
சங்கமன்கண்டி என்பது இங்குள்ள சிறுகுன்றின் பெயர். சிங்களத்தில் கந்த என்பது மலை. சங்கமன்கந்த என்றால் சங்கமனின் மலை என்று பொருள். ஆனால் தமிழில் கண்டி என்பது மலைப்பள்ளத்தாக்கு, ஒடுங்கிய பாதை, நுழைவாயில், மேடான இடம் என்றெல்லாம் பொருள் கொண்ட சொல். அதனாலேயே மலைநாட்டில் ஒடுங்கிய பாதையோரம் உருவாகி எழுந்த நகரொன்றும் அப்பெயரைப் பெற்றது. பொலிகண்டி, கோவிலாக்கண்டி என்று இடங்களெல்லாம் வட இலங்கையிலும் உள்ளன. எனவே சங்கமன்கண்டி என்பது சங்கமனின் நகரம் என்று பொருள். யார் அந்த சங்கமன் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. பண்டையகால நாக மன்னனென்றும், மட்டக்களப்பின் சிற்றரசனொருவன் என்றும் பலர் சொல்லுவர். தொன்றுதொட்டு அப்பெயர் இப்பகுதி மக்களால் சங்குமண்கண்டி,சங்குமக்கண்டி, சங்கமான்கண்டி என்றெல்லாம் பல்வேறு விதமாக அழைக்கப்பட்டு வந்துள்ளது.
நாமெல்லோருமே பாடசாலைக் காலத்தில் இலங்கையின் நீளம், அகலம் சொல்லும் போது, வடக்கு தெற்காக பருத்தித்துறை முனை, தெய்வேந்திரமுனை என்றும், கிழக்கு மேற்காக சங்கமன்கண்டிமுனை, கொழும்பு முனை என்றும் அளந்திருப்போம். ஆக, இலங்கையின் அதிகிழக்கில் இருக்கும் புள்ளி இம்மலை. எனவே கடல் வழி ஆக்கிரமிப்பு, படையெடுப்புகளை இலகுவாக அடையாளம் காணக்கூடிய புவியியல் முக்கியத்துவமும் இம்மலைக்கு இருந்தது. இன்றும் இம்மலையுச்சியில் நின்றால் நெடுந்தொலைவு கடலைக் கண்காணிக்க முடியும்.
சோழர்கள் சங்கமன்கண்டி மலைக்கு வடக்கே இருந்த சாகாமம் வரை இலங்கையில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினார்கள் என்கின்றது மகாவம்சம். ஒல்லாந்தர் காலத்தில் பழைய மட்டக்களப்புப் பகுதி "ஏறாவூர் தொடக்கம் சங்கமன்கண்டி வரை" என்றே எல்லை வகுக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் சங்கமன்கண்டியோடு மட்டக்களப்பின் தென்பகுதியான அக்கரைப்பற்று முடிவடைந்து பாணமைப்பற்று தொடங்குகிறது. பாணமைப்பற்று கண்டி அரசோடு நேரடித் தொடர்பு கொண்ட பகுதி. பாணமையில் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த சமரபாகு என்பவன், போர்த்துக்கேயரின் உதவி பெற்று கண்டி அரசன் செனரத்தை (1604 - 1635) ஆட்சி கவிழ்த்து கண்டி அரியணையில் ஏறுவதற்காக சதித்திட்டம் தீட்டும் அளவு பலம் கொண்டிருந்தான் என்றால் பார்க்கலாம்.
இப்படி பாணமை ஆரம்பத்தில் மட்டக்களப்புத் தமிழரசின் கீழ் நேரடியாக இருந்ததில்லை என்பதால் சங்கமன்கண்டியே அதன் தென்னெல்லையாக இருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் திருக்கோவில் ஆலயத்துக்குரிய எருமைமாட்டுத் தொழுவம் ஒன்று இம்மலையில் அமைந்திருந்தது. விந்தையாக, கண்டி என்பது தொல்காப்பிய காலத்திலிருந்தே எருமைக்கடாவைக் குறிக்கும் சொல் . சோழர் காலத்திற்குப் பின் காலிங்க மாகோன் காலத்தில் வீரசைவ வழிபாட்டு மரபுக்குள் வந்துவிட்ட திருக்கோவில் ஆலயத்தில் "சங்கமர்" எனும் வீரசைவக் குருக்களே பூசனையாற்றி வந்திருக்கிறார்கள். என்றால் சங்கமரின்+ கண்டி பராமரிக்கப்பட்ட மலை தான் சங்கமன்கண்டி மலையா?
சிவபூமியாகிய இலங்கையில் வடக்கே கரம்பகம், மேற்கே முனீச்சரம் என்று எல்லை வகுக்கப்படும் திருக்கோணேச்சரப் பெருமானின் தனிப்பெரும் ஆட்சிக்குத் தென்னெல்லையாக சங்கமன்கண்டியைக் கருதும் ஒரு மரபும் நீடித்து வருகிறது. இங்கு பண்டு ஒரு சிவாலயம் அமைந்திருந்ததாகவும் ஒரு ஐதிகக் கதை விளங்குகின்றது. மகாசேனன் கிழக்கிலங்கையில் இடிப்பித்து விகாரங்களாக மாற்றிய சிவாலயங்களில் ஒன்றான ஏரகாவில் இங்கு தான் இருந்தது என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளபோதும் அதை நிரூபிக்க சான்றுகள் போதுமாகக் கிடைக்கவில்லை. தொல்லியல் சான்றுகள் கிடையாத இன்னொரு ஐதிகக் கதை, சோழரிடமிருந்து இலங்கையை மீட்ட விசயவாகு மகாராசாவிற்கு திரிலோகசுந்தரி எனும் கலிங்க நங்கை பட்டத்தரசியாக இருந்தாளென்றும், சைவசமயம் சார்ந்திருந்த அவள் உரோகண நாட்டின் நடுவே அமைந்திருந்த சங்கமன்கண்டியில் அரண்மனை அமைத்துத் தங்கியிருந்து அங்கோர் சிவாலயம் இயற்றி வழிபட்டு வந்தாள் என்றும் சொல்லுகின்றது. சங்கமன்கண்டிக்கு மேற்கே ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்ட கட்டடச் சிதைவுகளும் தொல்லியல் இடிபாடுகளும் இன்றும் காணப்படுகின்றன.
சங்கமன்கண்டி மலைக்கு மேற்குப்புறம் அக்குன்றை விட உயரமான இன்னொரு மலை அமைந்துள்ளது. அதை மகாதுவட்டா மலை என்றும் துவட்டா எனும் முனிவரொருவர் அங்கு தங்கி தவமியற்றி வந்ததாகவும் அவர் வசித்த குகை இன்றும் அங்கு இருப்பதாகவும் சொல்லுகிறார்கள். அம்மலைச்சாரலில் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஏராளமான துறவிகள் தங்கித் தவமிருந்து வந்திருக்கிறார்கள். அப்படி இங்கு இறுதியாகத் தங்கியிருந்த மயில்வாகன சாமியார் என்பவரின் சமாதி இன்றும் காட்டுப்பிள்ளையார் கோவிலருகே அமைந்துள்ளது. அம்மலையிலும், அம்மலையைத் தாண்டி மேற்கே பெரிய பரப்பில் காணப்படும் பழங்காலக் கட்டட இடிபாடுகளுக்கு நடுவிலும் அமானுஷ்யமான பல்வேறு சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் சொல்லுகிறார்கள். அப்படிப் புகழ்பெற்ற ஒரு கதை இன்றும் இந்தக் கோவிலின் அருகே உள்ள ஊர்களில் வாய்மொழிக் கதையாக சொல்லப்பட்டு வருகின்றது.
அது ஒரு சித்திராபௌர்ணமி. இந்தப்பகுதியில் மாடுமேய்த்துக் கொண்டிருந்த தம்பிலுவில்லைச் சேர்ந்த ஒருவர் தன் மாடொன்றைக் காணாமல் தேடிவந்தபோது அவருக்கு வழி தவறிவிட்டது. மெல்ல இருட்டிவர அவரைப் பயம் பிடித்துக்கொண்டது. அங்கும் இங்கும் வனவிலங்குகளின் ஓலம். தூரத்தே ஒரு இடிந்த மண்டபம் ஒன்று தென்பட்டதால், அங்கே ஓடிச்சென்று ஒதுங்கிக்கொண்டார். வீட்டில் தனக்காக உணவு சமைத்துக் காத்திருக்கும் மனைவி, பிள்ளைகளின் முகம் கண்முன் எழுந்தது. "இங்கிருந்து எப்படி வெளியேறுவது, எப்படி ஊர் திரும்புவது, சிவசிவா வழிகாட்டு" கண்ணீர் வழிய இறைவனைப் பிரார்த்தித்தார். கண் திறந்தபோது காவியுடையும் தாழ்வடக்க மாலையும் அணிந்த ஒருவர் தன் முன் புன்னகையுடன் நிற்பதை அவர் கண்டார். "வழிதவறிவிட்டாயா, சரி. உனக்கு இரண்டு வாய்ப்புகள். திரும்பிப்பார்க்காமல் நேரே நடந்தாயென்றால் கொத்து முறித்துப் போட்டிருக்கும். அந்த வழியில் சென்றால் மலையடிவாரம் வரும். அங்கு நிற்கும் உன் ஊரவர்களோடு இணைந்துகொள்ளலாம். நாளை காலை வந்து மீண்டும் உன் மாட்டைத் தேடி பிடித்துச் செல்லலாம். அல்லது இங்கேயே இரவு தங்கியிருக்கலாம். காலையில் உனக்கு மாடு கிடைக்கும். என்ன செய்யப்போகிறாய்?"
கும்மிருட்டில் தனியே காட்டுக்குள் நடப்பதை நினைக்க அவருக்கு குலை நடுங்கியது. "தனியப்போக பயமாய் இரிக்கி. காலமே மாட்டோடயே போறன்"
"சரி. இங்கு இன்றிரவு தங்கிவிட்டுச் செல். ஆனால் ஒரு நிபந்தனை இங்கு நடக்கும் எதையும் நீ யாருக்கும் சொல்லக்கூடாது. இது என் கட்டளை!"
அவர் ஒப்புக்கொண்டு தலையாட்டினார்.
முழுநிலவு எறிக்கத் தொடங்கியது. நல்ல அகிற்புகை வாசம் வீசியது. நேரம் ஆக ஆக, அந்த இடத்தில் மெல்ல மெல்ல வெளிச்சம் பரவுவதையும் தனக்கு வழிகாட்டியவர் போலவே ஏராளமான சாமியார்கள் அங்கு ஒன்றுகூடுவதையும் அவர் கண்டார். யாரோ வரிசையாக தாமரையிலைகளைப் பகிர, பந்தியில் அமர்ந்து உணவுண்ணுமாறு அவர் பணிக்கப்பட்டார். அருகிலிருந்த மடுவில் கை கழுவி நிலவொளியில் பரிமாறப்பட்ட உணவைக் குழைத்து வாயில் வைத்தார். அப்பப்பா! அப்படி ஒரு உருசியான உணவை அவர் உண்டதே இல்லை. இதென்ன இப்படி தேவாமுறுதம் போல தித்திக்கிறது! ஒருகணம் அவரில் சராசரிக் குடும்பஸ்தன் எழுந்தான். அடடே, வீட்டில் மனைவி பிள்ளைகள் இந்த அமுதை உண்டால் என்னென்னவெல்லாம் சொல்லி மகிழ்வார்கள். அரைக்கண்ணால் இருபுறமும் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்துவிட்டு மெல்ல தன் வேட்டித்துணியில் அந்த சாப்பாட்டைக் கிள்ளி வைத்து முடிந்துகொண்டார். அருகில் இருந்தவர் ஏதோ எண்ணி சத்தமிட்டுச் சிரிக்க, திடுக்கிட்டுத் திரும்பி ஒன்றும் நடவாதது போல் இலையை வழித்து உண்டு கைகழுவினார்.
அந்தத் தண்ணீர் சாப்பாட்டின் உருசியை இன்னும் கூட்டியது போல் இருந்தது. கண்களைச் சுழற்றிக்கொண்டு வந்தது. இரத்தநாளங்களில் ஏதோ சுற்றிச்சுற்றி போதை போல் ஏறி தலைக்குள் வெப்பமான நீர்க்குமிழிகள் வெடித்தன. பளிச்சென்று மின்னல் போல் ஏதோ வெட்ட, கண்ணை மூடித் திறந்தவர் திகைத்தார்.அவர் அமர்ந்திருந்தது ஒரு இடிந்த கட்டடம் அல்ல; அது ஆயிரங்கால் மண்டபம்! பொன்னும் மணியும் பூட்டி தகதகவென மின்னிக்கொண்டிருந்த தூண்கள், வண்ண மலர் மாலைகள், நட்சத்திரங்களென மின்னிக்கொண்டிருந்த பாவை விளக்குகள். தன்னிருபுறமும் அமர்ந்திருந்தவர்கள் அணிமணி ஆபரணங்கள் சூடிய தேவர்கள் என்பதை அவர் கண்டார். தானும் பட்டாடை சூடியிருப்பதை, தேவவடிவம் கொண்டிருப்பதை உணர்ந்தார். வானிலிருந்து அரம்பையர் வந்திறங்கினர். ஆடலும் பாடலும் தொடங்கியது. கிண்கிணி துந்துபி முழங்கியது. அவர் என்றும் முகர்ந்திராத சுகந்தத்துடன் மலர்கள் சொரிந்தன. சட்டென அரகர ஓசை எழ, ஆயிரங்கால் மண்டபத்தின் மறு அந்தத்தில் திரை விலகி, தீபாராதனையில் ஓங்கி உயர்ந்த சிவலிங்கம் ஒளிப்பிழம்பென மின்னித் தெரிந்தது. பறையும் தம்பட்டமும் உச்சகதியில் ஒலித்தன. அவர் விக்கித்துப் போனார். அந்த நிகழ்வின் இன்பம் தாங்கமாட்டாமல் மேனிசிலிர்த்து சிவசிவா என்று கண்ணீர் விட்டுக் கதறினார். கைகூப்பித் தொழுது அரற்றினார். தேவகணங்களுடன் இணைந்து ஆடிப்பாடியபடியே மெய் சோர்ந்து மெல்லச் சரிந்தார். கண்கள் சொக்கி மூடின.
முகத்தில் சூரிய ஒளி சுட்டு அவர் தலைவலியுடன் எழுந்தபோது, அவருக்கு அருகே அவரது காணாமல் போன மாடு "அம்மா" என்று முக்காரமிட்டு கழுத்து மணி அசைய தலையாட்டிக்கொண்டிருந்தது. திடுக்கிட்டு எழுந்து அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். நன்கு விடிந்திருந்தது.அவர் அதே உடைந்த மண்டபத்தின் தூணொன்றில் சாய்ந்திருந்தார். முதனால் அணிந்திருந்த கல்லும் முள்ளும் கிழித்த அதே வேட்டி. சுற்றிவர அதே காடு, அதே இருள். அவர் இரவு அனுபவித்த விடயங்கள் நடந்ததற்கான தடயங்கள் எதையுமே காணோம். ஆனால் அவருக்கு முன்புறமாக யாரோ கொத்து முறித்துப் போட்டிருந்தார்கள். தான் கனவேதும் கண்டேனா? ஆனால் யார் இந்த மாட்டைக் கொணர்ந்து விட்டார்கள்? அந்த சாமியார் சொன்னமாதிரி எனக்கு வழி காட்டுவதற்காக காட்டுமரக் கிளைகளை வேறு கொத்துமுறித்துப் போட்டிருக்கிறதே!
சட்டென ஏதோ நினைவுவர, தன் இடுப்பைத் தடவிப் பார்த்தார். அடிவயிறு சில்லிட்டது. அங்கு அவர் முதனாள் இரவு முடிந்துவைத்த அமுது முடிச்சு இருந்தது! என்றால்.... என்றால்.... அது உண்மை, அத்தனையும் உண்மை, அவர் இரவு அங்கு வந்தது, சாமியார் தன்னை அமரச்சொன்னது, இன்னும் பல சாமியார்கள் வந்தது, எல்லோரும் சுவையான அமுதுண்டது... இதோ உண்மைக்குச் சாட்சியும் இருக்கிறது... ஆனால்... அமுதுண்ட பின்னர் கண்ட அந்த மயிர்கூச்செறியும் காட்சிகள்.... தேவர்கள், அரம்பையர், முனிவர்கள், வாத்தியங்கள், நடனங்கள், அதெல்லாம் உண்மை இல்லையா? ஆகா, என்னையாளும் அப்பனை அத்தனை உயரத்தில் பேருருவச் சிவலிங்கமாகத் தரிசித்தேனே.. அது உண்மை இல்லையா? ஐயோ தலைவலிக்கிறதே!
அவருக்கு அதற்கு மேல் அங்கு நிற்பதற்கு அச்சமாக இருந்தது. வேகமாக மாட்டை இழுத்துக்கொண்டு "கொத்து முறித்துப்" போடப்பட்டிருந்த வழியில் வேகமாக ஓடினார். சீக்கிரமே சங்கமன்கண்டி மலையடிவாரத்தை வந்தடைந்தார். வேகவேகமாக மாட்டை காளையடியில் கட்டிவிட்டு வீட்டுக்கு சிட்டாகப் பறந்தார்.
பாம்பன் சுவாமிகள்
இரவெல்லாம் அழுதழுது வீங்கிச் சிவந்த கண்களுடன் மனைவி வாசற்படியில் அமர்ந்திருந்தாள். நன்கு விடிந்திருந்ததால் உறவினர்களெல்லாம் கூடிநின்றார்கள். அவரைக் கண்டதுமே தலைவிரிகோலமாக ஓடிவந்து கட்டியணைத்து அழுதாள். அடுத்த கணமே தோளில் அறைந்து திட்டினாள் "ஐயோ மனுசா... எங்க கிடந்து வாறாய்.. உன்னக் காணாம எங்கெல்லாம் தேடுற...." ஒருகணம் நடந்ததெல்லாம் பெருமிதத்துடன் சொல்ல வாயைத் திறந்தவர் அடுத்தகணமே அந்த முனிவரின் எச்சரிக்கை நினைவில் வர மெல்ல வார்த்தைகளை விழுங்கினார்.
"ஆனால் ஒரு நிபந்தனை இங்கு நடக்கும் எதையும் நீ யாருக்கும் சொல்லக்கூடாது"
"அது ஒண்டுமில்ல... மாடு காணாத்துப் பொயித்து. தேடிக் காட்டுக்க போனநான் வழிமாறித்தனே..."
"ஆ.. செரி செரி... நானும் வேறங்கயும் பொய்த்தயோண்டு நினைச்சன்"
மனைவியையும் பிள்ளைகளைம் ஆறுதல்படுத்தி குளிக்கப் போனவருக்கு வேட்டியில் முடிந்திருந்த அமுது ஞாபகம் வந்தது. மனைவிக்குக் கொடுப்பதா, பேசாமல் எறிந்துவிடுவதா... சே சே எறிவதற்கா இவ்வளவு தூரம் மினக்கெட்டு எடுத்துவந்தோம். சரி தான்... நடந்த ஒன்றையும் சொல்லக்கூடாது என்று தானே சாமியார் சொன்னார், சாப்பிடக்கூடாது என்று சொல்லவில்லையே!
"இஞ்சே கேட்டயோ..."
"ஆ.. என்ன"
"இஞ்சொள்ளம் வாவன், இத சும்ம சாப்புட்டுப் பாரு, புள்ளேலுக்கும் கிள்ளிக்குடு"
"இதென்னது... எங்கால இது உனக்கு.."
"அதென்னத்துக்கு உனக்கு, சும்ம சாப்புட்டுப் பாரன்"
தூக்கிய புருவங்களுடன் மனைவி அந்த அமுதை வாங்கி கேள்விக்குறி மறையாத முகத்துடன் சற்று வாங்கி வாயிலிட்டு உமிழ்ந்தாள்
"ஆய்..இதென்ன உவளவு ருசியாரிக்கி.. புள்ளே இஞ்ச வா"
அமுதை உண்ட குழந்தைகள் வியப்புடன் அம்மாவைப் பார்த்தன. அப்படி ஒரு சுவையான உணவை அம்மா அதற்கு முன்பு செய்ததே இல்லையே
"சரி, அங்கிட்டுப் போய் விளாடுங்கோ"... பிள்ளைகளை வேகமாக அந்தப்பக்கம் அனுப்பிவிட்டு விடுவிடுவென்று கிணற்றடியில் குளிக்கத் தயாராகிக்கொண்டிருந்த கணவனை நெருங்கினாள்.
"இஞ்செண்டுறன்... அம்மாளறிய உண்மையச் சொல்லு.. இது உனக்கு ஆரு செஞ்சி தந்த.... ராவு நீ எவள் வீட்ட கிடந்து வந்த நீ" சொல்லும் போதே அவளது நாக்குளறியது.. "கண் மூடுற வரைக்கும் நீ எனக்குத் துரோகம் செய்யமாட்டாயெண்டு தான் சீவிச்சித்திருக்கன் நான்.. என்ன ஏமாத்திராதை.." அவள் விம்மியழத் தொடங்கினாள்.
"ஏ.. ஏ.... பைத்தியமா உனக்கு.. என்ன பேய்க்கத கதைக்கிராய் நீ உப்ப"
"நீ அம்மாளறிய சொல்லு நீ ஆரு வீட்ட நிண்டண்டு மட்டும் சொல்லு நேத்து ராவு.."
மனைவியின் அழுகையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.. எவ்வளவோ சொல்லிப்பார்த்தார் கெஞ்சினார், ஒரு கட்டத்தில் "தயவுசெஅது சொல்லக்கூடாத இரகசியம் என்று சத்தியம் செய்திருக்கிறேன்" என்றும் சொல்லிவிட்டார். அதன்பிறகு அவள் ஓவென விம்மியழத் தொடங்கினாள். அப்போது தான் அவர் காணாமல் போனதைப் பார்க்க வந்து கலைந்திருந்த அடுத்த வீட்டு எல்லைமானம் மீண்டும் குழுமத் தொடங்கியது. மனைவி உறுதி செய்தே விட்டாள். கணவன் யாரோ சககிழத்தி வைத்திருக்கிறார், அவள் செய்து கொடுத்த சாப்பாடு தான் அது, தங்கள் உறவு ஊருக்குத் தெரிந்துவிடும் என்பதால் சத்தியம் வாங்கியிருக்கிறாள். குய்யோ முறையோ என்று மாரிலும் வயிற்றிலும் அடித்து அவள் அரற்ற பக்கத்துவீட்டுப் பெண்கள் அவளருகே அமர்ந்து கண்ணீர் விட்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கினார்கள்.
அவர் ஒரு முடிவுக்கு வந்தார். "மரியாதயா எல்லாரும் வெட்டக்கிறங்குங்கோ... எண்ட மனிசிர பிரச்சினைய நானே பாக்குறன்"
அவரது குரலிலிருந்த தீர்க்கத்தைக் கண்டதும் பெண்கள் ஒன்றும் பேசாமல் எழுந்து வெளியே நடந்தார்கள். விடுப்புப் பார்க்கும் கிழவிகள் மட்டும் கிடுகு வேலிகளுக்கு அப்பால் மணலைக் காலால் ஒதுக்கி, காதைத் தீட்டிக்கொண்டு தரையில் குந்தினார்கள்.
அவர் நடந்த முழுக்கதையையும் ஒரு வரி விடாமல் விளக்கினார். குடும்பப் பாசத்தால் ஒரு பிடி அமுதை முடிச்சிட்டுக் கொண்டு வந்ததையும் அது இன்று இவ்வளவு பிரச்சினைக்கு ஆளாக்கியதையும் அவரது மனைவியும் பிள்ளைகளும் நம்பியும் நம்பாமல் பேந்தப் பேந்த விழித்தார்கள். கடைசியாக அவர் சற்று சத்தமாகச் சொன்னதை அக்கம்பக்கம் ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்த கிழவிகள் நன்றாகவே கேட்டார்கள்.
"எண்ட தலையறியச் சொல்லுறன், இந்த ஒருவாய் அமுது நேத்து ராவு அந்த சாமியாராக்களோட சாப்புட்டது... சத்தியமா வேறொருதரும் தரல" ஏதோ சன்னதம் வந்ததுபோல் கிணற்றுக்கட்டில் இருந்த முடிச்சில் கடைசிப் பிடி அமுதை அள்ளித் தன் வாயிலிட்டார். அதை அவர் வாயிலிட்டு மெல்லும் சத்தம் மட்டும் கொஞ்சநேரம் கேட்டுக்கொண்டிருந்தது. மனைவி தரையில் அமர்ந்து அவரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். காற்றும் அப்போது வீசாமல் நின்றது போலிருந்தது. கிடுகுவேலிக்கு அந்தப்பக்கம் ஒட்டுக்கேட்ட ஒரு கிழவி பெருமூச்சு விட்டு காய்ந்த இலை ஒன்றை எடுத்து தரையில் படம் வரைந்தாள்.
மனைவி எழுந்து அவிழ்ந்த கூந்தலை முடிச்சிட்டுக் கொண்டையிட்டாள்.
"சரி, இத ஏன் அந்த சாமியார் ஊட்ட போய் ஆருக்கும் சொல்லக்கூடா எண்டு சத்தியம் வாங்கினாரு... நான் எப்புடி நம்புற இத"
அவர் அவளை ஏறிட்டுப் பார்த்துச் சொன்னார்..
"பே... பே.."
"என்ன?"
"பே... பே...."
"என்ன பெப்பே எண்டுறாய்... இத நான் எப்பிடி நம்புற எண்டு சொல்லு..."
"பே... பே...." அவர் கண்ணீர் வழிய தொண்டையைக் காட்டி கைகளை விரித்தார். மனைவிக்கு அப்போது தான் புரிந்தது..
"ஐயோ சங்கமக்கண்டியானே... எண்ட மனுசண்ட நாக்கிளுத்துத்தே... "
சங்கமன்கண்டிக் காட்டில் சாமியாருக்குக் கொடுத்த வாக்கை மீறி மனைவியிடம் நடந்ததைச் சொன்ன அவருக்கு வாய் பேசமுடியாமற் போன கதை ஊர் முழுக்கப் பரவியது. ஒன்றிரண்டு பேராசைக்காரர்கள் தங்கத்தாலான ஆயிரங்கால் மண்டபத்தைத் தேடி காட்டில் அலைந்து வெறும் கையோடு திரும்பிவந்தார்கள் ஊர்ச் சண்டியர்கள் சிலர் அவர் சொன்னது பொய்யென்று நிரூபிக்கிறோம் என்று அந்தக் காட்டுக்குப் போய் ஓரிரவு தங்கித் திரும்பி வந்தார்கள். அதெல்லாம் பொய், அவர்கள் காட்டில் தங்கவில்லை. துவட்டா மலை எல்லையில் யானையும் சிறுத்தைப் புலியும் துரத்தியடித்து பின்னங்கால் பிடரியில் பட ஓடிவந்ததாக அவர்களது நண்பர்கள் கேலி செய்தார்கள். அங்கு முனிவர்கள் வசிப்பது உண்மை என்றும், அது தெய்விக பூமியா என்பதையெல்லாம் சோதித்துப் பார்க்காதீர்கள் என்றும் நம்பிக்கையுள்ள சிலர் சொன்னார்கள். எது எப்படியோ சங்கமக்கண்டி மலை ஆயிரங்கால் மண்டபத்தின் மகிமைக்குச் சாட்சியாக அவர் இறுதிவரை வாய்பேசாதவராகவே வாழ்ந்து மடிந்ததாக அவர் காலத்தவர்கள் கதை கதையாகச் சொல்லுவார்கள்.
இத்தகு பெருமை வாய்ந்த சங்கமன்கண்டி மலையடிவாரத்தில் முன்பு வில்வமரத்தடியொன்றின் கீழ் அமைந்திருந்த மூன்று சிவலிங்க வடிவக் கற்கள் கதிர்காம நடைச்செலவு செய்யும் அடியவர்களால் சிவபெருமானும் அவரது திருக்குமாரர்களான பிள்ளையாரும் முருகனும் என தொன்றுதொட்டு வழிபடப்பட்டு வந்தன. இப்படி மூவர் வழிபடப்பட்டு வந்தபோதும், பின்னாளில் சங்கமன்கண்டிப் பிள்ளையாரையே அத்தலத்தில் அடியவர்கள் முதன்மையாக வழிபட்டு வருவதற்குத் திருவருள் கைகூடியது. ஆனால், சங்கமன்கண்டி மலையில், திருக்கோவில் சித்திரவேலாயுதப் பெருமானின் மாட்டுப்பட்டி பராமரிக்கப்பட்டதாலோ என்னவோ, கதிர்காம யாத்திரிகர்கள், அம்மலையுச்சியை கதிர்காமக் கந்தனின் படைவீடுகளில் ஒன்றாகவே நீண்ட நாள் போற்றி வந்திருக்கிறார்கள். பொத்துவில் வீதியில் போக்குவரத்து வசதிகள் முன்னேறாத பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சங்கமன்கண்டி மலையிலிருந்து அடர்காடு ஆரம்பிப்பதாகவும், அருள்வேலனின் ஆடல்கள் கதிர்காம அடியவர்களுக்கு அங்கு தான் ஆரம்பிப்பதாகவும் கதை சொல்லுவார்கள். இன்றும் சங்கமன்கண்டி மலையில் வீற்றிருக்கும் முதன்மையான இறைவன் பிள்ளையாரல்ல; முருகப்பெருமானே என்ற நம்பிக்கையை அசராது கொண்ட ஆறுமுகன் அடியவர்கள் பலருண்டு. சரி தான், அப்பன் கோவில் கொண்ட தலத்தில் இன்று அவனது அருட்குமாரர்கள் இருவருமே ஆட்சி செய்கிறார்கள்!
மலையுச்சியில் குமார தெய்வத்துக்கென வேடர்களால் முன்பு வழிபடப்பட்டதாக நம்பப்பட்ட இடத்தில் "கல்லு வைக்கும்" வழிபாடும் பலன் தரலாயிற்று. "கல்லு வைத்தல்" என்பது தென்மட்டக்களப்புக்குச் சிறப்பான நேர்த்தி வழிபாடுகளில் ஒன்றாகும். குழந்தைப்பேறு, எடுத்த காரியத்தில் வெற்றி முதலிய பல்வேறு நம்பிக்கைகளுக்காக குறித்த இடமொன்றில் கல்லொன்றை எடுத்து வைத்து நேர்த்தி செய்து வழிபடுவதும், அந்நேர்த்தி நிறைவேறியதும் அங்கு மீண்டும் வந்து பொங்கலோ அவலோ படைத்து வணங்கி ஏற்றிய கல்லை "இறக்கி வைத்தல்" வழிபாடும் இடம்பெறும். கல்லு வைத்தல் வழிபாடு இன்றும் சங்கமன்கண்டியிலும் உகந்தமலையிலும் இடம்பெற்று வருகின்றது. (கல்லு வைத்தல் வழிபாடு இடம்பெறும் இடங்களிலெல்லாம் பெருங்கற்காலச் சின்னங்களின் சிதைவுகளை இக்கட்டுரையாளன் அவதானித்துள்ளான். அது உண்மையென்னில் இவ்வழிபாட்டுக்கு மூவாயிரமாண்டுத் தொடர்ச்சியுள்ளது என நம்பலாம்).
கதிர்காம அடியவர்களும் இப்பகுதியில் வேளாண்மை செய்து வந்த அக்கரைப்பற்று, தம்பிலுவில், திருக்கோவில் மக்களும், அவ்வப்போது இங்கு வந்து சங்கமன்கண்டியானுக்கு நேர்த்திக்கடன் வைத்துச் செல்லலாயினர். வேளாண்மைச் செழிப்பு, குழந்தைப்பேறு என்று சங்கமன்கண்டியானும் கைமேல் பலன் தர, அவ்வப்போது நேர்த்திபொங்கலைச் சந்திக்கும் தலமாக சங்கமன்கண்டி வளர்ச்சி காணலாயிற்று. அக்கம்பக்கம் சங்கமக்கண்டியானின் அருள் திறம் பரவ அவனை வழிபட வரும் அடியார் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. மலையடிவாரத்தில் பிள்ளையாரும் மலையுச்சியில் முருகனும் இப்பகுதி மக்களின் அன்புக்குரிய தெய்வங்களாக அரனார் திருமகன்மார் அருளாட்சி புரியலாயினர்.
சங்கமன்கண்டி மலைக்கு அருகாக கடலோரம் விளங்கிய சல்லித்தீவு எனும் பகுதியில் தென்னந்தோட்டமொன்று அமைத்திருந்த தனவந்தரான மட்டக்களப்பு மார்க்கண்டு முதலியார் என்பவர், 1915ஆம் ஆண்டில் இம்முடிக்குரிய நிலத்தை ஆங்கில அரசிடமிருந்து விலைகொடுத்து வாங்கினார். உகந்தமலையிலும் சல்லித்தீவில் மங்கைமாரி அம்மனுக்கும் முதன்முதலில் கல்லால் கோவில் கட்டிய அப்பெருமகனார் சங்கமன்கண்டியிலும் பிள்ளையாருக்கு ஒரு கோவில் கட்ட மனம் கொண்டிருந்தபோதும், இறைவன் திருவுளமென அவரால் இங்கு கோவிலமைக்க முடியாது போயிற்று. ஆனால் பின்னாளில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த திரு.வேலுப்பிள்ளை ஓடாவியார் எனும் சைவத்திருமகனார், தன் விடாமுயற்சியாலும் அடியவர் ஒத்துழைப்பாலும் இங்கு ஒரு சிறிய கோவிலொன்றை 1950ஆம் ஆண்டு பிள்ளையாருக்கென அமைத்தார். கோவிலைச் சூழ கனிதரும் மரங்கள், சோலைகள் அமைத்தும் கிணறு வெட்டியும் அன்னார் செய்த பணிகள் இன்றும் சங்கமன்கண்டி அடியவர்களால் பக்திப் பரவசத்துடன் நினைவுகூரப்படுகின்றன.
கோவிலைப் பராமரித்து வந்த வேலுப்பிள்ளையார் தன் அந்திமக்காலத்தில் கோவிலுக்கு ஒரு அறங்காவலர் சபையை உண்டாக்கி அதன்வசம் பொறுப்பை ஒப்படைத்தார். 1960இல் கல்லால் கட்டப்பட்டு முதல் குடமுழுக்குக் கண்ட அக்கோவில் 1979.10.19 அன்று அலங்கிருதமான அர்த்தமண்டபம், மகாமண்டபத்துடனும் அழகான பண்டிகை வேலைப்பாடுகளுடனும் அமைக்கப்பட்டு இரண்டாவது குடமுழுக்குக் கண்டது.
கருங்கல் வேற்பெருமான்
கோவில் மட்டக்களப்பு - பொத்துவில் பெருந்தெருவிலிருந்து சற்று உட்புறமாக காட்டில் அமைந்துள்ளதால், பெருந்தெருவில் செல்லுவோரின் வசதி கருதி வீதியோரம் இன்னொரு சிறுகோவில் அமைக்கப்பட்டுள்ளது. தெருப்பிள்ளையார் என்றும் றோட்டுப்பிள்ளையார் என்றும் அடியவர்களால் அன்போடு அழைக்கப்படும் இப்பிள்ளையாருக்கு அருகே முருகப்பெருமானும் கோவில் கொண்டுள்ளான். றோட்டுப்பிள்ளையாரிடமிருந்து வேறுபிரித்தறிய பழைய சங்கமன்கண்டிக் கோவில் சிலவேளைகளில் காட்டுப்பிள்ளையார் என்று அழைக்கப்படுவதுமுண்டு. சித்திராபூரணை, ஆடிப்பூரணை, ஆகிய தினங்களில் பிள்ளையாரை அருகிலுள்ள வட்டவான் குளத்தில் எழுந்தருளச் செய்து தீர்த்தமாடச் செய்வது இங்குள்ள விசேட மரபு.
2009ஆம் ஆண்டு சங்கமன்கண்டியானுக்கு திருப்பணிகள் இடம்பெற்று அடுத்த குடமுழுக்கு இடம்பெற்றதுடன், மலையுச்சியில் முருகன் கோவிலொன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அக்கோவில் அமைக்கப்பட்டபோது தொல்லியல் பொருட்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தமையால் அக்கோவில் அமைப்பு தடைப்பட்டதெனினும், இன்று மலைக்குமரன் கோவில் மலையேறும் அடியார்களுக்கு நல்வரங்கள் அருளும் கோவிலாக அமைந்துவிளங்குகின்றது. மலைக்குமரன் கோவிலின் முன்புறத்தில் தான் தொன்றுதொட்டு கல்லு வைத்து வழிபடும் சிறிய புராதான கல்வட்டம் அமைந்து விளங்குகின்றது.
வேண்டியதெல்லாம் அருளும் சங்கமன்கண்டிப் பிள்ளையாரும் பிள்ளைப்பேறும் பீடும் வழங்கும் மலைக்குமரனும் அருவமாக அருளும் சங்கமேசுவரரும் வீற்றிருக்கும் தலம், சங்கமன்கண்டி. இம்முறை தைப்பூசமன்று (2026.01.31), இலங்கைச் சைவநெறிக் கழகம், சிறீலசிறீ ஆறுமுகநாவலர் சபை உட்பட பல்வேறு மட்டு - அம்பாறை சைவ அமைப்புகளின் அனுசரணையுடன் தைப்பூசப் பெருவிழா இடம்பெற்றதுடன், கருங்கல்லாலான அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வேலாயுதப்பெருமான் ஆகிய மூன்று திருவுருவங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் கரங்களாலேயே திருமுழுக்காட்டி பூசனை செய்யக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஈழவளநாட்டின் சைவ அடியவர்கள் சங்கமன்கண்டித் திருப்பதி சென்று இறைவன் திருவருள் பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(தென்னாடு இதழில் வெளியான கட்டுரை பாகம் 01, பாகம் 02 )



