எவனோ ஒருவன் கை அம்பு



நான் இன்றும் ஆத்திகன் தான். நமக்கு மேல் ஏதோ ஒன்று இருக்கிறது என்று எண்ணுபவன். ஆனால், தொல்லியல், வரலாறு, இலக்கியம் என்பனவற்றில் எல்லாம் ஆர்வம் ஏற்பட்ட பின்னர், கடவுள் நம்பிக்கை குறைந்துவிட்டது என்றே சொல்வேன். அல்லது கடவுளைப் பற்றிக் கவலைப்படாத ஒரு நிலை. ஆனால் எப்போதாவது திடுக்குறச் செய்யும் ஏதாவது அனுபவங்கள் ஏற்படுவது வழமை. இன்று ஏற்பட்டதும் கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒன்று தான்.

'தம்பிலுவில் கல்வெட்டுக்கு வயது ஐநூறு' கட்டுரையைப் படித்திருப்பீர்கள். உண்மையில், அது தொடர்பாக போன ஆண்டே ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் '2020இல் தானே சரியாக 500 ஆண்டுகள் ஆகின்றது. எனவே அடுத்த ஆண்டு எழுதுவோம்' என்று விட்டுவிட்டேன்

ஆனால் இந்தமுறை இணையத்தில் தேடியபோது குறிப்புக்கள் ஆறாம் விஜயபாகுவின் ஆட்சி ஆரம்பிக்கும் ஆண்டாக 1507, 1509, 1513 என்று தான் காட்டிக்கொண்டு இருந்தன. 1509, 1513 என்று குறிப்பிட்ட சான்றுகள் அனேகம். எதைக் கருத்தில் எடுத்தாலும் சரியாக 500 ஆண்டுகள் வரமுடியாது. ஆனால் 2020இல் ஐநூறாம் ஆண்டு வருவதாக நினைத்தல்லவா போன ஆண்டு எழுதுவதைத் தவிர்த்தோம்? அப்படி எங்கேயோ வாசித்தோமே? அதுவும் நினைவில்லை. எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகப் போய்விட்டது. மறதி சாத்தியம் தான். கவையில்லை, அது 1509ஓ 1507ஓ, ஐநூறாண்டுகள் கடந்துவிட்டதே எழுத வேண்டிய விடயம் தான் என்று எழுதி வலைப்பதிவிலும் போட்டதைத் தான் நீங்கள் படித்தீர்கள்.

இன்று காலை வழக்கம் போல 5.55, 6.00, 6.05 என்று அலாரம் அடித்துக்கொண்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால், அதை ஒலி அணைத்தபடி தொடர்ந்தும் தூங்கி வழிந்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு கனவு. கனவென்றும் சொல்லமுடியாது. ஒரு நினைவு. கொழும்பு அருங்காட்சியக நூலகத்தில் அமர்ந்து சி.பத்மநாதனின் "கொழும்பு தேசிய அருங்காட்சியகத்திலுள்ள தமிழ்க் கல்வெட்டுக்கள்" என்ற ஆங்கில நூலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் பழுப்பு நிறப் பக்கங்களில் தைப்பூசம் பற்றிய கல்வெட்டுச் செய்திகளை நுணுக்கமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

இன்று தைப்பூசம் என்பது நினைவில் இருந்தது உண்மை. பேராசிரியர் பத்மநாதனின் அந்தப் பெயருடைய ஒரு ஆங்கில நூல் இருப்பதும் உண்மை. ஆனால் அதில் தைப்பூசம் பற்றிய எந்த விபரமும் இல்லை. நான் கொழும்பு அருங்காட்சியகத்துக்கு பலமுறை சென்றிருந்தாலும், அங்கிருந்த நூலகத்துக்குச் சென்றது ஒரே ஒரு தடவை தான். அதுவும் போன டிசம்பர் மாதம், இதற்குப் பின் எப்போது சாத்தியமாகிறதோ தெரியாது என்ற அச்சத்தில் போய் வந்தேன். வருகிற போது அருகே இருந்த விற்பனைச் சாலையில் மேற்படி ஆங்கிலப் புத்தகத்தைக் கண்டேன். அதில் பிரசுரமானவை தமிழிலும் பிரசுரமாகி நான் ஏற்கனவே வாசித்து விட்ட கட்டுரைகள். எனவே வாங்கவில்லை. ஆனால் இன்னொரு ஆங்கிலப் புத்தகம் வாங்கினேன்.சிங்கள வரலாற்றுப் பேராசிரியர் சிறிமல் ரனவல்லவின் "கொழும்பு தேசிய அருங்காட்சியகத்திலுள்ள சிங்களக் கல்வெட்டுக்கள்".


இப்படி ஒரு கனவு அல்லது நினைவு வந்ததும் தான் அந்தப் புத்தகம் ஞாபகத்துக்கு வந்தது. நான் கொழும்பிலிருந்து ஊருக்குத் திரும்பி இரண்டு மாதங்களாகி விட்டது. ரனவல்லவின் புத்தகம் உட்பட கொழும்பில் பயன்படுத்திய புத்தகங்களெதுவும் பொதி அவிழ்க்கப்படாமல் அப்படியே பழைய அலுமாரியில் வைக்கப்பட்டிருக்கின்றன. அட! இந்தப் புத்தகம் வாங்கியதை மறந்தே விட்டோமே, வாசிக்கவேண்டும் என்று எடுத்து வந்து தட்டிக்கொண்டிருந்தபோது தான் ஆறாம் விஜயபாகுவின் தெவிநுவரப் பலகைக் கல்வெட்டைக் கண்டேன். ஆறாம் விஜயபாகு பற்றிய அந்த சிங்களக் கல்வெட்டு அவனை இப்படி அறிமுகப்படுத்துகிறது.

"ஸ்வஸ்திஸ்ரீ சுத்த சக வருஷ எக் தஹஸ் சாரசிய தெனிஸ்வன்னெஹி ரஜ பெமிணி ஸ்வஸ்தி ஸ்ரீ மகாசம்மத பரம்பரானுயாத சூரிய வங்ஷாபிஜாத ஸ்ரீலங்காதிபதி ஸ்ரீமத் சிறிசங்கபோ ஸ்ரீ விஜயபாகு சக்ரவத்தி ஸ்வாமின் வஹன்செட்ட சதர வன்னென் மது அவுறுது பொசொன"

இதன் பொருள் இது தான். "மங்கலம் பொலிக. சுத்தமான சகவருடம் 1432இல் முடிசூடியவரும், மகாசம்மதரின் பரம்பரையில் சூரிய வம்சத்தில் உதித்தவருமான இலங்கைக்கதிபதி சிறிசங்கபோதி விஜயபாகு சக்கரவர்த்தி அவர்களின் நான்காம் (ஆட்சி) ஆண்டில் பொசன் மாதத்தில்"

இங்கு வரும் மகாசம்மதன் என்பவன் பௌத்த ஜாதகக் கதைகளில் வரும் க்ஷத்திரிய குலத்து முதல் மன்னன். பெரும்பாலான சிங்கள மன்னர்கள் தாங்கள் அவன் வழியில் வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். இந்தியக் கல்வெட்டுக்கள் போல சில இடங்களில் சக ஆண்டுக்கணக்கையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். பொசன் எனும் சிங்கள சந்திரவழி மாதம், தமிழ் ஆனி மாதத்துக்குச் சமனானது.

இலக்கியங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தக்கூடிய ஆண்டுகளை விட, கல்வெட்டு ஆண்டுகள் ஒப்பீட்டளவில் திருத்தமானவை. சக ஆண்டு, கிரகோரியன் ஆண்டுக்கு 78 ஆண்டுகள் பிந்தியது. விஜயபாகு மன்னன் முடிசூடிய ஆண்டு சக ஆண்டு 1432 என்கிறது தெவிநுவரைக் கல்வெட்டு. ஆக கணக்கிட்டால், கிரகோரியன் படி அவன் ஆட்சிக்கு வந்தது, 1432 + 78 = 1510!

எனவே இனி ஐயத்துக்கிடமில்லை. 1507ஓ, 1509ஓ, 1513ஓ அல்ல; ஆறாம் விஜயபாகு ஆட்சிபீடத்தில் அமர்ந்த ஆண்டு 1510. ஆக, அவன் பத்தாம் ஆட்சியாண்டில் தம்பிலுவில் கல்வெட்டு பொறிக்கப்பட்டது, 1520இல். சரி தான். இந்த 2020ஆம் ஆண்டுடன் மிகச்சரியாக 500 ஆண்டுகள் ஆகிவிட்டது!

தெவிநுவர பலகைக் கல்வெட்டை, இந்து பண்பாட்டுத் திணைக்களத்தின் மாநாட்டில் கடந்த ஒக்டோபரில் வாசித்த "தேனவரை நாயனாரும் தெண்டீர ஈச்சரமும்" கட்டுரைக்காக படித்திருக்கிறேன். "தம்பிலுவில் கல்வெட்டு" கட்டுரை எழுதிக்கொண்டிருந்த போது, அதை எடுத்து தகவலை சரி பார்க்க ஏன் எனக்குத் தோன்றவில்லை?

இன்று சம்பந்தாசம்பந்தமில்லாமல் தைப்பூசத்தையும் கொழும்பு அருங்காட்சியகத்தையும் முடிச்சுப் போட்டு ஏன் அந்தக் கனவை நான் காணவேண்டும்? அந்தக் கனவு ஏன் ரனவல்லவின் நூலை நினைவூட்டவேண்டும்? அந்த நூலை தேடி எடுத்துப்பார்க்கும் எனக்கு, தெவிநுவரக் கல்வெட்டில் விஜயபாகுவின் சரியான ஆட்சியாண்டு ஏன் அறிவிக்கப்பட வேண்டும்? ஐந்து நாட்களின் பின்பு நான் எழுதிய கட்டுரை சரி தான் என்று ஏன் உணரவேண்டும்?

வரலாறு, ஆய்வு என்றெல்லாம் எழுதும் போது, "உன் எழுத்துநடை நன்றாக இருக்கிறது", "உன் வயதில் இந்த ஆய்வைச் செய்வதெல்லாம் பெரிய விடயங்கள்", என்று நிறையப்பேர் பாராட்டியிருக்கிறார்கள். அதை எண்ணி சந்தர்ப்பங்களில் இலேசாக தலைக்கனம் ஏறுவதும் உண்டு. அப்போதெல்லாம் ஓங்கி சம்மட்டியால் அடிப்பது போல் இப்படி ஏதாவது நிகழும்.

"இது எதையுமே நீ செய்யவில்லை. நீ செய்விக்கப்படுகிறாய். நீ வெறும் கருவி. உனக்கு இந்த இந்தத் துறையில் ஆர்வமேற்படவேண்டும் என்று நீயா விரும்பினாய்? உன் இலட்சியங்கள் என்ன? இப்போது நீ இருக்கும் இடம் என்ன? கர்வப்படாதே, நீ அம்பு மட்டும் தான். எய்பவன் வேறொருவன். இந்த இந்த விடயங்கள் உன் மூலம் நிகழவேண்டும் என்று மட்டும் விதிக்கப்பட்டிருக்கிறது. நிகழ்த்திவிட்டு ஓரமாக ஒதுங்கிக்கொள். அதற்கு மேல் உனக்கொரு இடம் இல்லை."

வேறெங்கோ, வெகு தூரத்தில் நின்று இப்படி யாரோ சொல்லுவதைப் போல அடிக்கடி உணர்கிறேன். உண்மையில் எல்லா சாதாரண மனிதருக்கும் உரிய சாதாரண கோபதாபங்கள் எனக்கும் உண்டு. அர்த்தமற்ற எண்ணங்கள், பொருந்தாத் துயர்கள், குழப்பங்கள், தயக்கங்கள். இப்போது அவையெல்லாம் பெருமளவுக்கு இல்லை. அவை வருவது ஏதோ ஒரு காரணமாகத் தான். என்னைச் செலுத்தும் பெருவிசைக்குத் தெரியாதா அதெல்லாம்? அதைத் தீர்க்கும் வழியையும் அந்தப் பெருவிசை அறியும். என்னைக் காக்கும். பிரபஞ்சப்பெருவிசை!

ஏன் கடவுள் நம்பிக்கை தேவை என்று கேட்டால் என் முதன்மையான பதில் இது தான். வாழ்வு பொல்லாதது. அது உங்களை சுக்கு நூறாக உடைத்தெறியும் தருணங்கள் பல வாழ்க்கையில் வரும். மனதளவில் நீங்கள் எத்தனை வலியவர் என்றாலும் அதற்கு முகங்கொடுக்க முடியாத நிலை உங்களுக்கு ஏற்படலாம். திட்டியோ தழுவியோ அழுதோ அப்போதைக்கு தள்ளாடாமல் பிடித்துக்கொள்ள ஒரு தூண் தேவை. பெரும்பாலும் அந்தத் தூண் இறைநம்பிக்கை தான்.

அப்படி, யாரோ ஒருவர் எழுதிக்கொண்டு இருக்கின்ற முடிவுறாத திரைக்கதையொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்பதே எத்தனை இனியது. இயக்குநரைத் தெரியாது. அடுத்த காட்சி யார், என்ன நடக்கும் என்றும் தெரியாது. இதில் நடிப்பதே அருமையான விளையாட்டு. நடிகன் ஒருபோதும் தலைக்கனம் கொள்ளக்கூடாது. அவன் நடிப்பு மொத்தமாக சீர்கெட்டுவிடும். அல்லது இயக்குநன் அவனைக் கடாசி விட்டு வேறொரு நடிகனைத் தேர்ந்தெடுக்கக் கூடும்.


நான் எவனோ ஒருவன் கையில் அம்பு என்பதை மட்டுமே பெருமையாக எண்ணிக் கொள்ள விரும்புகிறேன். கையில் அம்பை ஏந்தி, அந்த அம்பு ஆணவம் கொண்டதால், அதை நினைத்துப் புன்னகைத்து, அந்தப் புன்னகையாலேயே முப்புரங்களை எரித்தவனின் கதை புராணங்களில் உண்டு. எப்போதாவது இந்த எளிய அம்பு அப்படி கர்வத்தோடு எண்ணிக் கொள்வதைக் கண்டீர்களென்றால் சுட்டிக்காட்டிவிடுங்கள். "ஆடாதே, நீ வெறும் அம்பு தான்" என்று

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner