இவன்....


இவன் பிறந்தது தொண்ணூற்றொன்று ஐந்து இருபத்தேழு. பெயர் துலாஞ்சனன். கொஞ்சம் அபூர்வமான  சிங்களப் பெயர். அங்கு துலங்ஜன் என்றால்,  ஒளிர்கின்ற கண்மை என்று பொருள். தமிழில் தானே வைத்த புனைபெயர் 'மைங்கணான்'.

சற்று முறைமையாகச் சொல்வதென்றால், அப்பா கனகசூரியம் விவேகானந்தராஜா. தேசிய சேமிப்பு வங்கியில் முகாமையாளராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். அம்மா சங்கரப்பிள்ளை சுசிலா. இல்லத்தரசி. துணைவி மரு.ஷேமங்கரி. ஒரு மூத்த சகோதரி உண்டு. விதுர்ஷனா. ஆசிரியை.

கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டம் தம்பிலுவில் கிராமத்தில் பிறந்த இவன், கற்றது அதே ஊரில் அமைந்த மத்திய மகா வித்தியாலயத்தில்.  கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் 'மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும்' துறையில் உயர்கல்வியை முடித்தான். தற்காலிகமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் செயல்விளக்குநராகப் பணி புரிந்தான்.  தற்போது இலங்கை நிர்வாக சேவை அதிகாரி. 

இலக்கியத்திலும் வரலாற்றிலும் இவனுக்கு ஈடுபாடு வந்தது எப்படி? ஐயமின்றி அதற்கு சுட்டவேண்டிய காரணம், கிழக்கிலங்கையில் சைவமும் தமிழும் செழித்த மண், அவன் பிறந்தகம் தம்பிலுவில். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இலங்கையின் பழைமை வாய்ந்த கண்ணகி அம்மன் கோவில்களில் ஒன்றான தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம் அங்கே அமைந்திருந்தமை. ஆகம முறை சாராத நாட்டாரியலையும்  சாதிய இயக்கம் சார்ந்த சமூகவியலையும், சிறு வயதிலிருந்தே கவனிப்பதற்கான சூழலை அக்கோவில் உருவாக்கித் தந்தது. கூடவே கண்ணகி, சிலப்பதிகாரத்தையும் அதன் ஈழத்து வடிவமான கண்ணகி வழக்குரையையும் தன் மீதான பக்திக்குப் பரிசாகத் தந்தாள். விளைவு தமிழ் இலக்கிய அறிமுகம்.

இரண்டாவது, இலங்கையின் கீழைக்கரையின் மூன்றில் இரு பாகத்தை அடக்கியிருந்த 'மட்டக்களப்புத்தேசம்' எனும் பழைய சிற்றரசின் தலைமை வழிபாட்டிடமாக விளங்கிய திருக்கோவில்  சித்திரவேலாயுத சுவாமி கோவில். 'தேசத்துக்கோவில்' என்று போற்றப்பட்ட அத்தலம் இவ்வூருக்கு அடுத்ததாக திருக்கோவில் கிராமத்தில் அமைந்திருக்கிறது. கலிங்க மாகோன் வகுத்ததாகச் சொல்லப்படும் 'பண்டு பரவணிக் கல்வெட்டு'  எனும் தொல்வழக்கப்படி,  'வண்ணக்கர்' என்ற பெயரில் இக்கோவில் நிர்வாகத்தில்  முதன்மை இடம் வகிப்பவர்கள் தம்பிலுவில் கிராமத்தைச் சேர்ந்தவர்களே. இன்று அருகி மறைந்து போய் விட்டாலும், அக்கோவில் வழிபாடு சார்ந்த வீரசைவத்தின் பின்னணியில், ஆகம வழிபாட்டுக்கும், வைதிகப் பாரம்பரியத்துக்கும் அடிப்படையாய் அமைந்த திருக்கோவில் சித்திரவேலாயுதன் இவனுக்கு சைவத்தை ஊட்டினான். கூடவே, தன் கோவிலில் இருந்த கல்வெட்டுக்கள் மூலம் இவனுக்கு வரலாற்றுக் கதவைத் திறந்துவிட்டான். பயன், வரலாற்றின் மீதான காதல்.

இவனது அம்மப்பா காலஞ்சென்ற மாணிக்கம் சங்கரப்பிள்ளை, நல்ல குரல் வளம் வாய்ந்தவர்.  மூன்றாம் வகுப்பு வரையே படித்தவர் என்றாலும், கந்தபுராண படனத்திலும், கண்ணகி வழக்குரை பாடுவதிலும், அந்தப் பகுதியிலேயே நிகரற்றவராக வளர்ந்திருந்தார். இரண்டு அலுமாரிகள் நிறைய அவர் வசம் திருவாசகம், கந்தபுராணம், திருவாதவூரடிகள் புராணம், பெரிய புராணம் முதலிய சைவ நூல்களும், வைகுந்த அம்மானை, கண்ணகி வழக்குரை, அம்மன் காவியங்கள் முதலிய  உள்ளூர் இலக்கியங்களும் நிறைந்திருந்தன. தூங்கும் போது அவர் சொன்ன பக்திக் கதைகளும், அவரது வீட்டு நூலகமும் அவனை மேலும் வளர்த்தன. எட்டாம் வகுப்பில் பாடசாலை ஆசிரியர்களின் ஊக்குவிப்பில் அவன் அங்கத்தினனாகப் பதிவு செய்து கொண்ட உள்ளூர் நூலகம், இன்னொரு கோணத்தில் வாசிப்புலகைத் திறந்துவிட்டது. இப்படி, சமயம், இலக்கியம், வரலாறு இந்த மூன்று துறைகள் மீதுமான நாட்டம், பிறந்தகம் காரணமாக, இவனுக்கு இயல்பாகவே உருவாயிற்று.  அதன் முதல் விளைவே 2018இல் அவனது உடன்பிறவா சகோதரர் மரு.கிருஷ்ணகுமார் பிரதாபனின் ஒத்துழைப்போடு வெளியான "அலகிலா ஆடல்: சைவத்தின் கதை". இரண்டாவதாக அவன் இல்லறம் புகுந்தபோது வதுவை நினைதலேடாக 2021 மார்ச்சில் வெளியான "மட்டுக்களப்பு எட்டுப்பகுதி" எனும் சிறுநூல், கிழக்கிலங்கை வரலாற்றை இன்னொரு கோணத்தில் பார்க்க முயன்ற நூல்.  அந்த இரு நூல்களிலும் அவன் சுட்டிக்காட்டும் பாதை ஏற்கத்தக்கது தானா, விமர்சனத்துக்குரியதா என்பது, அவற்றைப் படித்து வாசகர்களாகிய நீங்கள் கூறவேண்டிய தீர்ப்பு.

எழுத்தில் இவனுக்கு ஜெயமோகனைப் பிடிக்கும். கவிதையில் மனுஷ்ய புத்திரன். சமூகவியலில் அ.கா.பெருமாள் மற்றும் டெனிஸ் மக்கில்வ்ரே. சைவத்தில் அலெக்சிஸ் சாண்டர்சன், வரலாற்றில் சி.பத்மநாதன்.    

இப்போதைக்கு சொல்லிக்கொள்ள இவ்வளவும் தான்.  பிரபஞ்சப் பெருவிசை செலுத்தும் அறியாத்திசையில் ஆவலோடு பயணிக்கும் ஆர்கலியின் ஓர்துளி. பயணத்தில் ஒரு கணம் ஊடு புகுந்து இங்கு வந்த உங்களுக்கு இவன் அன்பும் பணிவும். 

வந்தனங்கள்.  😊

தொடர்பு: 
vthula27@gmail.com

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner