விருந்து




போனவாரம் தான் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாயின. அந்தப் பரீட்சையை நான் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் எழுதினேன். அந்தப் பரீட்சையில் மறக்கமுடியாத ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஐந்து வசனம் எழுதுமாறு கோரி, வினாத்தாளில் வந்த கேள்வி "எனது வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்தபோது..." என்று ஆரம்பித்திருந்தது.

நான் இப்படி எழுதினேன்.
1. எனது வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் மாலை நேரத்தில் வந்தார்.
2. அவர் என் பெற்றோரைப் பார்த்து "பசி பசி" என்று அழுதார்.
3. அம்மா வீட்டில் இருந்த கொஞ்ச மாவைப் பயன்படுத்தி உரொட்டி தயாரித்தார்.
4. நாங்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உரொட்டி சாப்பிட்டோம்.
5. விருந்தினர் எங்களுக்கு நன்றி கூறி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.
வினாத்தாள் அத்தனை கடினமாக இருக்கவில்லை. பரீட்சை எழுதி முடித்ததும் பாடசாலை அதிபர் ஓடோடி வந்தார். அந்தப் பாடசாலையிலேயே அதிகம் பேர் சித்தியடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அணி எங்களுடையது. "வசனம் எழுதுற கேள்வி என்ன தலையங்கம் வந்தது? என்ன எழுதினேல்?" என்று அதிபர் பதகளிப்புடன் கேட்டார். கூடியிருந்த என் நண்பர்கள் ஒவ்வொருவரும் அவரவர் எழுதிய பதில்களைச் சொன்னார்கள். நானும் பெருமிதத்துடன் என் பதிலைச் சொன்னேன். அவர் முகம் மாறியது. "முழுப்பிழை. என்ன தம்பி, உங்கட வீட்ட விருந்தினர் வந்தா பசிக்குது பசிக்குது எண்டு வாயால கேட்டுத் தான் சாப்பாடு போடுவேலா?"
எல்லோரும் கொல்லென்று சிரிக்க, திடுக்கிட்ட நான் "இல்ல ரீச்சர்..." என்று இழுத்தேன். அவர் கவனிக்காமல் அடுத்த மாணவரிடம் பதில் கேட்கச் சென்றுவிட்டார்.
எனக்கு அழுகை அழுகையாக வந்தது. ஒருபக்கம் எல்லோருக்கும் முன் அதிபர் ஏசிவிட்டார் என்ற அவமானம். மற்றப் பக்கம் பரீட்சையில் புள்ளிகளை இழந்த சோகம். வீட்டுக்கு வந்து சொன்னால் அங்கு அதிபரை விட அதிகமாக கிழி விழுந்தது. சோகம் தாங்காமல் விம்மி அழுதபடியே போய் படுத்து விட்டேன்.
பயந்தது போல் இல்லாமல், நான் சித்தியடைந்து விட்டேன். 16 பேர் சித்தியடைந்து, அதிகம் பேர் ஒரே தடவையில் சித்தியடைந்த அணி என்று என் அணியினர் பெயரும் பெற்று விட்டோம். அதே பாடசாலையில் கற்ற ஒரு மாணவி, 2010ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியிலும் முதலிடம் பெற்றார்.
ஆனால் நான் ஏன் அப்படி விருந்தினர் என்பதைத் தவறாகப் புரிந்து அப்படி 'சின்னப்பிள்ளைத்தனமான' வசனங்களை எழுதினேன்? உண்மையிலேயே சின்னப்பிள்ளை - விருந்தினர் என்பதற்கு வரைவிலக்கணம் தெரியாத பத்து வயது - என்பதாலா?
இல்லை. அந்தப் பிழைக்குக் காரணம், வாசிப்புப் பழக்கம்.
என்ன? வாசிப்புப் பழக்கத்தால் பிழையா? அதெப்படி?
இராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்ட "விவேகானந்தர் சொன்ன கதைகள்" என்றோர் சிறுவர் புத்தகம் எங்கள் வீட்டில் இருந்தது. அதில் இருந்த பொற்கீரி கதை மகாபாரதத்தின் கிளைக்கதைகளில் ஒன்று. உங்களுக்கும் முன்பே தெரிந்திருக்கலாம்.
தருமர் இராசசூய வேள்வி செய்து முடித்த பின்னர் ஒரு விந்தையான கீரி அங்கு வருகிறது. அதன் பாதியுடல் பொன்னிறத்தில் இருக்கிறது. அங்கு விழுந்து புரண்டெழுந்து விட்டு "இங்கு அப்படி ஒன்றும் சிறப்பான தர்மச்செயல் இடம்பெறவில்லை" என்கிறது கீரி. ஏன் என்று அங்கிருந்தோர் கேட்க அது சொல்கிறது.
"என் பாதியுடல் பொன்னிறமானது ஒரு ஏழையின் வீட்டில். பஞ்சகாலத்தில் அவன் கஷ்டப்பட்டு கொஞ்சம் தானியம் சேகரித்து வீட்டில் கொணர்ந்து கொடுத்தான். அதில் மனைவி ஒரு சிறிய உரொட்டி சுட, மகன், மருமகள் என்று அவர்கள் நால்வர் சாப்பிட உட்கார்ந்தார்கள். அப்போது பார்த்து ஒரு விருந்தினர் அங்கு வந்துவிட்டார். இவர்களைப் பார்த்து 'பசிக்கிறது' என்று சொல்லிக் கண்ணீர் வடித்தார்.
தந்தை தன் பங்கு உரொட்டியைக் கொடுத்தான். விருந்தினர் பசி அடங்கவில்லை. தாய் தன் பங்கைக் கொடுத்தாள். அப்போதும் அவர் பசி அடங்கவில்லை. இறுதியில் மகனும் மருமகளும் தங்கள் தங்கள் பங்கைக் கொடுத்துவிட்டார்கள். அவர் பசியாறி மகிழ்ச்சியோடு புறப்பட்டுச் சென்றார். அந்தக் குடும்பத்தினர் பசி தாங்காது அன்றிரவே இறந்துவிட்டனர். அங்கு அடுப்பின் அருகே சிந்திக்கிடந்த மாவு என் பாதி உடம்பில் பட்டதும் அது பொன்னாகி விட்டது. மீதியைப் பொன்னாக்க பல இடங்களிலும் சுற்றி வருகிறேன். உங்கள் இந்த வேள்விச்சாலை உட்பட எங்கும் என் மீதி உடல் பொன்னாகவில்லை. அப்படி, தன் உயிரையும் துச்சமென மதித்து, பசித்து வந்தவனுக்கு தன் உணவை வழங்கும் அறச்செயலுக்கு இந்த இராசசூயம் நிகரில்லை. " என்று சொல்லிச் சென்றுவிடுகிறது கீரி. வேள்வியில் தான் செய்த தானதருமங்கள் பற்றி தலைக்கனம் கொண்டிருந்த தரும மகாராசா வெட்கித் தலைகுனிந்து விடுகிறார்.
இந்தக் கதையும் அது சொன்ன நீதியும் அப்போதே என் மனதில் ஆழப்பதிந்து விட்டிருந்தது எனவே தான் பரீட்சையில் "விருந்தினர்" என்ற சொல்லைக் கண்டதுமே வேறெதையும் சிந்தியாது பொற்கீரிக்கு மனம் தாவிவிட்டது. வீட்டிற்கு வந்த விருந்தினர் "பசி பசி" என்று அழுததும், எங்கள் அம்மாவும் கூட கொஞ்ச மாவைப் பயன்படுத்தி விருந்தினருக்கு உரொட்டியே சுட்டதற்கும் அந்தக் கதை ஏற்படுத்திய பாதிப்பே காரணம்.
சரி. விருந்தினர் என்ற சொல்லைப் பிழையாகப் புரிந்துகொண்டது என் தவறு தான். அதற்காக வாசிப்பைக் குற்றம் சொல்லக்கூடாதே.
ஆனால் விருந்தோம்பல் நம் பண்பாட்டில் எத்தகைய இடம் வகிக்கிறது?
விருந்து என்ற சொல்லுக்கு "புதுமை" என்றும் பொருள் உண்டு. விருந்தினர் என்றால் புதியவர். நம் இருப்பிடத்துக்குப் புதிதாக அல்லது மேலதிகமாக வருபவர் விருந்தினர். விருந்தினரை தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று இரண்டாகப் பிரிக்கிறது, திருக்குறளின் பரிமேலழகர் உரை. திருவள்ளுவர் விருந்தோம்பல் என்று தனி அதிகாரமே எழுதி வைத்திருக்கிறார். நேரங்கெட்ட நேரத்தில் வந்து தொலைத்துவிட்டார்கள் என்று விருந்தினரை முகம் சுருங்கிப் பார்ப்பதே தவறு என்ற விழுமியத்தைச் சொல்லும் "மோப்பக்குழையும் அனிச்சை" திருக்குறள் இக்காலத்துக்கும் பொருந்துவது தான்.
"தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை" எனும் இன்னொரு திருக்குறள், தனக்குச் சமனாக, இறந்த முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் எனும் நால்வரையும் சமனாகக் கருதக் கோரிய அக்கால வழமையைச் சுட்டிக்காட்டுகிறது.
ஒரு விருந்தினன் இறைவனுக்குச் சமன் என்று கூறுகின்ற "அதிதி தேவோ பவ" என்பது புகழ் பெற்ற உபநிடத வாக்கியம். வாளைமீன், ஆமையிறைச்சி, கரும்புத்தேன், குவளைமலர் என்பன விருந்தினர்களை மகிழ்விக்க வழங்கப்பட்டதை புறநானூறு ஓரிடத்தில் (42) பாடுகிறது.
சைவ நாயன்மார் வரலாற்றில், தண்ணீர்ப்பந்தல் அமைப்பது, காட்டுப்பாதையில் பொதிசோறு வழங்குவது, பஞ்சத்தில் நாடு வாடியபோது நெல்லுப் பெற்றும், படிக்காசு பெற்றும் ஏழை எளியோருக்கு உணவிடுவது என்று பல விருந்தோம்பல் செயல்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றன. விருந்தினர் மனம் கோணி விடுமே என்பதற்காக விருந்து தயாரிப்பில் மகன் இறந்ததை மறைத்த அப்பூதி அடிகள் நாயனார் வரலாறும், விருந்தினரின் அதிர்ச்சி தரும் வழக்கத்தை ஏற்று, பெற்ற மகனையே கொன்று கறியாக்கிய சிறுத்தொண்ட நாயனாரின் வரலாறும், விருந்தோம்பலுக்காக எந்த எல்லை வரை செல்லமுடியும் என்பதைக் காட்டும் இருபெரும் உச்சங்கள்.
விருந்தோம்பல் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், பசி என்ற உணர்வு மனிதனுக்கு இருப்பதால் தான். பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்பது புகழ்பெற்ற பழமொழி.
வெட்கம், குலப்பெருமை, கற்ற கல்வி, புகழ், அறிவு, தானம் செய்யும் பண்பு, இறைபக்தி, தங்களது உயர்வு, விடாமுயற்சி, பெண்ணாசை எதுவுமே பசிக்கு முன் நிற்காது, பறந்துபோகும் என்கிறார் ஔவையார். கவலையாக இருக்கிறேன் என்பதையே "என்னால் சாப்பிட முடியவில்லை" என்று சொல்பவர்கள் இங்குண்டு. பசியே மிகப்பெரிய விடயம். அதைவிடப் பெரிது தன் சோகம் என்று காண்பிக்கிறார்கள்.
பசியின் அருமை தெரிந்ததால் தான் ஏழை எளியவருக்கு உணவளித்தல் ஒரு மகத்தான பண்பாடாக நம் மத்தியில் வளர்ந்து வந்திருக்கிறது. குன்றாமல் உணவளிக்கக்கூடிய பாண்டவரின் அட்சய பாத்திரம், ஆபுத்திரனின் அமுதசுரபி இதெல்லாம் பசி தீர்ப்பதன் முக்கியத்துவத்தைச் சொல்கின்ற மரபுரைகள் தான். மனிதனாய்ப் பிறந்தவன் செய்யவேண்டியவை என்று மரபாக முப்பத்திரண்டு அறங்கள் சொல்லப்படுவதுண்டு. அவற்றில் பதினொரு அறங்கள் உணவளிப்பதோடு தொடர்புடையவை. ஆதுலர்சாலை (அனாதை இல்லம்), ஓதுவார்க்குணவு (வேதியருக்கு உணவு),
அறுசமயத்தோர்க்குணவு, பசுவுக்கு வாயுறை, சிறைச்சோறு (கைதிகளுக்கு உணவு), ஐயம் (பிச்சை), நடைத்தின்பண்டம் (யாத்திரிகருக்கு உணவு), மகச்சோறு (சிறுவர்க்கு உணவு), மகப்பால் (தாயிழந்த பிள்ளைக்குப் பாலூட்டல்), அட்டூண் (அயலவருக்கு உணவு வழங்கல்), தண்ணீர்ப்பந்தர் என்ற பதினொன்றும் அவை.
நிற்க;
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். .படத்தின் அருமையான கதைக்கரு, நயன்தாரா அம்மன், ஆர்ஜே பாலாஜியின் திரைக்கதை எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்தது ஒரு பாடல். "பார்த்தேனே விழியின் வழியே". மனதை இலேசாக்கும் இசை. என்ன காரணத்தாலோ "ஏன் பெண்ணென்று பிறந்தாய்" பாடலை நினைவுகூரச் செய்த மெட்டு. ஜெய்ராம் பாலசுப்பிரமணியன் எனும் புதுமுகம் பாடியிருக்கிறார். அவர் பாடிய வேறு பாடல்களைக் காணக்கிடைக்கவில்லை. ஆனால் அற்புதமான குரல்.



பா.விஜய் எழுதிய அந்த அருமையான பாடலில் ஒரு வரி வருகிறது.
"வேதங்கள் மொத்தம் ஓதி யாகங்கள் நித்தம் செய்து பூசிக்கும் பக்தி அதிலும் உன்னைக் காணலாம்.
பசி என்று தன் முன் வந்து கை ஏந்திக் கேட்கும் போது தன் உணவைத் தந்தால் கூட உன்னைக் காணலாம்"
இது திருமந்திரத்தில் ஒலித்த ஒரு குரல்.
"படமாடக் கோவில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோவில் நம்பர்க்கு ஒன்று ஆகா
நடமாடக் கோவில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோவில் பகவற்கு அது ஆமே"
மாடத்தில் சுவாமிபடம் வைத்த கோவிலிலுள்ள இறைவனுக்கு நீங்கள் ஒன்றைக் கொடுக்கும் போது, நடமாடும் கோவில்களான அடியவர்களுக்கு அது பயன்படாது. ஆனால் நடமாடும் கோவில்களான அடியவர்களுக்கு ஒன்றை நீங்கள் கொடுத்தால், அது அதே கோவில் இறைவனுக்குக் கொடுத்ததாகிவிடும்.
நம்பர் என்றால் நம்மவர்கள் என்று பொருள். அதை நம் போன்ற அடியவர் என்று சுருக்காமல், நம்மைப் போன்ற மனிதர்கள் என்றும் விரிக்கலாம். அதே போல் கோவிலில் கொடுக்கும் காணிக்கையை உணவு அல்லது பிரசாதம் என்று கொண்டால் மேற்படி பாடல் வரி வந்துவிடும். திருமந்திரம் சொல்வதும் இது தான். பொற்கீரி சொன்னதும் இது தான். பசி எனும் மானுட இயல்பு. பசி தீர்க்க எழுந்த விருந்தோம்பல் எனும் விழுமியம். இரண்டையும் இணைத்து இறைபக்தி தருகின்ற சமரசப்பார்வையில் எழுகின்றது மானுடப் பெருங்கருணை.
கடந்தவாரம் புலமைப்பரிசில் பெறுபேறு வெளிவந்தபோது மூக்குத்தி அம்மன் படம் பார்த்துக்கொண்டிருந்தேன். "பார்த்தேனே" பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கையில், பத்து வயதில் என் மனதில் பதிந்திருந்த "விருந்தினர்" என்ற உருவகமும் இயல்பாகவே கண் முன் எழுந்து விட்டது.
இந்தப் பெருந்தொற்று சீர்குலைத்துள்ள அறங்களில் விருந்தோம்பலும் ஒன்று. வீட்டுக்கு வீடு விருந்தினர் வருகைகள் அவ்வளவாக இடம்பெறுவதில்லை. நாமும் இன்னொருவர் வீட்டுக்கு விருந்தினராகச் செல்வதில்லை. தப்பித்தவறி யாரும் விருந்தினர் வந்துவிட்டால் சந்தேகக்கண்ணோடு பார்த்து "எப்போது செல்வார்களோ, எங்கிருந்து நோய் காவி வந்திருப்பார்களோ" என்ற அச்சத்திலேயே பொழுது கழிகிறது.
அது விரைவில் மாறவேண்டும். செல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருக்கும் நிலைமை மீண்டும் திரும்பவேண்டும். அது விரைவில் நிகழவேண்டும் என்று இறைவனை வேண்டுவது தவிர வேறு வழி ஏது?

0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner