சைவத்தமிழ் இலக்கியங்களில் ஒன்றான “பெரியபுராணம்” பற்றி ஒரு கதை இருக்கிறது. பெரியபுராணத்தை சேக்கிழார் தில்லையில் அரங்கேற்றி முடித்ததும், அப்போது சோழநாட்டை ஆண்ட அநபாயச் சோழன் (இரண்டாம் குலோத்துங்கச் சோழன் 1113-1150), தன் பட்டத்து யானையில் அவரையும் நூலையும் தன்னுடன் ஏற்றி ஊர்வலமாகச் சென்றதுடன், தானே அவருக்குக் கவரியும் வீசினான். ஒரு பேரரசின் சக்கரவர்த்தி ஒரு நூலையும் அதன் ஆசிரியரையும் யானையில் ஏற்றி தானே சாமரம் இரட்டிக் கௌரவித்த பெருமையைத் தக்கவைத்ததாக உலகவரலாற்றில் பதிவு செய்துள்ள நூல், பெரிய புராணம் மாத்திரமே.
கிட்டத்தட்ட எண்ணூறு ஆண்டுகளுக்குப் பின்னர், பெரியபுராணம் போலவே யானை மேல் எழுந்தருளிய பெருமையை சைவத்துக்கும் தமிழுக்கும் முக்கியமான இன்னொரு பெருநூல் தட்டிக்கொண்டது. அந்நூலின் பெயர் சுத்தசைவம். பெரியபுராணம் யானை மேலெழுந்தருளியது சோழமண்ணில். சுத்தசைவம் யானை மேலெழுந்தருளியது ஈழமண்ணில்.
கொழும்பு சம்மாங்கோட்டுப் பிள்ளையார் கோவிலில் சுத்தசைவம் யானை மீது எழுந்தருளல்
“சுத்தசைவம்: வேத ஆகம மரபுகளும் பன்னிரு திருமுறை மெய்கண்ட சாத்திர உண்மைகளும் கூறும் வர்ணாசிரமம் நீங்கிய நன்மை பெருகு அருள்நெறி” என்பது அந்நூலின் முழுப்பெயர். திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சைவ அறிஞர் திரு.செயச்சந்திரன் முருகவேள் அவர்களால் எழுதப்பட்டு கடந்த 2022இல் புனிதர் பேரவை அமைப்பால் அது வெளியிடப்பட்டது . ஒற்றைவரியில் சொல்வதென்றால், சைவ சமயம் வருணாச்சிரமம், சாதியம் முதலிய பேதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை வேதங்கள், ஆகமங்கள், தமிழ்ச்சைவ நூல்கள் முதலியவற்றிலுள்ள சான்றுகளைக் கொண்டு ஆணித்தரமாக நிரூபிக்கும் நூல், சுத்தசைவம்.
இந்தியப்பண்பாட்டில் மிக முக்கியமான கருத்தியல்களுள் ஒன்று வருணாச்சிரமம். பிறப்பின் அடிப்படையில் பிராமணர் (அந்தணர்), சத்திரியர் (அரசர்), வைசியர் (வணிகர்), சூத்திரர் (உழவர் முதலானோர்) என்று நான்கு வருணங்களாக மக்களைப் பிரிப்பதும், அவர்களிடையே படிநிலை கற்பித்து ஏற்றத்தாழ்வு கூறுவதும் வருணாச்சிரமத்தின் அடிப்படை. இந்திய சமூகத்தில் வருணாச்சிரமக் கோட்பாட்டின் பெயரில் நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற அட்டூழியங்களும் அநியாயங்களும் கொஞ்சநஞ்சமல்ல. சுத்தசைவமோ இந்தப்படிநிலை ஏற்றத்தாழ்வைச் சொல்லும் வருணாச்சிரமக் கோட்பாட்டின் அடிப்படையையே தகர்த்தெறிவதுடன், வருணக்கோட்பாடு மீது சைவம் கொண்டிருந்த முற்போக்கான பார்வையையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது.
முதல் படலமான உபோற்காதம், சைவ சமயத்தைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தருகின்றது. சைவ சமயத்தில் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் இந்நூல் சைவம் என்று விசேடமாகக் குறிப்பது மெய்கண்டார் வழிவந்த சைவ சித்தாந்தத்தை. இந்த முதற்படலத்தின் சிறப்பம்சமே, சைவ சமயத்துக்கான சமயநூல் கட்டுமானத்தை அது தெளிவாக விவரிப்பது தான். கிறித்தவருக்கு விவிலியம், முகமதியருக்கு குரான், புத்தருக்கு திரிபிடகம் என்று கற்றவர்களுக்கு, சைவத்தின் நூற்கட்டுமானம் சற்று விந்தையாகவே தென்படும். ஏனெனில் சைவம் பொதுநூல், சிறப்புநூல் எனும் இருவகை நூல்களை ஏற்றுக்கொள்கின்றது.
பொதுநூல் என்பதை “பல செய்திகளையும் பல தெய்வ வழிபாட்டையும் வெளிப்படையாகக் கூறி அவற்றின் உட்கிடையான பரம்பொருளை […….] மறைமுகமாகத் தெரிவிக்கும் முதல் நூல்களும், அவற்றின் வழிவந்த […..] நூல்களும் பொதுநூல்கள் எனப்படும். இவை ஏனைய சமயத்தவரும் தத்தமக்கு ஏற்புடைய வகையில் – தத்தம் பக்குவத்துக்கேற்பப் புரிந்துகொண்டு பொருள் கண்டு பிரமாணமாகக் கொள்வதற்கும், வெவ்வேறு தெய்வங்களை வழுத்துவதற்கும் இடமளித்து விளங்கும்” என்று வரையறுக்கிறது இந்நூல்.
நான்கு வேதமும் வேதவழி வந்த நூல்களும் சைவருக்கு பொதுநூல்கள். இவை சைவருக்கு மட்டுமன்றி வைணவர், சுமார்த்தர் முதலிய இந்தியச் சமயிகளுக்கும் முதன்மையான நூல் என்பதால் பொதுநூல். வேதவழி வந்த நூல்கள் புராணங்களும் இதிகாசங்களும். இவற்றோடு உலகப்பொதுமறை என்றும் உத்தரவேதம் என்றும் போற்றப்படும் திருக்குறளும் சைவருக்குப் பொதுநூல். “திருவள்ளுவர் சைவரா” என்பது தமிழ் அறிஞர் உலகில் அடிக்கடி எழும் ஒரு விவாதம். திருக்குறளை பொதுநூல் என்று அங்கீகரிக்கும் சுத்தசைவம், சைவர்கள் திருக்குறளுக்குக் கொடுக்கவேண்டிய இடம் என்ன என்பதை ஐயம்திரிபற நிலைநாட்டிவிடுகிறது.
ஆனால் சிறப்புநூல்கள் என்பவை சிவபெருமானை பரம்பொருளாகத் தெளிவாக அடையாளப்படுத்துவன. சைவத்தின் சிறப்புநூல்கள் மூன்று வகைப்பாட்டுக்குரியவை. ஒன்று, சிவாகமங்கள். இரண்டு, தமிழ் பன்னிரு திருமுறைகள், மூன்று, பதினான்கு சாத்திரங்கள் உள்ளிட்ட ஆகமத்தின் வழிநூல்கள்.
எவ்வாறெனினும், சிறப்புநூல்களே சைவத்தின் முதன்மையான நூல்கள் என்பதால், பொதுநூல்களை சிறப்புநூல்களைக் கொண்டே பொருள்கொள்ளவேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். ஆகமங்களும் திருமுறைகளும் வேதங்களைப் போற்றுவது உபசார வழக்கு என்பதும் வேதங்களை முழுமுற்றான உண்மைகள் என்று கண்ணை மூடிக்கொண்டு நம்பாமல், சைவனொருவன் ஆகமத்தின் நிழலிலேயே வேதத்தைப் பொருள்கொள்ளவேண்டும் என்பதை சுத்தசைவம் மேலும் வலியுறுத்துகிறது.
இப்படி பலநூல்களை பட்டியற்படுத்தும் சுத்தசைவம், இப்படி அளவுகணக்கின்றி பல்கிப்பெருகியுள்ள சைவநூல்களுக்கு எந்த எல்லை வரை முக்கியத்துவம் கொடுப்பது என்ற கேள்வியையும் எழுப்பி அதற்கான பதிலையும் சொல்கிறது.
“…இறைவனும் அவனால் ஆட்கொள்ளப்பட்ட அடியார்களும் அருளிய நூல்களில், அறிவிக்கப்பட்டோரின் அறிவு மற்றும் அனுபவ முதிர்ச்சியில் உள்ள வேறுபாடுகளால், சிற்சில இடங்களில் கூறப்படும் செய்திகள் ஒன்றோடொன்று முரண்படுவது போல் வருவதுண்டு. [……] இவ்வாறு முரண்படுமாறு தோன்றும் செய்திகளை தக்கமுறையில் நடுநிலையோடு சீர்தூக்கி, விரோதமின்றி, அவற்றின் தாரதம்மியம் அறிந்து எவரும் ஏற்கும் வகையில் நின்று ஆய்ந்து தெளிவது அவசியம்.”
இப்படி பலதரப்பட்ட நூல்களை சைவம் ஏற்கும் போதும், அத்தனை நூல்களையும் ஐயம் திரிபற முழுக்க முழுக்கப் பிரமாணமாக ஏற்பது தகாது என்ற புரட்சிகரமான கருத்தை சுத்தசைவம் முன்வைக்கிறது. நூல்களில் பல இடங்களில் இடைச்செருகல்கள், நீக்கல்கள், திருத்தங்கள், மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதை அருளாளர் வாக்குகளிலிருந்தும் புறச்சான்றுகளிலிருந்தும் மேற்கோள் காட்டும் நூலாசிரியர், “இவ்வனைத்து நூல்களும் சைவத்தையும் இறைவனையும் ஒருவாறு விளக்க எழுந்தனவேயொழிய வரையறுக்க அல்ல” என்பதை வலியுறுத்தி சைவர் நூல்களுக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தின் எல்லையையும் தெளிவாகக் கோடிட்டுக் காட்டிவிடுகிறார். எனவே சைவர்கள் “நூல் கருத்துக்களை ஒன்றோடொன்று வைத்து ஒப்பிட்டு, அதன் உட்கிடையைக் கருதி, ஏனைய அளவை முறைகளால் அறியப்படும் செய்திகளுக்கும், சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகளோடு முரணாதவாறு இருக்கிறதா என்றும் கருதி” தங்கள் நூல்களைப் பிரமாணமாகக் கொள்ளவேண்டும் என்று கூறி நிறைவுபெறுகின்றது முதலாவது உபோற்காத படலம்.
இரண்டாவது படலம், வர்ணத்துவம் என்ற தலைப்பைக் கொண்டது. இந்தியப்பண்பாட்டில் அடிக்கடி ஒருமித்துக் கூறப்படும் வருணம், ஆசிரமம், சாதி இவை மூன்றும் ஒன்றல்ல என்ற வேறுபாட்டைக் கூறியபடி துவங்கும் இந்தப் படலம் வருணம் பிறப்பால் ஏற்படுவது என்பதை தகுந்த சான்றுகளைக் கொண்டு மிகக்கடுமையாக நிராகரிக்கின்றது. சூத்திரரும் பெண்களும் வேதம் ஓத அதிகாரம் படைத்தவர்கள் தான், ஒரு சைவரால் தனக்கென விதிக்கப்பட்ட வருணத்தை மாற்றமுடியும் முதலிய விடயங்கள் சிவமகாபுராணம் முதலிய வைதிக நூல்களிலிருந்து சுட்டிக்காட்டப்படுகிறது. இன்று பொதுவெளியில் பரவலாக விமர்சிக்கப்படுவது போலன்றி, சூத்திரன் வேதம் கேட்டால் உருக்கிய ஈயத்தைக் காதில் ஊற்றச்சொல்லும் ஒரு மரபுக்கு முற்றிலும் எதிரான ஒரு மரபு சைவத்தின் பெயரால் நீடித்ததை இந்த வாதங்களின் வழியே நாம் கண்டடைகின்றோம்.
சுத்தசைவத்தின் மூன்றாவது படலத்தை இரண்டாவது படலத்தின் தொடர்ச்சி எனலாம். தமிழரின் நாற்பால் பாகுபாடுகளும் வர்ணத்துவமும். தொல்காப்பிய உரையாசிரியர்களிலிருந்து இன்றைய அறிஞர்கள் வரை மீளமீளச் சொல்லப்படும் பிராமணர் = அந்தணர், சத்திரியர் = அரசர், வைசியர் = வணிகர், சூத்திரர் = வேளாளர் என்ற சமப்படுத்தலை ஒவ்வொன்றாகத் தகர்க்கிறார் ஆசிரியர்.
கல்வெட்டுகளில் சூத்திரர் என்று குறிப்பிடப்படுவோரில் பல் சமூகங்களைச் சேர்ந்தோரும் சோழப்பேரரசில் உயர்பதவிகளை வகித்தோரும் அடங்குவதுடன், இராசராசசோழனுக்கே சூத்திரசோழன் என்றோர் பட்டம் இருந்ததும் தெரியவந்திருக்கிறது. மேலும், சங்ககாலத்திலிருந்தே நால்வருணத்துக்கு வெளியே தாழ்த்தப்பட்ட சமூகங்கள் இருந்தன என்ற கூற்றுக்கு எதிராக பறையன், புலையன் முதலிய குடிசார் சொற்கள் எவ்வித இழிவுமின்றி இயல்பாகவே எடுத்தாளப்பட்டிருப்பதை சங்க இலக்கிய நூல்களிலிருந்து ஆசிரியர் நிறுவுகிறார்.
நான்காம் படலம் “சாதித்துவம்” என்ற தலைப்பைக் கொண்டிருக்கிறது. சாதி என்பது நடைமுறைத் தேவைக்காக கற்பிக்கப்பட்டதே தவிர, சாதியம் உயிருக்கோ உடலுக்கோ அல்ல என்பதை உபநிடத மற்றும் சைவ நூல் வரிகளை முன்வைத்து நிறுவுகின்றது இந்தப்படலம்.
ஐந்தாம் படலம் “தர்மமும் அறமும்” என்று தலைப்பிடப்பட்டிருக்கின்றது. தர்மம் என்ற வடமொழிச்சொல், பொருள், இடம், காலம் என்பவற்றைப் பொறுத்து மாற்றத்துக்கு உட்படக்கூடிய ஒரு பொருண்மையைக் குறிக்கும் என்பதும், அறம் என்ற தமிழ்ச்சொல் அருளை அடிப்படையாகக் கொண்டு “அறுத்து வாழ்தல்” என்று பொருள்படும் என்பதும் இதில் விளக்கப்படுகின்றன..
“தொடர்புடையோரிடம் வரும் ஈரம் அன்பு. தொடர்பற்றோரிடமும் வரும் ஈரம் அருள். அன்பின் முதிர்ச்சி அருள். இதை வள்ளுவர் அருளெனும் அன்பீன் குழவி என்று விளக்குவார். [……] அருளின்றிச் செய்யப்படுவது அறம் ஆகாது.”
ஆனால் வருணாச்சிரம தர்மம் அருளை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதால், அது அறத்தை அடிப்படையாகக் கொண்டதும் அல்ல. உதாரணம், இராமாயணத்தில் வருகின்ற சம்பூகன் வதைப்படலம். “சூத்திரன் தவம் செய்தல் தடை” என்ற வருணாச்சிரம தருமத்தைக் காப்பதற்காக சத்திரிய இராமனால் கொல்லப்பட்டவன் சூத்திரனான சம்பூகன். அது ஏன் அறமற்ற செயல் என்பது இராமாயணம் பற்றிய ஏனைய வியப்பூட்டும் தகவல்களுடன் இந்நூலில் விரிகின்றது.
வருணாச்சிரம விதிகளை வகுத்துரைப்பதால், தர்மசாத்திரங்களாக ஒரு சாராரால் கொண்டாடப்படும் சுமிருதி நூல்கள் (மனுசுமிருதி முதலியவை) அறமற்றவை. ஏனென்றால் சுமிருதி நூல்கள் சூத்திரரை பிறப்பால் தாழ்த்தி அவர்கள் மீது காழ்ப்பையும் வன்மத்தையும் கக்குகின்றன. பெண்களை ஒருபடி தரம்தாழ்த்தி நுகர்பொருளாக மாத்திரமே பார்க்கின்றன. பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பித்து ஒரே சமூகத்தின் குடிமக்களில் ஒவ்வொருவரும் செய்யும் ஒரே குற்றத்துக்கு வெவ்வேறு தண்டனைகள் விதிக்கின்றன. இன்னும், புலாலுண்ணலைப் போற்றுவது, சக மனிதனொருவனுடன் உடன் உண்ணாமை, பகிர்ந்துண்ணாமையை வலியுறுத்துதல், என்று இப்பட்டியல் நீள்கின்றது. அறமும் அருளும் அற்ற வருணாச்சிரம விதிகளைக் கூறும் சுமிருதிகளை சைவர் மாத்திரமல்ல; அறிவுடையோர் எவரும் தள்ளவேண்டும் என்பது சுத்தசைவம் விடுக்கும் அறைகூவல்.
இனி வருகின்ற ஆறாம் படலம் தான் இந்நூலின் மிக முக்கியமான - மிகப்பெரிய பகுதி. “சைவ நூல்களில் வர்ணமும் சாதியும்”. சைவதீட்சை பெற்றுக்கொள்வற்கு பிறப்பு அடிப்படையிலோ பால் அடிப்படையிலோ எவருக்கும் மறுப்புச் சொல்லப்படவில்லை. தீட்சையின் பின்னர் அவனது பழைய சாதியும் வருணமும் மறைந்துவிடுகின்றன. இவ்வாறு சிவதீட்சை பெற்ற ஒருவனுக்கு சாதியும் வருணமும் இல்லை என்பது மதங்கபாரமேசுவரம், அசிந்திய விசுவசாதாக்கியம், உத்தர காமிகம், கிரணம், இரௌரவம் முதலிய ஏராளமான ஆகம வசனங்களைக் கொண்டு நிறுவப்படுகின்றது. மிகச்சிக்கலான ஆகம வசனங்கள், வைதிக நூல் வரிகளுக்கு இந்தப்படலம் சரியான பொருளைக் கொடுக்க முயல்கிறது.
பரமனைக் கயிலையில் கண்ட காரைக்கால் அம்மை, ‘மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்’ என்று வேண்டுகிறார். […..] அருளாளர்கள் எல்லாம் உணர்த்துவது இது. அடுத்த வினாடி நமக்கு என்ன நிலை என்பதை நாம் அறியோம். நமக்குக் கதியுண்டா மீண்டும் பிறவியடைந்து உழலும் விதி உண்டா என்பதும் நாம் அறியோம். திருவருள் நமக்கு என்ன வைத்திருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. நம் நிலையையே நம்மால் உறுதியாக அறிய இயலாத போது, அடுத்த உயிர் நம்மை விடத் தாழ்வானது / உயர்வானது என்பதெல்லாம் நம் சிற்றறிவுக்குப் புலப்படுமோ? எனவே [சாதி, வருணம் என்ற பெயர்களில் ஒருவரோடொருவர்] பேதம் பாராட்டுவது மட்டித்தனமே.
ஏழாவது படலம் அத்தனை சான்றாதாரங்களையும் தொகுத்து, சுத்த சைவம் வருணப் பாகுபாட்டைக் கடந்த ‘அதிவருணாச்சிரம’ நெறி என்பதை சாதிக்கிறது. அதற்கு முதற்பெரும் ஆதாரமே மெய்கண்ட சித்தாந்தத்தின் சந்தான குரவர் ஆசாரியர் பரம்பரை தான். வேளாண் குடியினரான மெய்கண்ட சிவனார், அவரது தந்தையின் குலகுருவாயிருந்து அவருக்குச் சீடராய் அமர்ந்த ஆதிசைவ குலத்து அருணந்தி சிவனார், அருணந்தியாரின் சீடரான பிராமணர் மறைஞான சம்பந்தர், மறைஞானசம்பந்தரின் சீடரான தில்லைவாழ் அந்தணர் உமாபதி சிவனார். வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த இந்நால்வரால் தாபிக்கப்பட்டது என்பதே சுத்த சைவம் ஓர் அதிவருணாச்சிரம நெறி என்பதற்கான வெள்ளிடை மலை ஆதாரம்.
சைவ சந்தானகுரவர்
இனி வரும் பின்னிணைப்புகளில் சைவ சித்தாந்தத்தின் அடிப்படை மெய்யியல், சைவ ஆகமங்கள் பற்றிய சுவையான குறிப்புகள், உயிர்ப்பலியும் சைவமும், மந்திரங்களின் பலன், சிவலிங்க வழிபாடு என்பன பலவாறு விரித்துரைக்கப்படுகின்றன.
இவற்றில் இரு அனுபந்தங்கள் முக்கியமானவை. முதலாவது “சைவமும் சுமார்த்தமும்” எனும் பத்தாவது அனுபந்தம். “சுமார்த்தம்” என்ற புதிய சொல்லைக் கண்டு யாரும் மருட்சிகொள்ளத் தேவையில்லை. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பின்னணியிலோ அதற்கு முன்போ பொன்னியின் செல்வன் வாசித்தோருக்கு – பார்த்தோருக்கு இந்த சுமார்த்த சமயத்தவர் பரிச்சயமானவர்கள் தான். ஆழ்வார்க்கடியான் அறிமுகமாகும் அத்தியாயத்தில் / காட்சியில் அவர் ஒரு வீரசைவருடனும் வேதாந்தி ஒருவருடனும் வாதம் புரிந்துகொண்டிருப்பார் அல்லவா. சைவரோ வைணவரோ அல்லாமல் மூன்றாவது தரப்பாக நாவலாசிரியரால் ‘வேதாந்தி’ என்று சுட்டிக்காட்டப்பட்டவர் தான் சுமார்த்தர். அந்த சந்தர்ப்பத்தில் “அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு” என்று வந்தியத்தேவனின் தீர்ப்பாக வெளிவரும் வார்த்தைகள் அதே சுமார்த்த மதத்தைச் சார்ந்த நாவலாசிரியரின் சமயக் கோட்பாடும்தான்.
பொன்னியின் செல்வன் பாகம் 01: ஆழ்வார்க்கடியான், வேதாந்தி, வீரசைவர், வந்தியத்தேவன்
சுமார்த்தம் என்றால் “சுமிருதிகளை அடிப்படையாகக் கொண்டது” என்று பொருள். சுமிருதிகள் தான் வருணாச்சிரமக் கோட்பாட்டை மிகக்கடுமையாக வலியுறுத்துபவை. சுமார்த்தர்களில் பெரும்பாலானோர் நடைமுறையில் புரோகிதத்தொழில் புரியும் பிராமணர்களாக உள்ள போதும், இவர்கள் கோட்பாட்டு அடிப்படையில் ஆதிசங்கரரையும் அவரது அத்துவைதக் கோட்பாட்டையும் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்வர். சங்கரரின் அத்துவைதம், “கடவுள், உயிர் என்றெல்லாம் வெவ்வேறு பொருட்கள் உலகில் இல்லை; எல்லாம் ஒன்று தான்; கடவுளே ஆன்மா; நானே கடவுள்” என்கிறது. எனவே சிவன், திருமால் என்பதெல்லாம் இவர்களைப் பொறுத்தவரை ஒரே பிரம்மத்தின் வடிவங்கள் தான்.
சைவமும் வைணவமும் ஒருதெய்வக் கொள்கையைக் கொண்டவை என்பதால், அவை கடும்போக்குவாத சமயங்கள் என்ற பொதுப்பார்வை ஏற்பட்டுள்ள நிலையில், சுமார்த்தர்கள், “இந்தச் சைவரும் வைணவரும் அடிப்படைவாதிகள். நாங்கள் மிதவாதிகள். எங்களுக்கு எம்மதமும் சம்மதம்” என்று சமரசம் பேசுவார்கள். வெளியிலிருந்து பார்ப்போருக்கு அவர்கள் கூறுவதே சரியென்று படும். இன்றைய இந்து மதத்தில் எல்லா விதத்திலும் சைவ – வைணவக் குடிகளை விடப் பலம்பெற்றிருக்கும் சுமார்த்தர்கள், சுமார்த்த சமயத்தின் கோட்பாடுகளையே முழு இந்து சமயத்தின் கோட்பாடுகளாக திரித்துக்காட்ட முயல்வதால், சைவத்தினதும் வைணவத்தினதும் தனித்துவமான பல கோட்பாடுகள் மறைந்தும் ஒழிந்தும் வருகின்றன. சுத்தசைவம் நூல் இப்படி சைவ சமயத்தின் கோட்பாடுகளுக்கும், இந்துப்போர்வையில் இன்று பொதுப்புத்தியில் பதியவைக்கப்பட்டிருக்கும் சுமார்த்த சமயத்தின் கோட்பாடுகளுக்கும் இடையிலான ஏராளமான வேறுபாடுகளை அட்டவணைப்படுத்திக் காட்டுகிறது.
அரசியல் – சமூக – பொருளாதாரக் காரணிகளால் இந்தியச் சமயங்கள் பற்றி போதிய புரிதலின்றி ஐரோப்பியர் உருவாக்கிக்கொண்ட “இந்து” என்ற சமயங்களின் தொகுதியை இந்தியத் தேசியத்தின் கீழ் "இந்து" எனும் தனிமதமாகக் கட்டமைக்க வேண்டிய தேவைப்பாடு கடந்த நூற்றாண்டில் நிலவியது உண்மை. சட்டரீதியில் அந்தத் தேவை இந்தியர்களுக்கு இன்றும் இருப்பதும் உண்மை. ஆனால் சமயரீதியில் அந்த ஒற்றைப்படையாக்கம் தேவையற்றது. இன்னும் இந்தியாவுக்கு வெளியில் வாழும் “இந்துக்களுக்கு” அந்த ஒற்றைப்படையாக்கத்தால் விளையும் நன்மைகள் எதுவுமில்லை. பதிலாக, இந்து மதம் என்ற பெயரில் எல்லாவற்றையும் குழப்பியடிப்பதால் ஏற்படும் அடிப்படைச் சிக்கல்களுக்கு அவர்கள் சரியாக முகம்கொடுக்க முடியாமல் திணறுவதுடன், புதிது புதிதாக உருவாகிவரும் வழிபாட்டு அமைப்புகள், அவற்றால் திரிக்கப்படும் சைவ - வைணவ நம்பிக்கைகள், புதிய இந்து அமைப்புகளின் பெயரிலான ஊழல்கள், மோசடிகளுக்கும் சைவரும் வைணவருமே பதில்கூறவேண்டிய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.
அப்படி வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் பிற்போக்குத்தனங்களில் ஒன்று, சுமார்த்தரின் வருணாச்சிரமம். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி சகமனிதனை ஒடுக்கும் அவலத்துக்கான அங்கீகாரத்தை வருணாச்சிரமத்தை ஏற்கும் நவீன இந்து சமயமும் கொடுக்கத்தான் செய்கிறது. மறுக்கமுடியாத இன்னொரு உண்மை, இன்று சைவத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்வோர் போல சாதியவாதியர் வேறு யாரும் இல்லை என்பதும் தான். சைவம் அதிவருணாச்சிரம நெறி என்பதை சைவரே உணர்ந்துகொண்டால் தவிர, அவர்களுக்கு விடிவு காலம் இல்லை. இந்துப்பொது அடையாளம் அவர்களை இன்னும் சாதியவாதிகளாகவும் வருணாச்சிரம ஆதரவாளர்களாகவுமே எஞ்சவைக்கும்.
“இ[ந்து என்ற பெயரில் சுமார்த்தரின் வருணாச்சிரம]க்கோட்பாடுகள் சைவத்துள் ஊடுருவும் போது அதைத் தடுப்பதும் நீக்குவதும் நம் கடமையே. […..] சுமிருதிகள், எல்லாவகையிலும் முன்னேறவேண்டும் என்ற மனிதனின் இயல்பான அவாவை எதிர்த்து, உணர்வுகளைக் கொன்று சீரழிக்கும் வன்மம் மிக்க நெறியை வகுக்கின்றது என்பது தெளிவு. அவை இச்சமூகம் பிளவுபட்டு, சீரழிந்து அதன் தாக்கத்தால் வாழ்க்கை வாய்ப்புகள் இழந்தோர் புறப்புறச் சமயங்களை நாடிச் செல்வதற்கும் அச்சமயங்கள் வளர்வதற்கும் ஒரு பெரிய காரணியே.” என்பது சுத்தசைவம் கூறும் யதார்த்தமான உண்மை.
இந்த இடத்தில் ஒரு கேள்வி வரலாம். இறைவன் தான் எல்லாவற்றையும் நடத்துகிறான் என்றால், இன்று சைவம் – வைணவம் வலுவிழந்து சுமார்த்தத்தின் தலைமையில் இந்து எனும் தனிச்சமயக் கோட்பாடு உண்டாவதும் இறைவன் திருவுளம் தானே ? இந்தக் கேள்விக்கு வேறோரிடத்தில் சுத்தசைவமே பதிலளித்திருக்கிறது. [பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும்] இம்மாற்றங்களும் காலகாலனின் கருத்தே எனின், இவை கேள்விக்கு உட்படுத்தப்படுவதும், எதிர்க்கப்படுவதும் கூட அவன் கருத்தே என்று அறிக.
சுத்த சைவமான அதிவருணாச்சிரம நெறியின் பின்னணியில் நாம் பார்க்கவேண்டிய இன்னொரு விடயம் இந்நூலின் ஒன்பதாவது அனுபந்தமான “சைவமும் பகவத் கீதையும்” தான். இன்று மீண்டும் மீண்டும் கூறப்பட்டு, இந்துக்களின் புனிதநூல் என்ற அடையாளம் பகவத் கீதைக்கு வந்துவிட்டது. ஆனால் சைவ நூல்கள் பகவத் கீதைக்கு என்ன இடம் கொடுத்திருக்கின்றன?
சங்கரருக்கு முன் பகவத் கீதை அத்தனை முக்கியமான நூலாக இருந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை அவரே அதை எழுதி மகாபாரதத்தோடு சேர்த்திருக்கலாம் என்கிறார் சுவாமி விவேகானந்தர். பகவத் கீதையில் வருணாச்சிரம தருமத்தை வலியுறுத்தும் பல இடங்கள் வருகின்றன. “அருச்சுனனை மயக்க கண்ணன் சொன்ன சொல்லை உன் நூல் என்று ஏற்பாய் என்றால், முப்புரங்களை எரிப்பதற்காக புத்தர் கூறிய திரிபிடக நூல்களையும் உன் சமய நூல்களாக ஏற்றுக்கொள்ளலாமே” என்று ஏளனம் செய்கின்றது அதிவருணாச்சிரம சுத்தசைவத்தை வலியுறுத்தும் பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றான சிவஞானசித்தியார் (பரபக்கம் 293ஆம் பாடல்).
பகவத் கீதை சைவருக்குரியதன்று என்று கூறும்போது 'இந்து' எவரும் புண்படலாம். கீதையை ஏற்பது அவரவர் விருப்பம். ஆனால், அதைச்சைவ நூல் என்பதோ, சைவமும் அடங்கும் இந்துக்களின் புனிதநூல் என்பதோ பெருந்தவறு. ஆக, பகவத் கீதையை தன் முதன்மை நூலாக ஏற்கும் இந்து சமயத்தின் ஓர் பிரிவாக சைவம் வந்து உட்காரமுடியாது.
இப்படி சைவத்தின் தனித்துவத்தைக் காக்கச் சொல்லிக் குரலெழுப்புவதை சைவர்கள் உள்வீட்டுச் சண்டை பிடித்து ஒற்றுமையைக் குழப்புகிறார்கள் என்று திரித்துக் குற்றம் சாட்டி "ஐயோ சைவ அடிப்படைவாதம், சைவத் தீவிரவாதம்" என்று பலர் புலம்புவதுண்டு. அவர்களிடம் கேட்கவேண்டிய ஒரே கேள்வி சிவஞானசித்தியார் கேட்ட அதே கேள்வி தான். "சைவநூல் நிராகரிக்கும் பகவத் கீதையை சைவர் ஏற்கவேண்டுமென்றால் இந்து என்ற பொதுப்பெயரில வேதத்தை மறுக்கும் திரிபிடகத்தையும் புனிதநூலாக ஏற்கலாமே! இன்னும் கொஞ்சம் கனிந்து பரந்த மனப்பான்மையுடன் அப்படியே திருக்குரானையும் புனித விவிலியத்தையும் கூட ஏற்கலாமே! அவற்றில் கூறப்படாத நல்ல சிந்தனைகளா."
சைவம் தன் தனித்துவத்தைக் காட்ட நிர்ப்பந்திக்கப்படும் இடம் இதுதான். சுத்தசைவம் நூலின் ஒட்டுமொத்த சுருக்கமே இவ்வளவும் தான் என்றும் கூட சொல்லலாம். சுத்தசைவம் நூலில் மேற்கோள் காட்டப்படும் பாம்பன் சுவாமிகளின் திருப்பா நான்முக வரிகள். “தமிழ் மறையாகிய தேவாரத்தில் ‘சாத்திரம் பல பேசுவோரே, கோத்திரமும் குலமும் கொண்டு என்ன செய்வீர்’ என்று சொல்லப்பட்டுள்ளதை நினைத்துப் பார்க்காது, சாதிச்சண்டையில் தம்மை உயர்த்திக்காட்டுவதே பேரின்பம் என்று [பலர்] வாழ்நாளைக் கழிக்கும் சிற்றறிவாளர்களாக இருக்கிறார்கள். மணம் புரிந்தோ பலவந்தத்திலோ எந்தப் பெண்ணும் எந்த ஆணும் சேரும் போதும் கருத்தரிக்க முடிவதைக் கண்டும் சாதி என்ற பாகுபாடு பொய்யானதென்று யோசிக்கிறார்களில்லை. சிறப்பாகத் தோன்றியதாகப் போற்றப்படும் ஒரு நூல் இறைவனே சொன்னதென்று சாதிப்பாகுபாட்டை வலியுறுத்திக் கூறினாலும் நாங்கள் கேட்கமாட்டோம். மனிதரே செய்ததென்றாலும், இந்த உண்மையை ஒத்துக்கொள்ளும் நூலை நாங்கள் ஏற்போம். இதுவே எங்கள் நடுநிலை. இறைவன் சொன்னதென எழுதப்பட்டிருப்பதாலே எந்த ஏட்டுச்சுவடியும் இறைவாக்காகிவிட முடியாது.”
உலகின் அத்தனை சமயங்களும் அஞ்சி நிற்கும் இடம் இது. “கடவுள் சொன்னது, வாயை மூடு. புனிதநூலில் உள்ளது; மறுத்துப்பேசாதே” என்று எவர் சொன்னாலும், கைகட்டி வாய்பொத்தி முழங்காலில் நிற்பதற்கே அத்தனை மதங்களும் தங்கள் பின்பற்றுநனைப் பயிற்றுவித்திருக்கின்றன. “வருணம், சாதி, என்பன இறைவனின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் – அநீதிகள். இவற்றை இறைவனே சொன்னாலும் ஏற்கோம்” என்று மார்தட்டி அறைகூவும் இந்த அசாத்தியத் துணிச்சல் தான் சைவனின் தனித்துவம். அடியாரை மதிக்காது அலட்சியத்தோடு நடந்துசென்ற சுந்தரமூர்த்தி நாயனார் மீது வெகுண்டு “எனக்கு இவனும் புறகு; இவனை ஆண்ட சிவனும் புறகு” என்று சொன்ன விறன்மிண்ட நாயனார் வழி வந்த சைவத்தின் மிடுக்கு அது. “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று வாதாடிய நக்கீர நாயனாரின் தமிழ் தந்த செருக்கு அது.
சுத்தசைவம் நூலின் இலங்கை வெளியீடு இலங்கை சைவநெறிக் கழகத்தினரால் 2023 ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் இடம்பெற்றது. கொழும்பு சம்மாங்கோட்டு மாணிக்கப்பிள்ளையார் திருக்கோவிலில் யானை மீது எழுந்தருளிய சுத்தசைவம் நூல், விடைக்கொடிகள் பட்டொளி வீசிப் பறக்க ஊர்வலமாகப் புறப்பட்டு அம்மண்டபத்தை அடைந்தபோது, அவ்வெளியீட்டு நிகழ்வில் பங்குபற்றியிருந்த அத்தனை பேரும் வார்த்தைகளால் விளக்கமுடியாத உணர்வுகளுக்காளாகியிருந்தனர். “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, அரகர நமப் பார்வதீபதயே, அரகர மகாதேவா” என்ற கோசங்கள் விண்ணைப் பிளந்துகொண்டிருந்தன. ஏதோ தெய்வம் எழுந்தருளிச் செல்கின்றதென்று எண்ணி வீதியில் சென்ற சிங்களவரும் தமிழரும் இருகைகூப்பி வணங்கி அவ்வூர்வலத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். சேந்தனாரின் திருப்பல்லாண்டு பதிகங்கள் பாடப்பட்டு அந்நூல் யானையிலிருந்து கொலுவிறங்கி மண்டபத்தை அடைந்தபோது “சுத்தசைவத்துக்கு அரோகரா” என்ற விந்தையான கோசமொன்றும் ஊடே ஒலித்துக்கொண்டிருந்தது. சுத்தசைவத்துக்கு யானை மேல் நிழற்றிய திருக்குடை, அந்நூல் மண்டபத்துக்குள் நுழைந்ததும் இந்தக் கட்டுரையாசிரியன் கையில் வந்து சேர்ந்தது.
சுத்தசைவத்தின் மிகவும் மூத்த வரைவு வடிவத்தை நான் 2019ஆம் ஆண்டு வாசித்திருக்கிறேன். அதன் ஆசிரியர் திரு.செ.முருகவேள் ஐயாவுடனும் சிறு பழக்கம் உண்டு. அப்போது அது சுமார் நூறு பக்கங்களுடன் வேறொரு பெயரிலமைந்த சிறுநூல். முதல் வாசிப்பிலேயே பிரமிப்பைத் தந்திருந்தது. அப்போது தான் ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ நூலை எழுதி முடித்த தலைக்கனத்தில் இருந்த எனக்கு, ‘அதை நிகழ்த்தியது நீ அல்ல; நான்’ என்று உணரும் படி சிலபல 'சம்பவங்களை செய்து' என்னைத் திருத்தியிருந்தான் ஈசன். எனவே பணிவோடு, சேர்க்கவேண்டிய சிலவற்றை மட்டும் நூலாசிரியருக்குச் பரிந்துரைத்திருந்தேன். அடுத்தடுத்த மாதங்களில் சுத்தசைவத்தின் பிற்கால வரைவுகள் பல செவ்வை பார்க்க வாய்ப்புக் கிடைத்தாலும் வேலைப்பளுவால் அது சாத்தியமாகவில்லை. கடந்த ஆண்டு அந்நூல் தமிழகத்தில் ஐநூறுக்கு மேற்பட்ட பக்கங்களுடன் ஒரு பெருநூலாய் வெளியிடப்பட்டபோது அடைந்த வியப்பும் மகிழ்ச்சிக்கும் அளவிருக்கவில்லை. சுத்தசைவம் போன்ற மாபெரும் நூலொன்றைப் படைத்த திரு. செ.முருகவேள் ஐயா அவர்களின் பேருழைப்பையும் சீரறிவையும் வியக்காமலிருக்க முடியவில்லை. அவருக்குத் தமிழ்ச்சைவ சமூகம் கடன்பட்டிருக்கிறது. 'தமரைப்புகழ்தல்' என்றே ஆகுமெனினும், இந்நூலை இலங்கைச் சைவச்சமூகத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பதில் ஓயாது உழைத்த எமது இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.சிவத்திரு.கி.பிரதாப தேசிகர் அவர்களையும் இவ்விடத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
நூலாசிரியர் திரு. செயச்சந்திரன் முருகவேள் அவர்கள்
ஆரம்பநிலை வாசகர்களுக்கு சுத்தசைவத்தின் மொழிநடை சற்றுக் கடினமானதாக இருக்கலாம். அதில் குறையில்லை. சுத்தசைவம் ஒரு நாவலோ வெகுசனப் புதினமோ அல்ல. ஒரு தத்துவக்கோட்பாட்டை ஆராய்ந்து விளக்கி நிறுவும் ஒரு நூல், இப்படி ஒரு செறிவான நடையில் தான் இருக்க இயலும். அதனாலென்ன, ஆர்வமுள்ளவர்களுக்கு அதிலுள்ள அத்தனை சிக்கலான கதவுகளுமே இலகுவாகத் திறந்துகொள்ளும்.
இன்றைய இந்துப்பரப்புரையாளர்கள் பலர் “வாசிக்காவிட்டாலும் பரவாயில்லை; வீட்டில் ஒரு பகவத் கீதை வாங்கி வைத்திருங்கள்” என்று சொல்கிறார்கள். அப்படி, சைவர்களிடம் “நீங்கள் வாசிக்காவிட்டாலும் பரவாயில்லை; வீட்டில் ஒரு சுத்தசைவம் வாங்கி வைத்திருங்கள்” என்று நான் சொல்வேன். ஏனெனில் இயற்கை இடர்கள் நம் கைகளை மீறியவை. ஆனால் மனித இடர்கள் மன்னிக்கமுடியாதவை. சைவத் தமிழர் கழுவாய் தேடவேண்டிய முதன்மையான கொடும்பாவங்களில் குறிப்பிடத்தக்கவை கடந்த நூறு நூறாண்டுகளில் சாதி – வருணத்தின் பெயரால் தம் சகோதரர்களுக்கும் – சக சைவர்களுக்கும் இழைத்த அட்டூழியங்கள். மகத்தான இலக்கியங்களைப் படைத்த நாகரிகம் மிக்க தொன்மை வாய்ந்த இனம் இன்று சென்றடைந்திருக்கும் இழிநிலைக்கு ஒரு காரணம், இந்தக்கொடுமைகளால் சேகரித்துக்கொண்ட பெருஞ்சாபங்களும் தான். வக்கிரமான சாதிவெறியை உள்ளே மறைத்துக்கொண்டு வெளியே ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று போலியாகப் புன்னகைக்கும் நாம் ஒவ்வொருவரும் அச்சாபம் நம்மை இன்றும் பீடித்துள்ளமைக்கு நிதர்சனமான சாட்சிகள்.
பழைய தலைமுறையினருக்கு வேண்டுமென்றால் வருண – சாதியச் சாக்கடையிலிருந்து வெளியேறுவது கடினமாக இருக்கலாம். ஆனால் இளந்தலைமுறையினர் அதிலிருந்து வெளியேறவேண்டும். சைவம் என்பது வருணாச்சிரமம் நீங்கிய நன்மைபெருகு அருள்நெறி என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொருவர் வீட்டிலும் இந்நூல் இருக்க வேண்டும். இந்த நூலின் கருத்துக்கள் துண்டுப்பிரசுரங்களாகவும் விவாதங்களாகவும் எல்லோரையும் சென்றடையவேண்டும். அவன் வாக்கு என்ற பெயரில் அவனது நூல்களிலேயே சேர்க்கப்பட்டுள்ள மாசுக்களைத் துடைத்து அவனே தன் கைத்தீயால் சுட்டுத் தந்தாற் போலல்லவா இந்தச் சுத்தசைவம்!
சுத்தசைவத்துக்கு நான் திருக்குடை நிழற்ற, அந்நூல் மண்டபத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தது. அங்கிருந்த மிகச்சிலரே சுத்தசைவம் நூலை அதற்கு முன் கண்டவர்கள்; அதிலும் ஓரிருவரே அந்நூலைப் படித்தவர்கள். ஆனால் அங்கிருந்த எல்லோருமே சன்னதம் பிடித்தவர்கள் போல் இருந்தார்கள். ஒரு வரலாற்றுத்தருணத்தில் நின்றுகொண்டிருப்பதை அறிந்தவர்கள் போல. மேளதாளம் முழங்க “சுத்த சைவத்துக்கு அரோகரா” என்ற வாழ்த்துரை மீண்டும் மீண்டும் ஒலிக்க, பலர் மெய்விதிர்த்துக் கைகூப்பி கண்ணீர் சொரிந்துகொண்டிருந்தார்கள்.
என் கண்களும் ஏனென்று அறியாமல் கசிந்திருந்தன. இருபுறமும் திருமுறை வழுத்த, தம்மை மறந்தவர் போல் சிவாசாரியார் தூபதீபங்களைப் பலதடவை காட்டி மகிழ சுத்தசைவம் என் கைகளிலிருந்த முத்துக்குடை நீழலில் மண்டபத்தினுள்ளே நுழைந்துகொண்டிருந்தது. இந்த நூலுக்கு குடைபிடித்துச் செல்லும் நான் அடைந்த அதே மயிர்கூச்செறிவைத் தான் அரசன் என்பதையும் மறந்து பெரியபுராணத்துக்குச் சாமரை இரட்டியபடி சென்ற அநபாயச் சோழனும் அடைந்திருப்பானா?
பெரியபுராணம் எண்ணூறாண்டுகளுக்கு முன்னர் சைவத்தின் பொற்காலத்தில் உதித்த ஒரு நூல். சுத்தசைவம், சைவ சமயத்துக்கு இன்னொரு பொற்காலத்தைத் தொடக்கி வைக்க உதித்த நூல். சந்தேகமேயில்லை.
சுத்தசைவம் வாங்க:
இந்தியாவில்: ரூ. 850.
9442271042 என்ற எண்ணிற்கு gpay மூலம் ₹ 850 ஐ அனுப்பி, பரிவர்த்தனை விபரங்களையும் முழு முகவரியையும் அதே எண்ணிற்கு WhatsApp மூலம் அனுப்பி வைக்கவும். விவரங்கள் வந்த ஓரிரு நாட்களில் நூல் அனுப்பி வைக்கப்படும்.
இலங்கையில்: ரூ. 1500
கொழும்பு, யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலைகளில் கிடைக்கும். நாடளாவிய ரீதியில் விநியோகமுண்டு. தொடர்புக்கு: வட்சப் இலக்கம்: ±94716335511