உயிர் மெய்



வெட்கத்தை விட்டுச் சொல்வதென்றால் உன் பெயர் அழகாக இருக்கிறது என்று நிறையப்பேர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் துலாஞ்சனன் என்பது சிங்களப்பெயர். சிங்களவரிடம் அந்த உச்சரிப்பை ஒத்த "டுலங்ஜன்" என்ற பெயர் நல்ல பிரசித்தம். (ஒளிர்கின்ற கண் இமையைக் கொண்டவன் என்ற விந்தையான பொருள்.

சிங்களத்தில் "ஞ்ச" என்ற ஒலிக்கூட்டு வழக்கத்தில் இல்லை. அது ஞ்ஞ அல்லது ங்ஜ என்று தான் வரும். என்றாலும் அங்கு ஞகரத்தைக் குறிக்கும் எழுத்துக்கள் இருக்கின்றன. தமிழ் போலவே சிங்களத்திலும் ஞகரம் அரிதான ஒலிப்பு. எனவே துலாங்ஜனன், துலான்ஸனன், துலாஞ்ஞனன் என்றெல்லாம் என் பெயர் சிங்களத் தோழர்களால் கடித்துக் குதறப்பட்டு வந்தது. போதாக்குறைக்கு ஒரு தமிழ் ஆசிரியரே கஷ்டப்பட்டு துலாங்ஙன் என்று அழைத்த கிருபை.. ச்சீ பெருமை அதற்குண்டு.

உத்தியோகபூர்வ ஆவணங்களில் என் பெயரை சிங்களத்தில் எழுதும்போது சிக்கலாக இருந்தது. கடந்த ஆண்டு தொழில் நிமித்தம் முறைப்படி சிங்களத்தை கற்கத் தொடங்கியபோது ஆசிரியையிடம் என் சிக்கலைச் சொன்னேன். அவர் பூர்வீக சிங்களவர். இளம்பெண் கூட. மொழி இலக்கணத்தை தாங்கள் பெயர் எழுதும் போது பார்ப்பதில்லை. விரும்பியபடி எழுதுங்கள் என்று அவர் சொன்ன பின்னர் தான் என் சந்தேகம் தீர்ந்தது. ஆங்! நான் சொல்லவந்தது என் பெயர் பற்றியோ அழகான சிங்கள ஆசிரியை பற்றியோ இல்லை. சிங்களம் கற்றது பற்றி.

போன ஆண்டு முறைப்படி கற்ற போது தான் சிங்கள அரிச்சுவடியை கவனித்தேன். சிங்கள உயிரெழுத்துக்கள் 20. தமிழ் பன்னிரண்டுடன் எஹ், ஏஹ், ருஹ், ரூஹ், லுஹ், லூஹ், அங், அஃ என்று எட்டு எழுத்துக்கள் மேலதிகம்.
ஆனால் சிங்கள மெய்யெழுத்துக்களுக்கு நிலையான எண்ணிக்கை இல்லை. அது மாறிக்கொண்டே செல்லும் என்பதால் இத்தனை தான் என்று எண்ணிக்கை சொல்லிக் கற்பிக்கமாட்டார்கள். எஃப்பிற்கான சிங்கள எழுத்து அண்மையில் தான் சிங்கள அரிச்சுவடியில் சேர்க்கப்பட்டது. தற்போது இஸ்ஸட்டிற்கான எழுத்தைச் சேர்க்கும் திட்டம் வரைவில் இருக்கிறது.

என்றாலும் சிங்கள மெய்யெழுத்துக்களைக் கற்பிக்கும் போது ஒரு ஒழுங்கில் கற்பிக்கிறார்கள். முதலில் க, ச, ட, த, ப என்னும் ஐந்து எழுத்துக்களும் அவற்றுக்கான மூன்று வர்க்க எழுத்து வகைகளும் ('க'விற்கு ka, kha, ga, gha, 'ச'விற்கு cha, ccha, ja, jha, 'ட'விற்கு ta, tta, da, dda, 'த'விற்கு tha, ttha, dha, ddha, 'ப'விற்கு pa, pha, ba, bha) கற்பிக்கப்படுகின்றன.

பிறகு ங, ஞ, ண, ன, ம என்னும் ஐந்து எழுத்துக்களும், அவற்றை முறையே க, ச, ட, த, ப உடன் புணர்த்தி, ங்க, ஞ்ஞ, ண்ட, ந்த, ம்ப ஆகிய ஐந்து கூட்டெழுத்துக்களும் கற்பிக்கப்படுகின்றன.

அடுத்து ய, ற, ல, வ எனும் நான்கு எழுத்துக்கள். இறுதியாக அந்த அரிச்சுவடியில் இறுதியாக சேர்க்கப்பட்ட ஶ, ஷ, ச, ஹ, ள, ஃப மெய்களுடன் அரிவரிப் பயிற்சி ஏறத்தாழ நிறைவுறுகிறது.

தமிழ் அரிச்சுவடியை சிங்கள அரிச்சுவடியோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது தமிழ் அரிச்சுவடியும் ஒரு ஒழுங்கிலேயே அமைந்திருந்ததைக் காண முடிந்தது. தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் தலா ஆறாக பதினெட்டு மெய்யெழுத்துக்கள் என்று படித்திருக்கிறோமல்லவா? அந்த ஒழுங்கில் தான் வண்ணமாலை அமைக்கப்பட்டிருக்கிறது. எப்படி?

வல்லினம் ஆறில் க,ச,ட,த,ப என்னும் ஐந்தும், மெல்லினம் ஆறில் ங, ஞ, ண, ந, ம என்னும் ஐந்தும் மாறி மாறி ஒன்று விட்டு ஒன்று என்ற ஒழுங்கில் வருகின்றன.
க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம.
இந்தப் பத்துக்குப் பின்னர் ய, ர, ல, வ, ழ, ள என்னும் ஆறு இடையினங்கள் வருகின்றன. விடுபட்ட வல்லினம் றவும், விடுபட்ட மெல்லினம் னவும் இணைக்கப்பட்டு இறுதியில் தமிழ் வண்ணமாலையின் 18 மெய்களும் பூர்த்தியாகின்றன.
க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம
ய, ர, ல,வ, ழ, ள
ற, ன
ஏன் இந்த ஒழுங்கு? றகரமும், னகரமும் ஒழுங்கு மாறி ஏன் இறுதியில் சேர்க்கப்பட்டிருக்கின்றன?
இந்தக் கேள்விக்கான விடை எளிமையானது. சிங்கள அரிச்சுவடி சுட்டிக் காட்டுவது போல, தமிழிலும் ஆரம்பத்தில் வல்லினமும் மெல்லினமும் ஐந்து ஐந்து தான். தமிழ் மொழி வளர்ச்சி கண்டபோது, அரிச்சுவடியில் இறுதியாக சேர்க்கப்பட்ட எழுத்துக்கள் தான் றவும் னவும். ரகரத்தின் வலிய பலுக்கல் றகரம். ஒரே உச்சரிப்பு போல இருக்கும் நகரமும் னகரமும் தமிழில் பல்லாண்டுகளாக குழப்பத்தை ஏற்படுத்தியதை கல்வெட்டுக்களிலேயே காணலாம். அங்கெல்லாம் னக்குப் பதில் ந பல இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது.
இப்படிச் சொல்வதற்கான ஆதாரங்களை நாம் தமிழி எழுத்துருவில் மிக எளிதாக கண்டுகொள்ளலாம். தமிழி எழுத்துரு அல்லது தமிழ்ப்பிராமி எழுத்துரு, கி.பி முதலாம் நூற்றாண்டு வரை தமிழை எழுதப் பயன்பட்ட எழுத்து வடிவம். புரிகிற மாதிரிச் சொன்னால் நாம் குறுஞ்செய்தியில் roman ezuththil thamizai ezuthuvathu pola. எழுத்து வடிவம் வேறு. ஆனால் எழுதப்பட்ட மொழி தமிழ். திருக்குறள் முதலிய பழந்தமிழ் இலக்கியங்கள் தாம் எழுதப்பட்ட போது, தமிழி எழுத்துருவில் தான் எழுதப்பட்டிருக்கின்றன.
தமிழி அரிச்சுவடியில் 'ற'வை எழுதப் பயன்படும் எழுத்து 𑀶. உரோமன் Cயும் கிரேக்க லம்டாவும் (𑀢) இணைந்த வடிவம். உரோமன் C என்பது தமிழியில் ட. கிரேக்க லம்டா 𑀢 என்பது தமிழியில் த.
ற என்பது டகரத்திகற்கும் தகரத்திற்கும் இடையே ஒலிப்பதால், ற என்ற புதிய ஒலிப்பை அரிச்சுவடியில் சேர்த்த போது அந்த 'ட'வையும் 'த'வையும் சேர்த்து (C+𑀢) புதிய எழுத்தை ( 𑀶) உருவாக்கி இருக்கிறார்கள்.
அதே போல், தமிழியில் ந என்பது தலைகீழ் T (𑀦). ன என்ற எழுத்தை இறுதியாக இணைத்தபோது ந எழுத்தின் உச்சியை சுழித்து தலைகீழ் J என்ற எழுத்தை (𑀷) அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
இதே எழுத்து மாற்றத்தை, ஒத்த உச்சரிப்புக் கொண்ட ல, ள எழுத்துக்களிலும் காணலாம். ல என்பது தமிழியில் பக்கவாட்டு கேள்விக்குறி 𑀮 . ள என்ற எழுத்துக்கு அந்த எழுத்தோடு சிறு கால் - 𑀴 - இணைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் அரிச்சுவடியின் இறுதி மூன்று எழுத்துக்களும், தேவைக்காக, ஏற்கனவே இருந்த மூன்று எழுத்துக்களின் உச்சரிப்பை ஒத்து உருவாக்கி சேர்க்கப்பட்டவை என்பது இப்படித் தெளிவாகிறது.
சிங்கள அரிச்சுவடி சுட்டிக்காட்டுவது போல ஆதியான தமிழ் அரிச்சுவடியும் ஒரு காலத்தில் 'வ'கரத்துடனேயே நின்றிருக்கலாம். அதற்குப் பிறகு தமிழின் சிறப்பெழுத்தான ழகரமும், அடுத்த மூன்று எழுத்துக்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தச் சேர்ப்பெல்லாம் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நடந்து முடிந்திருக்கிறது. இல்லாவிட்டால், 12,18, 1, 216, என்ற திருத்தமான எழுத்துக் கணக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்ணில் நீடித்திருக்க முடியாது.
ஆனால், இதையெல்லாம் கண்டறிந்து வியப்பதற்கு முறைப்படி சிங்களம் கற்றுக்கொள்ளவேண்டி இருந்தது. சிங்களம் இந்தோ - ஆரியத் தோற்றம் காட்டினாலும், அதன் மொழியமைப்பு அது அப்பட்டமாக திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தது தான் என்று சுட்டிக்காட்டப் போதுமானதாகி விடுகிறது.
இன்னொரு வியப்பு என்னவென்றால், தமிழியில் லகரத்திலிருந்து ளகரத்தை வருவித்துக்கொண்டது போல, நகரத்திலிருந்து னகரத்தை வருவித்துக் கொண்டது போல, றகரத்தை உருவாக்கிய மொழியறிஞன், அதை ரகரத்திலிருந்து வருவிக்கவில்லை.
இரண்டின் உச்சரிப்பும் ஒத்தது என்றாலும், இனம் வேறு என்ற தெளிவு அவனுக்கு இருந்தது. ர இடையினம், ஆனால் ற வல்லினம். அதனால் 'ர'வின் வலிந்த உரப்பாக 'ற' பிறக்கும் என்று சொல்லாமல், தகரத்துக்கும் டகரத்துக்கும் இடையே இன்னொரு வல்லினமாக ற பிறக்கும் என்பதை அந்த ஆசான் சுட்டிக்காட்ட முயன்றிருக்கிறான்.
மொழி என்பதை வெறுமனே தொடர்பாடல் ஊடகம் என்று வரையறுத்து விட்டு எளிதாகக் கடந்து சென்று விடுகிறோம். ஆனால் அதை உருவாக்குவதற்கு, இலக்கணம் படைத்து வரையறுப்பதற்கு, எத்தகைய ஆழ்ந்த ஞானம் படைத்திருக்கவேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றது தமிழ் அரிச்சுவடியின் ஒழுங்கு.
மொழியை வரம்பறுத்தவனை இறைவன் என்பதில் என்ன தவறு?
அந்த ஆலமர் செல்வனை வியந்து பணிகிறேன்.
அவன் படைத்த தமிழ் காலம் தாண்டித் திகழ்க.
குறிப்பு 01:
வட இந்திய, அல்லது ஏனைய திராவிட மொழிக்குடும்பங்களின் வண்ணமாலைகள் எவ்வாறு கற்பிக்கப்படுகின்றன என்று எனக்குத் தெரியாது. வேறு மொழிகளில் வல்லின - மெல்லின - இடையின பாகுபாட்டோடு அரிச்சுவடி கற்பிக்கப்படுகிறதா, அவற்றில் தமிழின் தாக்கம் எந்தளவு இருக்கிறது என்பதை பன்மொழி அறிஞர்களே கூறவேண்டும்.
குறிப்பு 02:
சிங்கள அரிச்சுவடியைக் கற்றபோது நான் அடைந்த ஊகத்தை, தமிழி எழுத்துவடிவத்தின் தோற்றம் பற்றிய அருமையான கட்டுரை ஒன்றின் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டேன். என் ஐயம் சரி என்றால், அது பெரும்பாலும்
கி இராம
ஐயாவின் வளவு வலைத்தளத்தில் வெளியாகியிருக்கவேண்டும். அந்த இணைப்பைக் கண்டறிந்தால் இங்கு பகிர்கிறேன்.
குறிப்பு 03:
மொழிக்கட்டமைப்பின் வரலாற்றை ஆராயும் போது, மொழிப்பற்றுக் கடந்து அறிவியலோடு இணைத்து நிறைய சிந்திக்கவேண்டி இருக்கிறது. சிங்களம் இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது என்றாலும், அதன் மொழியமைப்பு திராவிடச் சாயல் கொண்டது என்பதை பலர் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதன் அரிச்சுவடியிலிருந்து தமிழ் வரிவடிவ வளர்ச்சியையும் ஊகிக்க முடிவதால், அதில் உண்மை இருக்கக்கூடும். சிங்களம் எத்தனை பழைய மொழி, தமிழுக்கும் அதற்குமான உறவென்ன, தமிழின் ஆதிமொழி உரிமைகோரல் முதலிய பொருட்கோடல்கள் எல்லாம் தனியே ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner