில் சில இடங்களில்  பத்தினிக்குச் சமனாகவும், சில இடங்களில் பத்தினியை விட மேம்பட்டவளாகவும், 'கிரி அம்மா' எனும் தெய்வம் வழிபடப்படுவது இங்கு நினைவுகூரத்தக்கது. கிரி அம்மா என்று ஒன்றுக்கு மேற்பட்டவர்களை அழைக்கும் வழக்கமும் சிங்கள நாட்டார் மரபிலுண்டு.

இலங்கையில் பத்தினி வழிபாட்டோடு இணைந்தாற்போலவே ஐயனாரும் வழிபடப்படுகிறார். பத்தினிக்காக நிகழும் "கம்மடுவ" சடங்கில், கதிர்காமக் கடவுளுக்கான "கால பந்தம" எனும் தீப்பந்தம் ஏற்றும் பூசையின் போது ஈஸ்வர தெவியோ - சுராங்கனியின் கதை சிங்களப்பூசாரியான கப்புறாளையால் பாடப்படுகிறது. 

சேரநாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு பலராலும் மீண்டும் மீண்டும் சமூகவியல் ஆய்வுகளுக்கான களமாக சுட்டிக்காட்டப்படும் ஒன்று. கேரளத்தை ஆளும் தெய்வங்கள் இரு வகை. பகவதிகளும் சாஸ்தாக்களும். பகவதி உருத்திரிந்த கண்ணகி. சாஸ்தா உருத்திரிந்த சாத்தன், அதாவது நம் ஐயன். சிங்களவரிடம் இன்றும்  பத்தினி இருக்கிறாள். கூடவே மருவிப்போனவனாக ஐயநாயகனும் விளங்குகின்றான். 

தமிழ் மரபும் பண்பாடும் எங்கெல்லாம் போய்த் திரும்பி, இன்று எப்படியெல்லாம் உருமாறித் திரிந்து நிற்கின்றன என்று பார்த்தீர்களா?

(அரங்கம் இதழின் 22 மார்ச் 2019 இதழில் வெளியானது.)
மேலும் வாசிக்க »

நித்திய கன்னியர்

0 comments

சிறுவயதில் அம்மா எனக்குத் தலையில் எண்ணெய் வைக்கும் போது ஒரு மந்திரம் சொல்வார் "மாவலி பரசுராமன் வாயுமைந்தன் வாசுதேவன் மேவிய சுக்கிரீவன் விளங்குகின்ற விபூசணன் என்றென்றும் பதினாறு வயது மார்க்கண்டனாக இருக்கக்கடவாய்."

இதில் சொல்லப்படும் ஏழு பேரும் வைதிக மரபில் ஏழு சிரஞ்சீவிகளாக, சாகாவரம் பெற்று வாழ்பவர்களாக சொல்லப்படுபவர்கள் (இந்தப் பட்டியலில் வேறு பெயர்களும் இடம் பெறுவதுண்டு).

இப்படி ஆண்கள் நினைத்துப் பார்க்கவேண்டியவர்கள் என்று சொல்லப்படும் ஏழு சிரஞ்சீவிகள் போலவே, பெண்கள் தினமும் காலையில் நினைத்துப் பார்க்கவேண்டியவர்களின் பட்டியல் ஒன்றும் நம் மரபில் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. பஞ்சகன்னியர். அந்த ஐந்து கன்னியரும் திரௌபதி, குந்தி, தாரை, மண்டோதரி, அகலிகை. (குந்திக்குப் பதில் சீதை சொல்லப்படும் பட்டியலும் உண்டு.)


இந்தப்
பட்டியலில் உள்ள முரண்நகை என்னவென்றால் இந்த ஐவரும் வழக்கமான அர்த்தத்தில் கன்னியரே இல்லை. திரௌபதிக்கு ஐந்து கணவர்கள். குந்திக்கும் கணவர் ஐந்து பேர். அகலிகை, கணவன் இருக்க இந்திரனோடு குலாவியவள்.
வான்மீகி இராமாயணத்தின் படி மண்டோதரி, இராவணன் கொல்லப்பட்ட பிறகு விபீஷணனை திருமணம் செய்து கொள்கிறாள். வாலியின் மனைவி தாரை, வாலி கொல்லப்பட்ட பிறகு சுக்கிரீவனை மணக்கிறாள்.

பெண்களுக்கு இன்றைய சமூகம் வகுத்திருக்கும் ஒழுக்க விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரான வாழ்க்கை வாழ்ந்த இந்த ஐவரையும் ஒவ்வொரு பெண்ணும் அதிகாலையில் எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் தான் என்ன?

இப்போதே இத்தனை கட்டுப்பாடுகள் இருக்கையில், பழங்காலத்தில் ஒரு பெண்ணுக்குரிய சுதந்திரம் எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத்தேவையில்லை. அதிலும் பெண் முதன்மையாக ஒடுக்கப்படுவது அவளது பெண்மையாலேயே. இன்றைக்கெல்லாம் ஒரு ஆணை இழிவுபடுத்த வேண்டுமென்றால், அவனது தாயின், மனைவியின், தமக்கையின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கினாலே போதும்.

அந்தப் பெண்மை என்ற வரம்பைத் தான் இந்த ஐவரும் மீறினார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இவர்கள் செய்த சாதனை ஒன்றே ஒன்று தான். தனக்குரிய பாலியல் சுதந்திரத்தை தைரியமாகப் பெற்றுக்கொண்டது. அதேவேளை தங்கள் கன்னிமையைக் காத்துக் கொண்டது. இந்த உலகம் தன்னைத் திருப்திப்படுத்த, பெண்கள் மீது மட்டும் போட்டிருக்கும் கற்பு என்ற கவசம் மீதான காறி உமிழல் அது. திரௌபதி வழிபாட்டில் அடிக்கடி சொல்லப்படும் "ஐவருக்கும் பத்தினி, அழியாத கன்னி" என்ற கூற்றிலுள்ள முரணை இதன் மூலமே புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், பாலியல் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதற்காகத் தான் இந்த ஐவரை பெண்கள் தினமும் காலையில் நினைவு கூர வேண்டுமா?

இல்லை. அப்படிச் சுருக்குவது அபத்தம். ஐந்து பாத்திரங்களும் மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் எப்படி எப்படியெல்லாம் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்த்தால் தான் முழுமையான சித்திரம் துலங்கி வரும்.

இராமாயணத்தில் மண்டோதரி மற்றும் தாரையின் நுண்ணறிவும் இராஜதந்திரமும் பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவற்றைக் கண்டு முறையே இராவணனும், வாலியும் சுக்கிரீவனும் வியக்கும் இடங்களும் அங்கு வருகின்றன. மகாபாரதத்தில் திரௌபதியும் குந்தியும் கூட அவ்வாறே. பெண்கள் தரப்பில் பாரதப்போரின் சூத்திரதாரிகள். எஞ்சியுள்ள அகலிகை வேறொரு விதத்தில் அணுகப்பட வேண்டியவள்.

உண்மையிலேயே இந்தப் பெண்கள் இரத்தமும் சதையுமாக இந்த உலகில் நடமாடியவர்கள் என்றால், அவர்கள் அனுபவித்திருக்கக்கூடிய வசைகள், வலிகள் தான் எத்தனை எத்தனை? அவர்களின் நிமிர்வும் ஆளுமையும் ஆணுலகைச் சீண்டியிருக்கும். அதை அடக்கத் தூண்டியிருக்கும். இதிகாசங்களில் கூட அவர்கள் ஐவருமே தோற்றவர்கள் தான். ஆனால் பெண்ணாக வென்றவர்கள். காலமுள்ள வரை நினைவுகூரப்பட வேண்டியவர்கள். அதனால் நித்திய கன்னியர்.

நிஜ வாழ்க்கையில் எத்தனையோ இடத்தில் நாம் குந்திகளை, மண்டோதரிகளை, தாரைகளை, திரௌபதிகளை, அகலிகைகளை கடந்து கொண்டு தான் இருக்கிறோம். நம் பக்கத்து வீட்டில், நம் தொழிலகத்தில், நம் நட்பு வட்டத்தில், நம் சொந்தத்தில், யாரோ ஒருத்தி பஞ்ச கன்னியரில் ஒருத்தி பட்ட வலியையும் வேதனையையும் சுமந்துகொண்டு புன்னகையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

நான் கண்ணகியை போற்றுபவன். ஆனால் பஞ்ச கன்னியரை அவளுக்கும் மேலானவர்களாக ஆராதிக்கிறேன். கண்ணீரை மறைத்துக்கொண்டு என் உலகில், என்னைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ கன்னியரில் அவர்களைக் கண்டு கண் கலங்கியிருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் என் வணக்கம். மகளிர் தின வாழ்த்துக்கள்.
மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner